விசிறி - 16-Feb-2017 01:02:47 PM

ம்மன் கோயில் மேளச் சத்தம் கண கண என்று ஒலிக்கிறது. சாமி கொண்டாடிக்கு அருள் வந்து விட்டது. சாமியாடியின் ஓங்கார சத்தம் வானத்தைக் கிழித்து எறிகிறது.  கோட்டைச்சுவருக்கு வெளிப்பக்கம் நின்றிருந்தவர்களும், அரைக்கண் தூக்கத்தில் புல் தரையில் படுத்துக் கிடந்தவர்களும் எழுந்து சாமியாட்டம் பார்க்கவும், அவர் சொல்லும் அருள் வாக்கை கேட்கவும் எழும்பி விரைந்தார்கள். வேல்மயிலுக்குத் தான் படுத்திருந்த ஓலைப்பாயை விட்டு எழுந்திருக்க மனமில்லை.

வெள்ளிகள் மினுங்க நீலம் பாய்ந்து கிடக்கும் கருநீல வானம் அவன் நெஞ்சின் மீது விழுந்து அமுக்குவது போல மூச்சு விட முடியாமல் திணறினான்.

இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன அம்மன் கோயில் கொடை பார்த்து. மும்பையில் இருந்தாலும் நடக்கிற எல்லா கொடைக்கும் தவறாமல் வரிப்பணம் அனுப்பிவிடுவான். அவனால் ஊருக்குப் போய் கொடை பார்க்க இயலாது. கிடைக்கும் வருமானத்தில் அடிக்கடி ஊருக்குப் போனால் பொருளாதார முடை வந்துவிடும். கோயில் கொடைவிழா வரும்போதெல்லாம் மனைவி புனிதா ஒரு வாரமா திட்டி தன் மனப்பாரத்தை குறைத்துக் கொள்வாள். ‘‘ஆமா.. ஒரு வருசம் கொடைக்காவது ஊருக்கு கூட்டிட்டு போறியளா? அவ அவா நகையும் நட்டுமா எப்படி போட்டுக்கிட்டு ஊருக்கு போறா. நானுந்தான் இருக்கேனே மூளியா.’’

‘‘இன்னேரு... ஓட்டலுல வேல செய்தேன்னு தெரிஞ்சுதான கெட்டு பட்ட. பின்ன என்னத்துக்கு கலைக்டர் பொண்டாட்டி மாதிரி வாழ  ஆசை படற. ஒங் கடவாய் பெட்டி வாய வச்சிகிட்டு சும்மா இரு பாத்துக்க...’’

‘‘நான் ஏன் சும்மா இருக்கணும். ஊற ஊற உங்கத் தங்கச்சிகளுக்கு கொடுத்தீங்கன்னா பெறவு எப்படி மிச்சம் வரும்? எங்கயிருந்து கொடைக்கு போவ.’’ 

‘இவகிட்ட நம்ம நியாயம் பேசினா ஒடைஞ்ச வாமடையில தண்ணி ஒழுவுற மாதிரி சள..சளன்னு பேசிக்கிட்டே இருப்பா’ என நினைத்து எதிர் வாதம் செய்வதை நிறுத்துவான்.

‘‘வாச்ச வக்கப்படப்புக்கு அஞ்சாறு கன்னுகுட்டியும், வாழற வீட்டுக்கு நாலு பொட்ட புள்ளையும்’’ என்று அம்மா அடிக்கடி சொல்லும் பழமொழியை நினைத்துக் கொள்வான். மாதா மாதம் கிடைக்கும் சம்பளத்தை நாகம் அடைகாக்கிற மாதிரி செலவழித்து விடாமல்  சேர்த்து வைத்து ஊருக்கு கொடுத்து விடுவான். நகையாகவோ, பணமாகவோ. 

