சுமையாக மாறும் பயணங்கள் - 26-Mar-2017 11:03:24 AM

முதலுக்கு மேலே உயரும் வட்டி போல, வாகனங்களுக்கு வசூலிக்கப் படும் சுங்கக் கட்டணத்தால் மக்களின் வாழ்வாதாராமே பாதித்துவிடும் போலிருக்கிறது. 

சங்க காலம் முதல்  தற்காலம் வரை நாட்டின் அடிப்படை கட்டமைப்பான சாலைகளை அமைப்பது அரசின் கடமைதான். அதற்காக சாலை வரி விதிப்பது இயல்பு. இந்தியாவில் இப்போது ஓடும் வாகனங்கள் சற்றொப்ப 60 கோடி.  இவற்றுக்கு வசூலித்த சாலை வரியே அமோகமாக இருக்கும். ஆனாலும் இப்போது பெரிய, பெரிய நெடுஞ்சாலைகளை மறித்து அடியாட்கள் போல ஊழியர்களை நிறுத்தி தனியார்களே கட்டணம் வசூலிக்கிறார்கள். ஓரிடத்தில் இல்லை, ஈரிடத்தில் இல்லை. 60 கி.மீ.க்கு ஓரிடத்தில் நிறுத்தி பணம் பிடுங்குகின்றனர்.

விரைவான, சொகுசான பயணத்துக்கே சாலை அமைப்பதாகக் கூறும் இவர்கள், சாலைகளில் ஆங்காங்கே நிறுத்தி பயண நேரத்தை விழுங்குகிறார்களே! பாதுகாப்பான பயணத்துக்கேற்ற சாலை பராமரிப்பும் செய்வதில்லை. வசூல் ஒன்றே குறிக்கோளாக இருக்கிறது.  தனியாருக்கு வரி வசூலிக்கும் உரிமையை கொடுப்பது மக்களாட்சி பிசகு என்பதை ஆட்சியாளர்கள் அறியாதது அறிவீனமல்ல. அநியாயம்.

இந்தியாவின் 33.4 இலட்சம் கிலோமீட்டர்  நீள சாலையில் 234 தனியார் சுங்கச் சாவடிகள் உள்ளன. 41 சுங்கச் சாவடிகள் தமிழ்நாட்டில் உள்ளன. இதில் 29 சாவடிகளில் தனியாரும் 12 சாவடிகளில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தாருமாக சுங்க வசூலில்  ஈடுபடுகின்றனர். கடந்த பாரதிய சனதா ஆட்சிக் காலத்தில் செயல் படுத்தப் பட்ட தங்க  நாற்கர சாலை திட்டத்தால் அமைக்கப்பட்ட சாலைகளை பராமரிக்கவே இங்கு தனியார்  குத்தகை உரிமைப் பெற்றனர்.

இந்த உரிமையை முதன் முதலில் அளித்தது மகாராட்டிராவை ஆண்ட பா.ச.பா - சிவசேனா கூட்டணிதான். அங்கு 1995-இல் சாலைகளை அமைத்துப் பராமரிக்க தனியார் நிறுவனங்களை அனுமதித்தனர். ‘உருவாக்கு - பயன்படுத்து - ஒப்படை’ என்கிற திட்டப்படி  இது செயல்படுத்தப் படுகிறது. சாலையை உருவாக்கி, அதை பணம் சம்பாதிக்க பயன் படுத்தி, ஒப்படைக்கும் போது ஓட்டை உடைசலாகவே தனியார்கள் ஒப்படைப்பார்கள்.

மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி 1992 ஆம் ஆண்டு போடப்பட்ட நெடுஞ் சாலைகளுக்கு ஏப்ரல் மாதம், கட்டணம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி  தமிழ்நாட்டில் 18 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

64 கி.மீ நீளமுள்ள சாலைகளுக்கு ஒருமுறை செல்ல மகிழுந்துக்கு ரூ.75 லிருந்து 85 ஆகவும் கனரக மற்றும் சொகுசுப் (ஆம்னி) பேருந்துகளுக்கு ரூ.255 லிருந்து 280 ஆகவும் இலகுரக வாகனங்களுக்கு 120 லிருந்து 135 ஆகவும் கட்டணம் உயருகிறது. இந்த கட்டண உயர்வு முறையற்றது. இந்தச் சாலைகளில் இதுவரை வசூலித்த சுங்க கட்டணமே சாலை அமைத்த செலவோடு தகுந்த இலாபத்தையும் ஈட்டியிருக்கும் என்பதே உண்மை.

