சர்வ சமயவாதி! - 26-Mar-2017 01:03:26 PM

‘தமிழ் இலெமுரியா’ மாசி இதழ் கிடைத்தது. மராத்தி இலக்கியப் படைப்பாளி துக்காராம்  நமது நந்தனைப் போன்றவர். அக்கட்டுரையில் வள்ளலாரின் சிறப்பை நன்கு வெளியிட்டுள்ளீர்கள். பக்கம் 45-இல் வெளியாகியுள்ள வள்ளலார் படத்தில் அவர் விபூதி அணிந்துள்ளார். உண்மையில் அவர் விபூதி அணியவில்லை என்பது தான் அருட்செல்வர் கருத்து. அவரை சைவராக்க முயன்றதாலேயே விபூதி. அவர் சைவத்தையும் கடந்த சர்வ சமயவாதி.
பெ. சிதம்பரநாதன், கோவை - 641002

ஓர் அங்கம்
ஆங்கிலேயர்கள் விட்டுச்சென்ற ஏகாதிபத்தியத்தின் கடைசிச் சின்னமான, நடுவணரசின்  கங்காணியான கவர்னரின் நடவடிக்கையே தமிழ் நாட்டில் நிகழ்ந்த அனைத்து சிக்கல்களுக்கும் காரணம் என தெளிவுபட எடுத்துரைத்து அந்தப் பதவி ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை பதிவு செய்து எழுதிய ‘கோபுரமும் கூழாங்கற்களும்’ தலையங்கம் - விழிப்புணர்வின் ஓர் அங்கம்.
ஓர் அருமை அண்ணனின் உள்ளத்து உணர்வுகளை  தெள்ளத் தெளிவாக, படம் பிடித்துக் காட்டி, உள்ளத்தை ஓர் உலுக்கு உலுக்கி விட்டார் இறை.ச.இராசேந்திரன் தன் விசிறி என்ற சிறுகதை மூலம்! பாராட்டுகள்!    
ப. இலெ. பரமசிவம், மதுரை - 625009

தேன்சுவை!
‘தமிழ் இலெமுரியா’ மாசி இதழில் தேன்சுவை பருகினேன். வள்ளல்  பெருமானின் வாழ்வியல்  தத்துவங்களை  படித்து மகிழ்ந்தேன்.  மனித வாழ்விற்கு (உயர்வுக்கு) வள்ளலாரின்  தத்துவங்கள் மிகச்சிறந்த வழிகாட்டுதல் ஆகும். தமிழ் இலெமுரியா  தொடரட்டும் தங்களின் இலக்கியப் பணி தொய்வின்றி என்றென்றும்...
மு. முதமிழ் மாறன், செம்பூர் - 400 082

நல்ல விளம்பரம் தேவை
மாசி இதழில் ‘வெள்ளிப் பணமாகும் வேர்கடலைத் தோல்’ கட்டுரை படித்தேன். வேர்க்கடலை உடம்பிற்கும் சத்தானது என்பது அனைவரும் அறிந்ததே. கூடு போன்ற அதன் தோல் எரிபொருளாகத்தான் பயன்படும் என்று நினைத்தோம். ஆனால் அந்தத் தோலை இடித்துப் பொடியாக்கி சில இரசாயன பொருள்களைக் கலந்து நார்ச்சத்து மிகுந்த உணவுப் பொருளாக ஆக்கும் செய்தி ஆச்சரியப்பட வைத்தது. நல்ல விளம்பரங்கள் மூலம் இந்த உணவுப் பொருளை மக்கள் அறியும் படி செய்ய வேண்டும்.
மோகன், கோவில்பட்டி - 628501

விசிறி
இறை.ச. இராசேந்திரன் எழுதிய சிறுகதை “விசிறி” இதழுக்கு அழகு சேர்த்தது. நெல்லை சிறப்பு கோலங்களை செவ்வனே படிய வைத்திருக்கிறது. இது போன்ற சிறுகதைகளை எதிர்பார்க்கிறேன். கதையை எழுதிய இறை.ச.இராசேந்திரனுக்கும் அதை வெளியிட்ட ‘தமிழ் இலெமுரியா’ இதழுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.    
ஜான் சாமுவேல், மும்பை - 400001

