மரப்பாச்சி - 26-Mar-2017 01:03:47 PM

குழந்தைகளின் உலகத்தில் பொம்மைகள் வாழ்கின்றன. 40 ஆண்டுகளுக்கு முன்பு பார்வதி வைத்திருந்த மரப்பாச்சி பொம்மைக்கு ‘தமிழ்ச்செல்வி” என்று பெயர். அம்மாவிடம் பார்வதிக்கு என்ன கிடைக்கிறதோ அதுவெல்லாம்  தமிழ்ச்செல்விக்கும்  கிடைக்கும். அம்மா கொடுத்த பணியாரத்தை  தமிழ்ச் செல்விக்கு   பிய்த்து ஊட்டுவாள். ஆனால் தமிழ்ச் செல்வி உண்ணமாட்டாள். உண்டதாக கருதி தொட்டிலில் போட்டு தாலாட்டுவாள், குளிப்பாட்டுவாள், பவுடர் பூசி பொட்டு வைப்பாள், மையிட்டு சடை பின்னுவாள், தாவணி உடுத்தி மாராப்பு போடுவாள், முன்னும் பின்னும் பார்த்து  மகிழ்ச்சியடைவாள். பாசமுள்ளத் தாயாக குழந்தைகளை மாற்றும் வல்லமை மரப்பாச்சி பொம்மைகளுக்கு உண்டு.

மரப்பாச்சி பொம்மைகள் ஈட்டி, செம்மரம், கருங்காலி, சந்தனம், தேக்கு, வில்வம், வேம்பு போன்ற மரங்களில் அன்றைய தச்சர்களால் செதுக்கப் பட்டன. கலை நேர்த்தி அவ்வளவாக இருக்காது. என்றாலும் காலங்கள் கடந்தும் அவைகள் கைமாறப் பட்டுள்ளன. கொள்ளுப்பாட்டி விளையாடிய மரப்பாச்சியை  மூன்று தலைமுறை கடந்து பெயர்த்தியும் விளையாடுவாள். வழவழப்பான மரப்பாச்சியின் மேனியில் காலத்தின் ரேகை படிந்திருக்கும்.

மரப்பாச்சியில் ஆணும், பெண்ணும் உண்டு. விளையாடுகையில் இரண்டுக்கும் இடையே உள்ள  உடலமைப்பின் வேறுபாட்டை உணர்வோம்! எந்த உறுப்பை மூட வேண்டும். எந்த உறுப்பை தொடக்கூடாது என்ற பாலியியல் அறிவு இயல்பாக ஏற்படும். குடும்பம், சமூக நிகழ்வுகளை விளையாட்டில் நிகழ்த்துவோம்! ஆண், பெண் மரப்பாச்சிகளுக்கு திருமணம் செய்து விளையாடுவோம்.
பொம்மைக்கும் பொம்மைக்கும்

கல்யாணமாம்- நம்ம
பூலோகமெல்லாம்
கொண்டாட்டமாம்.

பொம்மைகளை சேர்த்து வைக்கும் மரபின் நீட்சியைத் தொலைத்துவிட்டு, மனிதர்களை பிரித்து வைக்கும் சமூகத்தில் வாழ்கிறோம்! மரப்பாச்சிகள் வெறும் பொம்மைகளன்று, குழந்தைகள் உடம்புக்கு முடியாமல் படுத்துக் கிடந்தால்.. மரப்பாச்சியை  தண்ணீரில் முக்கி கட்டையால் உரசி கைகளில்  வழித்து நெற்றியில் பூசும் வழக்கம் இருந்தது. நோயை குணமாக்கும் மருத்துவம் மரப்பாச்சிக்குள் இருந்திருக்கும்...!

