உலகை மாற்றிய உரை வீச்சுகள் - 15-Mar-2016 09:03:26 PM

வீன அமெரிக்க வரலாற்றின் நினைவலைகளில் இன்னும் ஒளிர்ந்து கொண்டிருக்கின்ற ஒரு பெயர், குறைந்த காலமே அமெரிக்க அதிபராகயிருந்து மறைந்த ஜான் எஃப் கென்னடி என்பதாகும். கென்னடியின் தனிப்பட்ட பல தவறுகள் தற்போது தெரிய வந்தாலும் அவர் ஒரு கொள்கையின் தொடர்ச்சி மற்றும் நீட்சியின் அடையாளமாக விளங்குகின்றார். அதற்குக் காரணமென்னவெனில், அவருடைய கொள்கை நிறைவேற்றத்திற்குரிய காலத்திற்குள் ஏற்பட்ட அவருடைய அகால மறைவு ஆகும். அந்த மரணம் அவருடைய சொற்கள் மூலம் ஒரு பெரும் இடைவெளியினை நிறைவு செய்திருக்கிறது. வாழ்க்கையில் அவருக்கு உரிய  கால அவகாசம் கிட்டியிருக்குமானால் அவர் ஆற்றலும் இலக்கும் வெளிப்பட்டிருக்கக் கூடும். 

அமெரிக்காவின் முதல் ரோமன் கத்தோலிக்கராகவும், மிக இளைஞராகவும் 43 வது வயதிலேயே அமெரிக்க அதிபராகிய பெருமை இவருக்குண்டு. சனநாயகக் கட்சிக்கு எதிராக நின்று மயிரிழையில் கிட்டிய வெற்றி இவரை 1961 சனவரி 20 ஆம் நாள் வெள்ளை மாளிகையின் கதவுகளை இவருக்குத் திறந்து வைக்கச் செய்தது. அமெரிக்காவின் அன்றைய அதிபர் அய்சன்ஹோவரின் தவறான பாதுகாப்புக்கொள்கை, பொருளாதார வீழ்ச்சி ஆகியவற்றிற்கு மாற்றாக ஒரு புதிய உறுதிப்பாடான கொள்கையை முன் வைப்பதாக முழங்கியதும், மார்ட்டின் லூதர் கிங் விடுதலை அறிவிப்பும் இவருக்குப் பெரும்பாலான  அமெரிக்கர்களின் ஆதரவைத் தந்தது. அவருடைய 35 வயது தம்பி உள்ளடக்கிய ஒரு இளைய அமைச்சரவையை அமெரிக்கா அன்று கண்டது. மேலும் அழகின் வடிவமாக விளங்கிய அவருடைய மனைவி ஜாக்குலின் ஒரு மிகை அம்சமாக அன்று அவருக்கு வலுவூட்டியது. அது ஒரு மறுமலர்ச்சி காலம் என இறுமாப்புடன் எதிர்காலத்தை நோக்கிக் காத்துக் கொண்டிருந்த அமெரிக்கர்களுக்கு சாதகமான சூழலாக விளங்கியது. 

பேச்சாற்றல் என்பது அவருக்குப் பெரும் விருப்பு, பேராசை. அமெரிக்க அதிபராக வெள்ளை மாளிகையில் ஆற்றிய இந்த கன்னி உரை இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே வடிவமைக்கப் பட்டதாகும். அந்தப் பேச்சின் அடிநாதமாக விளங்குவது உலகில் அமெரிக்காவின் அன்றைய தகுதியும், அவர் எதிர் கொண்ட உலகப் பனிப்போர்களின் வெம்மையும் ஆகும். பெரு ஆபத்துடன் விளங்கிய அமெரிக்க சுதந்திரத்தின் பாதுகாப்பைப் பேண அன்று உறுதி எடுத்துக் கொண்டார். உலகின் மேற்குப் பகுதியில் ஒரு சவாலற்ற வீரனாகவே அமெரிக்கா காட்சிப் படுத்தப் படும் என கியூபா, சோவியத் உருசியா போன்ற நாடுகளின் பெயரைச் சொல்லாமலே அறைகூவல் விடுத்தார். அறிவியல் வளர்ச்சியை அழிவுப் பாதைக்குப் பயன் படுத்தும் ஆபத்தான சக்திகளுக்கு உரிய விடை கிடைக்கும் மனிதாபிமானம் தழைக்கும் என்ற பொருள் பட உரை அமைந்ததிருந்தது.  இந்த வேளையில் அவர் தன் அரசியல் இருப்பையும் உறுதி செய்து கொண்டார். அமெரிக்க ஆண்களுக்கும் பெண்களுக்கும் தேசப்பற்று குறித்தும் ஒவ்வொரு அமெரிக்கர்களின் தற்கால கடமைகள் குறித்தும் பேசுகையில் “நாடென்ன செய்தது நமக்கு என்று கேட்பதை விட நாமென்ன செய்தோம் நாட்டுக்கு” என்ற கேள்வியை முன்வைத்தார். அமெரிக்கா நமக்கு என்ன செய்யும் என்று கேட்பதை விட நாம் ஒற்றுமையாய் இருந்தால் நம் தனி மனித விடுதலைக்கு எவ்வாறு பங்காற்ற முடியும் என்பதைத் தெரிவித்தார். 

