உணவும் உணர்வும் - 16-Aug-2016 01:08:56 PM

“உணவைக் கொடு; பின் உணர்வைத் தூண்டு” எனும் வள்ளலாரின் உயிரிரக்க வெளிப்பாடு,   உணவுக்கும் உணர்வுக்குமான உறவை நினைவூட்டுகிறது. உண்ணும் அன்னமும் எண்ணும் எண்ணமும் நெருங்கிய தொடர்பு கொண்டவை. உண்ணும் உணவுதான் மனிதனின் தரம் உயர உரமாகவும் ஊக்கியாகவும் துணை நிற்கிறது என்பது அறிவியல் உண்மை. மனித அவலங்களும் சபலங்களும் பெருகி வருகின்றன. காரணங்கள் கணக்கிலடங்காதவை எனலாம். என்றாலும், உண்ணும் உணவு அடிப்படையாக அமைந்து அனைத்தையும் ஆட்டுவிப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. நேர்மை, நுண்மதி, மட்டுறுதி, மனவுரம், புத்திமை, நம்பிக்கைப் பற்றார்வம், அற ஆர்வம் என்கிற நலந்தரும் மூலப் பண்புகளின் வேர்தான் நல்லுணர்வும் ஊட்ட உணவும்.

அன்னம்போல் எண்ணம்
எண்ணம்போல் ஒழுக்கம்
ஒழுக்கம்போல் பழக்கம்
பழக்கம்போல் வழக்கம்
வழக்கம்போல் உள்ளம்
உள்ளம்போல் வாழ்வு
வாழ்வுபோல் உயர்வு
வார்த்தைபோல் அறிவு
பார்வைபோல் அன்பு

உணவுச் சங்கிலிபோல் ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றன. நடைமுறைச் சாத்தியத்தை நெஞ்சிற் கொண்டு ஒழுங்கு முறையைக் கடைபிடித்தால் உயர்வு கிட்டுமென்பது உறுதி.

கொல்லாமை:
முப்பாலில் முதற்பால் அறத்துப்பால். அப்பாலின் மூன்றாம் இடத்தைத் துறவறவியல் பெற்றுள்ளது. இவ்வியலில் உள்ள பதிமூன்று அதிகாரங்களில் ஒன்பதாம் அதிகாரமாம் “கொல்லாமை” கொண்டுள்ள பத்துக் குறள்களும், உண்பதிலும் அறவழி உண்டென்பதைக் கூறுகின்றன. சற்றே தோன்றித் தற்காலிக மயக்கம் தந்து, மீண்டும் மீண்டும் ருசிகண்ட பூனைபோல் சுவைக்கத் தூண்டும் ஏக்கத்தை ஏற்படுத்தி விட்டுக் கண நேரத்தில் மின்னலென மறைந்துவிடும் மாயையே மகிழ்ச்சி எனும் நோய். உண்பது உட்பட எந்த ஒன்றும் அனுபவிப்பதால் அடங்குவதில்லை. நெருப்புக்கு நெய்யூற்றுவதால் அது வீரியம் பெற்று எரிவது போல் அனுபவிப்பதில் ஆசை வளரும். ஏமாற்றப் படுவதற்கு மறு பெயர்தான் மகிழ்ச்சி. நாவின் சுவையில் நைந்து வாழ்பவர் இருந்தாலும் இறந்தாலும் ஒன்றுதான் என்கிறது வள்ளுவம்.

