தொழில் மேதை ஜி.டி.நாயுடு - 15-Mar-2016 10:03:13 PM

மிழ்நாடு இருபதாம் நூற்றாண்டில் கண்ட இணையற்ற தொழில் மேதை கோயம்புத்தூர் ஜி.டி.நாயுடு ஆவார். தனது மதித் திறனால் தமிழ்நாட்டில் தொழில்துறையைப் பெரிதும் வளர்த்து, நமது சிந்தனை முறையையே மாற்றி, நம் நலன் கண்டவர் நாயுடு அவர்கள். பிற்காலத்தில் மோட்டார் மன்னர்; விந்தை மனிதர்; பிறவிப் பேரறிஞர்; சிந்தனை வித்தகர் என்றெல்லாம் புகழ் கொண்ட ஜி.டி.நாயுடுவின் சேவை மிக உன்னதமானது.

இவர் பிறந்த ஊர் கோவை மாவட்டத்தில் கலக்கல் என்கிற கிராமம். இவர் பிறந்தது 1893 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் தேதியாகும். குடும்பத்தார் இட்ட பெயர் துரைசாமி நாயுடு. இவர் தந்தையார் கோபால்சாமி நாயுடு.

துரைசாமி ஒரு வயதுக் குழந்தையாக இருக்கும் போதே அவருடைய தாயார் இறந்து விட்டார். அதன் பிறகு அவர் தன் தாய் மாமா வீட்டில் வளர்ந்தார். கலக்கல் லெட்சுமி நாயக்கன் பாளையத்தில் மாமா வீடு இருந்தது. அங்கே திண்ணைப் பள்ளிக்கூடம் ஒன்றில் சேர்ந்து படித்தார்.

இவரது குறும்புத்தனம் இவரது படிப்புக்கு இடையூறாக அமைந்தது. மூன்றாண்டுகளிலேயே படிப்பு நின்று போயிற்று. இவரைத் தனது தோட்டத்தில் கொண்டு போய் விட்டு விவசாயம் பயிலத் தந்தை ஏற்பாடு செய்தார். 18 வயது வரை தோட்டத்தில் தன் பொழுதைச் செலவிட்டார் துரைசாமி. இவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தன. செல்லம்மாள் என்கிற நங்கையாரை மணந்தார்.

லங்காசைர் என்கிற மோட்டார் வண்டி அவர் ஊரில் பழுதாகி நின்ற போதுதான் இவருக்கு முதல் முதலாக இயந்திரங்கள் மீதும் அவற்றின் இயல்புகள் மீதும் கவனம் ஏற்படக் காரணமாக அமைந்தது. அதன் உரிமையாளர் அதை பழுதுபார்க்கும் போது உடன் நின்று அதையே பார்த்துக் கொண்டிருந்தார் ஜி.டி.நாயுடு. அதன் பிறகே அவர் மனம் முழுக்க முழுக்க இயந்திரங்களின் செயல்பாடுகள் மீது ஐக்கியம் கொண்டது.

கிராமத்தை விட்டு நகரை அடைந்தார் துரைசாமி. ஓர் உணவகத்தில் பணிபுரிந்தார். பின்பு பஞ்சு வியாபாரத்தில் நுழைந்தார். அதைத் தொடர்ந்து திருப்பூரில் ஒரு பஞ்சாலையை அமைத்தார். அதில் லாபம் அபரிமிதமாக வந்தது. இந்தப் பணத்தை பம்பாய் பஞ்சு வணிகத்தில் இழந்து, மீண்டும் ஓட்டாண்டி ஆனார். துரைசாமி மனம் தளரவில்லை. ஸ்டேன்ஸ்   முதலாளியிடம் மோட்டார் மெக்கானிக்காக வேலை செய்தார். அவரிடமே கடன் வாங்கி ஒரு பேருந்தை வாங்கினார் ஜி.டி.நாயுடு. 1920 இல் அவரது பேருந்து பொள்ளாச்சிக்கும் பழனிக்கும் இடையில் ஓட ஆரம்பித்தது. தான் ஒருமுறை பார்த்ததை மனத்தில் கிரகித்துக் கொண்டு அதைப் பிறகு விரிவாக ஆய்வு செய்து அதன் உச்சவரம்புப் பயன்களைக் கண்டுபிடித்து விடுவார். அந்த மாதிரிதான் அவர் நடத்திய பிளேடு ஆராய்ச்சி. அவர் கண்டுபிடித்த பிளேடைக் கொண்டு 200 முறை சவரம் செய்து கொள்ளலாம். இந்த பிளேடுக்கு ‘‘ரேசண்ட் பிளேடு’’ என்று பெயர். ஜெர்மன் நாட்டிலே சட்டப்படி இதை பதிவு (ரிஜிஸ்டர்)செய்தார். இது அந்த நாட்டிலே நடந்த பொருட்காட்சியிலே பாராட்டும் பெருமையும் பெற்றது.

