நெத்தியடி! - 15-Dec-2016 05:12:33 PM

‘கருப்பா வெள்ளையா’  தலையங்கம் படித்தேன். ஒரு சித்தாள், கொத்தனார், குப்பை பொறுக்கும் பெண், பிளாட்பாரத்தில் படுத்துகிடக்கும்  இந்தியன் இவர்களைப் பற்றி கிஞ்சித்தும் நினைத்திருந்தால் இந்த அறிவிப்பு எவ்வளவு ஆபத்தானது எனத்தெரியும். கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் யாரென்று தெரிந்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் 500, 1000 வைத்திருக்கும் ஏழைகள் மீது சட்டம் பாய்வதேன்? ‘ஒளிமயமான எதிர்காலம்’ கட்டுரை எழுதிய பா.இரா.சுபாஸ் சந்திரனுக்குகோடி கோடி வாழ்த்துகள். மிகப் பெரிய சோத்துப் பிரச்சினையை தீர்க்க வழி சொல்லியிருப்பது அபாரம்! 

சென்னையில் 35 ஆண்டுகளாய் வாழ்கிறேன். அகலப் பாதை குறித்து தெரியவே இல்லை! மும்பைக்காரர் இராசு மாதவன் எழுதிய ‘அகலப் பாதை’ என் போன்ற தமிழ் தெரியாதவர்களுக்கு நெத்தியடி! ‘காரக்கலவையும் மாச்சில்லும்’ அற்புதம் சாகும் வரை மறக்கவே மாட்டேன், ‘ஆலமரம்’ கவிதை அருமை.  தமிழ் நாட்டைத் தவிர, மற்ற நாடுகள் தமிழை வளர்க்கின்றன போற்றுகின்றன. ‘அறிந்தும் அறியாததும்’   நிறையத் தெரிந்து கொண்டேன். இதழ் அருமை! தொடரட்டும்! 
- ஞா.சிவகாமி, போரூர் - 600 116

அருந்தமிழ்!
கார்த்திகை மாத இதழில் ‘அருந்தமிழ் போற்றும் அயல் நாடுகள்’ கட்டுரைப் படித்ததும் பரவசமடைந்தேன். அக்கட்டுரையில் கனடா நாட்டின் நாடாளுமன்றத்தில் சனவரி மாதத்தை தமிழ் மரபுத் திங்களாக அறிவித்து தீர்மானம் நிறை வேற்றியுள்ளதையும் ஆசுதிரேலியா நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தமிழ் மொழியை தமது நாட்டின் பாடத் திட்டத்தில் மூன்றாவது மொழியாக அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளதையும் மொரீசியஸ் நாட்டு நாணயத்தில் தமிழ் எழுத்துக்கள் மற்றும் தமிழ் எண்கள் பொறிக்கப் பட்டுள்ளதையும் படித்ததும் நம் செம்மொழித் தமிழ் சீரோடும் சிறப்போடும் அயல் நாடுகளில் புகழோடு வளமாய் வாழ்கிறது என்பதையே தெளிவாக காட்டியது.
- க. இளங்கோவன், மயிலாடுதுறை - 609001

வக்கிலாதவர்களுக்கு வாக்கு...
‘கருப்பா வெள்ளையா’ தலையங்கத்தில் அமெரிக்காவில் பெரும்பாலான பெண்கள் திரம்ப் வெற்றியில் கண்ட ஏமாற்றம் பற்றிய தகவல் கண்டேன். வாக்காளர்களுக்கு கோபம் வந்துவிட்டால் நாடாள வக்கில்லாதவர்களுக்கு வாக்கு அளித்து விடுவார்கள் என்பதற்கு  அமெரிக்கத் தேர்தல் முடிவும் ஓர் உதாரணம். கருப்பு பணம், கள்ளப்பணம் ஒழிப்பிற்கு மோடி கண்ட 500, 1000 நோட்டு செல்லாது என்கிற சிந்தனையை காத்திருந்து பாராட்டுவோம் என முடித்தது அருமை. ‘ஒளிமயமான எதிர்காலம்’ உரையில்  இந்தியாவில் உணவை வீணாக்கும் கொடுமைகளை கண்டேன். தேசிய உணர்வு அற்றவர்கள் முதல்வர்களாக இருப்பதால் வீணாகும் உணவுகளை கொடுக்காத தலைமையமைச்சரும் நதிநீரைத் தரமுடியாத முதல்வர்களும் நடிகர்களும் நாடு முழுக்க பரவி விட்டனர்.
- மூர்த்தி, சென்னை - 600 100

