9/11 கருப்பா வெள்ளையா? - 16-Nov-2016 04:11:34 PM

2016  ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் நாள் உலகில் அறியப் பெற்ற இரண்டு நிகழ்வுகள் பொதுமக்களிடையே ஒரு பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளன. ஒன்று அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பெருவணிகரும் தொலைக்காட்சி நடிகருமான குடியரசுக்  கட்சி வேட்பாளர் டொனால்டு திரெம்ப் பெற்ற எதிர்பாரா வெற்றி; மற்றொன்று இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர தாமோதர தாசு மோடி 500, 1000 இந்திய உருவாத் தாள்கள் இனி செல்லாது என்று அறிவித்த எதிர்பாரா நடவடிக்கை. இரண்டுமே கருப்பு வெள்ளை தொடர்புடைய செய்திகளாகும். அமெரிக்கா & இந்தியா ஆகிய இரு நாடுகளிலும் பொதுமக்கள் பலரின் எதிர்ப்பையும் ஏற்றுக் கொள்ளாமையும் எதிரொலிப்பதை நாம் அறிய முடிகிறது. 

அமெரிக்க நாட்டுக் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட டொனால்டு திரெம்ப் பூர்வீக அமெரிக்க வெள்ளையர்களின் ஆதரவாளராக தன் பரப்புரையை அமைத்துக் கொண்டவர். அரசியல் துய்ப்பு அதிகம் இல்லா ஒரு மேனாள் நடிகர். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சனநாயகக் கட்சி வேட்பாளர் திருமதி ஹிலாரி கிளிண்டன் ஓரளவு அரசியல் அனுபவம் மிக்கவர். பெரும்பாலான அமெரிக்க மக்களின் ஆதரவைப் பெற்றவராகக் கணிக்கப் பட்டவர். வெற்றி பெற்றிருந்தால் அமெரிக்க அரசியல் வரலாற்றில் முதல் பெண் குடியரசுத் தலைவர் என்ற தகுதியை பெற்றவாராயிருந்திருப்பார். ஆனால் அதிக பொது வாக்குகளைப் பெற்ற நிலையிலும் அமெரிக்காவின் தேர்தல் முறைமைப் படி அனைத்து மாநிலங்களும் குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்வதில் சம ஈவுடன் பங்கேற்கும் வகையில் ஏற்படுத்தப் பட்டிருக்கும் தேர்தல் அவை (Electoral college) தேர்வாளர் வாக்குகளின் அடிப்படையில் குறைவான மக்கள் வாக்குகளைப் பெற்ற டொனால்டு திரெம்பிடம் தன் தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளார். இவருடையத் தோல்வி ஒரு பகுதி வெள்ளை அமெரிக்கர்கள், பெரும்பாலான கருப்பின அமெரிக்க மக்கள், பெரும்பாலான பெண் வாக்காளர்கள், புலம் பெயர் அமெரிக்கர்கள் மத்தியில் ஒரு பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது. இதனால் அமெரிக்க நாட்டில் பல்வேறு இடங்களில் புதியதாக தேர்வு செய்யப் பட்டிருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்டு திரெம்ப்பிற்கு எதிராக அவரை ஏற்க மறுப்பதாகப் போராடிக் கொண்டிருக்கின்றனர். இதில் அறியப் படும் உண்மைகள்  வெள்ளை - கருப்பு; கிறித்துவம் - இசுலாம்; ஆண் - பெண் என்ற நிறம் மதம் இனம் சார்ந்த வேற்றுமைகள், ஆணாதிக்கம் போன்றவை அறிவிலும் பொருளாதாரத்திலும் வளர்ச்சி பெற்ற நாடாக எண்ணப்படும் அமெரிக்காவில் இன்னமும்  ஆழ வேறூன்றி யிருக்கிறது என்பதாகும். இது மனித குலத்தின் வளர்ச்சியல்ல மாறாக தளர்ச்சியாகும். 

