மண்ணின் மைந்தர்களே! - 16-Feb-2017 02:02:46 PM

‘கொள்கைச் செம்மல்’ குமணராசன் வாழ்க வளமுடன்! பொங்கல் சிறப்பு மலர் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க வைத்தது. மராத்திய மண்ணில் தமிழ் மணம் வீசும் மலர்களைக் குவித்து மலையாக்கிய மலரிது. தாய் மண்ணே! தமிழை வாழ வைக்கும் மராத்திய மண்ணே! மண்ணின் மைந்தர்களே! வாழ்க! வளர்க! 
புதிய மாதவி, அம்பை எழுத்துகள் வழி அறிமுகமானவர்களின் அறிமுகம் நன்று!. கண்ணொளி வழங்கும் வள்ளல் நடராசனை ஒருமுறை டெல்லியில் கண்டு பேசி மகிழ்ந்தேன். மற்ற சாதனையாளர்களை வணங்கி வாழ்த்துகின்றேன். போற்றிப் பாதுக்காக்கப் போகிறேன் இந்த இதழை!
- சரசுவதி இராமநாதன், சென்னை - 600 034

ஆயிரம் ஆயிரம்
“தமிழ் இலெமுரியா”வின் புத்தாண்டு, பொங்கல், மராத்திய மாநில சிறப்பிதழ் அருமையிலும் அருமை. உங்கள் பணி போற்றுதலுக்குரியது. உங்களுக்கும் உங்கள் குழுவிற்கும் பாராட்டுகள் ஆயிரம் ஆயிரம்!
- பா.அழகனார், கோழிக்கோடு - 673 001

மனம் மகிழ்வு பொங்கும் இதழ்!
பொங்கல் மலரில் அட்டைப்படத்தில் பொங்கல் பானையும் ஏறு தழுவுதலும் கவர்ச்சியாக இருந்தது. பரணிப்பாவலனின் உணர்ச்சியூட்டும் பாடல், அடுத்து மராட்டியத்தின் வரலாறு, தமிழ்நாட்டை சேர்ந்தர்வர்கள் அங்கு பலர்  உயர் அதிகாரியாக இருப்பது, அவர்கள் தமிழ் வழியில் படித்தவர்கள் என்றும், சுருக்கமான மராட்டிய வரலாற்றையும், அம்மண்ணில் தமிழர்களின் மேம்பாட்டுக்காக உழைத்த பெரியவர்களின் வரலாற்றையும் படங்களுடன் வெளியிட்டிருப்பது அருமை! 

தமிழரை, விரோதியாக கருதிய பால் தாக்ரே விடுதலைப் புலிகளின் வீரத்தை பாராட்டிய வேளையில்... உலகில் அடிமை ஆதிக்கத்தை எதிர்த்து போராடிய  காசுட்ரோ  தங்களின் உரிமைக்காக போராடிய விடுதலைப் புலிகளின் உரிமைப் போரை மதியாமல் ஆதிக்க வெறியர்களாகிய சிங்களவர்க்கு துணையாக உலக அரங்கில் செயல் பட்டது வரலாற்று முரண்தான்.  இது சிந்தனைக்குரிய ஒன்றாகும். மும்பையில் 25 இலட்சம்  தமிழர்கள் வாழ்கிறார்கள் என்ற செய்தி  உலகளவில் தமிழ் நாட்டுக்கு வெளியே அதிக தமிழர்கள் வாழ்வது மும்பையில்தான் என்று இவ்விதழ் மூலம் அறியமுடிகிறது. அம்பிகா என்ற காவல் துறை அதிகாரியின் நேர்முகம், அரபிக்கடல்  தமிழோசைப் பகுதி என இந்த இதழ் பொங்கல் சிறப்பு இதழாக மட்டுமல்லாது, படிப்போரின் மனம் மகிழ்வு பொங்கும் இதழாகவும் மன நிறைவாகவும் இருந்தது.
சோ.சு.அறிவுடைநம்பி, சோமன்கோட்டை &- 638661

முகயேடு! பதிவேடு!
திரை கடலோடியும் திரவியம் தேடித் திரும்பிய தமிழர்கள் இன்று, தமிழ்நாட்டிற்கு அப்பாற்பட்டு, இந்திய திருநாட்டின் எல்லைகளுக்குள்ளும், எல்லை கடந்தும் உலகளவில்  பரந்து, விரிந்து ஆங்காங்கு நிலைகுடியாக வாழ முற்பட்ட போதிலும், தமிழர் நெறி, மரபு, கலாச்சாரம், பண்பாட்டுடன் வாழ்ந்து, ஆளுமையிலும் பங்கேற்று வாழ்தல் தனிச்சிறப்பு! 