உன்னதமானது!
முதுமையின் அருமையை வலியுறுத்தி, இளசுகளுக்கு பாடம் புகட்டி தென்மாவை  தருமு எழுதிய கவிதை நஞ்சை நிலத்தில் பதிக்கப்பட்ட விதை. செல்லாத நோட்டு அறிவிப்பால் நன்மையையும் பாமர மக்களுக்கு ஏற்படும் அவல நிலையையும் தீர்க்கமாக ஆய்வு செய்து மக்களின் மனதில் உள்ளதை அப்படியே பிரதிபலித்து காட்டி ‘காத்திருந்து பாராட்டுவோம்’ என்று சொன்ன  தலையங்கத்தில் உள்ள நிதானமும் விவேகமும் பாராட்டுக்குரியவை. 

ஹிமானா சையத் எழுதிய ‘மாற்றம் இல்லா முடிவுகள்’ சிறு கதையில் இடம் பெற்றிருந்த அன்வர் - அமீதா பாத்திரப் படைப்பு... மிகவும் உன்னதமானது!
- ப. லெ.பரமசிவம், மதுரை - 625009

படிக்காத மேதை
தலையங்கத்தில் செல்லா நோட்டுகள் அறிவிப்பில், மறு சீராய்வுத்  தேவை என்பதை வலியுறுத்தியுள்ளீர்கள்! வரவேற்புக்குரியது! பாராட்டுக்குரியது. வெளிநாட்டு வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ள இந்திய நாட்டு கறுப்பு பணம் என்னவாயிற்று? ஒரு நல்ல அரசு என்பது மக்களுக்கு பல வகையாலும் உதவி புரியவே தவிர உபத்திரம் கொடுக்க அல்ல. தாமரைச் செல்வர் விருது பெற்ற படிக்காத மேதையின், வாழ்வியல் மெய் சிலிர்க்க வைத்தது! மனநோய் மன அழுத்தத்தைத் தரும். மன அழுத்தம் உயிர் கொல்லியாக மாறிவிடும்!  மன அழுத்தத்தைக் குறைக்க பல வழிகளை கட்டுரையில் சொல்லப் பட்டுள்ளது அனைவருக்கும் பயன்படக் கூடிய செய்தி. 
- துரை.சௌந்தரராசன், காஞ்சிபுரம் - 631501

முருங்கை மரம்
ஆசுகவியின் ‘முருங்கைமரம்’ கவிதை  நச்சென்று தெளிவாக இருந்தது. கவிதைக்கேற்ற வடிவமைப்பு.  கவிஞருக்கு அன்பான பாராட்டுகள். ‘தமிழ் இலெமுரியா’ ஆசிரியர் குழுப் பணி மேலும் வளரட்டும். அனைவருக்கும் வாழ்த்துகள்!
- கா. திருமாவளவன், திருவெண்ணைய் நல்லூர் - 607203

கோடி உண்மைகள்
கார்த்திகை திங்களிதழ் அட்டைப்படம் அருமையிலும் அருமை! “மண்டையிலே சுர்ங்குது” என்ற பாடலைப்போன்று பல தகவல்கள் எண்ணிலடங்காத உண்மைகள் அடங்கிய கட்டுரை. எத்தனை கோடி உண்மைகள்!
-த.சிலம்பு மணி, நெல்லை - 627001

