தேய்ந்து வரும் தாய்மை - 15-Oct-2016 03:10:39 PM

முற்காலத்தில் காதலித்தவரை திருமணம் செய்து  கொள்வதில் எந்தவித இடையூறும் இல்லை. சங்கப் பாடல்களில் உடன் போக்கு என்ற துறையே உண்டு. காதலர் இருவர் தாங்கள் வாழும் இடத்தை விட்டு பிற இடம் சென்று வாழ்க்கையை அமைத்துக் கொண்டு வாழ்தல் பற்றி சிறப்பாக சங்கப் பாடல்கள் கூறும். தலைவி, தான் விரும்பி காதலனோடு கலந்து குழந்தைப் பெற்றுக் கொள்வதில் மிகவும் ஆர்வமும் இன்பமும் அடைவாள். அறிவியல் கூற்றுப்படியும் உளவியல் கூற்றுப்படியும் ஒரு பெண் தன் துணையைத் தேர்ந்தெடுத்து அவன் மூலம் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள எண்ணுவாள். இப்படி தேர்ந்தெடுப்பதற்கு உறுதுணையாக இருப்பது ஒவ்வொருவரின் உடம்பில் இருந்து வரும் ஒருவித நாற்றமே! இது மிக வியப்பான விடயமாக இருக்கும். இதுதான் உண்மை. ஆனால் தற்காலத்தில், தூரத்தில் இருந்து கண்ணால் பேசி உருவாகிய காதல்  பின்நாளில் காணாமல் போய்விடுகிறது. காதல் போய் கடமை, கௌரவம், கலாச்சாரம் என்று காதல் வாழ்க்கை நாடக வாழ்கையாக மாறி வருகிறது.

இயற்கை நாற்றம் செயற்கை நாற்றங்களால் மறைக்கப் பட்டு விட்டது போல் இயற்கையான காதல் மணங்கள் மறைந்து சோதிட மணங்களால் சோரம் போன தலைவன், தலைவிகள், பணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து மணமுடிச்சால், பணமுடிச்சால்  பாதியில் பிரிந்து போன பரிதாபத்திற்குரிய தலைவன் தலைவிகள் இன்று எத்தனையோ பேர். நானும் டாக்டர் நீயும் டாக்டர், நானும் கம்யூட்டர்  நீயும் கம்யூட்டர் என்று கல்வி, பதவியின் பேரில் மணமுடித்தவர்கள் கம்யூட்டரில் வைரஸ் நுழைந்து விட்டது போல்  வாழ்க்கை கிருமிகளால் (வைரஸால்) தாக்கப்பட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர். குடும்பங்களை ஒரு நிறுவனம் போல் ஆக்கிவிட்ட விந்தை மனிதர்கள். இவ்விந்தை மனிதர்கள் இல்லறத்தில் அன்பு இல்லையென்று தியான மையங்களைத் தேடிச் செல்கின்றனர்.

காதல் என்றால் என்ன? ஒரு ஆணைக் கண்டதும் அவன் அருகாமையில் தோன்றும் இன்பம், அவன் மனம், அவனுடன் நீண்டநாள் வாழ வேண்டும் அவனைத் தீண்ட வேண்டும் என்ற எண்ணம். இது ஒரு பெண்ணுக்கு இயற்கையாகவே தோன்றக்கூடியது. இது போன்ற உணர்வுகள் ஒரு பெண்ணுக்கு ஒருவனிடம் மட்டும்தான் தோன்றும். இதற்குப் பேர்தான் காதல். காதல் உணர்வுகளை நம் சங்கப் பாடல்கள் போல்  எந்த மொழிப் பாடல்களிலும் சொல்லவில்லை. இந்த காதல் உணர்வே அவனை  உள்வாங்கிக் கொள்கிறது. அதைத் தன் கருப்பையில் தாங்கி இன்னொரு உயிரைப் படைப்பதில் அக்காதல் முழுமை பெறுகிறது. இதை அறியாத ஆண்களும் பெண்களும் இவ்வட்டத்தை சிதைத்து விட்டார்கள். 