2014 இல் மகாராட்டிராவில் சுங்கச்சாவடிகளை சூறையாடிய மகாராட்டிரா நவநிர்மான் சேனா அதற்கு முன்பு தனது தொண்டர்களை கொண்டு மும்பையின் 5 மையங்களில் உத்தேச கட்டண வசூல் கணக்கு எடுத்தனர். அதன்படி 2.1 கோடி முதலீடு செய்த ஒப்பந்தக்காரார் 2017 வரை ரூ.14.5 கோடி அளவுக்கு சாலை வரி வசூலிக்க முடியும் என வெளிப்படுத்தினர்.

160 கோடி செலவில் அமைந்ததாக கூறப்பட்ட கிருஷ்ணகிரி - தொப்பூர் நாற்கர சாலைக்கு 25 ஆண்டு காலம் சுங்கவரி வசூலிக்கும் உரிமை பெற்ற  தனியார் நிறுவனம் மாதத்துக்கு சராசரியாக ரூ. 3 கோடி வசூலிப்பதாக லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் நிரூபித்தனர்.

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வகுத்த விதிகளின்படி, ஒரு நெடுஞ்சாலையை அமைப்பதற்காக செய்யப் பட்ட முதலீடு எடுக்கப்பட்ட பிறகு பராமரிப்புக்காக 40 விழுக்காடு கட்டணம் மட்டுமே வசூலிக்கப் படவேண்டும். அதாவது சாலைக் கட்டணம் குறைக்கப் பட வேண்டும். ஆனால் இவர்கள் ஆண்டு தோறும் உயர்த்துகின்றனர். தற்போது கட்டண உயர்வு அறிவிக்கப் பட்டுள்ள 18 சுங்கச் சாவடிகளிலும் சரியாக கணக்கு பார்த்தால் போட்ட முதல் சில ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப் பட்டிருக்கும் என்பதே உண்மை.

வெளிநாடுகளில் உரிய அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துவிட்டு தான் சுங்கக் கட்டணம் வசூலிக்கிறார்கள். இங்கோ பராமரிப்பே சரியில்லாதபோது அடிப்படை வசதிகளை சாலையோர குடிநீர், மின் விளக்கு, கழிப்பறை, ஆம்புலன்ஸ், அவசர தொலைபேசி, அவசர சிகிச்சை போன்றவற்றை பற்றி பேச வாய்ப்பேயில்லை. 

1997இல் தேசிய நெடுஞ்சாலை (கட்டண விதிப்பு மற்றும் வசூல்) விதி கொண்டு வரப்பட்ட போது, பொதுநல அமைப்புகள் போர்க் கொடி உயர்த்தின. இதனால் பின்வாங்கிய அரசு கிலோமீட்டருக்கு மூன்று கோடி ரூபாய்க்கு மேல் செலவானால் மட்டுமே சுங்கம் வசூலிக்கப்படும் என்ற நிபந்தனையை ஏற்றுக் கொண்டது. பின்னர் எந்த நிர்பந்தத்தாலோ அந்த நிபந்தனையை ஒரு கோடியாக குறைத்து விட்டது.

இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப் பட்ட அனைத்து நெடுஞ்சாலைகளும் போட்ட முதலீடு எடுக்கப் பட்டுவிட்டது. ஆனால் வருவாயைக் குறைத்துக் காட்டி தொடர்ந்து சுங்கக் கட்டணத்தை தனியார் நிறுவனங்கள் வசூலித்து வருகின்றன. இதனால் மேல் மட்டத்தில் மோசடி வேலை நடக்கிறது. ஒரு தனித்துவத் தணிக்கையின்றி, தேசிய நெடுஞ்சாலை ஆணைய பொறியாளர் தரும் அறிக்கையே தணிக்கை அறிக்கையாகக் காட்டப்படுவதால் தவறாக கணக்கு காட்ட வசதியாகிறது.

