இயற்கை வாழ்வு - 15-Mar-2016 09:03:49 PM

ப்பூமியில் இயற்கையோடு இணைந்து வாழ்வோருக்கு வாழ்வின் இறுதி வரை இடையூறே ஏற்பாடது என்பது நம் முன்னோர்களின் வாக்கு. அவர்கள் அப்படித்தான் வாழ்ந்தார்கள். ஆனால் இன்றைய அவசர உலகில் இயற்கையை தவிர்த்து செயற்கையாக மனிதன் வாழ்வதால் ஏற்பட்ட இழப்புகள் ஏராளம். எங்கும் அவசரம் எதிலும் அவசரம். எதிலும் சுயக் கட்டுப்பாடற்ற செயற்கை வாழ்வை வாழ்கின்றனர்.

சொல்லப்போனால் உறக்கத்தைக் கூட மனிதன் தன் விருப்பத்திற்குள் வைத்திருக்க வேண்டும். நேரம் வந்துவிட்டதே என்று பசியில்லாத நிலையில் சாப்பிடுவது தவறு என்று சொல்வது போல, கட்டாயப்படுத்தி உடலைப் படுக்கையில் சாய்த்து ஓடும் மனதை கட்டிப் போடுவதும் தவறு. உடலுக்கு ஓய்வு வேண்டும் என்றால், உறக்கம் தானாக வரும். இதனை இளமைக் காலத்தில் உணருவதை விட, 60 வயது தாண்டியப் பிறகு அனுபவ ரீதியாகப் புரிந்து கொள்ள எளிதாக முடிகிறது.

கிடைத்த நேரம் சாப்பிட்டு, ஓய்வு கிடைத்த நேரம் நன்றாக அசைபோட்டு, வந்த நேரம் அடக்கி வைக்காமல் சாணம் போடும் விலங்குகள் தான் இன்றைக்கு இயற்கை வாழ்வு வாழ்கிறது. எந்த மாட்டிற்காகிலும் மூலம் வந்திருக்கிறதா? ஏன் வரவில்லை? அது சாணத்தை அடக்கி வைப்பதில்லை. பிறந்த குழந்தை ஒரு நாளைக்கு எத்தனை முறை வெளியே போகும் கவனித்திருக்கிறீர்களா? எத்தனை முறை பால் குடிக்கும். அதையாகிலும் கவனித்திருக்கிறீர்களா? கவனித்திருக்க முடியாது. குழந்தை எத்தனை முறை பால் குடிக்கிறதோ அத்தனை முறை வெளியே போய்விடும். போக வேண்டும் என்பது தான் உண்மை. அப்படி மனிதனும் ஒரு நாளைக்கு மூன்று முறை வெளியே போக வேண்டும். அதுதான் இயற்கை. நோயற்ற வாழ்விற்கு இதுவே அடிப்படை. மலத்தை தங்க வைப்பது என்பது நம் உடலையே “மலக் குழி” ஆக்கிக் கொள்கிறோம் என்று பொருள். குறைந்த அளவு ஒரு நாளைக்கு இரண்டு முறையாகிலும் வெளியே செல்ல வேண்டும். குடல் வெளியே தள்ள விரும்புவதை நாம் கட்டாயப்படுத்தி அடக்கி வைத்துக் கட்டிப் போடும் போது, இரண்டு செயல்களுக்கு - உணர்வுகளுக்கு - ஈடு கொடுக்க முடியாமல் நம் குடல் போராடி நோய்வாய்ப்படுவதுதான் “மூலம்”. மூலம் வந்த பிறகு அறுவை சிகிச்சை, அது இது என்று அலைவதை விட்டுவிட்டு, அடிக்கடி வெளியேற்றி தூய்மையாக்கிக் கொள்வதில் மனிதனுக்கு என்ன சிரமம்? சோம்பேறித்தனத்தை இதில் ஏன் காட்டிக் கொள்கிறான்? “வாயில் நுழைந்த உணவு, சீரணித்து கிரகிக்கப்பட்டது போக மீதமுள்ளதை வெளியே தள்ளப்படும் வரை உள்ள செயல்பாடுகள்தான் செரிமானம் என்பது. உள்ளே தள்ளுவதில் மட்டும் அக்கறைப்படும் நாம், வெளியே தள்ளுவதில் அக்கறைக் காட்டுவதில்லை. மனித நோயே இங்குதான் தொடங்கி வைக்கப்படுகிறது.

முன்பெல்லாம் மாதம் ஒருமுறை பேதி சாப்பிடும் பழக்கம் கிராமங்களில் இருந்தது. வீட்டுக்கு வீடு விளக்கெண்ணெய் இருப்பு இருக்கும். இப்போது விளக்கெண்ணெய் அற்றுப் போய்விட்டது. அதிலும் பேதிக்கு சாப்பிடுவதற்காகவே “ஊத்துன எண்ணெய்” தயாரித்து வைத்திருப்பார்கள். இப்போது எல்லாம் போயே போய் விட்டது.