மனவளம்
பொறுப்பு ஆளுநர், பொறுப்பான ஆளுநராக செயல் படாத காரணத்தால், சட்டப் பேரவையின் மாண்பினை இழந்திருக்கிறது. மக்களாட்சியின் மாளிகையாக இருந்த தமிழ்நாடு, இன்று வந்து போவோரின் தங்குமிடமாக  மாறிவிட்டது மிகப்பெரிய அவலமே! யார் மன்னித்தாலும், வரலாறு  தமிழகத்தை மன்னிக்காது! தங்களின் தலையங்கமே இதனை தெளிவாகக் காட்டுகிறது. காட்டுவளம், தோட்டவளம், கனிமவளம் என எல்வல வளமும் இருந்தாலும் நம்மிடம் மனவளந்தான் இல்லை. கவிதை, கட்டுரை, துணுக்குகள், செய்திகள் அனைத்திலும் “ தமிழ் இலெமுரியா’  தனது முத்திரையை நன்கு பதித்துள்ளது. 
க. தியாகராசன், குடந்தை - 612501
தேடிவந்தது.
மாசி இதழில் ‘ஏறும் ஏரும்’ கட்டுரை மிகவும் அருமையாக இருந்தது. நல்ல பல செய்திகளை அறிய முடிந்தது. மானம் உள்ள  தமிழர்களால்  தான்  ஜல்லிக்கட்டுக்கு  வெற்றித் தேடி வந்தது. ‘தமிழ் இலெமுரியா’ இதழ் மேலும் வளர வாழ்த்துகள். ஆசிரியர்க்கு  எனது பாராட்டுகள். 
அ.காஜாமைதீன், திண்டுக்கல் - 624615.

 ஆளுநர் பதவி
மராட்டிய மாநிலத்திலிருந்து தமிழ் மீது கொண்ட அளவில்லா பற்றினால்,  தனித்தமிழில் இதழ் நடத்தி வருகிறீர்கள். மனமார்ந்த பாராட்டுகள். அற்புதமான தலையங்கம். ஆளுநர் பதவியின் அவசியமின்மை பற்றி அறிஞர் அண்ணா ஒருமுறை ‘ஆட்டுக்கு தாடி போன்ற அவசியமற்ற பதவி வேண்டாம்’ என்றார். அதற்கு மூதறிஞர் இராசாசி என்ன கூறினார் என்றால், ‘தீயணைப்புத் துறை’ என ஒன்று உண்டு! அது சாதாரணமாகப் பணி ஏதுமில்லாதது போல்தான் தோன்றும். ஆனால் எங்காவது தீ பற்றினால் அந்த துறை தானே செயல்பட  வேண்டியுள்ளது அதுபோல்தான் ‘ஆளுநர்’ பதவி என்றார். அது சரி! ஆமாம் தமிழகத்தில் ஏன் இன்னும் ஒரு நிரந்தரமான  ஆளுநரை நடுவண் அரசு நியமிக்கவில்லை.. தமிழ்நாட்டைச் சுற்றிலும் தமிழ்ப் பகைவர்கள்தான் ஆளுகின்றனர். தமிழர்களுக்கு  உதவி செய்ய எவரும் இல்லையே.  
த.சுப்ரமணியன், சிகந்தராபாத் - 500061

கலைச் சொற்கள்
மெரினா போராட்டத்தில்... மேய்ப்பவன் இல்லா ஆடுகளாய் அமர்ந்து நாகரிகமாக போராடிய இளையோர்களுக்கு, இறுதியில் பலமாக அடிகள் கிடைத்தாலும்  அடுத்து, சிறப்பான வெற்றியை பெற்றது மகிழ்ச்சி. சிப்பி வடிவ இட்டளி  காண்பதற்கு அருமையாக இருந்தது. ‘ஏறும் ஏரும்’ பைந்தமிழ் பக்கம் மிக அருமை. தமிழர்களிடமிருந்து ஏறு தழுவதலை பிடுங்க அமெரிக்க மேலாண்மைக்கு  குடைபிடிக்கும்  தடை சட்டத்தை விளக்கியதையும் வாசித்தேன். அருமை! சாளரக் காற்றில் கலைச்சொற்கள் கண்டேன். வெளிநாட்டவர்கள் புதிது புதிதாக கண்டுபிடிக்கிறார்கள்   நம்மவர்கள் புதிய கலைச் சொற்களை கண்டு கொள்கிறார்கள். 
-மூர்த்தி, சென்னை - 600100

