முழுத்தம் - 11-Sep-2016 02:09:24 PM

“கெட்டிமேளம் கெட்டிமேளம்; முகூர்த்த நேரம் முடியறதுக்குள்ள தாலி கட்டுங்கோ’’ என்ற சொற்களை பெரும்பான்மையோர் நடத்தும் திருமண வீடுகளில் நாம் கேட்டிருப்போம். அப்படி என்ன முகூர்த்தம் முடிவதற்குள் தாலி கட்டவேண்டும். முகூர்த்தம் முடிந்து தாலி கட்டினால் குற்றமா? எனில் முகூர்த்தம் என்பது என்ன?   

பண்டைத் தமிழர் மணம் கொடை மணம், காதல் மணம், கவர்வு மணம் என்ற மூன்று வகையுடையது. இதில் காதல் மணம் முதலது. இதனை அன்பின் ஐந்தினை என்று இலக்கியம் கூறும். பெற்றோர் மறுப்பதறியின் உடன்போக்கும் உண்டு.

அற்றை நாளில் இன்றுள்ளது போல் அறிவியல் வளர்ச்சியும் போக்குவரத்தும் இல்லை. ஒருவர் வீட்டில் நடக்கும் திருமணத்திற்கு அவர்தம் உற்றார் உறவினர் ஏனைய ஊர்களிலிருந்தும் வெகு தொலைவிலிருந்தும் கால்நடையாய் வருவதால் கால சுணக்கம் ஏற்படுவது இயல்பு. மின்சாரமில்லாத அக்காலத்து பயணியருக்கும் விழா உரியருக்கும் நிலவே இருளைப் போக்கி ஒளியைத் தருவதால் அவர்தம் விழா நிகழ்வையும் அதற்கு ஏற்றார்போல் அமைத்துக் கொண்டனர்.

காருவா (அமாவாசை) முடிந்து வெள்ளுவா(பொளர்ணமி) வருவதற்கு 15 நாட்கள் ஆகுமென்பதாலும் வெள்ளுவா அன்று நிலவு முழு நிலவாய் தெரிவதாலும் அந்நாளே தமக்கும் ஏனையோருக்கும் ஏந்தலாய் இருக்கும் என்பதை அறிந்து அந்நாளில் முழுத்தம் வைத்தனர். காலம் முழுத்து வரும் நேரம் முழுத்தம். முழு – முழுத்தம். முழுத்தம் பின் முகூர்த்தம் ஆயிற்று.

இன்றும் தமிழ்நாட்டில் சித்திரை, வைகாசி, ஆனி, தை, பங்குனி மாதங்களே திருமணத்திற்கு ஏற்ற மாதங்களாய் கொள்ளப்படுவதை அறிக.  வானம் காரின்றி தெளிவாய் இருப்பதும் நிலமும் பனி குறைந்து காணப்படுவதாலும் இந்த ஐந்து மாதமுமே திருமணம் செய்வதற்கு ஏற்றதாய் இருந்ததால் அந்த மாதங்களிலே திருமணங்களை பெரும்பான்மையாய் ஏற்பாடு செய்தனர். இன்றைய நாகரிக வாழ்வில் ஏனைய பருவத்தில் மணம் முடிப்பதும் வழக்கில் உள்ளது.

மேலும் தமிழரின் காதல் மணத்தில் இன்றுள்ளது போல் சடங்குகள் செய்து தாலி கட்டும் வழக்கமும் இல்லாதிருந்தது.  அது பிற்றை வழக்காகும்.  தலைவன் கொடுக்கும் உறுதிமொழியே தலைவிக்கு அரணாகும்.

‘அஞ்ச லென்றவன் சொல்லஞ்சலையே; யானே
குறுங்கா லன்னம் குலவுமணற் சேக்குங்
கடல்சூழ் மண்டிலம் பெறினும்
விடல்சூ ழினால் நின்னுடை நட்பே’ (குறுந்தொகை-300)

என்ற சங்கப்பாடலில் தலைவன் தலைவியைப் பார்த்து இந்த உலகம் முழுவதையும் பெற்றாலும் நான் உன்னைக் கைவிடேன் என்று உறுதிமொழிக் கூறியதைக் காண்க. அதேபோல்

‘பூவிடைப் படினும் யாண்டுகழிந் தன்ன
நீருறை மகன்றிற் புணர்ச்சி போலப்
பிரிவரி தாகிய தண்டாக் காமமோ
டுடனுயிர் போகுக தில்ல; கடனறிந்
திருவே மாகிய வுலகத் 
தொருவே மாகிய புன்மைநா முயற்கே’ (குறுந்தொகை-57)

என்று தலைவி கூறுவதால் மரணம் நிகழ்வதாயினும் தானும் தன் தலைவனும் ஒருங்கே இறக்க வேண்டும் என்று கூறுவதால் அக்காலத்தில் நம்முந்தையர் எத்துணை அன்பொழுக வாழ்ந்தனர் என்பதை அறிய முடிகின்றது.

இவரெல்லாம் முழுத்தம் பார்த்தோ தாலி அணிந்தோ வாழ்ந்தாரில்லை. தமிழ்ப் பெண்டிர் ஒருவருக்கு மன தைக் கொடுத்தபின் வேறு ஒருவரை கனவிலும் நினையார் என்பதை திலகவதியம்மையார் வாழ்வு கூறும். கலிப்பகை நாயனார் போரில் இறந்தார் என்ற செய்தி கேட்டு   அவர்க்கு மணம் பேசிய திலகவதியம்மையார் தானும் இறக்க முற்பட்டார். பின் தன் தம்பி திருநாவுக்கரசர் பொருட்டு மணவாதிருந்து உயிர்வாழ்ந்தார்.  ‘கற்பெனப் படுவது சொற்றிறம் பாமை’ என்னும் கூற்றுக்கு காட்டாக ஆதிமந்தியார், பூதப்பாண்டியன் தேவியார், கண்ணகியார், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் தேவியார் எனப் பலர் உளர். இவரெல்லாம் முழுத்தம் பார்த்திருப்பரேயன்றி சடங்குகள் கூடிய முகூர்த்தம் பார்த்திரான்றோ!

- நெல்லை பைந்தமிழ்


Go Back