அரசு அலுவலகங்களில் மக்களின் நேரம் வீணாகலாமா? - 16-Apr-2017 04:04:26 PM

எஸ்.சொக்கலிங்கம் இ.ஆ.ப
மகாராட்டிரா மாநிலத்தின் அரசு குடிமைப் பணியாளர்களில் ஒரு மூத்த அதிகாரியாக விளங்கும் எஸ்.சொக்கலிங்கம் இ.ஆ.ப மண்டல வளர்ச்சி ஆணையராகப் பணியாற்றுபவராவார். தமிழ்நாட்டின் தென்பகுதியில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம் கல்லம்பட்டி என்ற கிராமத்தில் ஓர் எளிய விவசாயியின் மகனாகப் பிறந்த இவர் தன் சமுக நிலை வாழ்வியல் நிலைப் பற்றி சிந்தித்து கல்வியும் கடின உழைப்புமே இதில் ஒரு மாறுதலைக் கொணர முடியும் எனும் உத்வேகத்துடன் கல்வி பயின்று சட்டம் பொது மேலாண்மை, காந்தியச் சிந்தனை ஆகியவற்றில் இளங்கலை முதுகலைப் பட்டம் பெற்று இந்தியக் குடிமைப் பணித் தேர்வு எழுதி இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய ஆட்சிப் பணியில் இணைந்தவராவார்.

மகாராட்டிரா மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களை உள்ளடக்கிய பெரும்பகுதி மண்டலங்களில் ஒன்றாக விளங்கும் பூனே மண்டலத்தின் ஆணையராகப் பணிபுரியும் இவர், அடிப்படையில் ஒரு வழக்கறிஞராவார். சென்னை உயர்நீதி மன்றத்தில் மூத்த வழக்கறிஞராகவும் பின்னர் நீதியரசராகவும் திகழ்ந்த திரு ஏ.ஆர்.இலட்சுமணன் அவர்களிடம் இளநிலை வழக்கறிஞராகப் பணிபுரிந்தவர். 1995 ஆம் ஆண்டு புதுதில்லியில் தன் இந்திய அரசுப் பணியை பாதுகாப்புத் துறை ஆய்வு மற்றும் வளர்ச்சித் துறையில் தொடங்கி மகாராட்டிரா மாநிலத்தில் கோலாப்பூர், சாங்கிலி, பீட், நந்தூர்பர், ஒசுமானபாத், வார்தா, நாசிக் போன்ற மாவட்டங்களில் நிருவாக அதிகாரி, மாவட்ட துணை ஆட்சியர், மாவட்ட ஆட்சியர் என பல்வேறு நிலைகளில் பணியாற்றி தனக்கென்று ஒரு தனி முத்திரை பதித்தவராவார்.

மாநில கல்வித் துறை, வருவாய் துறை, முத்திரைத்தாள் விற்பனைவரித் துறை என பல துறைகளில் பணியாற்றி பழுத்த அனுபவம் மிக்கவர்.

இந்த மாமனிதரைக் கண்டு அவருடைய கருத்துகளை நம் “தமிழ் இலெமுரியா” வாசகர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற நோக்குடன் நாம் நேர்காணலுக்காகச் சென்ற போது பல்வேறு மாவட்ட ஆட்சித் தலைவர்கள், அரசு அதிகாரிகளுடன் முக்கியமான கலந்தாலோசனைக் கூட்டத்திற்கு தலைமையேற்று நடத்திக் கொண்டிருந்தார். நமது வருகை குறித்து ஏற்கனவே அவருடைய உதவியாளருக்கு தெரிவித்து கலந்தாய்வுக் கூட்டம் சற்று மிகுதியான நேரத்தை எடுத்துக் கொண்டிருப்பதற்காக எம்மை பொருத்தருளுமாறு கேட்டுக் கொண்டார். இவருடைய கடமை மற்றும் கால அளவை குறித்த உணர்வுகள் இவருடைய மதிப்பை மேலும் எம்முள் உயர்த்தின. அவருடன் உசாவிய பல செய்திகளிலிருந்து சிலவற்றை நம் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.தாங்கள் ஒரு தமிழராக மராத்திய மாநிலத்தில் அரசுத் துறையில் பணியாற்றுவதை எப்படி உணர்கின்றீர்கள்?
நாம் யாராக எந்த மாநிலத்தில் எந்தச் சூழலில் பணியாற்றுகிறோம் என்பதை விட நம் பணி எந்த வகையில் திறம்பட செய்து முடிக்கப்படுகின்றது என்பதே முதன்மையாகும். ஆம்! தமிழ்தான் நம் தாய்மொழி; தமிழ்நாடுதான் என்னை பெற்றெடுத்த மண் என்பதில் பெருமை கொள்கிறேன். அங்கு விதைக்கப்பட்ட கல்வியே எனக்கு அறிவையும் ஆற்றலையும் வழங்கியிருக்கிறது. ஆனால் நான் தமிழன் என்று அடையாளப் படுத்தப்படுவதற்கு முன்பு ஒரு மனிதனாக இந்தியக் குடிமகனாக என்னை நினைத்துக் கொண்டு நம் நாட்டில் எப்பகுதியிலும் எந்த மாநிலத்திலும் பணியாற்றக் கூடிய நிலைக்கு என்னை தயார்படுத்திக் கொண்டு அப்பகுதி மக்களைப் பற்றி அறிந்து அதற்கேற்றவாறு செயல்பட்டு வந்துள்ளேன். எனவே மராத்திய மாநிலத்தில் பல பகுதிகள் எனக்கு மிகவும் பரிச்சயமான ஒன்று. 