கணிதத்திலும் அறிவியலிலும் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஓக்கம்ஸ் ரேசர் (Occum’s Razor) தத்துவம், எளிமைதான் உயர்வு எனச் சுட்டுகிறது. அதிகமான மூலப் பொருள்கள் கொண்டு அதிகமாக நேரத்தை வீணடித்துத் தயாரிக்கப்படும் உணவில் நற்பயன் குறைவு என்கிறது. “மாமிசம் புற்று நோயை வளர்க்கும்; உப்பு ஆபத்தானது; வெள்ளை சீனி கொஞ்சம் கொஞ்சமாக நின்று கொல்லும்; கொழுப்புச் சத்துடையவையும் மாவுத் தன்மையுடையவையும் குறைக்கப்பட வேண்டியவை என்று உலகச் சுகாதார நிறுவன ஆய்வுகள் வழிகாட்டுகின்றன. குறைவான அளவு உணவு, உடல் நலத்தையும் வாழ்நாளையும் நீட்டிப்பதாக ஆசுத்திரேலியாவிலுள்ள நியூ சௌத் வேல்சு பல்கலைக் கழகத்தில் டாக்டர் மார்கோ அட்லர் தலைமையிலான 2014 ஆம் ஆண்டு ஆராய்ச்சி உறுதிப்படுத்துகிறது. 2016 சூன் 05 அன்று, தமது 104 ஆம் அகவையில் கல்கத்தாவில் இயற்கையெய்திய இயற்கையுடன் இயைந்த உன்னத மனிதர், மனோகர் எய்ச் என்பார், சிக்கலான வாழ்வைச் சமாளிப்பதற்கு எளிய உணவே மருந்தாகும் என்பதைக் கீழ்க்கண்ட இசை வரிகளில் அடிக்கடி உதிர்த்து மகிழ்வதுண்டு.

“சிறிதளவு அரிசிச்சோறு ஆற்றலை இரட்டிப்பாக்குகிறது;
நிறைய அளவிலான அரிசிச்சோறு பாதிப்புக்கு உள்ளாக்குகிறது”

புரதச்சத்து மிகுந்த மாமிசம், நாளென்றுக்கு இருபது வெண்சுருட்டு (சிகரெட்) புகைப்பதால் ஏற்படும் கெடுதலைப் போல், புற்றுநோய்த் தாக்கம் ஏற்படுத்துகிறது என்று 2014 இல் இலண்டனில் நடைபெற்ற ஆராய்ச்சி அறிவிக்கிறது. மாமிசம் அதிகம் நிறைந்த உணவும்,  பழம், காய்கறி குறைந்த உணவும், மிகுந்த உடல் நலக் கேட்டுக்குக் காரணமாகிறது என 2016 இல் இலண்டன் கிளாஸ்கோ பல்கலைக் கழக ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

தீது:
திறனுக்கேற்ற வகையில் தீதற்ற முறையில் வந்து சேர்ந்த பொருள் அறத்தையும் இன்பத்தையும் ஒருங்கே கொண்டு வரும் என்கிறது குறள். குற்றமற்றவர் கொடுப்பதைக் கொள்வதுதான், மனத்துக்கண் மாசிலனாக வாழ்வதற்கான வழி என்பதை “குற்றம் தமர் அல்லார் கையத்து உண்” எனும் நான்மணிக்கடிகை வரி நல்வழி காட்டுகிறது. “ஞானம் எனும் நூலின் முதல் அதிகாரம் நாணயம்” என வலியுறுத்துகிறார் தாமசு ஜெஃபர்சன், “வாழ்க்கையில் இன்பங்கள் அதிக அளவில் பெருகப் பெருக, கலைகள் பூரணத்துவத்தை அடைய அடைய, ஆடம்பரம் அதிகரிக்க அதிகரிக்க உண்மையான வீரமும் ஒழுக்கங்களும் துப்புரவாக அகற்றப்பட்டு விடுகின்றன” என்கிற ரூசோவின் பதிவு இன்றைய மானுடப் போக்குக்கான எச்சரிக்கையாகும்.

