அருந்தமிழ் போற்றும் அயல் நாடுகள்! - 17-Nov-2016 07:11:40 PM

லக மொழிகளில் மூத்த மொழியாம் தமிழ் மொழி. ஆனால் தற்போதைய சூழ்நிலையில், அத்தமிழ் மொழியின் பெருமைகள் அதன் பிறப்பிடமான தமிழ் நாட்டில் மங்கி வரும் வேளையில், அயல் நாடுகளான கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மொரிசியஸ், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் புலம்பெயர்ந்த தமிழர்களால் தமிழ் மொழியும் தமிழ்ப் பண்பாடும் பெரிதும் பறைசாற்றப்பட்டு வருகிறது. இதில் ஈழத் தமிழர்களின் பங்கு அளப்பரியது. இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து பல மைல் தூரத்திற்கு அப்பால் இருந்த போதிலும் தமிழுணர்வு மங்காது அவர்கள் ஆற்றி வரும் சேவை பாராட்டத்தக்கதாகும்.

கனடா:
கனடாவிற்கு புலம்பெயர்ந்த தமிழர்களின் வரலாறு 1950க்கும் முந்தையதாகும். தமிழர்களுக்கெதிராக நடைபெற்ற 1983 சூலை கலவரத்திற்குப் பின் தமிழர்களின் குடியேற்றம் மேலும் அதிகரித்தது. கனடியத் தமிழர்கள் தம் வருகையின் பின்னர் எத்தனையோ தடைகளைத் தாண்டி, கனடாவின் வளர்ச்சி, செழிப்பு என்பனவற்றிற்கு குறிப்பிடத்தக்க அளவில் பங்களிப்புகளை வழங்கி வருகின்றனர். இங்குள்ள தமிழ்ச்  சமுகம் இளைய தலைமுறையினர்  நம்  பண்பாட்டை அறிந்து கொள்ளும்  வகையில் குறிப்பாக இசை - நடனம்  போன்ற கலை நிகழ்ச்சிகளின்  வாயிலாக  வெளிக்கொணர்ந்து பாதுகாத்து வருகிறது. இத்தகைய  வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்  குடியிருப்புகளின்  எண்ணிக்கை மிகுதியாக இருக்கின்ற காரணத்தால், சமீபத்தில்  சனவரி  மாதத்தை ‘தமிழ்  மரபுத்  திங்களாக’ அறிவித்து  கனடா நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

கனடிய அரசாங்கத்தால்  இயற்றப்பட்ட பிரேரணை (எம்-24)யில், “கனடிய சமுகத்தை உருவாக்கியதில்  கனடியத்  தமிழர்களின்  பங்களிப்பு, தமிழ் மொழி மற்றும் தமிழ்க் கலாச்சாரத்தின் செழுமை, கல்விப் புகட்டுவதில் முக்கியத்துவம், எதிர்காலத்  தலைமுறையினருக்கு தமிழ்ப்  பாரம்பரியம் குறித்த விழிப்புணர்வு ஆகியவற்றைக்  கருத்தில்  கொண்டு ஒவ்வோர்  ஆண்டும்  சனவரி மாதத்தை ‘தமிழ் மரபுத்  திங்களாக’த் தீர்மானித்து அரசு அங்கீகரிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளது. 

இப்பிரேரணையை  நாடாளுமன்ற உறுப்பினர் அரி ஆனந்தசங்கரி அவர்கள் நாடாளுமன்றத்தில் மே 2016இல் முன்மொழிந்தார். தற்போது இப்பிரேரணை அனைத்து கட்சிகளின் ஆதரவோடு ஒருமனதாக நிறைவேற்றப் பட்டுள்ளது.

ஆசுதிரேலியா
1970 ஆம் ஆண்டிலிருந்தே தமிழர்கள் அதிக அளவில் ஆசுதிரேலியாவிற்கு புலம் பெயரத் தொடங்கினர். அதற்கு முன்பு பெரு வணிகர்கள், தொழில் அனுமதி பெற்ற சிலரும் குடியேறியிருந்தனர். தற்போது ஏறத்தாழ 50,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் வசிக்கின்றனர். 

