உலகறியச் செய்தவர் - 19-Jul-2016 03:07:33 PM

தமிழ் நாட்டை தாண்டியும் தமிழ் கூடு கட்டி தமிழை வளர்க்க முடியும் என்பதற்கு ‘தமிழ் இலெமுரியா’ ஒரு சான்று. அழிந்து போன ‘இலெமுரியா கண்டம்’ தமிழருக்குரிய கண்டம் என்பதை முதன் முதலில்  உலகறியச் செய்தவர் என்ற பேரினை பெற்று விட்டீர்.  த.இராமலிங்கனார், கருமலையார், ஆலந்தூரார், சென்னிமலையார் போன்றோர்களின் கவி வண்ணம் கண்டு களிப்புற்றேன்.
நா.பழனிவேல், சிதம்பரம் - 608 702

தமிழுணர்வு
மகாராட்டிரா மாநிலத்திலிருந்து “தமிழ் இலெமுரியா” என்கிற பெயரில்  இதழ் கடந்த ஒன்பது ஆண்டுகளாக வெளி வந்துகொண்டிருப்பது தமிழ் நாட்டிலுள்ள தமிழர்களுக்கு பெருமை யளிப்பதாகும். தமிழ் நாட்டில் இலட்சத்துக்கு மேற்பட்ட ஆங்கில வழிப் பள்ளிகளில் தமிழை ஒரு பாடமொழியாகக் கூடக் கற்பிக்கப் படுவதில்லை. தமிழ் மக்கள் தம் குழந்தைகளை ஆங்கில வழிப் பள்ளிக்கு அனுப்புவதையே பெருமையாகக் கருதுகின்றனர். தாய் மொழிக் கல்வியே சாலச் சிறந்தது; இயற்கையானது என்பதை அறிந்துக் கொள்ளாமல், கொள்ளை அடிப்பதற்காகவே நிறுவப்பட்டிருக்கும் ஆங்கிலப் பள்ளிகளில் தம் குழந்தைகளை சேர்க்கவே முனைகிறார்கள்; இதற்கு தமிழுணர்வு அவர்களிடம் மழுங்கடிக்கப் பட்டுள்ளதே முக்கிய காரணம். ஆகவே  ‘தமிழ் இலெமுரியா’வில் தமிழுணர்வை தட்டி எழுப்பும் கட்டுரைகள் இன்னும் கூடுதலாக வெளிவந்தால் பயனுள்ளதாக இருக்கும். 
- க.சி.அகமுடை நம்பி, மதுரை - 625 020
நன்றியுள்ளவர்கள்
ஆனி மாத இதழ் கண்டேன். தலையங்க உரையில் ஊடகங்களில் பல உண்மைக்கு மாறான செய்திகளை யதார்த்தம் என முழங்கி இருந்தீர்கள். அது உண்மையே! வாக்களர்களுக்கு நிறையவே பணம் கிடைத்தது. இதன் நன்றியால் கிடைத்ததுதான் அமோக வெற்றி! தமிழர்கள் துட்டு விசயத்திலும், புட்டி விசயத்திலும் நிறையவே நன்றியுள்ளவர்கள். 

ஜி.டி. நாயுடு போன்று உழைத்த லூதர் பர்பாங் பற்றிய கட்டுரை வாசித்தேன். மரம், செடி, கொடிகளை நேசித்தது அதில் புதுமையான புரட்சிகளை அறுவடை செய்த அவரின் முயற்சி வியப்பில் ஆழ்த்தியது. இந்தி எதிர்க்கும் கட்டுரை வாசித்தேன். தமிழ் நாட்டில் இந்தி, அரசு மொழியாகக்கூடாது என்பது ஆட்சியை பிடிக்கும்  மொழியாகிவிட்டது
- மூர்த்தி, சென்னை - 600100
தலையாயப் பணி!
ஆனி மாத இதழில் ‘நல்லவனாய் வாழ்ந்துதான் நாய் நரியை உள்விட்டாய்’என்கிற கவிஞர் ம.இல.தங்கப்பாவின் எரிமலை எழுத்துக்களோடு துவங்கிய இதழ் இனப் பகைவர்களின் கொடுஞ் செயல்களுக்கு அடிக்கப்படும் மரண அடிதான். நாடிழந்து, மொழியிழந்து, பண்பாடிழந்து, பகைவர்க்கு அடிமையாய் இன்னும் எத்தனை நாள் வாழ்வான் தமிழன்? தீதும் நன்றும் பிறர் தர வாரா! எழுவதும் வீழ்வதும் அவனின் கரங்களில்! தூங்கும் தமிழனை தட்டியெழுப்பும் தலையாய பணியில் இன்று ‘தமிழ் இலமுரியா’ முன்னணியில் நிற்பது பாராட்டுக்குரியது. 
- க. தியாகராசன், குடந்தை -  612 501