இன்றும் குழந்தைகள் விளையாடுகிறார்கள். பொம்மைகளும் இருக்கின்றன. பொம்மைகளையும் குழந்தைகளையும் பிரிக்க முடியாது! பிறந்த நான்கு மாதமான குழந்தைகளுக்கு பொம்மைகளை வாங்கித் தருகிறோம். நண்பர்களும், உறவினர்களும் குழந்தைகளுக்கு பொம்மைகளை பரிசளிக்கிறார்கள். அன்போடும் பாசத்தோடும் வாங்கித் தரும் பொம்மைகள் இந்த மண்ணுக்கும், பண்பாட்டுக்கும் அன்னியமானவை.

உலகில் உள்ள பல்வேறு பண்பாட்டு அடையாளங்களை அழித்துவிட்டு ஒற்றை பண்பாட்டை திணிக்கும் உலகமயமாக்கலின் சதி வேளையில் பொம்மைகளும் தப்பவில்லை! பார்பி, டோரா, கேர்ள், புஜ்ஜி, டெடிபேர் போன்ற பொம்மைகளுடன் பார்க்க விகாரமாகவும் வில்லத்தனமாகவும் உள்ள சில பொம்மைகளை வைத்து குழந்தைகள் விளையாடுகிறார்கள். குழந்தைகளின் மனதில் ஆதிக்கம் செலுத்தும் மனப்பான்மையை தோற்றுவித்து வலுச்சண்டை, அதிகாரம், அடக்குதல் போன்ற உணர்வுகளைத் தூண்டும் பொம்மைகள் உலகச் சந்தையில் அதிகம் விற்பனை செய்யப்படுகின்றன. அழகாயிருப்பதால் அதன் ஆபத்தை நாம் உணர்வதில்லை.

பெரும்பாலான பொம்மைகள் நெகிழி(பிளாஸ்டிக்) யால் செய்யப் பட்டவை அதுவும் பெட்ரோலியக் கழிவுப் பொருளான “நாப்தானிலிருந்து” பிரித்து எடுக்கப்பட்ட நஞ்சுள்ள வேதிப் பொருட்களால் உருவாக்கப் பட்டவை. தாயின் மார்பில்  பால் குடித்த குழந்தைகள் எதையும் வாயில் வைத்து சுவைத்துப் பார்க்கும் இயல்பு கொண்டவர்கள். குழந்தைகள் வாயில் வைத்து சுவைக்கையில் இந்த வேதிப் பொருள்கள் அவர்கள் உடம்பிலுள்ள சுரப்பிகளை செயலிழக்க செய்து கொஞ்ச நாளில் நரம்பு மண்டலத்தையும் பாதிக்கச் செய்யும். குழந்தைகளுக்கு அன்பின் அடையாளமாக அளிக்கப்பட்ட தலையாட்டிப் பொம்மைகள், கிலுகிலுப்பை, உருளை தட்டுகள், விலங்கு பொம்மைகள், நடைவண்டிகள் மரத்தால் செய்யப்பட்டவை. இந்த மண்ணின் பண்பாட்டை பேசியவை, ஒற்றை பண்பாட்டில் ஆதிக்க குறியீடாய் பெயரனும், பெயர்த்திகளும் நெகிழிப் பொம்மைகளை வைத்து விளையாடுகையில்...அதுவும் வாயில் வைத்து விளையாடுகையில் நெஞ்சம் பதறுகிறது.

“குழந்தைகள் விரும்புவது இசை வழியும் குழல்களை, நாம் தருவது உயிர் பிடுங்கும் குப்பிகளை!” குழந்தைகளின் உலகு இத்தகைய பொம்மைகளால் மாயமாக்கப் படுகின்றன. அண்மையில் குழந்தை வேண்டி கோயிலுக்கு நேர்த்திக் கடன் செய்யும் தம்பதிகள் கோயில் மரத்தில் கட்டிய தொட்டிலில் மரப்பாச்சி பொம்மையை போட்டு வேண்டிக் கொண்டிருந்தார்கள். நினைத்துக் கொண்டேன் மரப்பாச்சிகள் மறுபடியும் குழந்தைகளாக பிறக்கும் என்று.

- கோவை சதாசிவம்


Go Back