ஆ(ஹா)ர்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைய மராத்திய மாநில தமிழர்கள் நிதி உதவி - 16-Aug-2016 06:08:51 PM

உலகத்திலேயே முதல் தரம் மிக்க உன்னதமான பல்கலைக் கழகம் என அனைவராலும் பாரட்டப் பெறும் அமெரிக்க நாட்டிலுள்ள ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் உலகின் முதல் மொழியும் மூத்த மொழியுமான தமிழுக்கு இருக்கை ஒன்று அமைப்பதற்கான  நன்கொடையை முதலில் இந்தியாவின் பொருளாதார தந்தையாக விளங்கும் மும்பையிலிருந்து  திரட்டி வருகின்றனர். அந்த முயற்சிக்கு உதவிடும் வகையில் மும்பையில் உள்ள தமிழார்வமிக்க அரசு அதிகாரிகள், தமிழ்ச் சங்கங்களின் பிரதிநிதிகள், தமிழ் ஆர்வலர்கள் அடங்கிய குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் சர்ச்கேட் பகுதியில் உள்ள அம்பாசிடர் விடுதியில் நடைபெற்றது. இதில் மகாராட்டிரா மாநில ஒருங்கிணைப்பாளராக மகாராட்டிர மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியத் தலைவர் டாக்டர் பொன்.அன்பழகன் ஐ.ஏ.எஸ். பொறுப்பேற்றுள்ளார். 

தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இவ்விழாவில் தமிழ் இலெமுரியா முதன்மை ஆசிரியர் சு.குமணராசன் வரவேற்புரையாற்றினார். டாக்டர் பொன். அன்பழகன் இதன் அவசியம் குறித்தும் தமிழர்களின் கடமைகள் குறித்தும் விளக்கமளித்தார். 

இந்திய அரசின் முன்னாள் கூடுதல் செயலாளர் பாலசந்திரன் ஐ.ஏ.எஸ். அமெரிக்காவிலிருந்து முனைவர் எம். ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டு இத்திட்டம் குறித்தும் தமிழ் இருக்கை அமைவதின் பலன்கள் குறித்தும் விரிவாக உரையாற்றினர். இந்த முக்கியமான நிகழ்வில் மகாராட்டிர மாநிலத்தில் பணிபுரியும் தமிழார்வமிக்க உயர் அதிகாரிகள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மராத்திய மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் டாக்டர் பொன். அன்பழகன் ஐ.ஏ.எஸ்., வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் எம். ராஜன் ஐ.ஆர்.எஸ்., பொருளாதாரக் குற்றத்துறை துணை காவல் ஆணையர் ஜெயக்குமார் ஐ.பி.எஸ்., மும்பை துணைக் காவல் கண்காணிப்பு ஆணையர் திருமதி அம்பிகா ஐ.பி.எஸ்., வருமான வரித்துறை துணை ஆணையர் வி.எஸ். பாண்டியன் ஐ.ஆர்.எஸ்., சுங்க வரித்துறை ஆணையர் விமலநாதன், இந்திய அரசின் அணுசக்தித் துறை துணைச்செயலர் மெர்வின் அலக்சாண்டர், அணுசக்தித் துறை மத்தியப் பள்ளியின் முதல்வர் காளத்திநாதன், மும்பைத் தமிழ் சங்கத் தலைவர் ஆர்.கண்ணன், மராத்திய மாநில தமிழ்ச் சங்கத் தலைவர் டாக்டர் அண்ணாமலை, தோகா வங்கியின் மும்பைத் தலைவர் சேதுராமன் சாத்தப்பன், கலைத்துறை இயக்குனரும் தொழிலதிபருமான சுசி.கணேசன், தொழிலதிபரும் சமுகச் சேவகருமான நம்பிராஜன், மும்பை இளைஞர் காங்கிரசு தலைவர் கணேஷ், தமிழார்வமும் சமுக நோக்கமும் கொண்ட தொழிலதிபர்கள் கல்யாணராமன் தானே, சேகர் முல்லுண்டு, ஸ்விப்ட் நிறுவன மேலாண்மை இயக்குநர் ஆ.டென்சிங் நவி மும்பை, பொருளாதார நிபுணர் முத்துக்கருப்பன் நவி மும்பை தமிழ்ச் சங்க முன்னாள் செயலாளர் சி.செல்வராஜ்,  தமிழ் இலெமுரியா ஆசிரியர் சு.குமணராசன், எச்.சி.எல்  நிறுவன துணை மேலாளர் அ.ரவிச்சந்திரன், மகாராட்டிர மாநில தமிழ் நலக் கூட்டமைப்பின் அமைப்பாளர் கராத்தே முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு இத்திட்டத்திற்கு ஆதரவு அளித்து நிதி திரட்டித் தருவதாக உறுதி அளித்ததுடன் தன் சொந்த நிதியாக உடனடியாக நிதியினை அறிவித்தனர். இதன்மூலம் முதல் நாளிலேயே ரூபாய் இருபத்து ஐந்து இலட்சம் திரட்டப் பட்டது. 

மேலும் உணர்வொத்த தமிழர்கள் பலரை அணுகி ஒரு கணிசமான தொகையினை மகாராட்டிர மாநில தமிழர்கள் சார்பாக ஹார்வர்டு பல்கலைக் கழகத்திற்கு அனுப்பி வைப்பது எனவும் தீர்மானிக்கப் பட்டது. இந்த முயற்சிக்கு மேனாள் காவல் துறைத் தலைவர் டி.சிவானந்தம் ஐ.பி.எஸ்., ரவீந்திரன் ஐ.ஏ.எஸ்., சட்ட மன்ற உறுப்பினர் கேப்டன் தமிழ்ச் செல்வன், தி.சிங்காரவேலு ஐ.பி.எஸ்., நாசிக் ஆட்சியர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., டாக்டர் ந. இராமசாமி ஐ.ஏ.எஸ்., ஆதித்யஜோதி மருத்துவமனைத் தலைவர் டாக்டர் நடராஜன், டாக்டர் ராதிகா, திருவள்ளுவர் மன்றத் தலைவர் வி.தேவதாசன், தொழிலதிபர்கள் யேசுதாசன், ந.சபேசன், வேலு, வழக்கறிஞர் சின்னபாண்டியன் உள்ளிட்ட ஏராளமான தமிழ் ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த முயற்சிக்கு மராத்திய மாநில தமிழ் அமைப்புகள் துணை நிற்குமாறு மராத்திய மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பொன்.அன்பழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

விழா இறுதியில் அ.ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.


Go Back