மருதாணி - 16-Aug-2016 01:08:41 PM

எம்பி எம்பிக் குதித்தேன்
எட்டவில்லை...
எதிர்வீட்டு
மருதாணிக் கிளை.

குட்டச்சி குட்டச்சி
கை கொட்டிச்
சிரித்தாள்
என் தோழி !

அவள் ஒரு 
நெட்டச்சி.
தூக்கினாள் என்னை
நெட்டச்சி
பழைய பாவாடைக்குள்
புதிய இலைகள்.

அரைத்துத் தர
என் அம்மாவை
வேண்டினேன்!
பச்சை விறகுடன்
அம்மா அடுப்புடன்
போராட்டம்!

நானே அம்மியில்
அறைத்தேன்.
என் கை சிவந்தது
வாய் சிரித்தது.
மருதாணியை
அப்பிக் கொண்டேன்
ஐந்து விரல்களும்
நகச் சுத்தியாயின.

சாப்பிடப் பிடிக்கலே
தூங்கி எழுந்தேன்.
பாயெங்கும்
மருதாணித் தூள்
இந்தக் கருவாச்சியின்
கைகள் இரண்டும்
கட்சி மாறிப் போயின
சிவப்பாய்!

அம்மா அப்பா
எல்லோரிடமும்
“கை”யைக்
காட்டினேன்.
அப்பா முகம் சிவந்தார்.

வறுமையிலும்
செம்மையாய்
இரு - உண்மையாய்
இரு - அதுவே
சிவப்பு - சிறப்பு
என்றார்.

இளமை
நினைவுகள்
இன்னும் இப்போதும்
புரிகிறது...
அடுத்த வீட்டு
மருதாணி
“இலை”க்குக் கூட
ஆசைப்படக்
கூடாதென்று.

- ஞா.சிவகாமி


Go Back