மேலை நாடென்று அழைக்கப்படும் அமெரிக்க நிலை இவ்வாறு வெளிப்படும் நிலையில், கீழை நாடென்று அழைக்கப் படும் இந்திய நாட்டின் தலைமை அமைச்சர்  அறிவிப்புக்கிணங்க நவம்பர் 9 ஆம் நாளன்று நடைமுறைக்கு வந்த செல்லா நாணயம் அறிவிப்பு ஆய்வுக்குரியதாகும். இந்த அதிரடி அறிவிப்பின் நோக்கமாகச்  சொல்லப் பட்டவை கள்ளப் பணம், கருப்புப்பணம், ஊழல், வன்முறையாளர் நிதி ஆகியவற்றைத் தகர்ப்பதற்கான கசப்பு மருந்து என்பதாகும். இதன் பயன் இந்தியப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும்; வங்கிகளில் போதுமான பணம் கையிருப்பு கிட்டும்; அரசின் திட்டங்களுக்கும் உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தருவதற்கும் பயன்படும் என்பதாகும். இந்த விளைச்சல் இந்திய நாட்டுக்குக் கிட்டுமெனில் வரவேற்கலாம். இது ஒரு நல்ல பொருளாதார முடிவு என மனமுவந்து பாராட்டலாம். 

ஆனால்  இந்த கசப்பு மருந்து செயல் முறை இந்தியாவின் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மக்கள், அன்றாடம் தொழில் செய்து பிழைக்கின்ற பணியாளர்கள் என கீழ்த்தட்டு மக்களையே அதிகம் பாதித்து தன் அன்றாட உழைப்பைச் செய்ய முடியாமலும் ஊதியம் பெற முடியாமலும் வங்கிக் கிளைகளில் சித்தெறும்புக் கூட்டம் போல் வரிசையாக நின்ற காட்சிகளும் தான் நம் கண் முன் தெரிகின்றன. இந்திய நாட்டின் மக்கள் தொகையில் ஒரு விழுக்காடு எண்ணிக்கையுள்ள பெருமுதலாளிகள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், புதிய கல்வித் தந்தைகள், தரகு முதலாளிகள்  என பலரிடம் சற்றொப்ப இந்திய மொத்த உற்பத்தியில் 53 விழுக்காடு பணம் தேங்கியுள்ளது. இந்தப் பெருக்கம் வரி ஏய்ப்பு, இயற்கை வளம் சுரண்டல், கறுப்புப் பணம் போன்றவற்றின் வாயிலாக வளர்ச்சிப் பெற்ற ஒன்றாகும். எனவே தான் இன்று இந்தியர்கள் வெளிநாட்டு வங்கிகள், வீட்டு மனைகள், பொன் வெள்ளிக் கட்டிகள், பங்கு வர்த்தகம்  என சற்றொப்ப 80 இலக்கம் கோடி இந்திய உருவாயை கறுப்பு பணமாகப் புதைத்து வைத்துள்ளனர். இவைகளை எவ்வாறு மீட்டெடுப்பது என்பதற்குரிய திட்டங்கள் வகுத்து செயல்படுவதே அரசு விரும்புகின்ற பலனைத் தருமேயல்லாது வெறும் செல்லா நாணயம் அறிவிப்பு எந்த மாற்றத்ததையும் ஏற்படுத்திவிடாது என்பது 1946, 1978 ஆண்டு அறிவிப்புகளிலிருந்து இந்திய அரசு பெற்ற பாடமாகும். கருப்பு வெள்ளையாகி மீண்டும் கருப்பாகி இருப்பு கொள்ளும் என்பதே மெய்யாகும். இதில் 2000 உருவா புதிய மதிப்புத் தாள்கள் இவற்றை இன்னும் இலகுவாக்கிவிடும் என்றே கருதத் தோன்றுகிறது. 

1947 ஆம் ஆண்டுக்கு முன்பு ஒரு அமெரிக்க டாலர் ஒரு இந்திய உருவா மதிப்புக்கு இணையாக இருந்தது. அதுவே 1966 இல் 7.57 உருவாவாகவும் 1995 இல் 32 உருவாவாகவும் இன்று 67 உருவாவாகவும் மதிப்பிழந்து வருகிறதே இது எவ்வாறு நிகழ்கின்றது. தேவைப்படும் போது முதலீடுசெய்வதும் திடீரென பணத்தை அள்ளிச் செல்வதும் பெருமுதலாளிகளின் வணிகத் தந்திரம் அல்லவா? அப்போதெல்லாம் நம் நாணய மதிப்பின் வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றோம். இதுதான் வெளிநாட்டு முதலைகள் நமக்குத் தந்த பரிசு. 

