பொருளாதார நகரின் இருவேறு தோற்றங்கள் - 11-Sep-2016 05:09:14 PM

ந்தியாவில் உள்ள பெரும்பாலான இளைஞர்களின் ஒரு கனவு நகரம் மும்பை. நாமும் மும்பை சென்றால் அம்பானியாகி விடலாம் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் மழைப் பொழிவு பகுதியில் அமைந்திருக்கும் இந்நகரம் கடல் சூழ்ந்த தீவுப் பரப்பாக இருப்பதால், கடற்காற்றின் குளிர்ச்சியால் மேகங்கள் மழை நீரைத் தாரளமாக மும்பைக்குக் கொடுத்து விடுகிறது. இந்தியாவின் தொழில் நகரமாகவும் பொருளாதார நகரமாகவும் போற்றப்படும் மும்பையின் மற்றொரு பகுதி அதிக குடிசைகளைக் கொண்ட தாராவிப் பகுதியாகும். இதுவே மும்பையின் “குட்டித் தமிழகம்” என அழைக்கப்படுகிறது. காரணம் மும்பையில் வாழும் 20 இலட்சம் தமிழர்களில் பெருவாரியானவர்கள் இப்பகுதியில் வாழ்பவர்களே!

உண்மையில் 1600 ஆம் ஆண்டு வரை தாராவி என்பது உலகம் அறியாத இருண்ட கண்டம் போன்றிருந்தது. போர்த்துக்கீசியர்களிடம் இருந்து ஆங்கிலேயர்கள் மும்பையை வாங்கும் வரை தாராவிப் பகுதி மனிதர்கள் வாழ முடியாத பகுதி. ஆங்கிலேயர்கள் வாங்கிய பிறகு மும்பைத் தீவுகளான கொலாபா, மாகிம், ஓர்லி, சிவ்ரி போன்ற பகுதிகள் முறையாக இணைக்கப்பட்டன. இயற்கையிலேயே புவி ஈர்ப்பு விசையின் விசித்திர மாற்றத்தால் பகல் நேரங்களில் அன்றைய மும்பையின் பல தீவுகள் அரபிக் கடலுக்கு இரையாகி விடும். மாலை நேரம் நெருங்கும் போது மீண்டும் அந்தத் தீவுகளில் இருந்து தண்ணீர் வெளியேறி விடும். இந்தப் பகுதிகளில் கறுப்பு மணல்களை நிரப்பி மேடுகளை உருவாக்கி அவற்றில் மக்கள் குடியேறத் தொடங்கினர்.

ஆங்கிலேயர்கள், அருகில் உள்ள குஜராத் மாநிலத்தின் வளமான பருத்தி விவசாயத்தை கருத்தில் கொண்டு மும்பையில் நூற்றுக்கணக்கான பருத்தி ஆலைகளை உருவாக்கத் தொடங்கினர். ஆலைகள் அமைவதற்கு முன்புவரை கோலிகள், குஜராத்திகள், இசுலாமியர்கள் மற்றும் பார்சிகள் அடங்கிய மொழி பேதமற்ற பகுதியாக இருந்தது. முதலில் சேரர்கள் காலத்தில் கடல் பயணம் மேற்கொண்டு கி.பி.600 முதல் 1000 வரை கொங்கனா (அன்று மும்பை தீவை உள்ளடக்கிய பகுதி) பகுதிகளுக்கு வருகை தந்தனர். அப்போது அங்கிருந்த மக்களுக்கும் தமிழர்களுக்கும் உறவுகள் ஏற்பட்டு, அதன் விளைவாக கோலி என்ற இனம் உருவானது என்று மும்பை மாநகராட்சியின் ஆவணம் கூறுகிறது.