தன் தங்கை ஒத்த பெண்களைப் பார்த்தால் அந்தப் பெண்களின் உடை, வளயல், கொலுசு, கம்மல், போட்டிருக்கும் நகை இப்படி எதைப் பார்த்தாலும் தன் தங்கைகளுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டும்போல் மனது ஏங்கும். உழைத்தப் பணத்தை குடும்பத்திற்கு, கூடப் பிறந்த பிறப்புகளுக்கு கொடுப்பது எத்தனை பெரிய மனநிறைவு? ஓட்டலில் மாவு பிசையும் போதும் அடுப்படியில் வேகும் போதும் உடலில் ஊற்றெடுக்கும் வியர்வையும், கொதிக்கும் எண்ணெய்க் கொப்பரையின் தகிப்பும் இன்பமாய் அல்லவா மாறிப்போகிறது!

ஊருக்கு போனாலே இலையும் குலையுமான பாசம். அண்ணன் என்றாலே அப்படித்தான் அப்பாவுக்கு நிகரான மரியாதை. எதை எடுத்தாலும் ‘‘அண்ணனுக்கு பிடிக்காததை எதையும் செய்ய மாட்டோம். விருப்பமில்லாத எதையும் தொடமாட்டோம்’’ அவனை குல தெய்வமாக உயர்த்துவார்கள்.

‘‘நீ ஊருக்கு வாரென்னு கடுதாசி போட்ட நாள்ள இருந்து நம்ம வீட்டு கோழி முட்டையை யாருக்கும் விக்கவும் விட மாட்டாள், யாரையும் அவிச்சி திங்கவும் விடமாட்டாள். ரெண்டு வெடக்கோழியயும் அண்ணனுக்கு சூப்பு போட்டு கொடுக்கணும்னு தனியா அரிசியும், தவுடும் சோறுமா போட்டுல்லா வளக்கா ஒந்தங்கச்சி.’’ அம்மா பெருமை பொங்க சொல்வாள்.

உடன் பிறந்தாள் பாசம் என்றால் சும்மாவா? அம்மா மடியில் தலை வைத்து கதை கேட்கும் போதெல்லாம் சொல்வாளே. ‘‘ஒரு தங்கச்சிக்கி  ஏழு அண்ணன்மார். ஏழு அண்ணன்மாரும் திசைக்கு ஒருவனா போயி ஒழைச்சி சம்பாதிச்சி முடி தவறாமல் முத்து கோர்த்தாங்க’’ என்று. அதைப்போல தன் தங்கைகளுக்கு செய்ய ஆசைப்பட்டான். காது தூர்ந்து போகாமல் இருக்க அப்பா அம்மா செய்து போட்ட நட்சத்திர கம்மல் போட்ட காதுக்கு இவன் பெரிய கல்வைத்த கம்மல் செய்து கொடுத்தான். மூளியாய் கிடந்த கழுத்துகளுக்கு தொடரி (சங்கிலி) செய்து கொடுத்தான். உடுமாத்துக்கு நல்ல துணிமணிகள். மானாவாரி நிலத்தில் மழை விழுந்ததைப் போல வீட்டில் வறுமையின் இறுக்கம் தளர்ந்து கொஞ்சம் நெகிழ்வு ஏற்பட்டது.

‘‘யண்ணே இதப்பாரு’’ ஒரு மடக்கு விசிறிவை கொடுத்தாள்.

‘‘இது எங்க வாங்கினது, நல்லாயிருக்க.’’

‘‘வாங்கினது இல்ல. நம்ம தோரணாகுறிச்சி அத்த இருக்காவல்ல... அவிய மகன் பால்ப்பாண்டி அத்தான் கொடுத்தது.’’ என்றவளின் முகத்தில் அவனிடமிருந்து வரும் பதிலுக்கான ஏக்கம் தெரிந்தது.
கைகளில் வாங்கிக் கொண்டான். அவள் மலர்ந்த முகத்தில் கண்டு பிடிக்க முடியாத நிலையில் ஆழ்ந்து கிடக்கும் நாணத்தை கவனிக்காமல் விசிறியை விரித்துப் பார்த்தான். தேர்ந்தெடுத்த இளம் ஓலையில் மிக நேர்த்தியாய் செய்திருந்தான். இரண்டு கைகளாலும் விரித்தான். அது மயில் தோகை விரிப்பதைப் போல இருந்தது. உள்ளே ‘முருகா’ என்று எழுதியிருந்தது.

