புயலாக மாறட்டும் - 11-Sep-2016 04:09:45 PM

உலகின் இருவேறு துருவங்களை அட்டைப் படமாகக் கொண்டு வெளி வந்திருக்கும் ஆவணி இதழ் படித்தேன். தந்தை பெரியார் சொன்னதைப் போல பெரும் புரட்சி ஏற்பட்டு, புதிய அரசமைப்புச் சட்டம் உருவானால் ஒழிய இந்தியாவில் எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க இயலாது. முதன்மைக் கட்டுரை இதனை நன்கு விளக்குகிறது. ‘வாழ்ந்து பார்ப்பதே வாழ்க்கை’ சிறப்பான கட்டுரை. சிறுகதை, மொழி ஆய்வு கட்டுரை என அனைத்தும் தமிழ் இலெமுரியாவுக்கே உரிய தனிச் சிறப்பு. திங்கள் தோறும், இல்லத்தில் வீசும் தமிழ்த் தென்றல் தொடர்ந்து வீசட்டும்! தமிழருக்கு கேடு என்றால் புயலாக மாறட்டும்! புது வரலாறு படைக்கட்டும்!!
- க.தியாகராசன், குடந்தை - 612 501

அப்பாவித் தனம்
நேற்று ‘தந்தை’ மகனை எப்படி படிக்க வைத்தார்? இன்று அவன் ’மகன்’ எப்படி படிக்கிறான்? நாளை ‘பேரன்’ எப்படி படிப்பான்? என்ற நடைமுறை வாழ்க்கையை ஆராய்ந்து ஆராவமுதன் எழுதிய கவிதை நெஞ்சில் முள் தைத்த உணர்வை ஏற்படுத்தியது.  

பிறப்பும் இறப்பும் பொய்யல்ல. எட்டும் தூரத்திலும் உண்டு. எட்டாத தூரத்திலும் உண்டு! அந்த எல்லையை எட்டும் வரை இரசித்து வாழ்வோம் -வாழ்க்கையை! என்றுரைத்து மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டார் ஆ. சந்திரபோஸ்! புவியரசுவின் சிறுகதையில் அப்பாவித் தனம் நீக்கமற நிறைந்திருந்தது உண்மை.
- ப.லெ.பரமசிவம், மதுரை - 625 009

மாற்ற முடியாது
ஆவணி இதழில் தந்தை, மகன், பேரன் கவிதை அருமையான இருந்தது. தலைமுறைகளின் இடையில் அவர்களில் பழக்க வழக்கங்கள் எப்படியெல்லாம் மாறி விடுகிறது. அந்த காலத்தில் நாம் வாழ்ந்த வாழ்க்கைக்கும் இப்போது புதிதாக பிறக்கும் குழந்தைகளின் வாழ்க்கைக்கும் தொடர்பே இல்லாமல் இருக்கிறது. இதை மாற்ற முடியாது போலும்.
- மோகன், கோவில்பட்டி - 628 501

ரசித்து வாழ வேண்டும்
ஆவணி இதழில் ஹார்வர்டு பலகலைக் கழகத்தில் தமிழுக்கோர் அரியணை வேண்டுமென விடுத்துள்ள அறைகூவல் தமிழைத்தட்டி எழுப்புவதாயிருந்தது. நிறங்கள் மனித வழ்க்கையை எவ்வாறெல்லாம் பாதிப்படையச் செய்கின்றன என்பதை வெ.இறையன்பு நன்கு உணர்த்தியிருந்தார். எட்டும் தூரத்திலும், எட்டா உயரத்திலும் உள்ளவற்றை, எட்டும் வரை ரசித்து வாழவேண்டும் என அறிவுறுத்திய வரிகள் நெஞ்சம் உருகும்படி இருந்தன. இதழில் வெளியாகும் அனைத்தும் வாசகர்களை ஈர்ப்பவையாகவே இருக்கின்றன.  
- ந. ஞானசேகரன், திருலோக்கி - 609 804

ஒத்தடம்
“வாழ்ந்து பார்ப்பதே வாழ்க்கை” கட்டுரையை படித்தால் தற்கொலை செய்யும் எண்ணமுடையோர் கூட தன் முடிவை மாற்றிக் கொள்வர். சோர்ந்து போன உள்ளங்களுக்கு ஒத்தடம் போடும் வகையில் கட்டுரை அமைந்தது. கட்டுரையாசிரியர் ஆ.சந்திர போசு அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும். இதுபோன்று தொடர்ந்து வரவேண்டும். 
மா. சுகுமார், கல்பாக்கம் - 603 102

ஓட்டு வங்கி
ஆவணி இதழின் அட்டைப்படம் உழைக்கும் இந்தியா, ஊதாரிகளின் இந்தியா என்று இன்றைய சமுதாய நிலையை  தெளிவாக்கியுள்ளது. ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் “தமிழுக்கோர் அரியணை” வேண்டுமென செயல்படும் தமிழர்களின் முயற்சி வெல்லட்டும். ஆனால் 5 மில்லியன் டாலர்கள் குறித்து தமிழ்நாடு அரசுக்கு கவலைப்பட ஏதுமில்லை, காரணம் இது ஓட்டு வங்கியுடன் தொடர்பு இல்லையே! 
- க. த. அ. கலைவாணன், வேலூர் - 632 002


Go Back