மும்பையின் அதிவேக வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க நிருவாக சம்பந்தமான கட்டடங்கள், விருந்தினர் மாளிகைகள், வணிகத் தளங்கள் போன்றவை உருவாகத் தொடங்கின. இந்த கட்டுமானப் பணிக்காக இந்தியாவின் மற்ற பகுதியில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வரும் நிலை ஏற்பட்டது. இதற்கு ஆங்கிலேயர்கள் தேர்ந்தெடுத்தது தமிழர்களைத்தான். பொதுவாக ஆங்கிலேயர்களுக்கு தென் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் மீது ஒருவித ஈர்ப்பு இருந்தது. எந்தவொரு பணி என்றாலும் அதில் ஆர்வமுடன் ஈடுபடுவது, ஏற்றுக்கொண்ட பணியை முகம் சுளிக்காமல் திறமையாக செய்து தருவது, கடின உழைப்பு போன்றவை தமிழர்களுக்கு கைவந்த கலையாக இருந்தது. 1750க்குப் பிறகு தமிழர்களின் பொற்காலம் தொடங்கியது.

தொடக்க காலங்களில் சாலை வழியாக கொச்சின் வரவழைக்கப்பட்டு, அதன் பிறகு கப்பல் மூலமாக மும்பை துறைமுகத்துக்கு தமிழர்கள் அழைத்து வரப்பட்டனர். தமிழர்கள் மும்பை வந்து இறங்கியதும் (1750க்கு பிறகு) மும்பையின் வளர்ச்சி வேகம் மெல்ல மெல்ல வளரத் தொடங்கியது. மும்பையில் புகழ்பெற்ற விக்டோரியா கட்டடம் (தற்போதைய சி.எஸ்.டி இரயில் நிலையம்) மும்பை மாநகராட்சிக் கட்டடம், ஆசியாட்டிங் பில்டிங் (பொது நூலகம் - போர்ட்) மும்பை பல்கலைக் கழகக் கட்டடம் போன்றவை முழு உருவம் பெறத் தொடங்கின.

கட்டடப் பணிகள் நடந்து கொண்டிருக்கும் போதே பருத்தி ஆலைகளை, நூற்பாலைகள் மற்றும் அவற்றுக்குத் தேவையான உபகரணங்கள் தயாரிக்கும் ஆலைகள் தென் மும்பையில் அதிக அளவில் தோன்ற ஆரம்பித்தன. இந்த நிலையில் கட்டடப் பணிகளுக்காக ஆயிரக்கணக்கில் அழைத்து வரப்பட்ட தமிழர்களுக்கு நிரந்தர இருப்பிடம் தேவைப்பட்டது. அதேநேரத்தில் இந்தப் பணிக்கு வரும் தமிழர்கள் எளிதாகவும் விரைவாகவும் பணியிடங்களுக்கு வந்து சேர அருகிலேயே குடியிருப்புகள் அமைக்கும் அவசியமும் ஏற்பட்டது.

1500 ஏக்கர் அலையாற்றிக் (மாங்குரோவ்) காடுகள் இருக்கும் பகுதிகளும் மணல் மேடுகளும் தமிழர்களின் கவனத்துக்கு வந்தன. உடனடியாக அந்தப் பகுதிகளை ஓலைப் பாய்கள், மூங்கில் கழிகள், சாக்கு விரிப்புகள் ஆகியவற்றின் உதவியுடன் குடியிருப்புகளாக மாற்றத் தொடங்கினர் தமிழர்கள். கட்டடப் பணிகள் கிட்டதட்ட முடிவடையும் நிலை வந்தது. அதே நேரத்தில் நவீன ஆலைகள் அதிக அளவில் உருவாகத் தொடங்கின. இவற்றில் பணிபுரிய அதிக அளவில் பணியாளர்கள் தேவைப்பட்டனர். இதனால் மும்பை நோக்கிப் புறப்படும் தமிழர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. அவர்கள் தான் மட்டும் வராமல் தமது குடும்பத்தையும் உறவினர்களையும் சேர்த்தே அழைத்து வந்தனர்.