மராத்தியத்திலும், அதன் வட்டாரச் சூழலிலும், பிற இடங்களில் வாழும் தமிழர்களில் துறை தோறும்  வளரும் நல்லோர்களின் முகங்களையும், அவர்கள் வளர்த்த திறங்களையும் வாழ்வியல் குறிப்புகளையும் நிருவகிக்கும் உயர் பொறுப்புகளையும் அறியும் போது நெஞ்சம் மகிழ்கிறது.
- துரை.சௌந்தரராசன், காஞ்சிபுரம் - 631501

நீடூழி வாழ்க!
‘தமிழ் இலெமுரியா’ முதன்மை ஆசிரியர் 2017 பிப்ரவரி 5ஆம் நாள் 61 வது அகவையில் அடியெடுத்து வைப்பதை அறிந்து மகிழ்கிறேன். தமிழ்போல் சிறந்திடவும் நலம் பல பெற்று வளமுடன் நீடூழி வாழவும் என் இதயங்கனிந்த இனிய நல்வாழ்த்துகள். அன்பு, அருள், அறம், வளர்க்கும் தங்களது சீரிய பணி சிறக்க வாழ்த்துகிறேன்! 
நா. முத்தையா, மதுரை - 625016

வாழ்க வளர்ந்து!
அகவை அறுபது ஆன குமண!
தகவுற மும்பைத் தமிழ்!-மிகவுயர்
உன்றன் தமிழ்த்தொண்டும் நீரும் குடும்பமும்
என்றுமே வாழ்க வளர்ந்து!
-கே. பி. பத்மநாபன், கோவை - 641005

மங்கியிருப்பது வேதனையே!
‘நம்பிக்கை நாற்றங்கால்’ தலையங்கத்தில்,   ‘இனியும் விழித்துக் கொள்ளவில்லை எனில் விடியல் என்பது தமிழனுக்கு வெறும் கனவாகவே முடியும்’ என்ற வரிகள் அருமையிலும் அருமை! 

மராத்திய மாநிலப் பார்வையோடு  அம்மண்ணில் மணம் வீசும் தமிழ்ப் பூக்களைப் பற்றிய தகவல்களும் எழில் மிகு மும்பைக் கட்டுரையும் தமிழர்களின் தனித்துவத்தைப் பளிச்சென காட்டின. எனினும், 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்த  தமிழுணர்வு இன்று மங்கியிருப்பது வேதனைச் செய்தியாக இருந்தது.
ந. ஞானசேகரன், திருலோக்கி - 609 804

முன்னிலையில் நிற்கிறது!
எங்கே தமிழ் பண்பாடு! கால வெள்ளத்தாலும் தமிழினத்தின் அலட்சியத்தாலும் பாழ்பட்டு சிதைந்து போகுமோ என அஞ்சிக் கொண்டிருந்த வேளையில், இல்லை! இல்லை!  தமிழ்ப்பண்பாடு என்றுமே அழியாது, எவராலும் அழிக்க முடியாது என்பதை மெய்ப்பித்துக் காட்டி விட்டது ஏறுதழுவுதல் என்ற சல்லிக் கட்டுப் பிரச்சினை! தமிழரின் உணர்வுகள் நீருபூத்த நெருப்பே தவிர சாம்பல் குவியல் அல்ல என்பதை உலகுக்கு உணர்த்தி விட்டனர். இத்தகைய இனிய சூழலில் மராட்டிய மண்ணில் மணம் பரப்பிக் கொண்டிருக்கும் இலக்கிய  மலர்கள் சிலரை அறிமுகப் படுத்தி இருப்பது போற்றிப் பாராட்டுதற்குரியது! இனிய தமிழினம், பகையினை வென்று வாழும் என்ற நம்பிக்கை உறுதியாகிவிட்டது. இம்முயற்சியில் இறங்கி  வெற்றி வரலாறு படைக்கும் இதழ்களில் ‘தமிழ் இலெமுரியா’ முன்னணியில் நிற்பது மகிழ்ச்சிக் குரியது.
க. தியாகராசன், குடந்தை - 612501