இதைத் தொடர்ந்து இவர் கண்டுபிடித்தது பேருந்துகளின் அதிர்ச்சியை அளவிடும் அதிர்வு சோதனை கருவி (வைப்ரேட்டோ டெஸ்டிங் மிசின்). ஒளிப்படத்துக்கு உதவியாக இருக்கக்கூடிய டிஸ்டன்ஸ் யுனைடெட் மோட்டார்ஸ்  என்கிற நிறுவனத்தை ஆரம்பித்தார். மோட்டாரில் பொருத்தப்படும் குளிர்சாதனம் (ரேடியேட்டர்) அவரது அடுத்த தயாரிப்பு. இதைப்போல மோட்டார் தொடர்பான அனைத்து உதிரிப் பாகங்களையும் தயாரிக்கத் தொடங்கினார். நான்கு முகம் கொண்ட கோபுரக் கடிகாரம் (டவர் கிளாக்) ஒன்றைத் தயாரித்தார் இந்த அதிசய அறிவாளர். பின்னர் அச்சடிக்கும்  தானியங்கி இயந்திரம், கணக்கிடும் இயந்திரங்களை இவர் கண்டு பிடித்தார். ஏட்டுக் கல்வியில் இவருக்கு நம்பிக்கை இல்லை. தொழில் கல்வியிலேயே இவரது நாட்டம் இருந்தது. இவரது முயற்சிகளுக்கெல்லாம் அப்போது சென்னை கவர்னராக இருந்த ஆர்தர் ஹோப் பெரிதும் துணை புரிந்தார்.

1945 இல் நாயுடு கோவையில் புதிய தொழில் கல்விக்கூடம் ஒன்றை நிறுவினார். தொழில் நுட்பக் கல்லூரியில் மூன்றாண்டு படிக்கத் தேவையில்லை. இரண்டாண்டு படித்தால் போதும் என்கிற அளவில் கால அளவைக் குறைத்துத் திட்டமிட்டு வெற்றி கண்டார்.

போத்தனூரில் இருந்த தனது விவசாயப் பண்ணையில் 40 ஏக்கர் நிலத்தில் விவசாய ஆய்வுகள் செய்தார். வாழை மரங்களின் மைப் பகுதியில் துளையிட்டு அதில் உப்பு - ரொட்டி போன்ற சிலவற்றை அடைத்தார். வாழைமரம் பெரியதாக வளர்ந்தது மட்டுமல்ல, தார்கள் நீள நீளமாக வந்தன. இதே போல் பருத்திச் செடியிலும் ஆய்வு செய்து பலன் கண்டார். இந்தச் செடிகள் சிறியதாக மூன்று அடி மட்டுமே வளருபவை. ஆனால் அவற்றிற்கு மருந்திட்டு 12 அடி முதல் 15 அடி வரை வளர வைத்தார். அதன் பலன் மிகுதியாக இருந்தது. துவரைச் செடிக்கு இரசாயன உரம் கொடுத்து, அதை 12 அடி வளரச் செய்து துவரை மரமாக்கிக் காட்டினார். பப்பாளி ஆராய்ச்சியில் இறங்கினார். பயன் - ஒரே மரத்தில் நூறு காய்களுக்கு மேல் காய்த்தன. இப்படியே ஆரஞ்சு, காலிபிளவர், சோளம் இவற்றில் எல்லாம் ஆய்வு செய்து செடிகள் வளர்ச்சியிலும் அவை அளிக்கும் பலன்களிலும் அமோகமாகக் கூடுதல் பலன் கண்டார். இது எல்லாமே அதிசயிக்கத் தக்கவையாக இருந்தன. இவர் வளர்த்த ஒரு விதமான பருத்திக்கு ‘‘நாயுடு காட்டன்’’ என்று பெயர் வைத்து அதை ஜெர்மன் நாட்டவர்கள் தங்கள் நாட்டில் பெரிதும் பரப்பினார்கள்.

