கல்வி சில கேள்வி - 16-Feb-2017 02:02:14 PM

கல்வி சில கேள்வி
- இதழாளர் அய்கோ
கல்வி குறித்து  இதழாளர் அய்கோ சில நுணுக்கமான சிறந்த ஆய்வுகளையும் பெற்றோர் - மாணவர்கள் படும் சொல்லொனா  துயரங்களையும் மிகத்தெளிவாக ‘கல்வி சில கேள்வி’ நூலின் வாயிலாக குறிப்பிடுவதுடன் அனைவரின் உள்ளத்தின் ஆழத்தில் கொதித்துக் கொண்டிருக்கும் எண்ண ஓட்டங்களையும் அருமையாக படம் பிடித்துக் காட்டியுள்ளார். ‘‘தனியார் கல்வி நிறுவனங்கள் தங்களின் கல்லாப்பெட்டியை நிரப்பிடவும் வியாபார போட்டியை சமாளிக்கவும் பல உத்திகளை கையாண்டது. அதில் முதன்மை உத்தியான 100% தேர்ச்சி எனும் தாரக மந்திரத்தைக் கையில் எடுத்ததால், ஒவ்வொரு கல்வி  ஆண்டிலும் பத்து, பன்னிரண்டாம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் எடுக்க முடியாத  நூற்றுக்கணக்கான மாணவர்களை அந்த நிருவாகம் பள்ளியை விட்டு விலக்கியுள்ளது’’.

‘‘ஓர் ஏழைத்தந்தை தன் மகனுக்கு மருத்துவம் படிக்க அயல் நாட்டுக்கு அனுப்புகிறார். எப்படியோ பல நெருக்கடிகளைத் தாண்டி தமது சொத்துக்களை விற்று இரண்டாண்டுகள் படிக்க வைக்கிறார். ஆனால் அடுத்த ஆண்டு படிக்கவைக்க முடியாமல் வங்கியில் கடன் விண்ணப்பிக்கிறார்; கிடைக்கவில்லை. வழக்கு தொடுக்கிறார் வழக்கில் 20 இலட்சம் கடன் வழங்க நீதிமன்றம் உத்தரவு வழங்கியும் மாணவனின் தந்தைக்கு பணம் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்த மாணவன் தன் உயிரை மாய்த்துக் கொள்கிறான்.’’ இது போன்ற உண்மை நிகழ்வுகளையும் தொகுத்து வழங்கியுள்ளது மனதை நெகிழச் செய்கிறது. பல்வேறு தகவல்களை உள்ளடக்கிய இந்நூல் கல்வி குறித்த சிறந்த விழிப்புணர்வு நூலாகத் திகழ்கிறது.

வெளியீடு:   தனு பதிப்பகம்,
16,காந்திநகர், ரெட்டியார் பட்டி, 
திருநெல்வேலி - 627007 
பேசிட: 9442023290.

(பக்கங்கள்: 102  விலை:  90)


Go Back