‘‘ரொம்பா நல்லா செஞ்சிருக்கான். அவன் இப்பம் பனைதான் ஏறுதானோ. இல்ல வேற ஏது வேல செய்தானா?‘‘’ அவள் முகத்தை பார்த்து கேட்டான்.

‘‘சவுத்து மூத்தவா பனதான் ஏறிகிட்டு கெடக்கான். அவனுக்கு வேற என்ன வேல தெரியும்’’ அதற்குள் அடுப்பங்கரையில் இருந்து அம்மா பதில் கொடுத்தாள். தங்கை கலா எதுவும் சொல்லாமல் விசிறியை வாங்கிக் கொண்டு போய்விட்டாள்.

கொஞ்ச நேரம் வீட்டில் அமைதியின் ஆட்சி நடந்தது. ‘‘கலா செலவுக்கு தண்ணியில்ல நல்ல தண்ணி கெணத்துல போயி ரெண்டு கொடந் தண்ணீ கோரியா’’ கலா எதுவும் பேசாமல் குடத்தையும் தோண்டிப் பட்டையையும் எடுத்துக்கொண்டு போனாள். அவள் நடையில், குடத்தை எடுக்கும் விதத்தில் அடக்கம் ஒடுக்கம் தென்பட்டது. அவள் குடத்தை எடுக்கும்போது ஒரு துள்ளல் இருக்கும். தோண்டிப்பட்டை கயிற்றை ஒய்யாரமாய் தோளில் துண்டைப்போல போட்டுக் கொண்டு கொலுசொலி கல கலக்க,  குடத்தின் கழுத்தில் கிடக்கும் மணிகள் பின்பாட்டு பாட பட்டாம் பூச்சிகளின் ஊர்வலம் போல அக்கம் பக்கத்து தோழிகளை அழைத்து செல்வாள்.

கலா தண்ணீர் எடுக்க சென்றதும் அம்மா அவன் பக்கத்தில் வந்து உட்கார்ந்து  ‘‘யய்யா.. இந்த வருசம் கலாவுக்கு கல்யாணம் வந்தா பணத்துக்கு ஏற்பாடு செஞ்சிறலாமா?’’ என்று கேட்டாள்.

‘‘ஏன் இவ்ளோ சின்ன வயசில கல்யாணம் செஞ்சி கொடுக்கணும்னு நெனைக்க. இன்னும் ரெண்டு வருசம் கழித்து கெட்டிக் கொடுக்கலாம்ல?’’ 

‘‘இல்ல தங்கம், வயசபத்தியில்ல. பொட்டப் புள்ளன்னா நெருப்ப வச்சி அட காக்கிற மாதிரி. அதுகள காலா காலத்துல ஒருத்தன் கையில புடிச்சிக் கொடுத்தாத்தான் என் கொல நடுக்கம் தீரும். ஒங்க அத்த மகனுக்கு வந்து கேட்டாவ. எனக்கு கொடுக்க மனசில்ல. இந்தக் காலத்தில யாரு பனையேறிக்கு புள்ளைய கட்டி கொடுப்பா? நான் பனையேறிக்கு வாக்கப்பட்டு அடைஞ்ச துன்பம் போதாதா? பெரியவ ரெண்டுபேர மாதிரி இவளையும் கூட ரெண்டு பவுணு போட்டு யாராவது பம்பாய் காரனுக்கு கெட்டி கொடுத்துரு. காடு காடா வெரவு பெறக்கி தீயில வெந்து பயினி காய்ச்சது என்னோட போகட்டும்.’’ என்றாள் அம்மா.

அவனுக்கும் அம்மா சொல்வது சரியாகவே பட்டது. அம்மா, அப்பா பட்ட துன்பங்களைப் பார்த்துதான் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு பம்பாய்க்குப் போனான். தோரணாகுறிச்சி மாமா பனையிலிருந்து தவறி விழுந்த ஆண்டுதான் அவன் பம்பாய்க்கு போனான். மாமா பனையிலிருந்து தவறி விழுந்து இரண்டு காலும் முறிந்து, குறுக்கு எலும்பும் துண்டு துண்டாகி கூழமாய் நார் கட்டிலில் அள்ளிப் போட்டு ஊருக்கு கொண்டு வருவதை கண்ணால் பார்த்தவன். மாமா இறந்த பிறகு அந்தக் குடும்பம் சீவாத பாளை போல் வறண்டு போனது. ‘‘திங்க குடிக்கன்னு பார்த்தா நல்ல தொழில்தான். நித்தம் ஈரக்கொலைய கையில தாங்கிக் கிட்டுதான் பனைமூடு  பனைமூடா பயந்துகிட்டு இருக்கணும்பா.’’ அம்மாவின் வேதனை நிறைந்த குரல் காதில் கேட்ட படியே இருக்கிறது.