தங்களின் இளமைப் பருவம் மற்றும் கல்வி நிலை குறித்து ஏதாவது சொல்ல இயலுமா?
நானாகவே சொல்ல விரும்பியதை நீங்கள் கேள்வியாக கேட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டின் தென்பகுதி என்பது பிற மாவட்டங்களைப் போன்று வளர்ச்சியடைந்த பகுதி அல்ல. என்னுடைய தந்தை ஒரு விவசாயி. 5ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். சமுகத் தளத்திலும் வறுமையான குடும்பமே. எனவே பிற மாணவர்களைப் போல பெரும் படிப்பு படிக்க முடியும் என்று கனவில் கூட தோன்றியதில்லை. ஆனால், என் குடும்பச் சூழல், சமுகச் சூழல், பொருளாதார நிலை, தாய் தந்தையரின் நிலை போன்றவை என்னுள் கல்வியில் பெரும் ஆர்வத்தைத் தூண்டியது. எனவே எங்கள் ஊருக்கருகில் அமைந்திருந்த ஒரு கிறித்துவ தொண்டு நிறுவனப் பள்ளியில்தான் ஏழாம் வகுப்பு வரை படிக்க முடிந்தது. பின்னர் அதற்கு மேலும் வேறு ஒரு கிறித்துவ தேவாலயத்துக்கு சொந்தமான பள்ளியில் பள்ளியிறுதி வரை படிக்க முடிந்தது. என் கல்விக்கு பெரிதும் ஊக்கமூட்டியவர் என் ஆசிரியர் அருமைநாதன். என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு நபர். என் தாய் தந்தையரால் கல்விக்காக பொருள் செலவழிக்க இயலாத நிலையில் என் தாய் மாமா திரு ராஜையா, ஒரு தலைமை ஆசிரியர், அவர்தான் என்னை சட்டம் படிக்கத் தூண்டியவராவார். அதன்படி மதுரை சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டம் படித்தேன். பின்னர் திரு ஏ.ஆர்.இலட்சுமணன் அவர்களிடன் பயிற்சி பெற்றேன். இதுதான் என் கல்வியின் படிநிலை வரலாற்றுப் பதிவாகும்.

இந்திய நாடு விடுதலை அடைந்து 70 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையிலும் நிருவாகத் துறையில் எதிர்பார்த்த நிறைவும் வளர்ச்சியும் கிட்டவில்லையே ஏன்? தாங்கள் ஒரு இந்திய குடிமை பணியின் மூத்த அதிகாரியாக எப்படி பார்க்கின்றீர்கள்?
நம்முடைய நாட்டின் மக்கள் தொகை சமுகப் பண்பாட்டு நிலை, பல்வேறு மொழிகள், சமச்சீரற்ற நிலப்பரப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பார்க்கும் பொழுது இந்த எழுபது ஆண்டுகள் என்பது மிகக் குறைவுதான். நாம் பிற நாடுகளுடன் ஒப்பிட்டு நாம் வளரவில்லையே என ஏங்க முடியாது. மக்களின் மனப்போக்கு என்ன என்பதை எங்களைப் போன்ற அதிகாரிகள் முழுமையாக அறிய இயலாது. எங்களால் திட்டங்களைத் தீட்டி அரசுகளிடம் ஒப்படைக்க இயலும். அதை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதற்கான வழிகாட்டுதலையும் தர முடியும். ஆனால் பொதுமக்களின் மன ஓட்டத்தைத் தெளிவாக அறிந்து வைத்திருப்பவர்கள் அரசியல்வாதிகளே. எனவே அவர்களின் ஒத்துழைப்பின்றி எந்த மாறுதல்களையும் கொண்டு வர இயலாது. அங்கு தெளிவும் தன்னம்பிக்கையும் தூய்மையும் இலட்சிய நோக்கும் திறம்பட எடுத்துச் செல்லப்படுமானால் நாம் திட்டமிட்ட ஒரு வளர்ச்சியை எய்தியிருக்க முடியும். இதில் வெற்றி காண்பதற்கு ஊடகங்கள், நீதித்துறை போன்றவைகளின் ஆதரவும் மிக அவசியமான ஒன்றாகும். எனினும் நம் நாட்டில் ஒரு கடினமான பாதையில் இதுவரை கண்டுள்ள வளர்ச்சி பெருமைமிக்கதே என்பது என் கருத்து.

