பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும் - 14-Jan-2017 07:01:25 PM

பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்
- கணியன் பாலன்

எந்த ஒரு தேசிய இனமும் தன் வரலாற்றைப் பின்னோக்கிப் பார்க்காமல் தற்போதைய வளர்ச்சி அல்லது தளர்ச்சி நிலையினைக் கணக்கிட இயலாது. அந்த வகையில் ஒவ்வொரு சமுக இனத்திற்கும் தத்தம் பண்பாடு, மொழி வழிப் பெருமைகள், ஆய்வுகளை ஒப்பீட்டு அளவில் வரலாற்றுத் தொன்மைகளையும் நாகரிகச் சிறப்புகளையும் அறிய முடிகிறது. அதுவே வரலாற்றின் போக்கையும் வளர்ச்சியையும் தீர்மானிக்கின்றது.

இந்திய வரலாற்றுச் செய்திகளாக புராண இதிகாசங்களிலிருந்தும் ஒரு சில நம்பிக்கைகளிலிருந்தும் பல்வேறு ஊடகங்கள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. எனினும் அவற்றிற்கான தரவுகள், உள்நாட்டு வெளிநாட்டு அறிஞர்களின் குறிப்புகள் போதிய அளவு கட்டுணரப்படவில்லை. இந்தியத் தேசியம் என்பது ஓர் எல்லைத் தேசியமே தவிர அதை ஒரு மொழி, பண்பாட்டு வழித் தேசியக் கூட்டமைப்பாகக் கொள்ள இயலாது. ஆங்கிலேயர்களின் வரவிற்கு முன்பும் பின்பும் பல்வேறு காலக் கட்டங்களில் இந்திய நாட்டு எல்லை மாற்றம் பெற்றிருக்கிறது. பல புதிய நாடுகள் தேசிய இன உணர்வில் உருவாக்கம் பெற்றுள்ளன. 

எனவே இந்திய எல்லைக் கோட்டிற்குள் ஓர் அங்கமாக விளங்கும் தமிழ்த் தேசிய இனத்தின் வரலாற்று உண்மைகளை இந்திய வரலாற்று நூல்களை படிப்பதன் மூலம் தெரிந்து கொள்ள இயலாது. எனவே தமிழ்த் தேசிய இனத்தின் பெருமை அல்லது சிறுமைக் கூறுகளை உவப்பும் காய்ப்பும் இன்றி ஆய்வுக்குட்படுத்தி அதன் தொன்மைகளையும் காலச் சுவடுகளையும் தமிழ் மக்களுக்கு தொகுத்தளிப்பதன் மூலம் நாம் நம்முடைய தற்காலச் சூழலை தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும் என்ற தெளிந்த நோக்கோடு எழுதப்பட்ட நூலாகவே “பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்” என்ற நூலினைக் கருதுகின்றோம்.

பிற இலக்கிய வடிவங்களான கவிதை, கட்டுரை, கற்பனை, வாழ்க்கை வரலாறுகள் போன்று நம் சிந்தனைக்குள் தோன்றிய சொற்களை அடுக்கு நூலாக்குவது எளிதாகும். ஆனால் உலகின் பெருமைமிக்க ஓர் இனத்தின் இலக்கியம், வரலாறு, வளர்ச்சிக் கூறுகளை ஆவணப் படுத்துவது என்பது தனி மனிதனால் செய்து விடக் கூடிய காரியம் அல்ல என்றாலும் விடா முயற்சியும் பல்வேறு தரவு ஆய்வுகள், கல்வெட்டு எடுத்துக்காட்டுகள் என பலமுனை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அவற்றை ஒப்பு நோக்கி கால வரையறைகளுடன் சங்க கால இலக்கியங்கள் குறித்தும், புலவர்கள் குறித்தும் தமிழரின் உயர்ந்த வாழ்க்கையின் எடுத்துக்காட்டாக பல அகச் சான்றுகளை படிப்போர் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் நூலாக அமைக்கப்பட்டுள்ளது. ஒரு வரலாற்று நூலைப் படைப்பதற்கு தெளிந்த அறிவும் துணிவும் நெடிய வாசிப்பும் குறிப்புகளும் ஒருங்கிணைக்கப் பட வேண்டும். அந்தப் பணியை மிகச் செம்மையாக திரு கணியன் பாலன் செய்திருக்கிறார் என்பது இந்நூலின் பக்கங்களைப் புரட்டும் போது வெளிப்படுகிறது.

இளந் தலைமுறை ஆராய்ச்சியாளர்களுக்கும் தமிழ்நாட்டு உளவியல் அறிந்து கொள்ள விரும்பும் வெளிநாட்டு அறிஞர்களுக்கும் உலக மக்களுக்கும் இந்நூல் பெரிதும் பயன்படும் என்பதில் சிறிதும் அய்யமில்லை. 

இந்நூல் பழந்தமிழர் சமுதாயம், தொல் பழங்காலம், பண்டைய தமிழக இந்திய அரசுகள், தமிழக வரலாற்றுக் கால கட்டடங்கள், தமிழகப் போர்களும் அரசு உறவுகளும் பழந்தமிழர்களின் மெய்யிலும் இசையும் என ஆறு பெரும் பகுதிகளாகப் பிரிக்கப் பெற்று ஒவ்வொரு பகுதியிலும் துணைப் பிரிவுகளாக கோர்வையுடன் தொடுத்திருப்பது வரலாற்று மாணவர்களுக்கு எளிதாக்கப் பட்டுள்ளது. இதுதவிர பகுதியின் இறுதியிலும் அகச்சான்றுகளாகவும் புறச் சான்றுகளாகவும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நூல் வரிசை, கல்வெட்டுகள், சங்க இலக்கிய எடுத்துக்காட்டுகள் எனத் தெளிவாக எடுத்துக் காட்டியிருப்பது இந்நூலின் மெய்மையும் நம்பகத் தன்மையும் பெரிதளவில் நிலை நிறுத்துகின்றது.