தீர்க்கமான முடிவுகள்.
மார்கழி இதழில் ‘இழப்பும் பிழைப்பும்’ தலையங்கம் சிறப்பு மிகு ஆய்வுக் கட்டுரையைப் படித்த நிறைவைத் தரும் வண்ணம் மறைவுற்ற  முதல்வர் ஜெயலலிதாவின் ‘உள்ளும் புறமும்’அறியத் தந்திருப்பதற்கு நன்றி! மக்களின் பாமரத் தனத்தை பயன்படுத்தி, கட்சியைத் தனதாக்கிக் கொண்ட சாதூரியத்தையும் எதிரணியினரை எள்ளி நகையாடி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து செயல் பட்டதையும் சுட்டி எழுதியிருப்பது சிறப்பு. காவிரிச் சிக்கல் சார்ந்து எழுதப்பெற்ற செயற்பாடுகள், தமிழீழ அதரவு நிலைப்பாடு போன்றவற்றில் தீர்க்கமான முடிவுகளை நிலைநிறுத்திய போர்க் குண நடவடிக்கையை பாராட்டி எழுதியிருப்பது பாராட்டுக்குரியது.
நவீன் குமார், நடுவிக்கோட்டை - 614602 

வன்முறையில்லாத இந்தியா!
மும்பை இந்த தேசத்தின் ஒரு பகுதியா  இல்லை நிழலுலகின் கூடாரமா? அரசியல் செல்வாக்கு, தனிமனித பயம் போன்ற பல்வேறு காரணங்களால்  இவர்கள் தப்பித்து விடுகின்றனர். மும்பையில் திரைத் துறை இவர்கள் வளர்ச்சிக்கு உதவியது என்று கூறும்போது சட்டம் என்ன செய்கிறது? காவல் துறையினருக்கு முழு பொறுப்பைக் கொடுத்து ஒடுக்க வேண்டாமா?. வன்முறையில்லாத இந்தியாவை படைப்போம்.
மு. ரவிச்சந்திரன், திருப்பூர் - 641 001

தன்மானம்...
ஆதிலெமு எழுதிய அறச் சீற்றம் சிறுகதையை ஒவ்வொரு  தமிழச்சியும் படிக்க வேண்டும். ஒவ்வொரு தமிழனுக்கும் தமிழச்சிக்கும் சூடு,  சொரணை,  தன்மானம் வளர வேண்டும். ஆதிலெமு தொடர்ந்து விழிப்புணர்வு  மிக்க படைப்புகளைப் படைத்திட வாழ்த்துகள்.
ஞா. சிவகாமி,  போரூர் - 600 116

உறுதிமொழி
மார்கழி இதழில் ‘இழப்பும் பிழைப்பும்’ தலைப்பில் தலையங்க உரை கண்டேன். ஜெயலலிதா மறைவையும் மறைவிற்குப்பின் தோன்றியுள்ள வெற்றிட நிலையையும் விளக்கியது, நான்! நான்! என்கிற ஆணவப் போக்கை அச்சமின்றி  குறிப்பிட்டது என எல்லாமே அருமை. மருத்துவக்  கொள்ளையர்கள் பற்றியக் கட்டுரையில், மருத்துவர்கள் தொடக்கத்தில் எடுக்கும் உறுதிமொழியை எத்தனை பேர் கடை பிடிக்கிறார்கள் என்கிற ஐயத்தையும் வாசித்தேன். உறுதிமொழியெல்லாம் பொய் மொழியாய் போனதே!
மூர்த்தி, சென்னை - 600100.

வழிகாட்டி
விரைவில் நூறாண்டை தொடவுள்ள முனைவர் வீ.மு.வேலு, பெரியாரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு உயர்ந்துள்ள நாடக செம்மலாவார். அறமொழியனின் தகவல்கள் அருமை. பாம்பை பற்றிய மூட நம்பிக்கையை வெளிச்சம்  போட்டுக் காட்டியது.  கட்டுரையாளர் முகமது அலிக்கு பாராட்டுகள். நாத்திக நாடாக விளங்கும் கியூபாவுன் நிர்மானி  பிடல் காசுட்ரோவுன் செயல்பாடுகள் இந்திய, உலக  ஆட்சியாளர்களுக்கு வழிகாட்டியாகும்.
இரா. முல்லைக்கோ, பெங்களூரு - 560 043.

