நீங்காக் கடமை - 16-Jun-2016 08:06:57 PM

லையங்கம் படித்தேன்; குன்கா வாழும் அதே நாட்டிலேதான் முத்துக்குமாரசாமிகளும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சட்டமும் பாம்பை விட்டுவிட்டு தவளைக்குத் தண்டனை தருகிறது. உலகுக்கே வேளாண்மைப் பண்பாட்டைக் கற்றுக் கொடுத்த தமிழக விவசாயிதான் இன்று, மண்ணைப் பொன்னாக்கிவிட்டு, தன் வாழ்வை மண்ணாக்கிக் கொண்டிருக்கிறான். அதை அழகுற விளக்குகிறது ‘பழந்தமிழர் வேளாண்மை’ கட்டுரை. விவசாயிகளை வாழ வைக்க வேண்டியது ஆட்சியாளரின் நீங்காக் கடமை.
- க.தியாகராசன், குடந்தை - 612 501

நமது கடமை
வைகாசி இதழில் ‘சாதியத்தோடு இணக்கம் கொள்ளாத சாகு மகாராசர்’ எனும் கட்டுரையைப் படித்தேன். இந்தியாவில் முதன் முதலில் 1895-இல் மைசூர் மன்னராட்சியில் பார்ப்பனரல்லாதாருக்கு இட ஓதுக்கீடு அரசாணை வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து பார்ப்பனர்கள் முறையிட்டதின் விளைவாக இந்த அரசாணை 1921-இல் நடைமுறைக்கு வந்தது. மைசூர், கோல்காபூர், பரோடா ஆகிய மன்னராட்சிக்கு உட்பட்ட  பகுதிகளில் இடஒதுக்கீடு நடைமுறைப் படுத்தப்பட்டது.

இதற்கு மூலக்காரணமாக திகழ்ந்தவர் மருத்துவர் தாரவாட் மாதவன் நாயர் என்கிற டி. எம். நாயரே ஆவார். இவர்தான் இட ஒதுக்கீட்டின் தேவையை மன்னராட்சிக்கு உட்பட்ட மேற்கண்ட மூன்று இளவரசர்களுக்கும் கற்பித்தார் என்பது வரலாறு. இந்த ஒதுக்கீட்டின் தந்தை மருத்துவர் தாரவாட் மாதவன் நாயர் என்பதை மக்களுக்கு நினைவூட்டுவது நமது கடமையாகும்.
- க. அன்பழகன், திருச்சி - 620 026

வியப்பைத் தந்தது!
‘பழந்தமிழர் வேளாண்மை’ தொகுப்பில் பல தகவல்களைக் கண்டாலும், கல்லணை கட்டியவிதம் பற்றிய தகவல்தான் வியப்பைத் தந்தது! குத்துங்கம்மா குத்துங்க கவிதை வித்தியாசமான குத்துகளாய் விழுந்து சிரிக்கவும் வைத்தது. ‘இலட்சியக் கண்கள் அயராது உரை’ வாசித்தேன். ஜான் வால்டரின் ‘டைம்ஸ்’ சாதனையைக் கண்டு வியந்தேன். குடிப்பழக்கம் எப்படி எல்லாம் குடும்பத்தை கெடுக்கும் என்கிற தகவல்களின் தொகுப்பினை வாசித்தேன். மதுப் போதையின் கொடுமையை பகுத்தறிவாதிகளும் அறியவில்லை.               
- மூர்த்தி,சென்னை - 600 100

தமிழர் பெருமை!  
வைகாசி இதழில், ‘பழந்தமிழர் வேளாண்மை’ குறித்து விரிவானத் தகவல்கள் இருந்தது. நன்று. பரிணாம முறைப் போன்று தமிழரின் அழிப்பு வேலைகள் எளிதில் நடைபெறும் இந்நாட்களில் தமிழர் பெருமைப் பேசும் கட்டுரை மனதிற்கு இதமளிக்கிறது.
 - மா. சுகுமார், கல்பாக்கம் - 603 102