குத்தீட்டி
தேர்தல் முடிவுகள் திராவிடக் கட்சிகளுக்கு மாற்று  இன்னும் தமிழ்நாட்டில் முகிழ்க்க வில்லை என்றும் எந்தவித இலக்கும் இல்லாத உதிரிக்கட்சிகள் உரிய இடம் பெற்றதால் தங்களை திருத்திக் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் ஆளும் கட்சியும் எதிர்க் கட்சியும் நாட்டு நலனுக்காக செயல் பட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டி ‘நச்சு விதைகள் அழியட்டும் நல்லவிதைகள் செழிக்கட்டும்!’ என்றெழுதப்பட்ட தலையங்கத்தில் இருந்தது குத்தீட்டியின் கூர்மை!
- ப.லெ.பரமசிவம், மதுரை - 625 009
தீண்டாமை நெருப்பு
‘தமிழ் இலெமுரியா’ ஆனி மாத இதழில் எஸ்.என்.சாகு வின் ‘எது தேசியம்?’ முதன்மைக் கட்டுரை நல்ல துரிதமான நடையில் விளக்கப்பட்டிருப்பது இந்திய நாட்டு மக்களுக்கு பயன்தக்க செய்தியாகும். சமத்துவம் எனும் துணைத் தலைப்பில் அறமொழியனின் தீண்டாமை நெருப்பை அணைக்க தனியாக கிணறு வெட்டியவரின் புகைப் படத்துடன் வெளியான கட்டுரை சமுக இழிநிலையைச் சாடியுள்ளது. தாகத்திற்கே தாகம் தீர்த்த மாமனிதர் பாபுராவ் தாஜ்னிக்கும் கட்டுரையாசிரியருக்கும் பாராட்டுக்கள்.
- திருமாவளவன், திருவெண்ணை நல்லூர் -  607203

சமத்துவம்
மகாராட்டிரா மாநிலத்தில் பாபுராவ் தாஜ்னி என்பவர் தீண்டாமை நெருப்பை அணைக்க கிணறு வெட்டிய செய்தி வியப்பைத் தந்தது. உயர் சாதியினர் நீர் ஆதாரங்களை ஒடுக்கப்பட்டவர்கள் பயன்படுத்தக் கூடாது எனும் அந்த கால பழக்க வழக்கம் இன்றும் தொடர்வதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது. நீர், நிலம், காற்று போன்றவை எல்லாருக்கும் பொதுவாக இருக்க வேண்டும்.
- எஸ்.மோகன், கோவில்பட்டி -  628 501

முதல் மொழி
ஆனி மாத  இதழின் கட்டுரை, பா.ஜ.க.   வினரின் தேசியம் பற்றி அளித்து வரும் வறட்டுப் பேச்சுகளுக்கு பதில் அளிப்பதாக அமைந்துள்ளது; வரவேற்கத்தக்கது. பிறிதொரு கட்டுரையில் நேருவின் மாண்பைப் போற்றியும் எழுதப்பட்டுள்ளது. பா.ஜ.க. வின் பரம்பரைக்கே நேருவின் செயல் பாட்டை இகழ்வது ஒன்றே நோக்கமாக இருந்துள்ளது. 
- க. த.அ. கலைவாணன், வேலூர் - 632 002 

கள்ளிச்செடி
‘பழந் தமிழர் வேளாண்மை’ கட்டுரை படித்தேன் நிலத்தை வகைப் படுத்தி வாழ்ந்த  தமிழர்களின் பண்டைய வேளாண்மை மிகச் சிறந்த வேளாண்மையே. எனவேதான் அரிசியை அவன் உலகிற்கே அறிமுகப் படுத்தியவனாகிறான். அரிசி என்கிற சொல்லில் இருந்தே ரைஸ் என்கிற ஆங்கிலச்சொல் வந்திருக்கிறது என்பது தெளிவாகிறது. மகளிர் விளையாட்டு  நானும் விளையாடியுள்ளேன். பல விளையாட்டுக்களை தோழிகளுடன் விளையாடிய நினைவுகள் நிழலாடு கின்றது. கட்டுரையாளருக்கு மிக்க நன்றி என் இளமைக் கால நினைவுகளை நினைவு படுத்தியமைக்காக.

“ஒப்பிலான்” பெரியார் பற்றிய தகவல் மிகச்சிறப்பு.  பெரியார் தமிழ் நாட்டில் பிறந்திருக்காவிட்டால்  நான் இன்று ஆடு மாடு அரசிடம் இலவசமாக வாங்கி மேய்த்துக் கொண்டிருப்பேன். எல்லா பெண்களும் கண்டிப்பாக கல்வி கற்க வேண்டும். இலவசமாக பெண்களுக்கு கல்வி தரலாமே?
- ஞா. சிவகாமி, போரூர் - 600 116


Go Back