இந்தத் தலைமுறையினர் குழந்தைப் பெற்றுக் கொள்வது பற்றி முதலிரவு அன்றே விவாத மேடை அமைத்து பல இரவுகள் ஆலோசனை நடத்துகிறார்கள். எப்படியெனில், இப்பொழுது குழந்தை பெற்றுக் கொள்ளலாமா? வேண்டாமா? என்று தொடங்கி அதை வளர்ப்பது எப்படி? யாரிடம் விடுவது? எங்கு விடுவது? எனக்கு நீண்டநாள் விடுப்பு எடுக்க முடியுமா? நான் அடுத்த ஆண்டு வெளி நாடு போவது தடை படுமா? இப்போது என் உடல் பலவீனமாக இருக்கிறது. சிறிது நாட்கள் தள்ளிப் போடலாமா? அடுத்த ஆண்டு எனக்குச் சம்பளம் கூடுதலாக வரும். அதனால் பிறகு பெற்றுக் கொள்ளலாமா? அல்லது அடுத்த ஆண்டு இருவருமே அமெரிக்காவிற்குச் செல்வதால் அங்கு பெற்றுக் கொண்டால் குழந்தைக்கு  அந்த நாட்டு குடியுரிமை கிட்டிவிடும். அப்பொழுது பெற்றுக் கொள்ளலாமா? என் தந்தை அடுத்த ஆண்டு ஓய்வு பெறுவதால் அவர்கள் நம்மோடு வந்துவிட்டால் குழந்தையைக் கவனித்துக் கொள்வார்கள். அப்பொழுது பெற்றுக் கொள்ளலாமா?  இரண்டு மூன்று ஆண்டுகள் இருவரும் கவலையின்றி ஊர் உலகமெல்லாம் சுற்றிப் பார்த்து விட்டு வந்து பெற்றுக் கொள்ளலாமா? இதுபோன்ற ஆலோசனைகள் நடத்தப்பட்ட பின்பே குழந்தைப் பிறப்பு முடிவெடுக்கப் படுகிறது. இப்போது ஜப்பான் அரசும் கவலைத் தெரிவித்துள்ளது. அவர்கள்  நாட்டு  இளம்பெண்கள்  திருமணம் செய்ய விரும்பவில்லை என்று.

ஏனெனில் பெண்களை கலாச்சாரம் என்ற போர்வைக்குள்  போட்டு மூச்சுத் திணற மூட்டைக் கட்டி வைத்திருக்கிறார்கள். இப்பொழுது கல்வி என்னும் கத்தியால் கிழித்துக் கொண்டு வீறு கொண்டு வெளியேறி விட்டார்கள். எங்களுக்கு கல்யாணமும் வேண்டாம், குழந்தையும் வேண்டாமென்று, அமெரிக்க  இளம் பெண்கள் பெரும்பாலோர் கர்ப்பப் பையை எடுத்து போட்டுவிட்டு நிம்மதியாக உலா வருகிறார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இந்திய இளம் பெண்களும் இப்பொழுது ஆலோசனையில் இருந்து கொண்டிருக்கிறார்கள். இப்படி  தாய்மையை வெறுக்கும் படியான ஒரு வேதனைக்குரிய மாற்றம் ஏற்படுவதற்கு என்ன காரணம் என்று ஆராய்வோம்.

இந்தச் சமுதாயம் பலநூறு ஆண்டுகளுக்கு மேல் பெண்மையை அவமானப் படுத்தி விட்டது. பெண்களுக்குப் பெண்களே பகையாகிப் போன கொடுமைகள், பெண்கள் பிள்ளைப்  பெறும் கருவிகளாகப் போகப் பொருளாகப் போன வக்கிரம் என ஏராளம் உள்ளது. ஒன்றை அடக்கி வைத்தால் வெடிக்கும் பொழுது மிகப்பெரிய சீரழிவு ஏற்படும் என்னும் இயற்கை விதியை அறியாத அறிவு கெட்ட சமுதாயம். 

இதன் முதல் விளைவு கூட்டுக்குடும்பச் சிதைவு. இது பெண்ணுக்குப் பெண்ணே இழைத்த அநீதியால் வந்தது என்பது எல்லோரும் அறிந்ததே. இதனால் ஏற்பட்ட விளைவே முதியோர் காப்பகம், குழந்தைகள் காப்பகம். இந்த காப்பகங்களின் வளர்ச்சி இளம் பெண்களிடையே விழிப்புணர்வு உண்டாக்கியதா? அல்லது அதிர்ச்சியை உண்டாக்கியதா? முதியோர் மதிக்கப் படவில்லை என்ற இன்றைய போக்கும் முதியோர் இல்லங்களின் பெருக்கமும் இக்கால தலைமுறையினரின் மனத்தை மிகவும் பாதித்து விட்டது. குழந்தை  வேண்டுமா? என்று சிந்திக்கத் தூண்டிவிட்டது. வினை  விதைத்தவன் வினை அறுப்பான் என்பது போல ஒரு தலைமுறை செய்த புதிய ஏற்பாடு அடுத்த தலை முறைக்கு இடையூறாகிப் போனது. இதுவும் இயற்கை தான். இதுதான் செயல் விளைவு தத்துவம் என்பது. ஆகவேதான் இத்தலைமுறையினர் சிந்திக்கத் தொடங்கி விட்டனர். நமக்கும் இதே கதிதான் ஏற்படுமோ என்ற பயத்தில் குழந்தையைப் பெற்று வளர்த்து ஆகும் செலவை வங்கியில் போட்டு வைத்தும் வாழ்க்கையை அனுபவித்துவிட்டு இறுதியில் முதியோர் காப்பகத்தில் சேர்ந்து விடலாம் என்று எண்ணத் தொடங்கி விட்டனர். 

