அடிமைத் தனத்தை அறவே ஒழித்தவர் - 26-Mar-2017 01:03:14 PM

மெரிக்க நாடு உலகிலேயே மூன்றாவது பெரியநாடு ஆகும். ஆம்! மக்கள்தொகை அடிப்படையில் சீனா, இந்தியாவிற்கு அடுத்ததாக அமெரிக்கா உள்ளது. அமெரிக்க  நாட்டின் தோற்றம் அல்லது தொடக்கம் என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவது 1492- ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் நாளைத்தான். இந்த நாளையே அமெரிக்கர்கள் ஆண்டு தோறும் கொண்டாடுகின்றனர்.

ஐரோப்பாவில் இத்தாலி நாட்டு ஜெனிவா நகரத்தவரான கிருசுடோபர் கொலம்பஸ் என்பவர்தான் அமெரிக்காவைக் கண்டுபிடித்ததாகச் சொல்கின்றனர். அமெரிக்காவை எத்தனை மாலுமிகள் போட்டியிட்டாலும் கொலம்பசின் பெருமை உலக வரலாற்றில் நிலைத்துவிட்ட ஒன்று. ஆனாலும் 1400க்கு முன்பு அங்கே இந்தியர்களும் எஸ்கிமோக்கள் என்னும் இனத்தவர்களும் வாழ்ந்து வந்தனர் என்பது வரலாற்று உண்மை. அதிலும் அந்த செவ்விந்திய இனத்தவர்களுக்கும் தென்னிந்தியத் திராவிடர்களுக்கும் காணப்படுகின்ற ஒற்றுமைப் பற்றிய செய்திகளை இலங்கையைச் சேர்ந்த தமிழறிஞர்கள் ந.சி. கந்தையா பிள்ளையும், தனிநாயக அடிகளாரும் தாங்களே எழுதிய நூலில் குறிப்பிட்டு, திராவிடர்கள் பண்டைய உலகின் புகழ் பெற்ற கடலோடிகளாக விளங்கினர் என்பதை  நிலை நாட்டியுள்ளனர்.

1492 ஆம் ஆண்டு கொலம்பஸ்  அட்லான்டிக் கடலில் சில தீவுகளைக் கண்டுபிடித்த போது, அவற்றை இந்தியாவின் ஒரு பாகமாகக் கருதினார். ஆகவே, தான் கண்ட மக்களை இந்தியர் என்று அழைத்தார். ஆனால், அமெரிக்கோ வெஸ் பூச்சி என்ற  இத்தாலி மாலுமிதான் கொலம்பஸ் கண்டுபிடித்தது ஓர் புதிய உலகம் என்று கூறினார். ஆகவே, அவ்வுலகம் ‘அமெரிக்கா’ என்று அவர் பெயரால் அழைக்கப் பட்டது.

இவ்வாறு பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் இருந்துதான் ‘அமெரிக்கா’ என்று அக்கண்டம் பெயர் பெற்றது. வாணிபத்தின் பொருட்டு பல தொலைதூர நாடுகளுக்கு அவர்கள் சென்று வந்தனர். இந்த வரலாற்று உண்மைகளையும் குறிப்பிட்டு தென் அமெரிக்க நாட்டில் ஒளி வீசி ஆட்சி புரிந்தவர்கள் ‘இன்கா’ எனப் பெயருடைய செவ்விந்திய இனத்தவர்கள் தான் என்றும் இவர்கள் வேறு யாருமல்லர்; தமிழக வரலாற்றில் பொற்காலம் கண்ட பிற்காலச் சோழப் பேரரசர்கள் வழிவந்தவர்கள்  என்றும் அந்த ஈழத் தமிழ் அறிஞர்கள் நிலைநாட்டுகின்றனர். செய்தி சற்று வியப்பாகவும் நகைப்பாகவும் இருப்பதாகப் பலருக்குத் தோன்றலாம். எனினும் இவற்றில் உண்மை இருப்பதாகவே வரலாற்றுப் பேரறிஞர்கள் ஒப்புக் கொள்கின்றனர்.

ஏறத்தாழ ஆறேழு நூற்றாண்டுகள்தான் அதன் வரலாறு என்று சொல்லக்கூடிய அமெரிக்காவில், இன்று பழமைக் (பூர்வீகக்) குடிகள் என்று யாரும் இல்லை. பெரும்பாலும் வந்தேறியவர்கள்தான். ஆனால் இன்று உலகிலேயே அதிக படைபலம், பணபலம் மிக்க நாடாகவும் அனைத்துலகையும் ஆட்டிப்படைக்கும் விதத்திலும் தம் நாட்டை உருவாக்கிக் கொண்டது எப்படி? என்பதை ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.

‘கல்வி தருவது அறிவு வளர்ப்பதற்காக மட்டுமன்று சமுதாய நலம் தேடுவதற்காகவும் என்பதே அமெரிக்கர்களுடைய குறிக்கோள். அத்தகைய நோக்கத்துடன் தரும் கல்வியே சுதந்திரத்தைப் பாதுகாக்க வல்லது’ என்று அமெரிக்கா சுதந்திரச் சமுதாயத்தைச் சார்ந்தவர்களுள் ஒருவரான ஜெபர்சன் கூறினார்.

அமெரிக்காவில் எங்கு பார்த்தாலும் பொதுப்பள்ளிக் கூடங்கள் உள்ளன. சிறுவர்கள் கட்டாயமாக பதினான்கு வயது வரையில் பள்ளிகளில் படித்தாக வேண்டும். கல்வி இலவயமாகக் கற்பிக்கப் படுகிறது. அதனால் அங்கு எழுத்தறிவின்மை என்பது பெரும்பாலும் இல்லை என்றே கூறலாம்.