ஆசுதிரேலியாவில் தமிழர்கள் கணிசமாக வாழும் வெட்வோர்த்வில்லே பகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஹக் மெக்டோர்மோட் (பிuரீலீ விநீபீமீக்ஷீனீஷீtt). இவர் நாடாளுமன்றத்தில் விடுத்த பிரேரணையில் உலகம் முழுவதும் சுமார் 70 மில்லியன் மக்களால் பேசப்பட்டு வரும் உலகின் தொன்மையான தமிழ் மொழியை நமது நாட்டின் பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் எனவும் தமிழை ஆசுதிரேலியாவின் மூன்றாவது தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார். 

“தமிழானாது வர்த்தகம் மற்றும் பொருளாதார ரீதியாக இந்தியா, இலங்கை, ஆசுதிரேலியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. வெட்வோர்த்வில்லேவில் உள்ள தமிழ் படிக்கும் மையத்தில் வார இறுதியில் 650க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். கிர்ராவீன் பள்ளியில் வைத்து இந்த பாட வகுப்புகள் வாரந்தோறும் நடைபெற்று வருகின்றன. பன்னாட்டு முதலீடு மற்றும் வர்த்தகத்திற்கு தமிழ்மொழி அவசியம். காமன்வெல்த் அரசுகள், மாகாணங்கள் இதற்கான உதவிகளை செய்ய வேண்டும். ஆசுதிரேலிய இளைஞர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுப்பதன் மூலம் தமிழர்களின் நீண்ட பெரும் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் அனுபவிக்க முடியும். தமிழ் ஒரு மொழி மட்டுமல்ல; அது சிறப்பானதொரு கலாச்சாரம்” என்று அவர் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். தமிழின் பெருமையை உணர்ந்த ஆஸ்திரேலியரான ஹக் மெக்டோர்மோட், தமிழ் கல்வியும் கலாச்சாரமும் இந்தியா மற்றும் ஆசுதிரேலியாவுக்கு மட்டுமன்றி தெற்காசிய நாடுகளுக்கு மிகவும் முக்கியமானது என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இவ்விரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் (கனடா - ஆசுதிரேலியா) நாடாளுமன்றத்தில் தமிழிலும் உரையாற்றினர் என்பது குறிப்பிடத் தக்கது.

மொரிசியசு:
1840களில் மொரிசியசு நாட்டு கரும்புத் தோட்டங்களுக்குக் கொண்டு செல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை இன்று பன்மடங்காகப் பெருக்கம் கண்டுள்ளது. தற்போது சற்றொப்ப 55,000 தமிழர்கள் வாழ்கின்றனர். இத்தீவில் தமிழர்கள் குவியலாக ஓர் இடத்தில் வாழாமல் தீவு முழுவதும் பரவிக் கிடக்கின்றனர். தமிழர்கள் இந்நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியுள்ளனர். தமிழர்கள் பலர் அமைச்சர்களாகவும் நீதிபதிகளாகவும் பதவி வகிக்கின்றனர். 

தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றின் சிறப்பு குறித்து மொரிசியசு தமிழர்கள் நன்கு உணர்ந்துள்ளனர். தங்களுடைய தமிழ்ப் பாரம்பரிய மரபு குறித்து அவர்களுக்கு பெருமிதம் உண்டு. மொரிசியசில் அனைத்துல தமிழ் மாநாட்டினை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். மொரிசியசு நாணயத்தில் தமிழ் இடம் பெற்றுள்ளது. வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றிலும் தமிழ் நிகழ்ச்சிகள் ஒலி, ஒளிபரப்பப் படுகின்றன. சில பள்ளிகளில் தமிழ் மொழிப் பாடமாகக் கற்பிக்கப்படுகிறது. ஏறத்தாழ 200 தமிழ்ப் பள்ளிகளும் 210க்கும் மேற்பட்ட தமிழ் ஆசிரியர்களும் உள்ளனர். 

உலகிலேயே மொரிசியசு நாட்டுப் பணத்தில் மட்டுமே தமிழ் எழுத்துகள் மற்றும் தமிழ் எண்கள் பொறிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கதாகும்.


Go Back