தாங்கள் ஒரு மண்டல ஆணையராக தங்கள் பணியில் மனநிறைவு அளிப்பதாக அல்லது தாங்கள் சாதித்த பணிகள் குறித்து சொல்ல முடியுமா?
ஒரு நாட்டின் வளர்ச்சிக் கூறு என்பது ஒரு கூட்டு முயற்சி. அதை ஒரு தனிமனித விருப்பு வெறுப்புக் கூறுகளுடனோ அல்லது மனநிறைவுடனோ ஒப்பிட்டுப் பார்ப்பது தவறு. இருந்தாலும் ஒரு அரசின் மூத்த அதிகாரி என்ற நிலையில் அந்தந்த மாநில வளர்ச்சியில் மனம் ஒன்றி செயல்பட்டிருக்கின்றேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன். ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது நாம் நம்முடைய உழைப்பை நேரத்தை எவ்வாறு எந்தெந்த வழியில் செலவிடுகிறோம் என்பதில்தான் அமைகிறது. என் பணி அல்லது அனுபவத்தை இந்தியாவில் ஒரு மூன்று காரணிகளை எவ்வாறு சீரமைப்பது என்று சில ஆய்வுகள் மேற்கொண்டு திட்டங்கள் தீட்டி அரசிற்கு அறிவித்திருக்கின்றோம்.

1. மக்களின் நில உடைமை, பாதுகாப்பு மற்றும் அதன் மூலம் அரசு வருவாய்
2. ஊழல் ஒழிப்பு மற்றும் சாமானிய மக்களுக்கான சேவைகள்
3. முத்திரைத்தாள், பதிவுச் செயல்முறை போன்றவற்றை எளிமைப் படுத்துவது.

நில உடைமை, ஆவணங்கள், பதிவுகள் போன்றவற்றை அதன் உரிமையாளர்களுக்கு பாதுகாப்பான ஓர் அரசுச் செயல்முறைகளைக் கொண்டு வருவதன் மூலம் இந்தியாவில் எண்ணற்ற வழக்குகளையும் சிக்கல்களையும் தீர்க்க முடியும். தற்போதுள்ள நிலப்பதிவு முறை என்பது ஆங்கிலேயர்களால் முதலாக வங்காளத்தில் கொண்டு வரப்பட்ட ஒன்று. இதில் நாம் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. நிலங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் என்பது நாட்டு வருவாயில் முக்கியமான ஒன்று. எனவேதான் அதன் வருவாயை வசூலிப்பவருக்கு கலெக்டர் (Collector) என்ற பதவி ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது. தற்போது பல அலுவலகங்களில் அதன் ஆவணங்கள் தேட முடியாத அளவு குவிந்து கிடப்பதும் நில விற்பனை, வாங்கல் பரிவர்த்தனைகளில் ஏற்படும் சிக்கல்களை தீர்க்க முடியாமலும் உள்ளது. இந்த நவீன மின்னணுவியல் காலத்தில் மிகவும் எளிதாக்க முடியும். இதில் பல சட்ட திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம். தனி மனிதர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கும் வகையில் நிலச் சீர்திருத்த முறைகள் கொண்டு வருவது குறித்து ஒரு பெரும் திட்ட அறிக்கை தந்துள்ளேன். இது முறைப்படுத்தப்பட்டால் இந்தியாவின் மொத்த உற்பத்தி வருவாயில் 1.3 விழுக்காடு வருவாயை அரசு இதன் மூலம் மட்டுமே பெற முடியும்.

அடுத்தது ஊழல்; நம் நாட்டின் முக்கியமான நோய். இது புற்று நோய் போன்றது. உலக நாடுகள் பலவற்றில் இவை உண்டு எனினும் தற்போதுள்ள 177 பட்டியல் நாடுகளில் ஊழல் தடுப்பில் இந்தியா 94வது இடத்தில் உள்ளது. இதிலிருந்து நாம் முன்னேற வேண்டியது அவசியம். உலகில் சற்றொப்ப 600 கோடி மக்கள் ஊழலின் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இதில் அரசு மட்டுமல்ல மக்களும் ஒத்துழைக்க வேண்டும். இது பற்றியும் என் தலைமையில் அமைந்த குழு விரிவான அறிக்கையை அரசுக்குத் தாக்கல் செய்துள்ளது.

