உலக மாமேதை அறிஞர் அண்ணா!
முத்தமிழ்தாம் நன்குகற்று முதன்மை பெற்றார்
முழக்கமிட்டார்! மேடை தோறும் பேசும் பேச்சால்
இத்தரணி மக்களெல்லாம் ஏற்றுக் கொண்ட
இன்சொல்லன் சொல்வல்லன் அறிஞர் அண்ணா!
கத்திதன்னை தீட்டாதே என்று சொல்லி
கவிதைதன்னில் நற்கருத்தும் நினைவில் ஏற்க
புத்திதன்னை தீட்டுநாளும் புதுமை காண்பாய்!
புரிந்துகொள்ள எழுதிவைத்தார் அறிஞர் அண்ணா!
சத்தியத்தில் ஊன்றியநல் காந்தி அண்ணல்
சரித்திரத்தில் தென்னாட்டு காந்தி அண்ணா!
சித்திரமாய் உள்ளத்தில் நிலைக்கும் வண்ணம்
சீர்செய்தார் திரையுலகை அறிஞர் அண்ணா!
முத்திரையை பதித்தார்கள் மக்கள் எல்லாம்
முதலமைச்சர் ஆனாரே மேதை அண்ணா!
சித்தத்தால் சிலவாண்டு ஆட்சி செய்து
சிறப்போடு புகழ்பெற்ற அறிஞர் அண்ணா!
மத்தியிலே ஆண்டவர்கள் ஆட்சி செய்ய
மாண்டார்கள் சென்னைபெயர் மாற்ற வேண்டி!
முத்தாக தமிழ்நாடு பெயரை வைத்து
முழுமூச்சாய் ஆட்சிசெய்த அறிஞர் அண்ணா!
நித்திரைகொள் தமிழறிஞர் நினைவு போற்ற
நிலையாக சிலைகள்தான் நிறுவச் செய்தார்!
வித்தாக அன்றுபோட்ட விதைகள் நாளும்
விளைந்தனவே! வழிகாட்டி! தலைவர் அண்ணா!
- ம.மயில் இளந்திரையன், கோவை