எத்தர் கூட்டம் எங்கே சென்றது?
கலங்கடித்து விட்டார் மோடி! பாரத பணக்காரர்களுக்கு சரியான பேதி மாத்திரை கொடுத்து விட்டார்! அள்ளி வீசுங்கள் ஆயிரம் உண்மைகளை! எள்ளி நகையாடிய எத்தர் கூட்டம் எங்கே சென்றது? கால் கடுக்க வரிசையில் நின்றாலும் கண்ணே! பாரதம் காப்போம்!
-அருணகிரிசாமி, ஈரோடு - 638501

எரியீட்டி
‘தமிழ் இலெமுரியா’ இதழ் தரம் செறிந்த படைப்புக் கனிகளை ஏந்தும் பைந்தமிழ்ப் பழச்சோலையாகவே, இந்த முதிய எழுத்தாளன் (அகவை 85) அ.மறைமலையான் உள்ளத்தை மகிழ்ச்சி அருவியில் நீராட்டுகிறது.

‘காவிரி நீரில் கரையும் இறையாண்மை’ என்னும் தலைப்பைத் தாங்கும் தலையங்கம், ஆரிய இந்து மதப் பித்தும் சமசுகிருத மொழி வெறியும் கொண்ட பாரதிய சனதா கட்சியார் நடத்தும் இந்திய நடுவண் அரசுக்கு விடுக்கப் பெற்ற தமிழ் இனத்தின் தனி ஆட்சி உரிமைக்கு உரிய அறைகூவலே ஆகும்!

“...ஏக இந்தியாவின் ஒருமைப்பாடும் இறையாண்மையும் காவிரி நீர்ச் சிக்கலில் கரைந்து கொண்டே இருக்கின்றன. இந்த நிலை  நீடித்தால் இந்திய நாடு சிதறுண்டு போகும் என்பது எம் கணிப்பாகும்.

...தங்கள் எதிர்கால வாழ்வுக்கு உரிமையும்  இறைமையும் சார்ந்த தனித் தமிழ் நிலமே விடையாக அமையுமோ? என தமிழ் மக்கள் சிந்திக்கும் நிலைக்கு அவர்களைத் தள்ளி விடாமல் இந்தியாவின் இறையாண்மையை காப்பது நடுவண் அரசின் பொறுப்பும் கடமையும் என வலியுறுத்துகிறோம்” என தலையங்கத்தின் இறுதியில் வரும் இந்த எரியீட்டி வரிகள் தலைமையமைச்சருக்கு தொடுத்துள்ள தொலைநோக்கு எச்சரிக்கை என்பதாகவே போற்றலாம்.

1937ஆம் ஆண்டு தமிழ் நாடு உள்ளிட்ட மாகாணத்தை ஆண்ட காங்கிரசுக் கட்சியின் தலைமை அமைச்சர் திரு. இராசாசி இந்தியைக் கட்டாயப் பாடமாக்க ஆணை பிறப்பித்தார். அந்த வட இந்திய மொழி ஆதிக்கத்துக்கு தமிழும், தமிழ் இனமும் அடிமைகள் ஆகிவிடக்கூடாது என்பதற்காகத்தான் பகுத்தறிவுத் தந்தை பெரியார் அவர்கள் ‘தமிழ் நாடு தமிழருக்கே’ என்னும் விடுதலை முழக்கத்தை எழுப்பினார். அதற்கு புத்துயிர் அளிப்பதாகவே அமைந்துள்ளது தங்களின் தலையங்கம்! இத்தகைய இனமானத் துணிவுடன் இன்றைய தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் இனிமேலாவது பழைய பெரியார் முழக்கத்துக்கு உயிர் கொடுத்து தனி ஆட்சி உரிமைக்கு போராட மாட்டார்களா என இந்த திராவிட இயக்க மூத்த எழுத்தாளன் ஏங்குகிறேன்.  

மாட்சிமிகு மேயர் சா. கணேசன் அவர்களின் வரலாற்றுக் கருவூலம் போன்ற நேர்காணலை திறமை மிளிர வழ்ங்கியுள்ளார் கவிஞர். மு.தருமராசன். ‘தமிழ் இலெமுரியா’வின் அறிவுப் பணிகளுக்கு என் வாழ்த்துகள்.
-அ.மறைமலையான், திருவல்லிக்கேணி  - 600005


Go Back