1800 முதல் 1900 வரை சற்றொப்ப ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் தாராவிப் பகுதியில் வசிக்கத் தொடங்கினர். இவர்களில் குறிப்பாக மேலப்பாளையம், பத்தமடை மற்றும் வாணியம் பாடியைச் சேர்ந்த இசுலாமியர்கள், திருநெல்வேலி, இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தாழ்த்தப் பட்டோர் பட்டியலில் ஒரு பிரிவான ஆதித் திராவிடர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் சற்றொப்ப 150 ஆண்டுகளுக்கு  முன்பாகவே தாராவிப் பகுதியில் குடியேறத் தொடங்கினர். இச்செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் மும்பை ஆதி திராவிடர் மகாசன சங்கத்தின் சார்பில் கொண்டாடப்பட்டு வரும் கணபதி விழாவானது நடப்பாண்டில் (2016) 104ஆவது ஆண்டு விழா கொண்டாடப் பட்டது குறிப்பிடத்தக்கது. அன்றைய மும்பைத் தொழிலாளர்களில் பெரும்பாலோர் அக்காலக் கட்டத்தில்  துப்புரவு மற்றும் தோல் பதனிடும் தொழிலில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர். மேலும் வட ஆற்காட்டையும், தென் ஆற்காட்டையும் சேர்ந்த தாழ்த்தப் பட்ட மக்கள் ‘ஆரே’ பால் பண்ணைத் தொழிலாளர்களாக கோரேகாவ் ஆரே மில்க் காலனி பகுதிகளில் குடிசைகள் அமைத்து வாழத்  தலைப்பட்டனர். தொடர்ந்து வந்த காலமாறுதல்களில் பிற்படுத்தப்பட்ட  சாதியினர்  (வன்னியர், செட்டியார், தேவர், நாடார், யாதவர் மற்றும் பிற பிரிவினர்) கணிசமான அளவில் மும்பையைத் தன் பிழைப்பிடமாகக் கொண்டு குடியேறினர். பார்ப்பனர்கள் பெரும்பாலும் மாதுங்கா பகுதியில் குடியேறினர். பின்னர் இவர்களின் தொடர்பினால் பிற மாவட்ட மக்களும் குடியேறத் தொடங்கினர். இவ்வாறாக மும்பைத்  தமிழர்கள்  மூன்று தலை முறைகளுக்கு மேலாக இங்கு வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால் இவ்வாறு தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து வெளியேறி மும்பைக்கு குடியேறியவர்கள் தத்தம் சாதிகளின் அடிப்படையில் அவர்களின் வசிப்பிடத்தை தங்களுக்குள்ளாகவே பிரித்துக் கொண்டனர். எந்த சாதியத்துக்கு எதிராக உள்ளூரில் போராடிக் கொண்டிருந்தார்களோ அதே சாதிய அடையாளத்தைச் சுமந்து கொண்டே தாராவி வாழ்க்கையை நகர்த்தத் தொடங்கினர் தமிழர்கள். 

தாராவி வேகமாக வளர்ந்து வந்த சூழ்நிலையில் அப்பகுதியில் கிடைத்த கற்கள் அதிகம் இல்லாத சன்னமான மண், குஜராத்திய மண்பாண்டம் தயாரிப்பாளர்களை வெகுவாக ஈர்த்தது. உடனே அவர்களும் தாராவியை நோக்கி நகரத் தொடங்கினர். மாகிம் பகுதியில் தோல் பதனிடும் தொழிற்சாலை வைத்திருந்த இசுலாமியர்கள் தாராவிப் பகுதியில் தங்களது தொழிற்சாலைகளை நிறுவத் தொடங்கினர். இதே நேரத்தில் 1800ம் ஆண்டு வரை மும்பை என்னும் நகரம் நமக்கு அருகிலேயே மின்னல் வேகத்தில் உருவாவது தெரியாமல் மேற்கு தொடர்ச்சி மலையின் மறுபகுதியில் இருந்த மராட்டியர்கள் கூலித் தொழிலாளர்களாக மும்பைக்கு வந்தனர். அவர்களும் தாராவியில் தஞ்சமடைந்தனர். இப்படி பல பண்பாட்டு இனங்கள் இணைந்து 1950களில் ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியாக தாராவி உருவானது.

