யாருக்கும் இல்லை - 16-Apr-2017 05:04:22 PM

கவிஞர் கண்ணிமை எழுதிய ‘முதுமையில் சுவை மறந்தேன்’ மிக அருமை இது கற்பனைக் கவிதை அல்ல உண்மைக் கவிதையாய் இனித்தது. அசிரியருரை படித்தேன். தமிழனின்  நிலைதான் தடுமாற்றம் என்று நான் நினைத்துக் கொண்டிருந்த வேளையில் இந்தியாவே இப்படித்தான் தடுமாறிக் கொண்டும் தடம் மாறி புரண்டு புரண்டும் நகர்வதைக் கண்ணுற்றேன். ஒடுக்கப் பட்டோரின் ஓட்டு வங்கி எங்கேபோகிறது? ஒன்று சேரக்கூடாத பா. ச. க விடம் போகிறது. இரண்டு யாருக்கும் இல்லை என்ற (நோட்டா) பிரிவுக்குப் போகிறது என நினைக்கிறேன்.
ஞா.சிவகாமி, போரூர் - 600 116

மெரினா கடற்கரை
‘கோபுரமும் கூழாங்கற்களும்’ தலையங்கம் இன்று தமிழ் நாட்டின் அவலங்களை நன்கு வெளிப்படுத்தியது. உலகிற்கே அரசியல் அறம் கூறிய திருக்குறள் பிறந்த மண்ணில்தான் இத்தகைய அறக்கேடான ஆட்சி நடை பெறுகிறது. அதை மாற்ற இளைஞர்கள், மாணவர்கள், அறிஞர்கள் பண்பாளர்கள் இணைந்து முயலவேண்டும். அதுதான் இன்றைய தேவை. அறிஞர்கள், கொள்கைப் பற்றாளர்கள் பொது நோக்குடையவர்களின் ஆட்சி அமையவேண்டும். அதற்கு மெரினா கடற்கரை கூட்டம் வழிகாட்டுகிறது.
சோ.க. அறிவுடைநம்பி, சோமன் கோட்டை - 638 661

எழுத்தோட்டம்
ஆசிரியருரையில் மக்களே போல் கயவர் உரையை வாசித்தேன். காந்தி பிறந்த மண்ணில் சாதியமும் மதமும் இன்று தலை தூக்கி தலித் இளைஞர்களை தாக்கி வருவதை கண்டித்தது காலத்தின் கட்டாயம். நாடு விடுதலை அடைந்து 70 ஆண்டுகளாகியும் தீண்டாமைத் தீயை அணைக்க நினைத்த காந்தியின் கனவு  நிறை வேறவில்லை என்னும் அத்தேசு ஐயாவின் எழுத்தோட்டம் அம்பலபடுத்தியுள்ளது. சாக்ரட்டீசின் சிந்தனை அறிவை கூர் தீட்டியது. 
ந.ஞானசேகரன், திருலோக்கி - 609 904

இரக்கம்
‘முதுமையில் சுவை மறந்தேன்..!’ கவிஞர் கண்ணிமையின் கவிதை அருமையாக முதுமை நிலையை உணர்த்துகிறது. 
தின்றார்கள் இரக்கம் இல்லார்
திரைக்குப்பால்  உண்டாலென்ன? 
இந்த வரிகள் முதுமையாளர்களின் உள்ளக் கிடக்கை காட்டுகிறது.
கோ.ப.நா., மேட்டூர்  - 636401