எரிபொருள் விலை போல் சுங்க கட்டண உயர்வும் பேருந்து கட்டணத்தை உயர்த்தும். அத்தியாவசியப் பொருட்களின் விலையில் வினைபுரியும். சரக்கு உந்தின் (லாரி) கட்டணம் உயரும். பொருட்களை அனுப்பும் செலவு அதிகரித்து அது வாங்குவோரை வாட்டியெடுக்கும். அரசு அறிவித்தபடி சுங்கக் கட்டணம் உயர்ந்தால் நாடு முழுவதும் சென்று வரும்  சரக்கு வாகனங்களுக்கும் கூடுதலாக ரூ.4,500 முதல் ரூ.5,000 வரை செலவிட வேண்டிய நிலை ஏற்படும் என லாரி உரிமையளர்கள் சங்கம் எச்சரிக்கின்றனர்.

மக்களிடமிருந்தே கட்டணம் வசூலிக்கப்படுதால் சாலைக்கு ஆண்டுதோறும் பராமரிப்புத் தொகை எவ்வளவு என்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்ள உரிமை உண்டு. சில வெளி நாடுகளில் ஒவ்வொரு வாகன ஓட்டியும் பணம் செலுத்தியவுடன் திட்டச்செலவில் எவ்வளவு குறைந்துள்ளது என்பதை மின்னணு திரையில் தெரியும். 

கட்டணம் செலுத்தும் முறையில் நெளிவு, சுளிவு தேவை. சுங்கச் சாவடிகளை அகற்றவேண்டும் அல்லது கட்டணத்தை ஆண்டுக்கொரு முறை செலுத்தும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும் என்ற அகில இந்திய வாகனப் போக்குவரத்து சம்மேளனத்தின் கோரிக்கைகள் இன்னும் பரிசீலிக்கப் படவில்லை.

2013இல் மத்திய அரசும் சுங்கக் கட்டணம் குறித்து பரிசீலிக்க ஒரு குழுவை அமைத்தது. அந்த குழுவின் அறிக்கையும் அரசிடம் சேர்ந்துவிட்டது. ஆனாலும் எவ்வித செயல்பாடுமில்லை. ஒப்பந்த உரிமம் முடிந்த சுங்கச் சாவடிகளிலும் தொடர்ந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மத்திய அரசு தனிக்குழு அமைத்து சுங்கச்சாவடிகளை கண்காணிக்க வேண்டும். சாலைகள் முறையாக பராமரிக்கப் படாவிட்டால் சுங்கத்துக்கான உரிமத்தை ரத்து செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் அதை தேசிய நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பதே இல்லை. ஒரு நாட்டின் சாலையை பராமரிக்கும் அடிப்படை கடமையை கூட செய்யாமல் மத்திய அரசு என்ன செய்யப் போகிறது.

சாலைகள் அமைக்க தனியாக வரி வசூல் செய்யும் அரசு, நெடுஞ்சாலை போட பணம் இல்லை என்று கையை விரிக்கிறது. இந்தியாவின் அந்நிய செலவாணி இருப்பு அண்மைக்கால கணக்குப்படி 235 பில்லியன் டாலர் என்பதை எண்ணிப் பார்த்தால் இது எத்தனை ஏமாற்று  வேலை என்பது எளிதாகப் புலப்படும்.

இந்தியாவில் அனைத்து வாகனங்களுக்கும் அவை காட்சியறையிலிருந்து வாங்கப்படும் போதே வாழ்நாள் சாலை வரி வசூலிக்கப் படுகிறது. அதுமட்டுமின்றி, டீசல், பெட்ரோல் விலைகள் மீதும் சாலைப் பராமரிப்புக்கக ரூ.2 இலட்சம் கூடுதல் வரியாக வசூலிக்கப் படுகிறது. இதன் பின்னரும் தனியாக சுங்கக் கட்டணம் வசூலிப்பது சட்டப்படி தவறல்லவா?

பொதுத்துறை நிறுவனங்களில் முடங்கிக் கிடக்கும் நிதி பல இலட்சம் கோடி. அதை இதுபோன்ற கட்டமைப்பு பணிகளுக்கு செலவிட்டால் தனியாரிடம் கையேந்த வேண்டியதில்லை. பொதுத்துறை பணத்துக்கும் போதிய வட்டியும் கிடைக்கும். மக்கள் மீது அக்கறை கொண்ட அரசு மத்தியில் இருக்குமானால் இப்படித்தான் சிந்திக்கும்.


Go Back