கட்டுமானப் பணிகளிலும் ஆலைகளிலும் இரும்பு தொடர்பான தொழில்களிலும் பெரும்பான்மையாக ஈடுபட்டு வந்த தமிழர்களுக்கு ஒரு மறைமுக பாதிப்பு ஏற்பட்டது. அதாவது பிறரை நம்பியே வாழ்க்கையை நடத்த வேண்டிய கட்டாயம் தமிழர்களுக்கு ஏற்பட்டது. தாராவியில் அதிக அளவிலான ஆலைகள் குஜராத்தியர்கள், பஞ்சாபிகள், ராஜஸ்தானிய ஜெயின்கள், மார்வாடிகள் போன்றோரின் வசம் இருந்ததால் அவர்களுடைய கட்டளைகளை ஏற்று செயல்பட வேண்டிய பணியாளர்களாகத் தமிழர்கள் மாறி விட்டனர்.

விளைவு, அடுத்த தலைமுறைத் தமிழர்கள் கட்டுமானம் மற்றும் ஆலை பணிகள் மட்டுமல்லாது திரைப்படத் துறை, ஏற்றுமதி இறக்குமதி, கனரக உற்பத்தி, அரசு பணிகளை குத்தகைக்கு எடுத்து செய்யும் வேலை, உணவு விடுதி தொழில்கள் ஆகியவற்றில் ஈடுபட முடியாமல் போனது. பிறகு துறைமுகப் பணிகளுக்கு, இரயில்வே பணிகளுக்கு என்று மும்பை நோக்கி வந்த தமிழர்கள் தாராவியில் தஞ்சமடையத் தொடங்கினர். 1990களில் பள்ளி இறுதி ஆண்டை தாண்டிய தாராவித் தமிழர்கள் மிகவும் அரிதாகவே இருந்த நிலை மாறி, கல்லூரிப் படிப்பைக் கடந்த தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. இருந்தும் அவர்களுக்கு உரிய அரசு பணிகள் கிடைக்கவில்லை என்பது சோகமான வரலாறு.

மும்பையில் வசிக்கும் தமிழர்களின் நிலை இப்படித்தான் என்று மேற்சொன்னதை வைத்து முடிவு செய்துவிட வேண்டாம். மும்பை தமிழர்களின் வாழ்க்கை என்ற நாணயத்தில் தாராவி என்ற பக்கம் எப்படி இருக்கும் என்பதைத்தான் பார்த்தோம். ஆனால் இன்னொரு பக்கம் பென்ஸ் கார், மெர்ஸிடீஸ், டெவூ, ஃபோர்ட் ஜகான், ஹோண்டா சிட்டி போன்ற விலை உயர்ந்த மகிழுந்துகளில் பறக்கும் தமிழர்களும் இருக்கிறார்கள்.

மும்பையில் இருக்கும் பல பெரிய நிறுவனங்கள் தமிழர்களை நம்பியே இயங்குகின்றன. இவர்களின் விரல் தட்டலில் தான் அந்த நிறுவனங்களின் ஆண்டு அறிக்கை தயாரிக்கப்படுகிறது. இந்திய நடுவண் வங்கியாக விளங்கும் “இந்திய ரிசர்வ் வங்கி”யின் ஆளுநராக இருந்தவர் இரகுராம் இராஜன் எனும் தமிழர். மும்பையில் இருக்கும் இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல எண்ணெய் நிறுவனத்தின் இந்தியத் தலைவர் ஒரு தமிழர். தவிரவும் அந்த நிறுவனத்தின் ஆசிய பசிபிக் பகுதியின் தலைமை நிருவாகியும் தமிழரே.