‘‘இப்பம் பாரு வீட்ல தட்டு முட்டு வேலையை பார்த்து கிட்டு ஆயிரம் பீடி சுத்திபுடுவா. மகாராணி மாதிரி நெழலுல இருக்கா. பனையேறிக்கி வாக்கப்பட்டா காடெல்லாம் அலஞ்சி வெறவு பெறக்கவும், அடுப்புல பயினி காய்ச்சி வெந்தும் மாளனும்’’ என்றாள்.

அம்மாவின் ஆசையை நிறைவேற்றினான். மூன்று தங்கைகளையும் திருமணம் செய்து கொடுக்க பொருள் கொடுத்தது அவனுக்கு பெரும் மகிழ்ச்சி. வீட்டில் எதற்கு எடுத்தாலும் அண்ணன்.. அண்ணன் என்கிற முதன்மை நிலை. 

இந்தக் காலத்துல இப்படி ஒரு அண்ணனா? ஆச்சரியந்தாப்பா. உனக்குன்னு ஒரு வாச்சி மோதுரம்னு கூட போடாம எல்லாமே தங்கச்சிமாருக்குன்னே செய்தியப்பா. நீ நல்லா இருப்பா. ஒனக்கு ஒரு கொறையும் வராது. பக்கத்து வீட்டு சித்தி, முத்துலாபுரத்தில் கட்டி கொடுத்த அத்தை, ஊரில் பால்  வணிகம் செய்யும் மாமா எல்லாருடைய வாழ்த்துகளும் அவனை தலை நிமிர்ந்து வாழச் செய்தது. ஈவது இன்பமென்று மனிதன் தன் குடியிலிருந்துதானே கற்றுக்கொள்கிறான்.

காலச் சகடம் விரைந்து ஓடுகிறது. கண்ணிமைக்கும் நேரத்தில் அரும்பிலிருந்து மொட்டுக்கும், மொட்டிலிருந்து மலருக்கும் மலரிலிருந்து காயிக்கும் தாவி விடுகிறது. சின்ன அகவையில் பார்த்த அம்மன் கோயில் கொடைவிழா. பணப்போதையும், போட்டி மனப்பான்மையும் அண்டாமல் சிட்டுக்குருவி போல பறந்த காலம். ஐந்து காசுக்கு ஐசு வாங்கி அதை கடித்து மூணா பங்கு வைத்து சுவைத்த காலம். தங்கை மகள் மஞ்சள் நீராட்டு விழாவுக்கு வந்தது. ஆறேழு ஆண்டுகளுக்குப்பின் இப்பொழுதுதான் ஊருக்கு வருகிறான். தோசையை மாற்றிப் போட்டதுபோல் ஊரே மாறிக்கிடக்கிறது. பழைய பாசத்துக்கு பஞ்சம். உறவு முறைக்கான உற்று நோக்கலும், உசாவலும் உண்டு. இப்பொழுதெல்லாம் ஊருக்கு வந்து இறங்கியதும் இது தாய் மண்ணுக்கான எந்த அடையாளமும் இல்லாததை உணர்கிறான்.

‘‘வாய்யா.. நல்லா இருக்கியா? உன் பிள்ளைகள் நல்லா இருக்கா?’’ அம்மாவும் அப்பாவும் கேட்டார்கள். காலக் களைப்பும், வாழ்வின் சோர்வும் புடைசூழ நின்றார்கள்.

சென்னையிலிருந்து கடைக்குட்டி கலாவும் அவள் பிள்ளைகளும் முதல் நாளே கொடை விழாவுக்கு வந்திருந்தார்கள். பெயருக்கு ‘‘வா.. நல்லா இருக்கியா, மயினியும் பிள்ளைகளும் நல்ல இருக்காவளா?’’ என்று கேட்டாள். 