ஒரு தனி மனிதரால் இவ்வளவு செய்திகளை சேகரித்து வரலாற்றை ஆவணப் படுத்த இயலுமா? என்ற கேள்விகளுக்கு கணியன் பாலன் விடையாகத் திகழ்கிறார். இந்த நூலின் மற்றொரு சிறப்பாக நாம் கருதுவது நூலின் இறுதிப் பகுதியில் குறிக்கப் பெற்றுள்ள பழந்தமிழ் நிகழ்வுகளும் ஆண்டுகளும் குறித்த கால அட்டவணை, சங்க காலப் புலவர்களின் கவிஞர்களின் வரிசைப் பட்டியலும் வாழ்ந்த காலப் பகுதியும் ஆகும்.

தமிழ் ஒரு செவ்வியல் மொழி என்பதற்கான வரலாற்றுத் தரவுகளும் மொழி அறிஞர்களின் எடுத்துக்காட்டுகளும் பிறமொழி ஒப்பீடுகளும் நம்மை வியக்க வைக்கின்ற அளவுக்கு எடுத்தாளப்பட்டுள்ளது. வட இந்தியர்கள் பலரின் சார்பு மனப்பான்மையைத் தகர்க்கும் பலம் இந்த நூலில் காணப்படுகிறது.

குமரிநாடு குறித்து செய்திகள், தமிழ் எழுத்துகளின் பழமை, மெய்யியல், கல்வி, தொழில் மேன்மை, வாணிகம் கடலாதிக்கம் என அனைத்துக் கூறுகளும் விரிவாக ஆராயப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன. மூவேந்தர்கள் குறித்த செய்திகள் குறிப்பாக சோழ மன்னர்களின் தனிப் பெருமைகள் விரிவாக ஆராயப்பட்டு ஆவணப்படுத்தப் பட்டுள்ளன. தமிழர்களின் பல்வேறு காலக் கட்டப் போர்த்திறன் சங்ககால இலக்கிய வளங்கள் அனைத்தும் கால வரைவுகளுடன் தெளிவாக ஆராயப்பட்டு பதிவு செய்துள்ளார் கணியன் பாலன்.

வரலாற்றுக்கு முந்தைய காலம் தொடங்கி பிரித்தானியர்கள் உருவாக்கியுள்ள இந்திய வரலாறு தொடர்பான பல்வேறு தகவல்களை சங்க இலக்கியப் பிரதிகள் மற்றும் கண்டறியப் பட்ட தரவுகளுடன் ஒப்பு நோக்கி பண்டைத் தமிழர் சமுதாய வரலாற்றை மிகுந்த நம்பகத் தன்மையுடன் புரிந்து கொள்ள உதவும் ஓர் ஆவணமாக இந்நூல் வெளிக் கொணரப் பட்டுள்ளது. இதுபோன்ற நூல்கள் பிற நாட்டறிஞர்களும் வரலாற்று ஆய்வாளர்களும் அறிந்து கொள்ளும் வகையில் உலக மொழிகளில் மொழிப் பெயர்க்கப்பட வேண்டும் என்பது எம் அவாவாகும். கணியன் பாலனின் தேடல், உழைப்பு ஆகியவற்றை தமிழ்ச் சமுகம் மதித்துப் போற்றிக் கொண்டாடும் என்பதில் அய்யமில்லை. 896 பக்கங்களில் பகரப்பட்டுள்ள செய்திகள் ஒரு வரலாற்றுக் கருவூலமாகவே காட்சியளிக்கின்றன. இந்த நூலில் ஆங்காங்கே பல வட மொழிச் சொற்கள் இடம் பெற்றிருப்பதைத் தவிர்த்திருந்தால் மேலும் இந்நூல் செறிவுற்றிருக்கும் என்பது என் கணிப்பாகும்.

தமிழ் மொழிக்காகவும் மக்களுக்காகவும் பாடு படுகின்ற, போராடுகின்ற தமிழ் நெஞ்சங்களுக்கு இந்நூல் ஒரு பெரிதும் துணை நிற்கும் என்பதில் அய்யமில்லை. ஒவ்வொரு தமிழ் நூலகங்களிலும் வீட்டு நூலகங்களிலும் தவறாது இடம் பெற வேண்டிய ஒரு வரலாற்று ஆவணம் “பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்” என்ற இந்த அரிய நூல். இந்நூலை உருவாக்கிய தோழர் கணியன் பாலன் அவர்களுக்கும் பதிப்பித்துத் தந்த “எதிர் வெளியீடு” நிறுவனத்திற்கு தமிழ் மக்கள் நன்றிக் கடன்பட்டுள்ளனர்.

வெளியீடு: எதிர் வெளியீடு 
96, நியூ ஸ்கீம் ரோடு, 
பொள்ளாச்சி & - 642 002
பேசிட: 99425 11302

(பக்கங்கள்: 896 விலை: 950)


Go Back