ஆனால் 34 மாதங்களில் அனைத்தும் முடிவுற்றது. ஆம்! டெக்ஸாஸ் மாகாணத்தில் சுட்டுக் கொல்லப் பட்டார்.  அந்த சிறு கால ஆட்சிப்பொறுப்பில் கியூபா ஏவுகணைச் சிக்கலில் ஈடுபட்டார். கியூபாவுக்கு ஆதரவாக உருசியாவின் அணு ஆயுத ஏவுகணைகள் வலம் வந்தன. கியூபா அமெரிக்காவை எதிர்த்துப் போரிட்டது. அதுவே உலகில் அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் 1963இல் கையெழுத்தாக வழிகோலியது. அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி, சோவியத் அறிவியல் வளர்ச்சிக்கு சவாலாக இந்த பத்தாண்டு முடிவுக்குள் நிலவுக்கு மனிதனை அமெரிக்கா அனுப்பும் என்ற குரலின் வேகம் உலக அரங்கில் ஒலித்தது. ஆனால் அமெரிக்காவின் வியட்நாம் ஆக்கிரமிப்பு அமெரிக்காவிற்கு ஒரு பெரும் தலைவலியாக அமைந்து விட்டது. சில காலமே வாழ்ந்து அதிபராக மறைந்த ஜான் எஃப். கென்னடியின் முதல் நாடாளுமன்ற உரை உலக வரலாற்றில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய ஒன்றாகும். 
- ஆசிரியர்.


நாம் என்ன செய்தோம் நம் நாட்டிற்கு?

துணை அதிபர் ஜான்சன், முதன்மை நீதிபதி, அதிபர் எஸன்ஹவர், துணை அதிபர் நிக்சன், அதிபர் இட்ருமன், போற்றதற்குரிய பாதிரிமார்களே மற்றும் அன்பார்ந்த குடிமக்களே, இன்று நாம் அனைவரும் கூடியிருப்பது வெற்றி விழாவை கொண்டாடுவதற்காக அல்ல. மாறாக ஓர் ஆட்சியின் முடிவை அதே நேரத்தில் தொடக்கத்திற்கான அறிகுறியை, ஓர் ஆட்சியை புதுப்பித்தல் அல்லது ஆட்சி மாற்றத்தை, சுதந்திரத்தை கொண்டாடுகிறோம். ஏறத்தாழ ஒரு நூற்றாண்டாக நமது முன்னோர்கள் சடங்குகளாக மேற்கொண்ட பதவியேற்பு உறுதிமொழிகளையே (சத்தியப் பிரமாணங்களையே) நானும் இன்று உங்கள் முன்பும் இறைவனின் முன்பும் ஏற்றுக் கொண்டு உறுதிமொழியளிக்க இருக்கிறேன்.

ஆனால் இன்று உலகம் மிகவும் மாறிவிட்டது. வறுமையை ஒழிக்கக்கூடிய மிகச் சிறந்த ஆற்றல் மனிதனின் கைகளில்தான் உள்ளது. நம் முன்னோர்கள் எதிர்த்துப் போராடிய சிக்கல்கள் பல இன்றும் உலகில் வலம் வந்து கொண்டிருக்கிறது. மனித உரிமைகள் அரசின் பெருந்தன்மையால் கிடைப்பதல்ல; அது இறைவனின் கரங்களிலிருந்து கிடைக்கின்றன.