ஆனால் பெருமுதலாளிகள் தான் இந்தியப் பொருளாதாரத்தை வளர்ப்பவர்கள் என்ற போர்வையில் உள்நாட்டு, பன்னாட்டு தொழிலதிபர்களுக்கு ஆண்டு தோறும் 10 இலக்கம் கோடி வரிச்சலுகை அளித்துக் கொண்டிருக்கிறோம். இந்த முரண்பாடு நமக்கு பெரும் ஐயத்தைத் தோற்றுவிக்கிறது. 

இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் 500, 1000 உருவா பணமதிப்பு 13.7 இலக்கம் கோடி என்று சொல்லப் படுகிறது. இந்தப் பணத்தை பொதுமக்கள் இடையூறுகளின்றி மாற்றுவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யாமல் இந்திய மாநிலங்கள் சில சட்டமன்றத் தேர்தல்களை எதிர் கொள்ள இருக்கின்ற நிலையில் திடீரென அறிவித்திருப்பது அரசின் நேர்மையை வெளிப்படுத்துவதாக இல்லை. ஒருவேளை இது போன்ற பொருளாதார முடிவுகள்    அவசரமானவை, அவசியமானவையெனினும் அதை அறிவிப்பதும் செயல் முறைப் படுத்துவதும் இந்திய சேம வங்கி (ரிசர்வ் பேங்க்) ஆளுனர் கடமைகளுக்குட்பட்டதல்லவா? மேலும் தலைமை அமைச்சரின் இந்த அறிவிப்பின் அறுவடையை எதிர்வரும் உத்திரப்பிரதேசம், கோவா, பஞ்சாப் மாநிலத் தேர்தல்களில் பா.ச.பா பெறும் என்று மத்திய அரசின் மூத்த அமைச்சரான ராஜ்நாத் சிங்க் பேட்டியளிப்பதையும் இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. எனவே இது பொருளாதாரப் போர்வையில் நிகழும் அரசியல் அறுவடையா எனத் தெரியவில்லை. 

ஒரு நாட்டின் பொருளாதார ஓட்டத்தில் உடம்பின் குருதி நாளங்கள் போல் சுழன்று தூய்மைப் படுத்தி வலிமை சேர்க்க வேண்டிய நிதியம் பதுக்கப் படுவதை மீட்டெடுக்க விரும்பும் தலைமை அமைச்சரின் நோக்கம் வெற்று அறிவிப்பாக இல்லாமல் வெற்றி அறிவிப்பபாக இருக்க வேண்டுமென்பதே எம் விருப்பமாகும்; விழைவாகும்.  எனினும்   கடந்த கால அறிவிப்புகளான  ஊழல் ஒழிப்பு, வெளிநாட்டு கருப்புப்பண மீட்பு, வறுமை ஒழிப்பு, தூய்மை இந்தியா போன்ற  திட்ட அறிவிப்புகளின் வெளிச்சம் இன்னும் சாமானிய மக்களின் வாழ்வின் மீது விழவில்லையே என்ற ஏக்கத்திலிருந்து யாம் இன்னும் விடுபடவில்லை. நெஞ்சத்தில் நேர்மையும் நோக்கத்தில் மேன்மையும் மெய்மையெனில் இந்திய நாட்டில் வெண்கதிர் வெளிச்சம் விழும். காரிருள் மறையும்! காத்திருந்து பாராட்டுவோம். கருப்பா வெள்ளையா காலம் பதில் கூறும். 

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு  
திருக்குறள் (595) - திருவள்ளுவர்

கனிவுடன்  சு.குமணராசன்,
முதன்மை ஆசிரியர்.

S.KUMANA RAJAN
Editor In Chief

கார்த்திகை - 2047
(நவம்பர் - 2016)


Go Back