‘‘ஏய் முத்தரசி மாமா கொண்டு வந்த சாமானை எல்லாம் நடு வீட்டுக்குள்ள எடுத்து வை’’ என்று கலா கூறினாள்.

அம்மா குடிக்க தண்ணீர் கொடுத்தார்கள். வாயில் வடிந்த தண்ணீரை கைக்குட்டையால் துடைத்த படி ‘‘ஆமா முத்தரசி படிச்சி முடிச்சிட்டால்லா, எதாவது நல்ல எடமா பாத்து கட்டி கொடுக்க வேண்டியதான. ஏன் பொட்ட புள்ளைய ரொம்ப நாளைக்கி வைச்சிகிட்டு இருக்கா?’’ என்றான்.

‘‘அஞ்சாறு துப்பு வந்துச்சி. அவ மனசுக்கு புடிச்சமாதிரி ஒண்ணும் அமையல. அதான் நாள் கடந்து கிட்டே  இருக்கு.’’ கலா பேச்சில் சோகம் இழையோடியது.

‘‘எதாவது ஒரு நல்ல பையானா பாத்து கட்டி கொடுக்கிறத உட்டுட்டு நீயும் அவா பேச்சக் கேட்டுக்கிட்டுக் கெடக்கிய.’’  அப்பா கடிந்து கொண்டார்.

‘‘நான் என்னப்பா செய்ய முடியும்? அவா புடிக்கலங்கால்ல.’’

‘‘என்ன செய்ய முடியுமாவா? இவளுக்கு பெறவும் ரெண்டு பொட்டபுள்ள வயசுக்கு வந்து இருக்கிங்கிறத நெனச்சி பேசு. இப்பமே இவளுக்கு வயசு கூடிப் போச்சி. இன்னும் கொஞ்ச காலம் போனா ஒருத்தனும் சீண்ட மாட்டான்.’’ கோபத்தில் திட்டினார்.

கலாவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. இதைப்பார்த்த கலாவின் பிள்ளைகள் பின்புறத்து வாசல் வழியாக வெளியில் சென்றார்கள். இப்பொழுது கலா, வேல்மயில், அப்பா மூன்று பேர் மட்டுமே இருந்தார்கள். கலா கண்களை துடைத்துக் கொண்டாள்.

‘‘டேய் வேலு நீயாவது ஒனக்கு தெரிஞ்ச எடத்துல  ஒரு துப்பிருந்தா பாத்து சொல்லாம்டே. அவா புருசனும் அவ்வளவா கூறு இல்ல’’

‘‘ஆமா, என்னக் கொண்டு தள்ளுனானே  அது மாதிரி ஒரு மாப்பிள்ளையை பாக்க சொல்லுதியளோ? அவா மூத்து முள்ளு முளைச்சி போனாலும் இவன்னா எம்புள்ளைக்கு மாப்பிளை பாக்காண்டாம்.’’ வார்த்தைகள் கனல் துண்டுகளாய் தெறித்தன.

வேல்மயிலுக்கு தன் தங்கை செருப்பைக் கொண்டு அடித்ததைப்போல் இருந்தது. மனது அள்ள முடியாத அளவுக்கு சிதறிப்போனது. முற்றத்தில் கிடக்கும் அசிங்கத்தை அள்ளி தெருவில் வீசுவதைப் போல அவள் பேச்சு இருந்தது. தான் தங்கைகளுக்கு செய்த ஈகமெல்லாம் வீணாகிப் போனதோ? 

இரவு சாப்பிடாமலே கோயிலுக்குப் போனான். அங்கு நடக்கும் எந்த வேடிக்கையிலும் ஆட்டம் பாட்டத்திலும் மனம் ஒன்ற வில்லை. ‘சின்ன வயசில் இருந்தே தங்கைகளுக்கு ஒழைச்சிப் போட்டதுக்கு கிடைச்ச பரிசா? நான் வேணும்னா அவளைத் தள்ளி விட்டேன். ஒழுக்கமான பையன். என்ன வேலை செய்தான்னு நல்லா விசாரித்துதான கெட்டிக்கொடுத்தேன். பிற்காலத்தில் சம்பாத்தியத்துல கூறு இல்லாதவனாவும், ஆளுமையற்றவனாகவும் திரியிறதுக்கு நானா காரணம்.

