தமிழ் உலக சந்திப்பு - 16-Oct-2016 12:10:40 PM

சென்னை அண்ணாசாலையில் உள்ள உமாபதி அரங்கில் உலகத் தமிழர் பேரவை சார்பாக ‘தமிழ் உலக சந்திப்பு’ நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கனடா, சிங்கப்பூர், மலேசியா, ஈழம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்தும் தமிழ்நாடு, ஆந்திரா, மகாராட்டிரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலிருந்தும் ஏராளமான தமிழ்ப் பற்றாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பேரவையின் ஒருகிணைப்பாளர் அக்னி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்தார். தமிழ் ஆர்வலர் வடிவேல் முருகன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

தொடக்கத்தில் உலகத் தமிழர் பேரவையின் நிறுவனரான முனைவர் ஜனார்த்தனனின் உருவப்படத்தை அவரது நெருங்கிய நண்பர்களாகிய எழுத்தாளர் குணசேகரன், பாரத் பல்கலைக் கழக துணை இயக்குநர் தியாகு, திருமதி மணிமேகலை கண்ணன், கனடாவிலிருந்து வருகை புரிந்திருந்த தங்கவேலு வேலுப்பிள்ளை ஆகியோர் திறந்து வைத்தனர்.

வரலாற்று சிறப்புமிக்க இந்த சந்திப்பில் சிங்கப்பூரிலிருந்து அ.வை.கிருட்டிண சாமி, மூத்த தமிழ் பற்றாளர் குமரிஅனந்தன், ‘தமிழ் இலெமுரியா’ முதன்மை ஆசிரியர் சு.குமணராசன், மூத்த ஊடகவியலாளர் சுபாசு சந்திரன், ‘எழுகதிர்’ ஆசிரியர் அருகோ,  தமிழறிஞர் திருவள்ளுவர் இலக்குவனார், திரைப்பட இயக்குனர்கள் தங்கர் பச்சான், வீ.சேகர், ஆர்.கே.செல்வமணி, சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, பேரூர் ஆதினம் மருதாச்சல அடிகளார் ஆகியோர் தமிழ் மொழி, தமிழர்களின் வளர்ச்சி, ஒற்றுமை குறித்து  சிறப்புரை ஆற்றினர். பின்னர் புலவர் கி.த.பச்சயப்பனார், ஓவியர் சந்தானம், வழக்குரைஞர் சக்திவேல், கோவை இரா.சொ.இராமசாமி, புலவர் இரத்தினவேல், புலவர் காளியப்பன், புது தமிழ் உலகன், நமச்சிவாயம், ஏர்போர்ட் மூர்த்தி, வழக்குரைஞர் சிகரம் செந்தில்நாதன், தமிழர் முன்னேற்ற சங்கத் தலைவர் அதியமான், இராஜ்குமார் பழனிச்சாமி, இந்திய சுதந்திரக் கட்சி தலைவர் வெற்றி என பலரும் கலந்து கொண்டு உரையாற்றி தமிழ் இன உணர்வை வெளிப்படுத்தினர். இறுதியாக ஒருங்கிணைப்பாளர் அக்னி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி நவின்றார்.


Go Back