அம்பானி சகோதரர்களின் முதன்மை நிருவாகிகளில் முக்கியமானவர் தமிழர். மும்பையில் வர்த்தகத்தின் உயிர் காற்றாக தமிழர்கள் அதிகம் இருக்க, தாராவித் தமிழர்கள் அவலநிலையில் இருப்பது பெரும் முரண்பாடே. மும்பை சாந்தா குரூஸ் என்ற பகுதி மலையாளிகள் அதிகம் இருக்கும் பகுதி. 1960 முதல் 70 வரை இந்தப் பகுதியும் தாராவி போல் நெருக்கடி அதிகம் உள்ள பகுதியாகவே இருந்தது. இங்கு ஏற்கெனவே மும்பை பல்கலைக் கழகமும் விமான நிலைய இடமும் இருந்ததால் அரசு இந்த பகுதிக்கு முக்கியத்துவம் கொடுத்தது.

அதற்கேற்றார்போல் அந்தப் பகுதி மலையாளிகள் ஆரம்ப காலங்களில் வர்த்தகத் தொழில்களை மேற்கொண்டு இருந்தாலும் மெல்ல மெல்ல மாற்றத்தை உணர்ந்து கொண்டு கல்வியில் ஆர்வம் செலுத்தத் தொடங்கினர். பட்டப் படிப்புகள் படித்து முடித்து விமான நிறுவனங்களிலும் நட்சத்திர விடுதிகளிலும் இதர தனியார் அலுவலகங்களிலும் முக்கியப் பணிகளுக்கு சென்று விட்டனர். இதனால் அவர்களுடைய வாழ்க்கைத் தரம் உயரத் தொடங்கியது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் சிறிய சிறிய ஓட்டு வீடுகளில் வாழ்ந்தவர்கள் அதே வீடுகளை நன்றாகக் கட்டி, குறுகிய இட வசதியாக இருந்தாலும் தங்களுடைய சொந்த ஊரைப் போல தென்னை மரம், பலா மரங்கள் சூழ அழகிய தோட்ட இல்லமாக மாற்றி விட்டனர்.

தாராவியின் அருகில் உள்ள சயான், மாதுங்கா போன்ற பகுதிகளில் ஆங்கிலேயர்கள் தமிழர்களை இரண்டு பிரிவுகளாக பிரித்து வைத்துவிட்டனர். ஒருபுறம் படித்த மேம்பட்ட தமிழர்கள்; மற்றொரு புறம் கல்வி அறிவு குறைந்த, உடல் உறுதியை மட்டுமே அடிப்படையாக கொண்ட தமிழர்கள்.

மேம்பட்ட தமிழர்கள் தாராவித் தமிழர்களைத் துளியும் மதிக்க மாட்டார்கள். அவர்களுடைய நலன்கள் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். தாராவித் தமிழன் இட்லி கடையில் வேலை பார்ப்பது பற்றியும் வருத்தப் படமாட்டார்கள். ஆனால் ஒரு சீக்கியன் வறுமையில் தவித்தால் அவனுக்கு உதவிகள் செய்வதற்குப் பல சீக்கியர்கள் தயாராக இருப்பார்கள். அவர்களுக்கென்று சேவை நிறுவனங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. 

குஜராத்தைச் சேர்ந்த ஒருவர் வணிகத்தில் சறுக்கி விழுந்தால் பல குஜராத்திகள் கைகோத்துத் தூக்கி விடுகின்றனர். ஆனால் ஒரு தாராவித் தமிழன் வறுமையில் கையேந்தி நின்றாலும் வேறு எந்தப் பகுதி தமிழனும் அவனை கண்டு கொள்வதில்லை. இதனால் தான் தமிழர்கள் தொழிலாளி வர்க்கமாகவும் தாணி (ஆட்டோ) ஓட்டுநராகவும் சிறைக் கைதிகளாகவும் உருவாவதைத் தவிர்க்க முடிவதில்லை.

