மக்களே போல்வர் கயவர் - 26-Mar-2017 11:03:20 AM

ந்திய நாட்டில் அண்மைக் காலமாக நிகழ்ந்த சில விடயங்கள் எம் உணர்விற்கும் நாட்டு மக்களின் உரிமைக்கும் அறைகூவல் விடுவதாக அமைந்துள்ளமை வேதனை தருகிறது. அவ்வாறு எம் மனதைப் பாதித்த விடயங்களாக நாம் கருதுவது தில்லி சவகர்லால் பல்கலைக் கழகத்தில் முதுநிலைத் தத்துவம் படித்துக் கொண்டிருந்த தமிழ்நாடு சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் மாணவர் முத்து கிருட்டிணன் இறப்பு. மற்றொன்று தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம், சிறு கடம்பூர் கிராமத்தில் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கருவறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு வீசியெறியப்பட்ட நந்தினி என்ற 14 வயது சிறுமியின் இறப்பு.

இதே போன்று கடந்த ஆண்டு அய்தராபாத் பல்கலைக் கழகத்தில் முதுமுனைவர் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும் போதே ரோகித் சக்ரவர்த்தி வெமுலா என்ற ஒரு மாணவரின் தற்கொலை. 

அய்தராபாத் பல்கலைக் கழகத்தில் இயங்கி வந்த அம்பேத்கர் மாணவர் சங்கம் மற்றும் ஏ.பி.வி.பி என்று சுருக்கமாக சொல்லக் கூடிய அகில பாரதிய வித்தியார்தி பரிசத் என்ற மாணவர் அமைப்புக்கும் ஏற்பட்ட மோதலில் ஏ.பி.வி.பி.யினர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டு அது உடனடியாக விசாரிக்கப்பட்டு, அப்பகுதி மாநிலங்களவை உறுப்பினர், அப்பகுதி அமைச்சர் ஆகியோர் தலையிட்டு, பின்னர் நடுவணரசின் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அவர்கள் அய்தராபாத் பல்கலைக் கழகத்திற்கு உடனடியாக மடல் அனுப்பி, உரிய நடவடிக்கை எடுக்குமாறு துணைவேந்தருக்கு அழுத்தம் தரப்பட்டு, அய்ந்து முறை விரைவாக நினைவூட்டு மடல்கள் எழுதி, விசாரணைக் குழுவொன்றை அமைத்து ரோகித் வெமுலா மற்றும் அவருடனான மேலும் அய்ந்து தாழ்த்தப்பட்ட (தலித்) மாணவர்களை பல்கலைக் கழக வளாகத்திலிருந்து வெளியில் அனுப்பி இறுதியாக 17 சனவரி 2016இல் ரோகித் வெமுலாவின் தற்கொலையுடன் காட்சி நிறைவடைந்தது.

மேற்கண்ட செயல் நடவடிக்கைகளில் காட்டப்பட்ட அதிதீவிரம் இந்தியாவில் வேறு எந்தச் சிக்கல்களுக்கும் பின்பற்றப் பட்டதாகத் தெரியவில்லை. இது தவிர அண்மையில் தில்லி பல்கலைக் கழக மாணவர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஓர் கருத்தரங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்த ஏ.பி.வி.பி. என்ற மாணவர் அமைப்பின் எதிர்ப்புணர்வு ஒரு பெரும் வன்முறையில் முடிவுற்று பிற பல்கலைக் கழக மாணவியர்களைத் தாக்கும் அளவுக்கு மாற்றம் பெற்றது. இவையனைத்தும் இந்தியத் தேசியத்தின் பாதுகாவலர்கள் என்ற முழக்கத்தோடு மேற்கொள்ளப் படுபவையாகும். எது தேசியம்? இந்த விடுதலைக்காகத்தான் இராணுவ வீரரான என் தந்தை உயிர் கொடுத்தாரா? என்ற பதாகையுடன் சமுகத் தளத்தில் வினாவெழுப்பிய மாணவியை கற்பழித்துக் கொலை செய்து விடுவதாக மேற்சொன்ன மாணவர் அமைப்பிலுள்ள சிலர் மிரட்டல் விடுக்கின்றனர். கொடுங்கோல் குரல்களை எதிர்கொள்ள இயலாத மாணவி குர்மேகக்  கவுர்  தன் ஊரை விட்டே ஓடுகிறார்; போராட்டத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்கின்றார்.

இந்தியச் சமுகத் தளத்தில் பல்லாண்டு காலமாக மறுக்கப்பட்ட கல்வியைச் சிறுகச் சிறுக கற்று ஓரளவு உயர் தளத்தை எட்டும் ஒடுக்கப்பட்ட பிரிவு மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதும் தற்கொலைக்குத் தூண்டப்படுவதும் நம்முடைய சமுகத் தளத்தில் எதைக் காட்டுகின்றன? இதுதவிர தமிழ்நாட்டை சேர்ந்த மற்றொரு மருத்துவ மாணவர் சரவணன் மேற்படிப்பிற்கு தேர்வு செய்யப்பட்ட நிலையில் இறந்து போகின்றார். கருநாடகத்தில் கடவுள், மூட நம்பிக்கைகள் குறித்து கேள்வியெழுப்பிய யோகேசு மாஸ்டர் தாக்கப்படுகிறார். மராத்திய மாநிலத்திலும் கருநாடகத்திலும் பகுத்தறிவுக் கருத்துகளை எழுதி வந்த எழுத்தாளர்கள் கொல்லப்படுகின்றனர். 