1930 இல் அவர் தொடங்கியது யுனைடெட் மோட்டார் சர்வீஸ். இவரது அலுவலகம் அடைந்துள்ள புகழ் அளப்பரியது. அந்த இடத்துக்கு கோபால்பாக் என்று பெயர். இவர் அவ்வப்போது தனது பேருந்துகளில் மாறுவேடத்தில் சென்று தன் தொழிலாளர்கள் எப்படிப் பணியாற்றுகிறார்கள் என்பதைக் கவனிப்பார். இவரை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்று அறிவித்து அம்மாதிரியே நடந்து கொண்டார். 1932 இல் அவர் தனது முதல் அந்நிய நாட்டுப் பயணத்தை மேற்கொண்டு ஜெர்மனி சென்றார். அங்கு அவர் நுழையாத தொழிற்சாலை கிடையாது. ஒவ்வொன்றிலும் காணப்படும் தொழில்நுட்ப வளர்ச்சி அவரை ஆட்கொண்டது. இந்த பயணத்தின்போது அவர் இட்லரைச் சந்தித்தார். நாயுடு மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணம் மூன்று முறையாகும் என்பதை அந்தக் காலத்துப் பத்திரிகைகள் எழுதியுள்ளன.

தன் கண்டுபிடிப்புகளுக்கு அரசு ஊக்கம் தரவில்லை என்பதில் நாயுடு மிகவும் மனமுடைந்தவராகக் காணப்பட்டார். அவர் கண்டுபிடித்த பிளேடின் உரிமையை ஒரு வெளிநாட்டு நிறுவனத்திற்கு விற்றதே, இந்த நாட்டில் அவரது படைப்புகளுக்கு மரியாதை இல்லை என்பதற்கு சான்று ஆகும். தன் கண்டுபிடிப்புகள் பலவற்றை ஓர் இடத்தில் குவித்தார். அந்த இடத்திற்கு  அழிப்பதற்கான கட்டடம் (Construction for Destruction) என்று பெயரிட்டார். மக்களை சில நாள்கள் அந்த சேகரிப்புகளைக் காண அனுமதித்தார். பின்பு படைப்புகள் யாவும் அழிவதற்கே என்கிற வாதத்தைப் பட்டிமன்றமாக நடத்தினார். பொருள்கள் அழிக்கப்பட்டன.

நாயுடு சிக்கனத்தை விரும்புகிறவர். தன் திருமணத்தை மிக எளிதாக முடித்துக் கொண்டவர். நாயுடுவின் செல்வ நிலை செழிப்பானது. ஏராளமான நிறுவனங்களுக்கும் பொதுக் காரியங்களுக்கும் வள்ளலென நிதி உதவி செய்தார். தான் படித்த திண்ணைப் பள்ளிக்கூடம் அமைத்திருந்த லட்சுமிநாயக்கன் பாளையத்தில் ஒரு மேல்நிலைப் பள்ளிக் கூடத்தைக் கட்டினார். நாயுடு அவர்களிடம் 30,000 நூல்களைக் கொண்ட ஒரு நூல் நிலையம் இருந்தது. சித்த வைத்தியத்தில் ஆர்வம் கொண்டு தானே சில மருந்துகளைக் கண்டுபிடித்தார். இன்று வீடுகள் கட்ட பல மாதங்கள் ஆகின்றன அல்லவா? நாயுடு அவர்கள் ஆறே மணிநேரத்தில் ஒரு வீட்டைக் கட்டிக் காண்பித்தார். பின்பு தானே அதை உடைத்துத் தள்ளினார்.

இவர் சிலமுறை தேர்தலில் நின்றார். போட்டியின்றி எவரும் தேர்ந்தெடுக்கப்பட்டு விடக் கூடாது என்பது இவர் வாதம். பார்லிமென்ட் தொகுதியில் ஒருமுறை கிருஷ்ணகிரியில் இராஜாஜி மகன் சி.ஆர்.நரசிம்மனுக்கு எதிராகப் போட்டியிட்டார். பரப்புரைக்கு இவரை அழைத்த போது அங்கு சென்று எனக்கு ஓட்டுப் போடாதீர்கள். நரசிம்மனுக்கே ஓட்டுப் போடுங்கள் என்று பேசிவிட்டு வந்தார்.

நாயுடும் பெரியாரும் உற்ற நண்பர்களாவார்கள். விசுவேஸ்வரய்யா இவரைக் கவர்ந்தவர். சி.வி.இராமன் இவரது பணிகளைப் பாராட்டியிருக்கிறார். இந்த மாமேதை இந்த மண்ணை விட்டுப் பிரிந்த நாள் 04.01.1974. தமிழ்நாடு தனது சிறந்த அறிவாளிகளைப் பல சமயம் பேணிப் பாதுகாப்பதில் தவறி இருக்கிறது.


- முக்தா சீனிவாசன்


Go Back