தாராவித் தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துகிறேன் என்று சொல்லிக்கொண்டு பல பிரபலங்கள் வருவார்கள். ஆனால் அவர்களால் தாராவித் தமிழனுக்கு எந்த விதமான நன்மையும் கிடைக்காது. தமிழர்களின் வாழ்க்கையில் மாற்றம் ஒன்றும் வரவில்லை. வேட்டி, சட்டை உடுத்தியவன் இன்று ஜீன்ஸ் பேண்ட், டி-&சர்ட் போடுகிறான். மண் வேலை செய்தவன் இன்று இரும்பு வேலை செய்கிறான். அன்று சோள ரொட்டியும் வெங்காயச் சட்னியும் சாப்பிட்டவன் இன்று கோதுமை ரொட்டியும் உருளைக் கிழங்கு குருமாவையும் சாப்பிடுகிறான். இவற்றைத் தவிர சொல்லிக் கொள்வது போல எந்தவொரு மாற்றமும் ஏற்பட்டு விடவில்லை.

தாராவித் தமிழர்களில் எத்தனை பேருக்கு வங்கிக் கணக்கு இருக்கிறது? அந்தக் கணக்கில் எத்தனை பேருக்கு பணம் இருக்கிறது? என்று கணக்கிட்டுப் பார்த்தால் பத்து முதல் இருபது விழுக்காடு பேருக்கு மட்டுமே வங்கிக் கணக்கு இருக்கிறது. அவர்களில் பெரும்பாலானோருக்கு பத்தாம் தேதியைத் தாண்டி விட்டால் வெறுமையே (ஸிரோ பேலன்ஸ்) காண்பிக்கும்.

சிவசேனா கட்சி ஆட்சி காலத்தில் நவீன தாராவி என்ற பெயரில் செக்டார் திட்டம் ஒன்றை தாராவியில் செயல்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தாராவி புனரமைப்புத் திட்டம் என்பது 1972 இல் இருந்து ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசும் சொல்லிக் கொண்டு வரும் விடயம்தான். தேர்தல் சமயங்களில் “வசதிகள் மிகுந்த தாராவி” என்ற வாக்குறுதியுடன் ஓட்டு கேட்க இந்தப் பழைய திட்டம் அரசியல்வாதிகளுக்கு முக்கியமாகப் பட்டது. இந்த நிலையில் சிவசேனா அரசு நவீன தாராவி திட்டத்தை இயக்கிப் பார்க்க முன்வந்தது. ஆனால் நவீன தாராவி கட்டினால் அதற்கு உரிமை யாருக்கு என்பதில் குழப்பம் ஏற்பட்டது.

காலம் காலமாகத் தாராவியில் இருப்பவர்களுக்கா? அல்லது நேற்று வந்து இன்று தாராவியில் குடியமர்த்தியவர்களுக்கா? என்ற கேள்வி எழுந்தது. அதைச் சமாளிப்பதற்காக கால வரம்பு வரையறுக்கப் பட்டது. இந்த இடத்தில்தான் நவீன தாராவிக்குத் தடைபோட பிற அரசியல் கட்சிகளுக்குக் காரணம் கிடைத்தது. பல ஆயிரம் கோடி ரூபாய் புரளக் கூடிய நவீன தாராவி செக்டார் திட்டத்தை எப்படியும் வாங்கிவிட வேண்டும் என்று இந்தியாவின் அத்தனை பெரிய கட்டுமான நிறுவனங்களும் வரிந்து கட்டிக் கொண்டு நின்றன. அரசியல்வாதிகளும் தாராவிச் சிக்கலைக் கையில் எடுத்துக் கொண்டு போராட்டத்தில் இறங்கி விட்டனர்.