இப்படிப்பட்ட நிலைகளின் பின்னணியில் தற்போது நடைபெற்ற தேர்தலில் உ.பி.மாநிலத்தில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களில் 80 விழுக்காடு பேர் கோடிசுவரர்கள், 30 விழுக்காடு குற்றப் பின்னணி உடையவர்கள் என தெரிய வருகிறது. நடைபெற்று முடிந்த அய்ந்து மாநிலத் தேர்தல்களில் உ.பி. மற்றும் உத்திரகாண்ட் மாநிலத்தில் பா.ச.பா வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. பஞ்சாபில் காங்கிரசு ஆட்சி அமைக்கிறது. மணிப்பூர் மற்றும் கோவாவில் காங்கிரசு அதிக இடங்களைப் பெறுகிறது. ஆனால் அந்த நிலையிலும் காங்கிரசை விடக் குறைவான இருக்கைகளைப் பெற்ற பா.ச.பா கோவா, மணிப்பூர் மாநிலங்களில் குதிரைப் பேரம் மூலம் ஆட்சி அமைக்கிறது. அதுதான் சனநாயகம் என விளக்கமளிக்கப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்பு உ.பி.மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் பி.எசு.பி. என்ற கட்சியின் தலைவருமான செல்வி மாயாவதியை அம்மாநில பா.ச.பா கட்சியின் துணைத் தலைவர் ஒருவர் ‘விலைமகள்’ என்று அநாகரிகமாகப் பேசினார். அவரைத் தற்காலிகமாக விலக்கி வைத்த பா.ச.பா தலைமை அவருடைய துணைவியாரை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்து வெற்றி பெறச் செய்தனர். ஆனால் தற்போது தற்காலிக நீக்கம் திரும்பப் பெறப்பட்டு தயாசங்கர் சிங் என்ற அதே நபர் மீண்டும் உ.பி.யின் துணைத் தலைவராக அமர்த்தப்படுகிறார்.

மேற்கண்ட நிகழ்வுகள் அனைத்திற்கும் பின்னணியில் இருப்பது யார்? எந்த உணர்வு? என்பதை வாசகர்களுக்கு எழுதித் தெரிவிக்க வேண்டியதில்லை. வாய்ப்பிருந்தும் உயர இயலாத நிலையில் ஒடுக்கப்பட்ட மக்கள்; உயரே வந்தாலும் கொலை - தற்கொலை; பெருவாரியான வாக்குகள் பெற்றும் ஆட்சியமைக்க இயலா நிலை; சனநாயகம் என்று சொல்லக்கூடிய மக்களாட்சிக் கோட்பாட்டில் குடியுரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை என வகுக்கப்பட்டிருப்பினும் அதை உய்த்துணர இயலாத இந்திய மக்கள்; ஆளும் வர்க்கத்திற்கும் அமைப்புகளுக்கும் எதிராகப் பேசினால் ‘தேசத் துரோகி’ எனும் பட்டம்; சிறைச்சாலை, வழக்குகள். இதுதான் நம் இந்திய விடுதலைக்குக் கிடைத்த விடையா?

இந்திய விடுதலைப் போரில் சொல்லொணாத் துயரத்தையும் தன்னுயிரையும் ஈந்த ஈகிகள் ஏராளம். விடுதலை வேள்விக்கு வித்திட்ட அந்த மாமனிதர்களின் எண்ணம் ஈடேறியுள்ளதா? எழுபது ஆண்டுகள் இறந்து போன நிலையிலும் மக்களாட்சிக் கோட்பாட்டின் ஆணிவேருக்கு இன்னும் வெண்ணீர் ஊற்றிக் கொண்டு அழிவு நிலைக்கு கொண்டு செல்வது நயன்மையா? ஆணிவேர் அழுகிப் போனால் சல்லி வேர்களும் மரமும் இலைகளும் ஒருநாள் பட்டுப் போகும்; அதுபோன்று இந்தியச் சனநாயகப் பூங்காவும் ஒருநாள் வெற்றிடமாய் காட்சிப்படும்.

இனிக்கும் பித்தளை மினுக்குடன் மெருகுடன் மேன்மை காட்டுதல் போன்று தம்மை அறிவார்ந்தவர்களாய், அரசியல் முதிர்ச்சி பெற்றோராய் வெளிச்சமிட்டுக் கொண்டிருக்கும் பலபேர் திட்டமிட்டு சீர்மையைக் குலைக்கின்றனர். இத்தகைய வேடதாரிகளை குறும்புக் கூத்தர்களை விளங்கிக் கொள்ளவில்லையெனில் விளக்கமுறத் தெரிந்து கொள்ளவில்லையெனில் நாம் இருந்தென்ன; முடிந்தென்ன?

தமிழ் இளைஞர்களே, மாணவ மாணவிகளே விழிப்புற வேண்டாமா? விடை தேட வேண்டாமா? செழிப்பும் சீர்மையும் இனி உங்கள் கையில்தான் உள்ளது. எம் வேதனையில் வெடித்த வினா இது.

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பார் யாம்கண்டது இல்.
திருக்குறள் (1071) - திருவள்ளுவர்


கனிவுடன்  சு.குமணராசன்,
முதன்மை ஆசிரியர்.

S.KUMANA RAJAN
Editor In Chief

பங்குனி - 2048
(மார்ச் - 2017)


Go Back