அத்தகைய முதல் புரட்சியாளர்களின் வாரிசுகள்தான் நாம் என்பதை மறந்துவிடக் கூடாது. இந்தச் சொல் இந்நூற்றாண்டில் பிறந்த அமெரிக்காவின் புதிய தலைமுறையினருக்கு ஒளிவீசுவது போல நம் நண்பர்களுக்கும் பகைவர்களுக்கும் இந்த நேரத்தில் இந்த இடத்திலிருந்து புறப்பட்டு முன்னே செல்லட்டும்.  

உலக நாடுகள் நம்மை போற்றினாலும் சரி தூற்றினாலும் சரி, ஒவ்வொரு நாட்டிற்கும் விடுதலையின் வெற்றியையும் வாழ்க்கை வளத்தையும் நிலைநாட்ட எந்த விலையும் கொடுக்கவும் எந்த சுமையையும் தாங்கவும் எந்த சிரமத்தையும் சந்திக்கவும் எந்த நண்பரையும் ஆதரிக்கவும் எந்த எதிரியையும் எதிர்கொள்ளவும் நாம் தயாராக இருக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

அந்த அளவிற்கு நான் உறுதியாக இருக்கிறேன்.

முதலில், கலாச்சாரத்திலும் இறை வழிபாட்டிலும் ஒத்தக் கருத்துடைய நம் முந்தைய தோழமை நாடுகளுடன் தொடர்ந்து நாங்கள் உண்மையான நண்பர்களாக இருப்போம் என உறுதி கூறுகிறேன். நாம் ஒரே அணியாக செயல்பட்டால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை. தனித்தனியே பிளவுற்று செயல்பட்டால் பலமுள்ள சவால்களை திறம்பட சந்திக்க இயலாது சிறிதளவே சாதிக்க முடியும்.

அன்போடு வரவேற்கப்படும் புதிய மாநிலங்களுக்கு நான் ஒன்றை உறுதி அளிக்கிறேன். காலனித்துவக் கட்டுப்பாட்டை இரும்புக் கரம் கொண்ட கொடுங்கோன்மையால் மாற்றி விட முடியாது. அவர்கள் எப்போதும் எங்கள் கருத்துகளை ஆதரிப்பார்கள் என நாங்கள் எதிர்பார்ப்பதில்லை. ஆனால் அவர்களுடைய சுதந்திரத்திற்கு எங்களுடைய ஆதரவு எப்போதும் இருக்கும். அதே நேரத்தில், கடந்த காலத்தில் முட்டாள் தனமாக புலியின் முதுகில் அமர்ந்து கொண்டு அதிகாரத்தை நாடிச் சென்றவர்கள், பின் அதன் வாயினுள் சென்றதை மறந்துவிடக் கூடாது.

உலக மக்கள் தொகையில் பாதி பேர் கிராமங்களில் குடிசையில் வாழ்ந்து கொண்டு வறுமையின் பிணைப்புகளை உடைக்கப் போராடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்குத் தேவையான உதவிகளை எவ்வளவு காலம் வேண்டுமானலும் எங்களால் இயன்றவரையில் திறம்பட செய்து தருவோம் என உறுதி கூறுகிறேன். இச்செயலை கம்யூனிஸ்டுகள் (பொதுவுடைமைவாதிகள்) செய்கிறார்கள் என்பதற்காகவோ அல்லது அவர்களுடைய வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காகவோ அல்ல. அதுதான் சரி என்பதற்காகத்தான்.

ஒரு விடுதலைப் பெற்ற சமுகம் பெரும்பான்மை ஏழைகளுக்கு உதவ இயலவில்லை எனில், அச்சமுகத்தால் சிறுபான்மை செல்வந்தர்களை காப்பாற்றவும் முடியாது.

தெற்கு எல்லைக்கு அப்பால் அமைந்துள்ள நம் சகோதர குடியரசுகளுக்கு ஒரு சிறப்பு உறுதிமொழி அளிக்கிறோம். வறுமைச் சங்கிலியிலிருந்து விடுபட்டு நம் புதிய நட்பு நாடுகளுடன் இணைந்து முன்னேறி, நம்முடைய பேச்சை நம் செயலிலும் செய்து காட்டுவோம். ஆனால் நம்பிக்கையின் பேரில் மேற்கொள்ளும் இத்தகைய அமைதிப் புரட்சி நம் எதிரிகளுக்கு இரையாகி விடக் கூடாது. அமெரிக்காவின் எப்பகுதியிலும் நடைபெறும் நாச வேலைகள் அல்லது ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதை நம் அண்டை நாடுகள் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதே போன்று உலகின் இப்பகுதிக்கு நாமே தலைவர்களாக இருப்போம் என்பதை ஒவ்வொரு அந்நிய நாட்டிற்கும் தெரிவிக்க வேண்டும்.