நவீன தாராவித் திட்டத்தின் கீழ் கட்டித்தரும் வீடுகள் எத்தனை சதுர அடி இருக்கும்? அங்கு கட்டப்படும் தொழிற்பேட்டை மற்றும் இதர வசதிகள் எப்படி இருக்கும் என்று அனைத்து கட்சிகளும் களத்தில் இறங்கிக் கேள்வி மேல் கேள்வி எழுப்பின. விளைவு, தாராவி செக்டார் திட்டம் தடுமாறத் தொடங்கியது. எப்படி இருந்தாலும் நவீன தாராவி செக்டார் திட்டத்தை கொண்டு வந்தே தீர வேண்டும் என்ற நோக்கத்துடன் மராட்டிய மாநில வீட்டு வசதித் துறையின் கீழ் இயங்கும் வகையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

முதலில் ஒரு குடும்பத்துக்கு எத்தனை சதுர அடியில் வீடு தருவது என்ற ஆய்வில் இறங்கிய அந்தக் குழுவிற்கு தொடக்கமே சிக்கல்தான். தாராவியில் பலர் பத்துக்கும் அதிகமான குடிசைகளைக் கட்டியுள்ளனர். அவற்றில் ஒன்றிரண்டைத் தங்களுடைய சொந்த பயன்பாட்டிற்கு வைத்துக் கொண்டு மீதமிருப்பதை மற்றவர்களுக்கு வாடகைக்கு விட்டுப் பிழைக்கின்றனர். செக்டார் திட்டத்தின் படி தாராவியில் குடியிருப்பவர்கள் அத்தனை பேருக்கும் வீடுகள் என்றால், நிறைய அடுக்குமாடிக் குடியிருப்புகளை ஏற்படுத்த வேண்டியிருக்கும். இதனையடுத்து அரசு அறிவித்துள்ள வீட்டின் அளவில் கொஞ்சம் சிக்கல்கள் இருக்கின்றன. காரணம், தாராவியில் இருக்கும் அத்தனை வீடுகளும் ஒரே அளவிலானவை அல்ல. நான்கு பேர் தங்கக்கூடிய குடிசைகளும் இருக்கின்றன. ஏழெட்டு பேர் வசிக்கும் வீடுகளும் உண்டு. ஒற்றை நபர் மட்டும் தங்கும் ஒண்டுக் குடிசையும் உண்டு.

எல்லோரையும் நிறைவுபடுத்தும் வகையில் வீடு கட்டித் தருவது என்பது அத்தனை எளிமையான காரியம் அல்ல. இதனால் நவீன தாராவித் திட்டம் இடியாப்பச் சிக்கலில் மாட்டிக் கொண்டு தவித்தது. ஆனாலும் தாராவி செக்டார் திட்டத்துக்காக மகாராட்டிரா அரசால் தொடங்கப்பெற்ற குழு கூடுதல் கவனத்துடன் செயல்பட்டு வந்தது. உண்மையில் செக்டார் சிக்கலில் வீடுகள் ஒதுக்கீடு செய்வதில் மட்டும் சிக்கல்கள் இல்லை. தாராவியில் ஆயிரக்கணக்கான சிறுதொழில் கூடங்கள் இருக்கின்றன. நவீன தாராவி என்ற பெயரில் இந்தத் தொழிற்கூடங்களை வேறு இடங்களுக்கு மாற்றினால் அனைத்து தொழில்களும் அழிந்து போவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.

ஓர் உதாரணம் சொன்னால் தெளிவாகப் புரியும். கும்பர் வாடாவில் உள்ள மண்பாண்டத் தொழிற்சாலைகளை மும்பைக்கு வெளியே கொண்டு போகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அதன் பிறகு அந்தத் தொழிலுக்குத் தேவையான வளமான மண் நிலம் எங்கிருந்து கிடைக்கும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. அதேநேரத்தில் தாராவியிலேயே மண்பாண்டத் தொழிற் சாலைகளைப் புதிதாக அமைத்து கொடுக்க வேண்டும் என்றால் அதற்கான இடவசதி, பெரிய அடுப்புகள், தண்ணீர் வசதி ஆகியவற்றை ஏற்படுத்திக் கொடுப்பது மாநில அரசின் கடமையாகிவிடும். ஆனால் அது அத்தனை எளிமையானதல்ல. 

அதிக வருமானம் தரக்கூடிய தொழில்களில் ஒன்றான தோல்பதனிடும் தொழிற்சாலை, அழகு சாதனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஆகியன அடுத்து எங்கு செல்லும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. 