மதவெறி
பங்குனி இதழ் படித்தேன். அதில் சிந்திக்க, செயல் படுத்த வேண்டிய அரிய செய்திகள் பல. அவற்றுள் ஆசிரியருரை வெகு சிறப்பு. யானைக்கு மதம் பிடித்தால் காட்டை அழிக்கும். மனிதனுக்கு மதம் பிடித்தால் நாட்டையே அழிப்பான் என்பதற்குச் சான்று இந்திய  துணைகண்டமே போதும். கற்கும் மாணவர்களின் கழுத்தையே நெறிக்கிறது மதவெறி. சாதித் திமிர் மனித நேயமே இல்லாத மதம் மக்களுக்கு எதற்கு? ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு சாவதற்கா மதம்? மாணவர்கள் கொலை செய்யப் படுவது ஆட்சிக்கே ஒரு களங்கம். அவிழ்க்க முடியாத சிக்கலாகி விட்டால் பிறகு அறுத்தெரிய வேண்டிய அவலமே ஏற்படும். ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும். 
க. தியாகராசன், குடந்தை - 612501

அம்பேத்கர் சிந்தனைகளை... 
ஆசிரியர் உரையில், தமிழ்நாட்டில் இளைய சமுதாயத்தின் விழிப்பு தேவை பற்றிய வேதனையில் வெடித்த வினா கண்டேன். நாட்டில் எவ்வளவோ  நீதிமன்றங்கள் உள்ளன. பெரியத் தலைவர்கள் உள்ளனர். இவைகளை மறந்து விட்டு எல்லாவற்றுக்கும் விடியல்  நாயகர்களாக மாணவ, மாணவியரை எதிர்ப் பார்ப்பதைக் கண்டு அழுவதா? சிரிப்பதா? இளைஞர்கள், மாணவ, மாணவியர்கள் மட்டும் மெரினாவிலும், நெடுவாசல்களிலும் போராடி போராடி போலீசாரிடம் அடிபட்டு சாக வேண்டுமா? அம்பேத்கர் சிந்தனைகளை பின்பற்றி ஆட்சி செய்திருந்தால் மாயாவதி இப்படியான படு தோல்வியை சந்தித்திருக்க மாட்டார். வாய்ப்புகளை தவறாகப் பயன் படுத்திவிட்டு பா.ச.பா.வை வசைபாடுவது வீண்.
மூர்த்தி, சென்னை - 600 100

சீர்திருத்தவாதிகள்
இதழுக்கே சிறப்பளிப்பதாக ஆசிரியருரை அமைந்துள்ளது. ‘மக்களே போல்வர் கயவர்’ முழுவதும் உண்மை. அண்மைக் காலத்தில் கயவர்களின் கொடுஞ்செயல்கள் அதிகரித்துள்ளன காரணம் என்ன? சமுதாயச் சீர் கேடுகள்தான்!  பெரியார், அம்பேத்கர் போன்ற சீர்திருத்தவாதிகள் வெறும் உதட்டளவில் போற்றப்பட்டனர். அவர்கள் கொள்கைகளை எவரும் பின்பற்றவில்லை. திராவிடம் என்று  கூறப்படும் ஆந்திரம், கேரளம், கருநாடகம் ஆகிய மாநிலத்தவர்கள் கூட நம்மிடம் நட்பு உணர்வுடன் இருப்பதில்லையே! தமிழர்களே  இனியாவது  விழிப்புணர்வோடு வாழ முயலுங்கள். 
த.சுப்ரமணியன், செகந்தராபாத் - 500061

வாய்மொழி
மாசி இதழில் வெளிவந்த ‘விசிறி’ சிறுகதை இறை ச.இராசேந்திரனின் எழுத்தின் ஆளுமையைப் படம் பிடித்துக் காட்டியது. கிராமங்களில் வாழும் மண்ணின் மைந்தர்களையும் அவர்களின் வாழ்வியலையும் அற்புதமாக படம் பிடித்துக் காட்டினார். மேல்தட்டில் இருந்து எழுதியிருந்தால் நிச்சயம் பல பரிசுகள் அவரைத் தேடி பாய்ந்திருக்கும். வாய் மொழியின் வார்த்தைகளுக்கு அர்த்தம் புரிந்தது. 
பம்பாய் புதியவன், காஞ்சிபுரம் - 603102


Go Back