ஐக்கிய நாடுகள் அவைக்கு எங்களது உறுதி மொழியை மீண்டும் புதுப்பித்துக் கொள்கிறோம். ஐ.நா.சபையை ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீதான குற்றச்சாட்டுகளைக் கூறும் இடமாக மாறுவதை தடுத்து, உலகில் தோன்றும் புதிய, வலிமையற்ற நாடுகளைப் பாதுகாக்கும் ஒரு கேடையமாக செயல்படுவோம். உலகத்தின் எந்த பகுதியிலும் அதன் ஆணை செல்லுபடியாகும் என்ற நிலைக்கு ஐ.நா. சபையை வலிமையானதாக மாற்றுவோம்.

இறுதியாக எங்களை எதிரியாகப் பார்க்கும் நாடுகளுக்கு கூறுவது என்னவென்றால், பேரழிவு சக்தி கொண்ட ஆயுதங்கள் மனித இனத்தை திட்டமிட்டோ அல்லது எதிர்பாராத விதத்திலோ அழிக்கும் செயல் கட்டவிழ்த்து விடப்படும் முன், இருபுறமும் அமைதியைத் தேடி புது நடைபோடுவோம் என உறுதிமொழியாக அல்லாமல் கோரிக்கையாக முன் வைக்கிறோம். 

நம்முடைய துணிச்சலை பலவீனமானவர்களுடன் காட்டக்கூடாது. உலகின் இரு அணியைச் சேர்ந்த நாடுகளுக்கும் தற்போதைய நடைமுறையில் சற்றும்  விருப்பம் இல்லை. இரு அணிகளுமே நிலையான கொடிய அணு ஆயுதங்களை பெருக்கச் செய்து அச்சுறுத்தி வரும் வேளையில், இவ்விரு அணிகளுமே நவீன ஆயுதக் கருவிகளுக்கு செலவிடப்படும் பெரும் பொருட்சுமை குறித்து கவலை கொண்டுள்ளனர். இன்னும் இவ்விரு அணிகளும் மனித குலத்தின் இறுதிப் போரில் மிஞ்சியிருக்கும் பயங்கரவாதத்தின் நிச்சயமற்ற சமநிலைக்கு மாற்றாக பயணித்துக் கொண்டிருக்கின்றனர். எனவே நாகரிகம் என்பது பலவீனத்தின் அடையாளம் அல்ல; நேர்மையே எப்போதும் வெல்லும் என்பதை இவ்விரு அணிகளும் உணர்ந்து தனது புதிய பயணத்தை தொடர வேண்டும்.

பயத்தால் பேச்சுவார்த்தைகள் நடத்த வேண்டாம்; பேச்சுவார்தை நடத்தவும் பயப்பட வேண்டாம். 

நம் இரு அணிகளையும் ஒன்றுபடுத்தும் சிக்கல்கள் குறித்து ஆராய வேண்டுமே தவிர பிளவுபடுத்தும் சிக்கல்கள் குறித்து ஆராயக் கூடாது.

முதன்முதலாக இரு தரப்பும் ஆயுதக் கட்டுப்பாடு குறித்தும் அவற்றைக் கண்காணிப்பது குறித்தும் தெளிவான சட்ட திட்டங்களை வரையறை செய்து, பிற நாடுகளை அழிக்கும் முழு அதிகாரத்தையும் அனைத்து நாடுகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும்.

அறிவியலின் அழிக்கும் ஆற்றலை விடுத்து ஆக்கப்பூர்வ வழிகளில் அறிவியலை பயன்படுத்த இருதரப்பும் முயல வேண்டும். இரு தரப்பும் சேர்ந்து விண்வெளியை ஆய்வு செய்யலாம். பாலைவனத்தை சோலை வனமாக்கலாம். மனித சமுதாயத்தின் நோய்களை ஒழிக்கலாம். சமுத்திரத்தின் ஆழத்தை அளவிடலாம். கலை, வாணிபத் துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கலாம்.