மற்ற தங்கைகளுக்கு போட்ட நகையை விடவும் ரொக்கமும் நகையும் கூடுதலா கொடுத்துதான கட்டிக் கொடுத்தோம்.  மூணு பொட்டப் புள்ளையும் ரெண்டு ஆம்பிளப் பிள்ளைகளுமா நல்லாதான இருக்கா. பின் ஏன் தன்மீது எரிந்து விழுதா? அவள் பேச்சில் வார்த்தைகள் எப்படித் தெரித்தன. நெருப்பை அள்ளி வீசியதைப்போல ‘‘என்னைக்கொண்டு தள்ளி விட்டாய்’’ என்கிறாளே. சிந்தை எங்கும் அவள் பேசியதே சொற்களே முட்டி மோதி நிம்பதியைக் குலைத்தன. அவளுக்கு தான்  சிறு துரும்பளவுக் கூட  தீங்கிழைத்ததாக நினைவில்லையே? என நினைத்து சிந்தை தீப்பிடித்தது.

அம்மன் கோவிலை சுற்றி நிலவை ஊற்றி நிரப்பியதைப்போல குழல் விளக்குகளும், வெள்ளிகளைத் தொடுத்ததைப் போல சின்னச் சின்ன பல்புகளை பனை மரத்திலும், ஆலமரத்திலும் தொங்க விட்டிருந்த அழகு கோயிலையும் அதன் சுற்றுப்புறத்தையும் ஒளிரச்செய்தன. வேல்மயில் பெயருக்கு கோயிலுக்குள் போய் வந்ததோடு சரி. சாமிக் கொண்டாடியிடம் கணக்குக் கேட்கவோ, சாமியாட்டம் பார்கவோ தோணாமல் கோட்டைச் சுவருக்கு வெளியவே ஓலைப்பாயில் படுத்துக் கிடந்தான். எல்லோரும் வீட்டுக்குக் கிளம்பும் போதுதான் ‘‘என்ன அத்தான் ஆளையே காங்கல. கொடைக்கி வந்திருக் கியன்னு கேள்விப் பட்டேன். கோயில்ல வந்து பார்த்தா ஒங்கள காணவேயில்ல.’’ கையைப் பிடித்து குலுக்கிய படி தோரணாகுறிச்சி அத்தை மகன் பால்ப்பாண்டி நலம் விசாரித்தான்.

பால்ப்பாண்டியைப் பார்த்து எத்தனையோ காலம் ஆகிவிட்டது. கலாவுக்குத் திருமணம் முடிந்த ஆண்டிலேயே பனையேறுவதை நிறுத்தி விட்டு சென்னைக்குபோய் பலசரக்கு கடையில் வேலை பார்த்து தொழில் கற்றுக்கொண்டு இரண்டே ஆண்டுகளில் சொந்த கடை நடத்தி இதே ஊரில் பெண்ணெடுத்து பேரும் புகழுமாயும், மகிழுந்து, அடுக்ககம் என்று வசதியுடனும் வாழ்கிறான்.

பனையேறி என்று பால்ப்பாண்டிக்கு தங்கை கலாவை கட்டிக்கொடுக்க வீட்டில் எல்லோரும் மறுத்தது புத்தம்புது காட்சியாய் மனத்திரையில்  ஓடியது.

இருவரும் பக்கத்தில் இருக்கும் கடையில் தேநீர் அருந்தினார்கள். பால்ப்பாண்டி அருகில் இருந்த இனிமம் கடையில் உறைப்பு சேவும், இன்னுருண்டையும் வாங்கிக் கொடுத்தான். 

‘‘என்னடே பால்பாண்டி நீ எங்க ஊருக்கு கொடைக்கி வந்திருக்க. நான்லா உனக்கு வாங்கித்தரணும் என்னை இது?’’ வாங்கிக் கொள்ள மறுத்தான்.