மக்கள் சேவையை எளிது படுத்துவதின் மூலம் நம் நாட்டின் மனித வளத்தையும் நேரத்தையும் சரியாகச் செலவு செய்ய இயலும். மின்னணுவியல், நாட்டு அடையாள அட்டை (ஆதார் கார்டு) சமுகப் பாதுகாப்பு எண் (SSN) போன்றவை அமல்படுத்தப்படும் இந்த வேளையில் இன்றும் அரசு அலுவலகங்களில் மக்கள் பல்வேறு சான்றிதழ்களைப் பெற நீண்ட வரிசையில் நிற்பதும் அதைப் பெறுவதற்கு பல்வேறு ஆவணங்கள் கேட்டு மக்களின் நேரத்தை வீணடிப்பதும் தேவையற்றது என்பது என் கருத்தாகும்.

பிறப்பு, இறப்பு, மணமுறை, பள்ளி கல்வி, மதிப்பெண் சான்றிதழ், மருத்துவம் போன்றவைகள் ஓர் அரசு நிறுவனத்தால் வன்படிகளாக (Hard Copy) கொடுக்கப்படுகின்றன. மற்றொரு அரசு நிறுவனத்தால் உறுதிப்பாட்டுக்காகக் கேட்கப்படுகின்றன. இது என்ன நியாயம்? கொடுப்பதும் அரசு, கேட்பதும் அரசு - அந்த நிறுவனங்கள் ஒன்றோடொன்று பேசிக் கொள்ள இயலாதா? சரிபார்த்துக் கொள்ள இயலாதா? ஏன் பொதுமக்கள் நேரம் வீணடிக்கப்பட வேண்டும்? ஒரு பல்கலைக் கழகம் சான்றிதழ் தருவதும் மற்றொரு பல்கலைக் கழகம் அதை கேட்பதும் எவ்வளவு நேரம் உழைப்பை விரயப்படுத்துகின்றது. இரண்டுமே கல்வித்துறைதானே. இதே போன்றுதான் பிற துறைகளும் உள்ளன. அனைத்தையும் மென்படிகளாக (Soft Copy) பொதுத்தளத்தில் வைத்து இயக்க முடியும். தேவையானோர் எந்த நேரத்திலும் அவற்றை கண்டு கொள்ள இயலும்.

தற்போது வங்கிகளில் பணமாற்றம், சரிபார்ப்பு செய்வது போல ஏன் அனைத்துச் சான்றிதழ்களும் மென்பொருள் வடிவங்களாக ஒரே இணைப்பில் செய்ய இயலாது? அரசு அலுவலகங்களுக்கு செல்லும்போது குறிப்பாக சாதாரண கீழ்த்தட்டு மக்கள்தான் பெரும்பாலும் பாதிக்கப்படுபவர்கள். எனவே இது குறித்தும் ஓர் விரிவான திட்டம் தயாரித்து அதைப் படிப்படியாக மராட்டிய மாநிலத்தில் நிறைவேற்றி வருகின்றோம். அந்த வகையில் தற்போது மராட்டிய மாநிலத்தில் நிலப் பதிவு மிகவும் எளிமையாக்கப் பட்டுள்ளது. தற்போது பொதுமக்கள் வருவாய் துறை அலுவலகங்களுக்கு போகாமலே கூட பதிவு செய்ய இயலும் என்ற நிலை உருவாகி உள்ளது.

தங்களின் இந்தச் சீர்திருத்தப் பணிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளனவா? 
நாம் நமது பணிகளை நம் அறிவுக்கும் சிந்தனைக்கும் ஒப்ப சீர்தூக்கிப் பார்த்து நடுவு நிலைமையுடன் செய்வது நல்ல பலனைத் தரும். எனக்கு எத்தனை விருதுகள் கிடைத்துள்ளன என்பதை எண்ணிப் பார்க்கவில்லை. என் திட்ட செயல்பாடுகளில் கிராம தூத் திட்டம் (Gram doodh), விவிதா (VIVIDHA), மின்னியல் செயல்முறை (E-Governance), இசரிதா (ISARITA) திட்டம் போன்றவைகள் அகில இந்திய அளவில் வெள்ளி, தங்கப் பதக்க விருதுகளை பெற்றுத் தந்துள்ளன. இவைகளை இந்தியாவின் பல்வேறு மாநில அரசுகள் செயல்படுத்த முனைந்துள்ளன. அதுவே என் மனநிறைவு ஆகும்.

“தமிழ் இலெமுரியா” வாசகர்களுக்கு என் அன்பான வாழ்த்துகள்.


-நேருரையாளர்: சு.குமணராசன்


Go Back