வீட்டுக்கொரு நூலகம்
பண்புசார் ‘தமிழ் இலெமுரியா’ வைகாசி இதழில், ‘நூலகம்’ கட்டுரை பயனுள்ள செய்திகளை அளித்ததன் பயனாய் எனது இல்லத்தில் எனது தந்தையார் பயன் படித்திய தமிழ் நூல்களையும் இணைத்து நூலகம் அமைக்க முடிவு செய்துள்ளேன். பேரறிஞர் அண்ணாவின் ‘வீட்டுக்கொரு நூலகம் வேண்டும்’ என்ற உயரிய நோக்கினை சுட்டிக்காட்டிய ஆசிரியருக்கு நன்றிகள் பற்பல. இல்லங்கள் தோறும் நூலகங்கள் அமைப்போம்.
- செ.வ.மகேந்திரன், துணை வட்டாட்சியர் (ஓய்வு), கள்ளக்குறிச்சி - 606 202

வாழ்க்கை வாழ்வதற்கே!
‘நீதியின் குரல்’ ஆசிரியர் உரை மாந்த நேயமும் மானுடப் பற்றும் பண்பும்  வளர வழிகாட்டிற்று. உலகிற்கே அரிசியை அறிமுகம், செய்தவன் தமிழன் என்பதிலே எத்துனைப் பெருமைத் தமிழனுக்கு. வள்ளுவர் கண்ட குறளில் ‘உழவு’ எனும் அதிகாரமே அதனை உறுதிப்படுத்தும். 

சமுதாய சமுத்துவ கொள்கையை ஆழ்ந்து பரப்பிய சாகு மகாராசரின் செயல்பாடு வியத்தற்குரியது.   ‘ஒப்பிலான்’ தலைப்பில் தந்தை பெரியார் பற்றி அவர் வாழ்ந்த காலத்தில் சமுதாயத்தைப் பண்படுத்த உழைத்த கால ஒதுக்கீடுகளில் தொண்டும் உழைப்பும்  அவரை இமயமேற்றிப் பாராட்ட வைத்தன. குடிப்பழக்கக் கேட்டின் விளைவுகள் வாழும் வாழ்க்கைக்கு ஊறு உண்டாக்குவதை உணர்த்தி, வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை சிந்திக்க வைத்தன.
- ந.ஞானசேகரன், திருலோக்கி- 609 804

கருவூலம்
‘தமிழ் இலெமுரியா’வுக்கு ஒன்பது வயதுதான் எனினும் பண்டைத் தமிழனின் பண்பாட்டைப் போற்றி வளர்ப்பதில் தலை சிறந்து விளங்குகிறது. ‘நீதியின் குரல்’ தலையங்கம் மக்களுக்கும்- ஆள்வோருக்கும் மிகச்சிறந்த அறிவுரைகள்! பாமயனின் ‘பழந்தமிழர் வேளாண்மை’, கே.பி.பத்மநாபனின் ‘மணமும் முறிவும்’, ‘ஒப்பிலான்’ எனும் தலைப்பில் தந்தை பெரியார் பற்றிய தஞ்சை இரத்தினகிரியாரின் தரவு ஆகியவை தமிழ் இளைஞர்கள் நெஞ்சில் இருத்திக்கொள்ள வேண்டிய கருவூலம்! வைகாசி மாத இதழில் வெளி வந்துள்ள செய்திகள் அனைத்துமே பாராட்டுக்குரியன.
- பெ.சிவசுப்பிரமணியன், சென்னை - 600 081

சாட்டை அடி
இதழ் கிடைக்கப் பெற்றேன் தலையங்கம் கருத்தியல் படித்தேன் அருமை! குத்துங்கம்மா குத்துங்க பா இலக்கு இயம்புவதாயின் நன்றூட்டும். 

தெய்வம் தொழாஅள் கொழுநற் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை! 
என்ற குறளுக்கொப்ப, சிறுகதை மூட நம்பிக்கைக்கு சாட்டைஅடி. கதை தமிழறம் மரபியம் நெறியாறு உணர்த்தும் கதை! மணிப்பிரவுவாளம் கூடிய நடையே இடருகிறது. தமிழியம் நெறியாறு எளிமை நடை அமைந்து இருப்பின் மேலும் மினுமினுப்புற்று பொன்போல் ஒளிரும்.
- அ.ம.பெ.காவளர் தமிழ்அறிவன், பேட்டை வாய்தலை - 639 112


Go Back