தாராவியில் இருக்கும் தமிழர்கள் நெகிழி உறைகளில் (பாக்கெட்) அடைக்கப்படும் உணவுகளை தயாரிக்கும் தொழிற்சாலைகளை வைத்துள்ளனர். இவற்றில் சிப்ஸ், முறுக்கு, மிச்சர், மிட்டாய், வறுகடலை, சேவு போன்றவற்றை தயாரிக்கின்றனர். இத்தகைய தொழிற்சாலைகள் தாராவியில் மட்டும் முந்நூற்றுக்கும் மேல் இருக்கின்றன. இந்த ஆலைகளில் ஏறத்தாழ ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாகவும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் மறைமுகமாகவும் பலன் பெறுகின்றனர். தாராவியில் உள்ள ஆயிரக்கணக்கான தொழில்களுக்கும் இதே மாதிரியான அல்லது கொஞ்சம் வேறுபட்ட சிக்கல்கள் இருக்கின்றன.

ஆயிரத்தெட்டு சிக்கல்கள் எக்கச்சக்க நெருக்கடிகள் இருப்பினும் தாராவி மெல்ல மெல்ல மாறி வருகிறது. வெறும் தகர வீடுகளால் மட்டுமே நிறைந்து கிடந்த தாராவியில் இப்போது செங்கல் வைத்துக் கட்டிய வீடுகளே அதிகம் தென்படுகின்றன. சாளரம் (சன்னல்) இல்லாமல் இருந்த வீடுகள் எல்லாம் மலையேறி விட்டன. காற்று வசதிகள் கொண்ட வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முப்பது விழுக்காடுக்கு மேல் தாராவித் தமிழர்களின் வீடுகளில் கணினியைப் பார்க்க முடிகிறது. பன்னாட்டு நிறுவனங்களின் வரவால் ஒப்பந்த முறையில் பணியிடங்கள் அதிகம் கிடைக்கத் தொடங்கி விட்டன. இதனால் ஏறத்தாழ எழுபது விழுக்காடு இளைஞர்கள் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை பார்க்கத் தொடங்கி விட்டனர்.

முன்பு சில நூறுகளுக்கும் ஆயிரங்களுக்கும் ஓட்டல் வேலைகளில் தங்களுடைய உழைப்பை விரயம் செய்து கொண்டிருந்த இளைஞர்கள் இன்று கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு கால்சென்டர்களிலும் கஸ்டமஸ் சர்வீஸ் கவுண்டர் வேலைகளிலும் வேலை பார்க்கத் தொடங்கி விட்டனர். இத்தனை ஆண்டுகால தாராவித் தமிழர்களின் வரலாற்றில் எத்தனை மருத்துவர்கள் அல்லது பொறியாளர்கள் உருவாகியிருப்பார்கள் என்று தேடிப் பார்த்தால் அந்த எண்ணிக்கை வெகு சொற்பமாகவே இருக்கும். அதேசமயம் இன்னொரு பகுதியான மாதுங்காவில் வசிக்கும் தமிழர்களின் குழந்தைகள் மருத்துவம், பொறியியல், வணிகவியல் மேலாண்மை போன்ற படிப்புகளை எந்தத் தடையும் இல்லாமல் படித்து நல்ல பதவிகளில் அமர்ந்து விடுகிறார்கள். இதனால் தாராவித் தமிழர்களுக்கும் மற்ற பகுதிகளில் வசிக்கும் தமிழர்களுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி உருவாகி வருகிறது.

உண்மையிலேயே தாராவி வாழ்க்கை என்பது கானல் நீர் போல, இது தெரிந்தும் ஏராளமான இளைஞர்கள் தாராவியை நோக்கிப் படையெடுக்கிறார்கள். இதன் மூலம் தன்னுடைய அடுத்த தலைமுறைக்கும் தாராவியைப் பரிந்துரை செய்கின்றனர்!

- சரவணா இராசேந்திரன்


Go Back