மருகும் மக்கள் நிலை.
‘தமிழ் இலெமுரியா’ மாசி இதழில், கோபுரமும், கூழாங்கற்களும்  அகவுரை, பல தரப்பு மக்களால் தன்னெழுச்சிப் போராட்டமாக நடந்த ‘ஜல்லிக்கட்டு’ மெரினாப் புரட்சியையும், மேனாள் முதல்வர்  செல்வி ஜெயலலிதா மறைவிற்குபின் நடந்து கொண்டிருக்கும் குடுமிபிடி, கொந்தளிப்பு, வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் எதிர்க் கட்சிகள், தெரியாத்தனமாக வாக்களித்து மருகும்  மக்கள்-நிலை போன்றவற்றை எண்ணிப் பார்க்க வைக்கிறது. வருங்காலங்களில் நல்ல  தலைமை  உருவாக வேண்டுமெனில், எண்ணிச் செயல் படவும், நல் விடியல் காணவும் விதை போட்டிருக்கிறது தலையங்கம். இதழ்தோறும்  தாங்கள் வடிக்கும் தலையங்கம் தமிழர்களின் நீண்ட வரலாறுகளை எண்ணிப் பார்க்கவும் இயங்கவும் வைக்கிறது என்றால் அது மிகையல்ல! ஒவ்வொரு  தலையங்கமும் ஆய்வுக் கண்ணோட்டத்தோடு படிப்பவர்களை விழிக்கவும், வீறுகொள்ளவும் வீறு கொண்டெழவும் செய்கிறது. தொடரட்டும் தங்களின் ஆறாவவது விரலின் அபிநயங்கள்! வாழ்த்துகள்!
நவீன் குமார்,  நடுவிக்கோட்டை - 614602

பணிகள் தொடரட்டும்!
தைத் திங்கள் இதழில்  ‘மராத்திய மண்ணில் மணம் வீசும் தமிழ்ப் பூக்கள்’ எனும் அட்டைப் படத்துடன்  ‘புதிதாய் பூத்தாய்’ கவிதையுடன் அலங்கரிக்கப் பட்டிருந்தது. அங்குள்ள  தமிழர்கள்  காவல்துறை, பண்பாட்டுத்துறை, ஆட்சிப்பணி, எல்லாவற்றுக்கும் மேலாக கல்விப்பணியில் புரட்சி எனும் படி சேவை செய்து வரும் தமிழர்களைப் பார்த்து பெருமையாக இருந்தது.  குறிப்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சிப் பணியாளராக சொக்கலிங்கம்  இ.ஆ.ப.  தேர்ச்சிப் பெற்ற போது அவரைப் பாராட்டி மகிழ்ந்தது நினைவுக்கு வந்தது. அவரும் ‘தேர்வில் வெற்றி பெற தன் வழிகாட்டல் எப்போதும் எல்லா மாணவர்க்கும் உண்டு’ என்று கூறியது குறிப்பிடத்தக்கது. ‘அரபிக்கடல்’ சாதனையாளர்களைச் சான்று காட்டியிருந்தது.

ஆக மராட்டியத்தில் தமிழின் பெருமை கூற இவ்விதழ் துணை செய்திருக்கிறது. பாராட்டுக்கள! நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! பணிகள் தொடரட்டும்!
அ.கருப்பையா, பொன்னமராவதி - 622 407

அரிய செய்திகள்...
‘தமிழ் இலெமுரியா’வின் பொங்கல் இதழ் படித்தேன். மகாராட்டிரா மாநிலம் ஒருபார்வை என்ற தலைப்பில்  மாநிலத் தோற்றம், நகரங்கள், மாவட்டங்கள் என பல்வேறு வகையான பிரிவுகளை முழுமையாக அறிந்து கொள்ளமுடிந்தது. புலம் பெயர்ந்த தமிழர்கள் கல்வி நிறுவனங்களை உருவாக்கி ஆற்றி வரும் பணிகள், பெண் விடுதலைப் பற்றி சாதி ஒழிப்பு சாத்தியமே  இல்லை  என்னும் தலைப்பில் ‘புதியமாதவியின்’  கட்டுரை, சீர்வரிசை சண்முகராசனாரின் வழி காட்டுதல், அன்னார்க்கு தாம் வழிகாட்டியாய் இருந்தமை  இன்னும் இதைப்போன்று பல்வேறு அரிய செய்திகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன.
முனைவர் பே.நடராசன், திருநெல்வேலி - 627011

இலக்கியப் புத்தகம்
‘தமிழ் இலெமுரியா’ இதழ் மிக அருமை. மிகவும் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டிய பல்வேறு கருத்துகளை, செய்திகளை, தகவல்களை உள்ளடக்கிய ஓர் அற்புதமான இதழ்.  தமிழில் வெளிவரும் இதழ்களில்  முதல் தரமான இதழ் ‘தமிழ் இலெமுரியா’ என்று சொன்னால் அது மிகையன்று.