தீர்வு:
முரட்டுச் சுவை கொண்ட உணவு வகைகளை விரும்புகிறவரிடம் பிறருக்குக் கொடுமை செய்யும் குணம் முந்தி நிற்கும் என இலண்டன் பல்கலைக் கழக 2015 ஆம் ஆண்டு ஆராய்ச்சி முடிவு குறிப்பிடுகிறது. குப்பை உணவுகள் நுகர்ச்சியின் உச்சிக்கு இட்டுச் செல்லும் வெறியூட்டி, சமுதாய வீழ்ச்சிக்கு வழிகாட்டுபவை. வஞ்சமற்ற நெஞ்சங் கொண்ட இளம் பிஞ்சுகளைக் கவரும் வகையிலான விளம்பரப் பொருள்கள், அறியா நிலையிலுள்ள அப்பாவிகளையும் சின்னஞ் சிறார்களையும் மன வளர்ச்சிப் பாதிப்புக்கும் கற்றலின் குறைபாட்டுக்கும் உள்ளாக்குவதாக அறிவியல் எச்சரிக்கிறது. “விலையின்றிக் கொடுப்பவரின் மனம், அன்பளிப்புப் பெறுபவரின் மனதை ஆட்டி வைப்பதால், பிறரிடமிருந்து பெறுவதைத் தவிர்த்திட வேண்டுமென்று”, பதஞ்சலி யோக சூத்திரம் குறித்த விளக்கத்தில் சுவாமி விவேகானந்தர் சொல்கிறார். தண்ணீருக்கும் உணர்வு உள்ளது என்பதும் குடிக்கும் நீருக்கும் பருகுபவரின் பண்பாட்டு வளர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்பது அறிவியற் கூற்று” உறவில் தாக்கம் தரும் உணர்வு தண்ணீரில் கலந்திருக்கிறது என்பதும் உணவு, தண்ணீர் போன்றவற்றை நேசிப்பவரிடமிருந்து மட்டுமே பெற வேண்டுமென்பதும் அனுபவமிக்க முன்னோரின் அறிவியல் வழிகாட்டலாகும்.

மருந்து நிறுவனங்களின் அன்பளிப்புகளை ஏற்கும் மருத்துவ இனம் அந்த நிறுவனங்களுக்குச் சாதகமாகச் செயற்படுவதாகவும் விலையின்றிப் பெறுகின்ற ஒரே ஒரு பிசா எனும் பண்டம் கூட மருத்துவச் சேவையிலுள்ளோரிடம் மாற்றத்தை ஏற்படுத்துவதாக உலகளாவிய ஆய்வு கணிக்கிறது. மனத் துய்மை களங்கப்பட்டால் செயற்திறன் சீர்கேடடையும். “உள்ளத்தே உணர்ந்து காணவும் புறத்தே கண்டு உணரவும் செய்யவல்லதொரு உள்ளுணர்வுதான் மனித அறிவு” என்றார் உளவியல் ஞானி கபிலத் தேவர். சந்தைப் பொருளாதாரத்தின் சண்டை சச்சரவுகளிலிருந்து தற்காத்துக் கொள்வதற்குத் தற்சார்ப்புக் கோட்பாடு செயலாக்கம் பெற வேண்டும். வாழும் மண்ணைச் சுற்றி விளைபவற்றை உணவாகக் கொள்வதில் உடல் நலம் உண்டாகும் என்பது போல், அவரவர் இல்லங்களில் உணவு தயாரித்து உண்பதால் இரண்டாம் வகை நீரிழிவு நோய்த் தாக்கத்தைத் தவிர்க்கலாம் என்பது அமெரிக்காவிலுள்ள ஆர்வார்டு டி.எச.சான் பொது சுகாதாரப் பள்ளியைச் சேர்ந்த கி சன் (Ki Sun) என்பாரின் 2016 ஆம் ஆண்டு ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

பழ வகைகள், காய்கனி, குறுந்தானியங்கள், விதைகள் கொண்ட காய்கள் இனத்தைச் சேர்ந்தவை மூளையைப் பலப்படுத்துகின்றன. 2015 ஆம் ஆண்டு நியூயார்க், கொலம்பியா பல்கலைக் கழக அறிஞர் இயான் கு (Yian Gu)  என்பாரின் ஆராய்ச்சி முடிவு. இன்ப நுகர்வுத் தவிர்ப்பு வாழ்வுக்கு இறவாப் புகழ் உண்டு. இயற்கை என்பது உண்மை. இந்த உண்மையை அடிப்படையாகக் கொள்ளும் வாழ்வு ஏற்றம் பெறும். உண்ணும் உணவு இயற்கையுடன் இயைந்ததாக இருக்கட்டும். மன்னுயிரில் தன்னுயிரை மறந்திருக்கும் வேளையில்தான் மனிதர் உண்மையாக வாழ்கின்றனர் என்பதை மனதிற் கொள்வோம். உணவு முறையில் எளிமையைக் காண்போம். மனிதத் தரம் உயரட்டும்.

- நா.முத்தையா, மதுரை


Go Back