புதிதாய் பூத்தாய் - 14-Jan-2017 08:01:11 PM

நெல்லும் கரும்பும் நெடும்படை எருதும்
சொல்லும் கதையை சற்றே கேளடா
அல்லும் பகலும் அழகியல் உலகும் 
கல்லும் நீரும் கனிநிறைக் காடும்
வெல்லும் அறமும் வெகுமதி அறிவும்
செல்லும் நொடியும் சொல்லும் பாடமும்
எல்லாம் மண்விழா என்றே எண்ணடா
பல்லோர் மகிழ்ந்திடும் பெருவிழா நமதடா

கதிர்வரும் திசையை கழனிகள் நோக்கிட
எதிர்வரும் பொங்கலை எம்மினம் விரும்பிட
புதிரெனக் கண்டிடும் புத்தொளி நிறைந்திட
முதியோர் முதல்இளம் மொட்டுகள் வரை தம்
பதிவொளி முழங்கிட பொங்கல் பொங்கிட
புதிதாய் பூத்ததாய் புவிமகள் மலர்ந்திட
இதுபோல் ஒருவிழா எங்கடா உண்டு 
புதுமை போற்றும் புதுவிழா ஏதடா

சித்திரை என்றாய் சனவரி என்றாய் 
அத்தரை ஆண்டினை ஆடையாய் தரித்துக்
கத்தினாய் மதத்தின் கழுதையாய் நின்றே
எத்திசை போற்றும் எம்மின வள்ளுவச் 
சித்தன் பிறந்த சுறவத் திங்களே
இத்தரை ஆண்டென இனத்தார் மொழிந்தும்
பித்தனாய்க் கிடக்கிறாய் பிறமத இழிவில்
மொத்தமாய்க் கிடக்கிறாய் மரித்த பிணமாய்

- பரணிப்பாவலன்


Go Back