பெண்ணுக்கு என்னதான் வேண்டும்? உலகம் அனுபவிக்கப்படல் வேண்டும். பெருமூச்சுகள் ஒழிந்து சுதந்திரத் தென்றலில் திளைக்க வேண்டும். ஒவ்வொரு பெண்ணும் தம் இளமைக் காலத்தைக் குழந்தையை வளர்த்து ஆளாக்குவதிலும் வீட்டுக்குள் அடைப்பட்டிருப்பதையும் விரும்பவில்லை. தன் இளமைக்கு பாதுகாப்பும் பொருளாதாரத்திற்கு கல்வியும் வேண்டும். இதைக் கொண்டுதானே பெண் சமுதாயம் ஒடுக்கப்பட்டது. எங்கே ஒடுக்கம் என்பது உண்டோ அங்குதானே தோற்றமும் உண்டாகும். இதுவும் இயற்கைதானே இதை உணரவில்லை மூடச் சமுதாயம். ஏன் உலகம் சுற்றும் வாலிபன்தான் இருக்க முடியுமா? எங்களால் உலகத்தைச் சுற்றிப் பார்த்து அனுபவிக்க முடியாதா? என்று பெண்கள் எண்ணத் தொடங்கி விட்டனர்.

ஆண் உடலளவில் மட்டும்தான் பலமுள்ளவன். ஆனால் பெண் உடல், மனம் இரண்டாலும் பலமுள்ளவள் என்பதை உலகச் சமுதாயம் மறந்து விட்டதால் வந்த வினைக் கோட்பாடுதான் இப்பொழுது நடைமுறைக்கு வந்து கொண்டிருக்கிறது. சிட்டுப் போல் பட்டுப் போல் மகிழ்ந்து கொண்டிருந்த பெண்களை பூப்பெய்ததும் ஏன் பூட்டி வைத்தீர்கள்? அவள் உடலை மட்டுமே பூட்டி விட்டார்கள். மனது பூட்டப்படவில்லை. ஒருவனைத் தண்ணீருக்குள் அழுத்தினால் தன் உயிர் மூச்சுக்காகப் போராடி எத்துணை வேகத்தோடு வெளியே வருவானோ அந்த வேகந்தான் இளம் பெண்களிடம் காண்கின்றோம். அவர்களுடைய சுதந்திரத்தை அவர்களுக்கே உரியதாக்கினோம் எனில், அவர்களின் மனம் இளகும். குழந்தைப் பேறு அடைவதன் உன்னதத்தை உணர்வர்; மகிழ்ச்சி பொங்கும் இல்லறம் அமையும்.

இக்கட்டுரைக்கு வேண்டுமானால் முற்றுப்புள்ளி வைத்து விடலாம். ஆனால் பெண்கள் குழந்தை வேண்டாம் என்று நினைக்கும் சிக்கலுக்கு முடிவு காண்பதென்பது பெண்களுக்கு அளிக்கப்படும் சுதந்திரத்தில்தான் உள்ளது. இக்கட்டுரையில் அனைத்துச் சிக்கல்களும் அலசப்படவில்லை. மனித அழிவுக்கான எச்சரிக்கை சங்கு மட்டும் ஊதப்பட்டுள்ளது.

குழந்தைப் பேறை முடக்குவது என்பது அழிவை நோக்கிச் செல்லும் செயல். புவி வெப்பம் அடைந்தபின் வெப்பத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். சுற்றுச்சூழல் மாசு அடைந்த பின் அதை எப்படி சீர் செய்யலாம் என்று பேசுவதும் ஊர்வலம் போவதும் கொடி பிடிப்பதும் நடந்து கொண்டிருக்கின்றன. அதுபோல் அல்லாது, இச்சிக்கலுக்கு தொடக்கத்திலேயே தீர்வு காண்பதே நலம் பயக்கும். அனைவரும் சிந்திப்போம்; செயல்படுவோம்! 

- சிவ மல்லிகா, தஞ்சாவூர்


Go Back