எப்போது மனிதன் இயற்கை வாழ்வைத் துறந்து, நாகரிகம் என்று கானல் நீரை நம்பி, பின் தொடர்ந்து ஓடி “செயற்கை வாழ்வை” தானாக ஏற்றுக் கொண்டானோ, அவன் மிக விரைவில் களைப்படைந்துத் திரும்பி வருவான் என்பது உறுதி! இந்த பாடத்தை கற்றுக் கொள்ள இரண்டு தலைமுறை மக்களை நாம் இழந்தாக வேண்டும். இழந்து கொண்டிருக்கிறோம். 

மனிதன் எதில்தான் அவசரப்படவில்லை? குளிப்பதில் கூட இப்போது அவசரம்! அவசரம்!. அந்த காலத்தில் ஆற்று நீரில் விளையாடிக் குளித்த சிறுவர்கள் உடல் சூடு தணிக்கப்பெற்று திடமாக வளர்ந்தார்கள். இப்போது குளியல் அறையில் ஒரு வாளி தண்ணீரில் இரண்டு நிமிடத்தில் குளித்து முடித்து வரும் மக்கள் அனைவரும், வேனல் கட்டியாலும் முகப் பருவாலும் அவதிப்படுவதைக் காண முடிகிறது. குறைந்த அளவு, குளியல் தொட்டி வைத்து அதில் ஒரு பத்து நிமிடம் நீருக்குள் அமிழ்ந்து படுத்திருந்து, எழுந்து குளித்து வெளியேறினால் கூட உடல் வெப்ப நிலையும் உள்ளுறுப்புகளும் சரியாக இருக்கும். உடலை குளிர்வித்தல் என்பது தான் குளித்தல். உடல் சூட்டைத் தணிக்க வழிகாண வேண்டியது மனிதனின் கடமை என்று இருக்கும் நிலையில் வெந்நீர் குளியல் வேறு; பகல் முழுதும் மின் விசிறிக் காற்றுச் சூடு வேறு. இத்தனை செயற்கை முறையிலும் இம்மனிதனின் உடல் தாக்குப்பிடித்து வருகிறது என்பதுதான் வியப்பூட்டும் செய்தி. மழை கொட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில் கூட கதவு, சன்னல்களை இடுக்கு இல்லாமல் அடைத்து வைத்துவிட்டு உள்ளே மின்விசிறிச் சூட்டில் படுத்து வெந்து கொண்டிருப்பவர்களை என்ன செய்வது? மழைக்காற்றில் கிடைக்கும் இயற்கையான ‘‘குளிர்ச்சி சுகம்” கூட அவர்களுக்கு பொய்யாகத் தெரிகிறதே எப்படி?

குழந்தைகளுக்கு விளக்கெண்ணெய் கொடுப்பதும் நிறுத்தியாயிற்று. மனிதன் பேதி சாப்பிடுவதும் நின்று போய்விட்டது. “மலச் சிக்கல்தான் பல சிக்கல்களுக்கு ஆணிவேர்” என்கிற பழமொழியை அறவே மறந்தாயிற்று. எண்ணெய் தேய்த்துக் குளித்தல் நிறுத்தப்பட்டு இரண்டு தலைமுறைகள் கழிந்து விட்டன.

எண்ணெய் தேய்த்துக் குளித்தல் என்பது எண்ணெய் உடம்பினுள் சென்று என்னவோ நல்ல செயல் செய்கிறது என்பதற்காக மட்டுமல்ல. எண்ணெய் தேய்க்கும் போது உடல் முழுதும் அழுத்தித் தேய்த்து, உடல் தசைநார்களை, திசுக்களை பிசைந்து, பிழிந்து, அழுக்கை, கழிவுப் பொருளை வெளியேற்றிவிட்டு (துணியை உலர்த்துவது போல) தூய்மை செய்வதுதான் எண்ணெய் தேய்ப்புக் குளியல்.

எண்ணெய் தேய்க்கும் போது ஒருமுறையும் எண்ணெய்ப் பசையை போக்க அரப்புப் போட்டுத் தேய்த்து அகற்றுவதில் மறுமுறையும், ஆக இரண்டு முறை தசைநார்களை, திசுக்களை அழுத்தி பிடித்துப் பிடித்து முறுக்கேற்றுகிறோம் என்று பொருள். சற்றுத் தெளிவுபடக் கூறுவதானால் உள்ளே உள்ள திசுக்களைப் பிழிந்துத் தூய்மைப்படுத்தி, உலர்த்துவது போன்றது என்று சந்தேகமறத் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த நல்ல பழக்கம் கூட மனிதனிடம் போய் விட்டதே! தமிழன் கண்டுபிடித்தது அனைத்துமே அநாகரிகமா? இல்லை, அதில் உள்ள நல்லதை அனுபவித்து எடுத்துச் சொல்ல அறிஞர்கள் - ஆன்றோர்கள் இல்லையா? ஏ நாடே! ஏ தமிழனே! இதற்குக் கவலைப்படாமல் வேறு எதற்குக் கவலைப்படப் போகிறாய்?

 - மருத்துவர் காசிபிச்சை, அரியலூர்


Go Back