முந்திரிக் கொட்டை - 16-Apr-2017 05:04:29 PM

அந்த ஊரில்  கோபுவை அவன்  பேர்  சொல்லி அழைத்தால்  யாருக்கும்  தெரியாது. “முந்திரிக்  கொட்டை கோபு” என்று கேட்டால்தான்  அவனைத்  தெரியும்.

கோபு சாதாரணமாக எதிலும்  தன்னை முன்னிலைப்  படுத்திக்  கொண்டிருப்பான். வீதியில்  சாமி புறப்பாட்டு ஊர்வலமா? அவன்தான்  முதல்  தோள்  தூக்குவான். யார் வீட்டிலாவது கல்யாணமா, இவன்தான்  வரவேற்பு இடத்தில்  முன்னின்று வரவேற்பான். கோயிலில்  மணி அடிக்க  வேண்டுமா? இவன்தான்  முன்னால்  போய்  மணி அடிப்பான். ஏன், தீவட்டி தூக்குவதிலும்  அவன்தான்  முதலில்  நிற்பான். ஆக இதன்  காரணமாக அவனுக்கு “முந்திரிக்  கொட்டை கோபு” என்று பெயர் வந்து விட்டது.

ஒருநாள்... அடுத்த தெரு குப்பத்தில்  குடிசை வீடுகள்  தீப்பிடித்து எரியத்  தொடங்கின. கோபு ஓடிச்  சென்று தீயணைப்புப்  படைக்கு தொலைப்பேசியில் தெரிவித்து விட்டு, தானும்  ஒரு வாளியை எடுத்துக்  கொண்டு, பக்கத்து குட்டையிலிருந்து தண்ணீரை முதலில்  எடுத்து வந்து எரியும்  குடிசையின்  தீயணைப்பில்  ஈடுபட்டான். அவன்  முன்  முயற்சி குடிசை எரிவதை ஓரளவு தடுத்தது. அதற்காக அந்த ஊர்  மக்கள்  முந்திரிக்  கொட்டை கோபுவைப்  பாராட்டினார்கள்.

மறுவாரம்... ஊர்  பஞ்சாயத்து கூடின. இனி, யாரும்  கோபுவை “முந்திரிக்  கொட்டை கோபு” என்று அழைக்கக்கூடாது. இனிமையாக இனி அவனை “முந்திரி பருப்பு கோபு” என்றே அழைக்க வேண்டும். அப்படி அவனை மேன்மைபடுத்த வேண்டும்  என்று முடிவு செய்தனர்.

- முக்தா சீனிவாசன்


Go Back