‘ஏசாயா’ ஆணைக்கிணங்க, இப்பூமியின் பட்டி தொட்டிகளில் எல்லாம் இருக்கும் ஒடுக்கப்பட்டவர்கள் அனைவரையும் தன் துன்பங்களிலிருந்து விடுவிக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

அவநம்பிக்கைகளைப்  புறந்தள்ளி  கூட்டுறவாக இருப்போமெனில், இரு அணிகளும்  ஒரு புதிய அதிகார சமநிலையை மட்டுமல்லாமல் நலிவுற்றவர்களைப்  பாதுகாக்கவும் நவீன முயற்சிகளை உருவாக்கவும்  அமைதியை நிலைநாட்டவும்  வலுவான ஒரு புது உலக சட்டத்தை இயற்றவும் வழிகோலும்.

இவை அனைத்தையும்  நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு முதல் 100 நாட்களே போதுமானது. ஒருவேளை முதல் 100 நாட்களுக்குள்  நடைமுறைப்படுத்த முடியவில்லையேல்  நம்  ஆட்சிக்  காலம்  முடிவதற்குள்  நிறைவேற்றலாம்; இல்லையேல்  இந்த உலகத்தில் நம்  வாழ்நாள்  முடிவதற்குள்  நிறைவேற்றலாம். ஆனால்  இவை தற்போதே தொடங்கப்பட வேண்டும்.

எனதருமை குடிமக்களே உங்களின்  கரங்களில்தான்  நமது செயல்முறையின்  வெற்றியும்  தோல்வியும்  இருக்கிறது. இந்த நாடு உதயமான நாளிலிருந்து அமெரிக்க தலைமுறையைச்  சேர்ந்த ஒவ்வொருவரும்  நம்  தேசப்பற்றின்  மீதான பிணைப்புறுதியை நிரூபித்து வந்துள்ளோம். உலகம்  முழுதும்  சேவைக்காக அழைக்கப்பட்ட அமெரிக்க இளைஞர்களின்  கல்லறைகளே அதற்குச்  சான்று.

தற்போது மீண்டும்  ஓர்  ஆணை (பேரிகை) முழக்கம்  நம்மை அழைக்கிறது. நமக்கு ஆயுதம்  தேவை என்றாலும் ஆயுதம்  ஏந்த நம்மை அழைக்கவில்லை; நாம் போருக்கான தயார்  நிலையில்  இருக்க வேண்டும்  என்றாலும்  நம்மைப்  போரிட அழைக்கவில்லை. மாறாக  ஒரு மனிதனின்  அடிப்படை எதிரிகளான ஏழ்மை, நோய், போர், கொடுங்கோல்  ஆட்சி ஆகியவற்றிற்கு எதிராக போராடுவதற்கும்  நீண்ட காலமாக எதிர்கொள்ளும்  சுமைகளைத்  தாங்குவதற்காகவும் அழைக்கப்பட்டிருக்கிறோம்.

இத்தகைய எதிரிகளுக்கு எதிராக வடக்கு  - தெற்கு, கிழக்கு &- மேற்கு என உலகளாவிய பெரும்  கூட்டணியாக இணைந்து  அனைத்து மனித இனத்திற்கும் ஓர்  இனிமையான வாழ்க்கையை உறுதி செய்யலாமா? எங்களோடு இந்த வரலாற்று முயற்சியில்  இணைந்திட நீங்கள்  தயாரா?

உலகின்  நீண்ட வரலாற்றில், ஒரு சில தலைமுறைகள்  மட்டுமே மிக ஆபத்தான காலகட்டத்திலும்  சுதந்திரத்தை பாதுகாப்பதில்  பெரிதும்  பங்கேற்றிருக்கின்றனர். அந்த வகையில்  இந்த பொறுப்பிலிருந்து நான்  பின்வாங்க மாட்டேன்; அவற்றை வரவேற்கிறேன். நம்மில் எவரும் பிற தலைமுறைகளுடனோ அல்லது பிற நாட்டு மக்களுடனோ இடம் பெயர்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. நம் ஆற்றலும் நேர்மையும் தேசப்பற்றுமே நாட்டை வெளிச்சத்திற்கு கொண்டுசெல்லும் மிகப்பெரிய உந்துசக்திகளாகும். இச்சிறு பொறியே உலக வெளிச்சத்திற்கான தீயாக மாறட்டும்.