நமது நாட்டிலேயும் இலவயமாகக் கல்வி இருந்தாலும் மக்கள் அதனைப் பயன் படுத்திக் கொள்ளவில்லை. அரசும் தரமான கல்வியை வழங்குவதில் வெற்றி காண வில்லை. 

அமெரிக்காவில் ஏற்பட்ட புரட்சி என்ன? அவர்கள் சந்தித்த சோதனைகள் என்ன? எப்படி முன்னேறினார்கள்? உலகையே அடக்கி ஆளவும், ஆதிக்கம் செய்யவும் அவர்களுக்கு எங்கிருந்து ஆற்றல் பிறந்தது? என்பன போன்ற பல கேள்விகளுக்கு விடை அந்த நாட்டின் இக்குறுகிய கால வரலாற்றிலேயே புதைந்து கிடக்கிறது.

அடிமைத் தனத்தை அறவே ஒழித்த ஆபிரகாம் லிங்கன் இங்கே நினைவு கூரத்தக்கவர்.

அமெரிக்க நாட்டின் பதினாறாம் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்று, உலகப் புகழ்பெற்ற அரசியல் தலைவராக விளங்கியவர். ஆபிகாம் லிங்கன். அமெரிக்காவில் அடிமைகளாய் இருந்த நீக்ரோ மக்களுக்கு விடுதலை அளித்தவர். அங்குள்ள மாநிலங்களின் ஒற்றுமை குலையாமல் பாதுகாத்தவர்.  லிங்கன் 1808, பிப்ரவரி 12ஆம் நாள் ஹாட் ஜென்வில் என்ற ஊரின் அருகே உள்ள காட்டில் ஒரு மரக்குடிசையில் பிறந்தார். இவரின் தந்தை தாமஸ் லிங்கன். இவர் முதலில் தச்சராய் இருந்து பின் வேளாண்மைத் தொழிலை மேற்கொண்டார். தாயார் பெயர் நான்சி.

லிங்கன் தம்முடைய தாயிடமிருந்தே பெரும்பாலான நற்குணங்களை தாம் அடைந்ததாக கூறுவார். லிங்கனின் இளம் வயதினில் தம் தாயாரை இழக்க நேர்ந்தது. அடுத்த ஆண்டில், சாரா புஷ் ஜான்ஸ்ட்டன் என்ற  கைம்பெண்ணை லிங்கனின் தந்தையார் மணந்தார். அந்த அம்மையார் திறம்பட குடும்பத்தைத் நடத்தும் திறமைவாய்ந்தவர். ஆபிரகாம் அவரிடம் மிகுந்த அன்புடையவர் ஆனார்.

அவ்வம்மையார் எழுதப் படிக்கத் தெரியாதவர் ஆயினும் அவர் கொண்டு வந்த ராபின்சன் ரூசொ, ஈசாப் கதைகள் போன்ற நூல்களே முதன் முதல்  ஆபிரகாமிற்கு அறிவூட்டும் கருவிகளாக அமைந்தன.

ஆபிரகாம் அரசியலிலும் சட்டத்துறையிலும் வெற்றி பெற்று ஒளிர்வதற்கு முன்னால் அவர் விவசாயி யாகவும், பன்றிக் கசாப்புக் காரராகவும், படகோட்டியாகவும் வேலை பார்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் வாழ்க்கை சோகம் நிரம்பியது. இவர் முதலில் காதலித்த பெண் இறந்துபோனார், இரண்டாம் முறை காதலித்த பெண்ணோ இவரை ஏற்க மறுத்தாள். இவருக்கு மனைவியாக வாய்த்தவரோ இவருக்கு ஓயாத தொல்லை தந்தார். அமெரிக்காவில் 1861 ஆம் ஆண்டு தேர்தலில் வென்று மார்ச் திங்களில் பதவி ஏற்றார்.

அடுத்து வந்த 1865ஆம் தேர்தலிலும் பெருவாரியான வக்குகள் பெற்று, எதிர்த்து போட்டியிட்டவரைக் காட்டிலும் நான்கு இலட்சம் வாக்குகள் அதிகம் பெற்றார். அந்த  நேரம் அவர் பொழிந்த வார்தைகள்  இன்றும் உலகப் பொன்மொழியாகக் கருதப் படுகிறது.

‘எவரிடமும் பகைமையின்றி, எல்லோரிடமும் அன்புடன் அறத்தில் ஊன்றி நின்று நாம் எடுத்த பணியை முடிப்போமாக’ என்று லிங்கன் பெருமிதத்தோடு பொழிந்தார். இவர் கொள்கைகளை அடியோடு வெறுத்த நடிகர்  ஜான்வில்க்ஸ் பூத் என்பவன் 1865ஆம் ஆண்டு ஏப்ரல்  14 ஆம் நாள் லிங்கன் ஒரு நாடகம் பார்த்துக் கொண்டிருந்த போது அவரை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்றுவிட்டான். மறுநாள் காலையில் கொள்கைக்காக உயிர் ஈந்த தியாகச் செம்மலாக இறந்தார்.

அமெரிக்கத் தலைவர்களுள் ஆபிரகாம் லிங்கனைப் பற்றிய நூல்கள்தாம் அதிகம். இவர் அறிவு நுட்பத்தில் சிறந்தவர். அவரது பொன்மொழிகளில், மக்கள் அதிகம் விரும்பும் மொழியான...

‘அரசாங்கமானது மக்களுடையதாகவும், மக்களால் நடத்தப்படுவதாகவும், மக்களுக்காக வே நடத்தப் படுவதாகவும்  இருக்க வேண்டும்’ என்ற மொழிகள்தாம் அவை.

- வளவன், மும்பை


Go Back