தமிழன்னையின் துணை
பிப்ரவரி 5 ஆம் நாளன்று அறுபது வயதை வெற்றித் தமிழுடன் கடந்து விவேக சிந்தனையுடன் நடை பயிலும்  தங்கட்கு இறையருளால்  எல்லா நலமும் பெற்று சீரோடு வாழ வாழ்த்துகிறேன். 

பொங்கல் சிறப்பிதழில் தலையங்கத்தின் மொழியழகு மிகவும் உள்ளம் கவர்ந்தது. பாராட்டி மகிழ்கிறேன். தங்களது தமிழ் வளம் மென்மேலும் பெருகிவளர வாழ்த்துகிறேன். “தமிழ் இலெமுரியா” எழுச்சியும் வளர்ச்சியும்  பெற  தமிழன்னை துணை நிற்குமாக. 
தமிழினியன், திருச்சி - 620  014

காலத்தின் கட்டாயமே!
‘இழப்பும் பிழைப்பும்’ அருமையான தலையங்கம். செல்வி செயலலிதாவிடம், ஆணவப் போக்கு, காழ்ப்புணர்ச்சி, பிடிவாதம், ஆடம்பரம், மூடநம்பிக்கைகள் என்கிற மனப்போக்கே  நிறைந்திருந்தது. தாங்கள் பாராட்டிய பல நடவடிக்கைகளும் காலத்தின் கட்டாயமே மனப்பூர்வமாக செய்ததில்லை. அவரது நிருவாகத்தில் ஊழல் கொடிகட்டி பறந்தது. 

இன்னலை அகற்றும் இயற்கை மருத்துவம் கட்டுரை அருமை!  இந்தியா சுகாரத்துறை ஊழல் புற்றால் சீழ் பிடிக்கத் தொடங்கிவிட்டன. சின்னஞ்சிறிய குட்டித்தீவை ஒரு சிறந்த நாடாக மாற்றிய பிடல் காசுட்ரோ உலக வரலாற்றில் பொன் எழுத்தாகப் பொறிக்கப்பட வேண்டியவராவார்.
த. சுப்ரமனியன், செகந்தராபாத் - 500061

பொங்கலின் சுவையும் கரும்பின் இனிமையும்!
பல இனிமையான கருத்தாழமிக்க கட்டுரைகளையும் கவிதைகளையும் ஒன்றாக சேர்த்து “தமிழ் இலெமுரியா” வாசகர்களின் நெஞ்சில் பொங்கல் சுவையுடன் கரும்பின் இனிமையும் கலந்து தந்துள்ளீர்கள். “தமிழ் இலெமுரியா” பொங்கல் சிறப்பு மலர் படித்து, பாதுகாக்க வேண்டிய மணம் வீசும் மலராகும். அறுபது அகவையை தாண்டிய தோழர் சு.குமணராசனின் தமிழ்த் தொண்டு தொடர நெஞ்சாற வாழ்த்துகிறேன்.
மு.தமிழ்மாறன், செம்பூர் - 400 081

தமிழர் பண்பை உயர்த்தும்  இதழ்!
தமிழ் மணம் கமழ்ந்த “தமிழ் இலெமுரியா”வை படித்து முடிக்காமல்  கீழே வைக்க முடியவில்லை. தமிழ் இலெமுரியா, தமிழர்களின் பண்பை தூக்கிப்பிடிக்கும் தமிழ் நிலமாக என்றும் நிலைத்திருக்க வேண்டும் என்பதே எமது அவா. காஞ்சியார் போன பிறகு அறிவு காய்ந்து போன தமிழ்நாட்டில் இருந்து மராத்திய  மண்ணில் இடம் பெயர்ந்திருக்கும் அண்ணனுக்கு பின்பு வந்த அறிவு சால் குமணன் அவர்களுக்கு 61வது அகவை  என்பதை அறிந்து இன்ப பெருவெள்ளத்தால் திளைக்கிறேன். தங்களின் பாங்கும் பாணியும் பேரறிஞர் அண்னாவை நினைவூட்டுவது மட்டுமல்லாமல், தங்கள் பணியால்  மராத்திய அண்ணனாகவே உயர்ந்திருக்கிறீர் என்பதை நினைத்து பெருமிதப்படுகிறேன். நும் பணி தொடர நீவிர் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.
கொ. நன்னன், செங்கம் - 606701


Go Back