‘‘பரவாயில்ல அத்தான். யாரு வாங்கிக் கொடுத்தா என்ன?’’ கட்டாயப்படுத்தி கையில் கொடுத்தான். அவன் கொடுத்த விதமும், பண்பாடும் அவனை வாங்கிக்கொள்ள வைத்தது. 

கோயிலில் நிற்க மனமில்லாமல் வீட்டுக்கு செல்ல நினைத்தான். வரும் வழியில் சிறுநீர் கழிக்க வெளிச்சமில்லாத ஒரு ஒடைமரத்தின் மறைவில் ஒதுங்கினான்.

சாமக்கொடை முடிந்து விட்டது. சாமியாடி கொடுத்த திருநீறும் பழமும் பூவும் வாங்கிக்  கொண்டு வீடு திரும்பினார்கள். பிள்ளைகள் அரை தூக்கத்திலும், தூக்க சடவுனிலும் தாய் தந்தையரை பின்தொடர்ந்தனர்.

கலாவும் அவள் பிள்ளைகளும் மங்கலான வெளிச்சத்தில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டு இருந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் பால்ப்பாண்டி வந்து கொண்டிருந்தான். ‘‘முன்னால போறது யாரு  கலா மயினியா?’’ நடையை எட்டிப் போட்டான். அவன் குரல் கேட்டதும் கலா கொஞ்சம் பசையடித்தாள். நடையின் வேகத்தைக் குறைத்தாள். அதற்குள் பால்பாண்டி பக்கத்தில் வந்து விட்டான். குழந்தைகள் தூக்கக் கலக்கத்தில் வீட்டை நோக்கி நடந்தார்கள்.

‘‘அது யாரு எனக்கு சரியா அடையாளம் தெரியலிய’’ என்றாள்.

அது எப்படித்தெரியும்? மயினிக்கு வயசாயிப் போச்சில்லா. அதான் கண்ணு சரியா பத்தல போலுக்கு’’ கேலி செய்தான்.

கிட்ட வந்ததும் குழல் விளக்கு வெளிச்சத்தில் அவன் சிரிப்பு இனம் காட்டியது. அவன் சிங்கப் பல்லில் பட்டு தெறித்த ஒளியால் அவளின் நினைவுக் கண்கள் அருள் பெற்றன.

‘‘அய்ய.. பால்ப்பாண்டி அத்தானா? எப்படி அத்தான் என்னை தூரத்திலிருந்தே சரியா கண்டுபிடிச்சிய? எப்படி அத்தான் இருக்கீங்க? உங்கள என் கல்யாணம் முடிந்த பிறகு இப்பந்தான் பாக்கிறேன். அதான் கொஞ்சம் தடுமாற்றம்.’’ என்றாள்.

‘‘நான் அடிக்கடி ஒங்கள நெனைப்பேன். இடையில் ஒரு வருசம் கொடைக்கு வந்திருந்தேன். அந்த வருசம் நீங்க வரல.’’

‘‘அந்த ஒருவருசம் மட்டுந்தான் நான் கொடை பார்க்க வரல. வேற எல்லா கொடைக்கும் வந்துருவேன். எல்லா கொடைக்கும் நீங்க வருவீங்க; ஒங்கள பாக்கலாம்னு நெனச்சிதான் வருவேன். ஆனா நீங்கதான் வரல.’’ என்றாள்.

‘‘என்ன மயினி இன்னும் என் ஞாபகம் இருக்கா?’’ 

‘‘பின்னே இருக்காதுன்னு நெனச்சியளோ?  இன்னும் நீங்க கொடுத்த விசிறிய என் பெட்டிக்குள்ள வச்சிருக்கேன். எப்பமாவது உங்க நினைவு வந்தா எடுத்துப் பார்ப்பேன்’’ என்றவளின் கண்கள் பனித்து உதிர்ந்தன. அதை முந்தானையால் துடைத்துக் கொண்டாள்.

பக்கத்தில் ஆட்கள் வந்ததும் இருவரும் பேசிக்கொள்ளாமல் நடந்தனர். இருள் மறைவில் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்த வேல்மயில் தன்னையும் அறியாமல் ‘தப்பு செய்து விட்டேன்’ என்று தலையில் கை வைத்தான்.

- இறை.ச.இராசேந்திரன்


Go Back