ஆகவே எனதருமை குடிமக்களே நாடு உங்களுக்கு என்ன செய்தது என கேட்காதீர்கள். நீங்கள்  நாட்டிற்கு என்ன செய்தீர்கள்  எனக்  கேளுங்கள்.

அதேபோல எனதருமை உலக மக்களே அமெரிக்கா உங்களுக்கு என்ன செய்தது என்று கேட்காதீர்கள். நாமனைவரும்  இணைந்து தனிமனிதனின்  சுதந்திரத்திற்கு என்ன செய்தோம்  எனக்  கேளுங்கள்.

இறுதியாக ஒன்றைக் கூறுகிறேன், நீங்கள்  அமெரிக்கக்  குடிமகனாக இருந்தாலும்  சரி, உலகின்  பிறநாட்டுக்  குடிமகனாக இருந்தாலும்  சரி நாங்கள்  உங்களிடம்  எதிர்பார்க்கும்  வலிமையையும் தியாகத்தையும்  நீங்களும்  எங்களிடமிருந்து பெறலாம்  என்பதை இவ்விடத்தில் கூற விரும்புகிறேன். நம்  பரிசுத்த மனசாட்சியே நமக்கு கிடைத்த உயரிய விருதாகும். நமது எதிர்கால செயல்களுக்கு வரலாறுதான்  பதில்  சொல்லும். இறைவனின்  உதவியையும்  ஆசிர்வாதத்தையும்  பெற்று இந்த பூமியை நாம்  அன்பால்  வழி நடத்துவோம். ஏனெனில்  இந்த பூமியில்  இறைவனின்  செயல்  என்பது உண்மையில்  மனிதச்  செயலாகும்.


ஜான் எஃப் கென்னடி

செல்வாக்கு பெற்ற ஓர் ஐரிஸ் - அமெரிக்கக் குடும்பத்தில் பிறந்தவர் ஜான் எஃப் கென்னடி ஆவார். இவரது தந்தை இங்கிலார்ந்திலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பணியாற்றியவர். 1936 ஆம் ஆண்டு ஹார்வார்டு பல்கலைக் கழகத்தில் பட்டம் பயின்ற கென்னடி, 1940 ஆம் ஆண்டு அமெரிக்க கப்பல் படை பணியில் சேர்ந்தார். 1943 ஆம் ஆண்டு ஏவுகணைத் தாக்குதலிலிருந்து கப்பல்படை மாலுமிகளின் உயிரைக் காப்பாற்றியதற்காக அவருக்கு வீரப்பதக்கம் வழங்கப்பட்டது. பின்னர் 1952 ஆம் ஆண்டு அமெரிக்க செனட் சபைக்கு தேர்வு செய்யப்பட்டார். 1953 இல் ஜாக்குலின் போலியர் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் 1957 இல் எழுதிய “ப்ஃரோபைல்ஸ் ஆஃப் கரேஜ் (துணிவின் தோற்றம்  - Profiles of Courage)” எனும் நூலிற்கு புலிட்சர் விருது வழங்கப்பட்டது. 

1961 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜான் எஃப் கென்னடி அமெரிக்காவின்  35வது குடியரசு தலைவராக ஆட்சி அரியணை ஏறினார். இவருடைய ஆட்சிக் காலத்தில், கியூப அதிபர் பிடல் காஸ்ட்ரோ ஆட்சியை கவிழ்க்க மேற்கொண்ட முயற்சிகள், பெர்லினுடனான சிக்கல், கிழக்கு பெர்லினையும் மேற்கு பெர்லினையும் பிரிக்கும் தடுப்புச் சுவர் விவகாரம், காங்கிரசின் குடியுரிமை மசோதா அறிமுகம், கியூப ஏவுகணை விவகாரம், அணு ஆயுத சோதனை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுதல், அமெரிக்க விண்வெளி ஆய்வுப் போட்டி, வறுமை ஒழிப்புத் திட்டங்கள் ஆகியவற்றில் தோல்வியை தழுவியதாகவே கருதப்படுகிறார்.

இறுதியில் 1963 ஆம் ஆண்டு டெக்ஸாஸ் மாகாணத்தில் லீ ஹார்வி ஓஸ்வால்ட் என்பவரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.


- சு.குமணராசன்


Go Back