புத்தம் புது பூமி வேண்டும் - 15-Dec-2016 05:12:39 PM

புத்தம் புது பூமி வேண்டும்
-சு. ராஜு
நீர் மாசுப்பாட்டை தடுக்க மாந்த இனம் என்ன செய்ய வேண்டும் என்பதை இளம் மாணவர்களுக்கு மட்டுமல்லாது எல்லோரும்  அறிந்து  தெளிந்திட இது அருமையான நூல். புவி ஈர்ப்பு, நிலநடுக்கம்  இவைகளை முன்கூட்டியே   அறிந்திடும்  வழிவகைகளை எளிய தமிழ்  நடையில்  யாவரும்  படித்து பயன்பெற  நூலாசிரியர் ராஜு  இந்த அறிவியல்  நூலை நமக்கு ஆக்கித்  தந்துள்ளார். தமிழ்நாட்டில் ஆழிப்பேரலை (சுனாமி) ஏற்பட்டபோது பக்கிங்காம்  கால்வாய்  பாதுகாப்பு அரணாக விளங்கி பல உயிர்களை  காப்பாற்றியதை  நினைவில் நிறுத்துகிறார்.

அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பூமி, சந்திரன், சூரியன் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வருவதால், இவைகளின் ஒட்டுமொத்த ஈர்ப்பு அதிகரித்து பூமிக்கு அதிக அளவில் தாக்கங்கள் ஏற்படுவதாக குறிப்பிடும் நூலாசிரியர் இந்த நாட்களில் கடல் அலைகள் வழக்கத்தை விட அதிக உயரத்திற்கு எழுந்து வீசுவதோடு மனிதர்களையும்  இது பாதிக்கிறது என்கிறார்.  மனநோயால் பாதிக்கப்பட்டோருக்கும் நோயின் தீவிரம் இந்த நாட்களில் அதிகமாக இருப்பதும் இதனால்தான் என்கிறார். மகாராட்டிரா மாநிலத்தில் புனே மற்றும் அதன்சுற்றுப் பகுதிகளில் ஆறரைக்கோடி ஆண்டுகளுக்கு முன் எரி மலைகள் வெடித்து சிதறியுள்ளன. அதன் புராதன கால எரிமலைக் குன்றுகளை இன்றும் காணக்கிடைக்கிறது என்று அறிய முடிகிறது. அழிந்த இனமான (டைனசர்)இராட்சத பல்லிகளின் படிமத்தின் ஆய்வுகளில், ஆறரைக் கோடி ஆண்டுக்கு முந்தைய இனமாகக் கண்டறிந்தபோது, இதன் அழிவும் எரிமலைகளின் சீற்றத்தால் ஏற்பட்டவையே. இதுபோன்று வியக்கவைக்கும் அறிவியல் செய்திகள் ஏராளம்! மாணவர்களுக்கு இந்நூல் மிகவும் உதவிகரமாக அமையும்.

வெளியீடு:   உரத்த சிந்தனை பதிப்பகம், 
6, வீரசவர்கார் தெரு, இரமணா நகர்,
பெரம்பூர் - 600 011. 
பேசிட: 94440 11105

(பக்கங்கள்: 120  விலை: 150)


Go Back