தமிழினத்தைத் தலை நிமிர வைத்தார் -
தில்லித்தான் தமிழகத்தை இழிவு செய்து
திட்டங்கள் செயல்படுத்த தடையாய் நின்று
நல்லவைகள் நடப்பதனைப் பாழ்ப டுத்தி
நாள்தோறும் செய்கின்ற புறக்க ணிப்பை
வெல்மறவர் எத்தனைநாள் பொறுத்தி ருப்பர்
வெறுப்புதனை எத்தனைநாள் மறந்தி ருப்பர்
கல்லன்று உணர்வுள்ள தமிழ ரென்று
காட்டிட்டார் கனல்தன்னை செயலில் இன்று!
எருதுவிடல் நிறுத்திவிட்டால் காலப் போக்கில்
எருதுகளை வளர்ப்பதையும் நிறுத்திக் கொள்வர்
எருதுகள்தான் இல்லையென்றால் இனப்பெ ருக்கம்
ஏதுமிங்கு நடக்காமல் அழியும் மாடு
நறும்பாலும் சாணத்தின் பயனும் போகும்
நல்லுரங்கள் எல்லாமே செயற்கை யாகும்
வெறும்நிலமாய் மாற்றவந்த பீட்டா விற்கு
வேட்டுவைக்க எழுந்ததிந்த எழிச்சி யின்று!
தன்மானம் உடையவர்தாம் தமிழர் என்று
தரணிக்குக் காட்டிட்டார் இளைஞர் இன்று!
தன்னுரிமை விடமாட்டார் தமிழர் என்று
தரணியுணர வைத்திட்டார் இளைஞர் இன்று!
தன்னுடைய மரபுதனைக் கட்டிக் காத்து
தமிழினத்தைத் தலைநிமிரச் செய்தார் இன்று!
என்றைக்கும் தமிழினந்தான் வீழ்வதில்லை
எவனுக்கும் வீழ்த்துவதற்கும் வலிமை இல்லை!
- பாவலர் கருமலைத் தமிழாழன்.
Go Back