யாவற்றுக்கும் மேலாக தலையங்கம் சிறப்பானது. மிகவும் சிந்தித்து, ஆழமாக, அழுத்தமாக, கூர்மையாக, சமரசமின்றி எழுதுகிறீர்கள்.  தைத்  திருநாள் சிறப்பிதழும் மிக மிக அருமை!  இதழை படிப்பது  பெரிய இலக்கியப் புத்தகத்தை படிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. ‘தமிழ் இலெமுரியா’ இதழ் வெளிவர உழைக்கும் நல் உள்ளங்கள் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியுடனும் நெகிழ்ச்சியுடனும் என் அன்பையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கோ.அழகியநம்பி, சென்னை - 600086

வெற்றிகரமான நேர்காணல்
“தமிழ் இலெமுரியா” மராத்திய மாநில சிறப்பு மலரானது வழக்கமாக பத்திரிகைகள் வெளியிடும் சிறப்பு மலர் பாணியிலிருந்து முற்றிலும் விலகியிருந்தது. தொடக்கத்தில் மாநிலத்தின் பொது விவரங்களை அறிய முடிந்தது. அதைத் தொடர்ந்த பக்கங்கள் மகாராட்டிரா மாநிலத்தில் பல்வேறு துறைகளில் உயர்ந்த பதவிகளில் இருக்கும் தமிழர்களைப் பற்றியதாக இருந்தது. 

திரைப்படங்களில் தமிழ்நாட்டிலிருந்து மும்பைக்கு செல்பவர்கள் அங்கு பெரிய  தாதாக்களாகவும் வீட்டை விட்டு ஓடிச் சென்றவர்களாகவும் மட்டுமே காட்டுகின்றனர். ஆனால் உண்மையில் நம் மண்ணின் மைந்தர்கள் வட மாநிலங்களில் எவ்வளவு தூரம் ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்று சேவை செய்கின்றனர் என்பதை இலெமுரியா விரிவாக எடுத்துக் காட்டியுள்ளது. தமிழ்நாட்டின் எங்கோ குக்கிராமங்களில் பிறந்த தமிழர்கள் காவல்துறை உயர் அதிகாரிகளாகவும், மாவட்ட ஆட்சியர்களாகவும், கட்லோரக் காவல்படை தளபதிகளாகவும் பணியாற்றுகிறார்கள் என்பதை படிக்கும் போது நமக்கு மிகவும் பெருமையாக உள்ளது.

மகாராட்டிராவில் உள்ள நமது தமிழ் உயர் அதிகாரிகள் தங்களின் பணிச்சுமைக்கு இடையில் மிகவும் தன்னடக்கத்துடன் பேட்டியளித்திருக்கிறார்கள். அதிலும் காவல்துறை அதிகாரி ஜெகன்நாதன், இ.கா.ப அளப்பரிய பணியை செய்துவிட்டு மிகவும் தன்னடக்கத்துடன் பதிலளித்துள்ளார். 

ஒரு நேர்காணலை படிக்கும் வாசகர், தான் பேட்டி காண்பவரிடம் கேட்க நினைக்கும் கேள்விகளை பேட்டி காணும் நிருபரும் கேட்டிருந்தால் அந்த பேட்டி மிகவும் வெற்றிகரமான பேட்டியாகும். அந்த வகையில் காவல்துறை அதிகாரி ஜெகன்நாதன் அவர்களின் பேட்டியும் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதை எழுதிய விதமும் பாராட்டத்தக்கதாக இருந்தது.
ஆ.முனுசாமி, புதுக்கோட்டை - 622001

கட்செவி அஞ்சல்
தமிழ் மொழியின் தரத்தை மங்காது காத்து வரும் ‘தமிழ் இலெமுரியா’ இதழ் என்றும் படிக்க படிக்க மணம் கமழும் இதழாகும். கடந்த மாசி இதழில் சாளரக் காற்று பகுதியில் ‘வாங்க பழகலாம்’ தலைப்பில் வெளியான கலைச் சொற்கள் மிகுந்த பயனுள்ள செய்தியாகும். இதில் 
‘Whatsapp’ என்ற சொல்லுக்கு புலனம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அவற்றை தமிழில் ‘கட்செவி அஞ்சல்’ என்றும் குறிப்பிடலாம்.
செ.வ.இராமநுசன், சென்னை - 600 074


Go Back