வடகொரியா சிக்கல்: சர்வதேச நாடுகள் சமரசம் செய்ய போப் அழைப்பு - 30-Apr-2017 05:04:35 PM

வடகொரியாவின் அணு ஆயுத நடவடிக்கைகள் தொடர்பாக, அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே பதட்டம் அதிகரித்து வரும் நிலையில், இப்பிரச்சனையில், சர்வதேச நாடுகள் தலையிட்டு சமரசம் செய்ய முன்வர வேண்டும் என்று போப் ஃபிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உதாரணமாக, இதுபோன்ற பிரச்சனைகளில் நார்வே எப்போதும் உதவத் தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய நெருக்கடி, பேரழிவை ஏற்படுத்தும் போராக மாறக்கூடிய சாத்தியக்கூறு இருப்பதாகவும், அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் மனிதகுலத்தின் கணிசமான பகுதி அழியக்கூடிய நிலை இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.

வடகொரியா மீண்டும் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை நடத்திய நிலையில், அது ஏவிய உடன் வீழ்ந்து நொறுங்கிவிட்டதாக அமெரிக்காவும் தென்கொரியாவும் அறிவித்த சூழ்நிலையில், போப் இந்த வேண்டுகோளை விடுத்திருக்கிறார்.

வடகொரியாவின் ஏவுகணை, வடபியாங்யாங்கில், தென் பியாங்கன் மாகாணத்தில் ஏவப்பட்டதாக தென்கொரியா தெரிவித்தது.

வடகொரியாவின் இந்த நடவடிக்கை, அதன் கூட்டாளி நாடான சீனா மற்றும் அதன் அதிபரை அவமதிக்கும் நடவடிக்கை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டினார்.

சமீபத்தில் இருநாட்டுத் தலைவர்களும் சந்தித்தபோது, வடகொரியப் பிரச்சனையில் தீர்வு காண சீனா கடுமையான முயற்சிகளை எடுப்பதாக ஜி ஜின்பிங்கிற்கு டிரம்ப் பாராட்டுத் தெரிவித்தார்.

குறிப்பாக, வடகொரியப் பிரச்சனை குறித்து ஐநா பாதுகாப்புக் கவுன்சில் விவாதித்த சில மணி நேரங்களில் வடகொரியா சோதனை நடத்தியிருக்கிறது.

அதே நேரத்தில், எகிப்து பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய போப் ஃபிரான்சிஸ், உலக அளவில் மத்தியஸ்தம் செய்யும் நடவடிக்கையில் பலர் இருப்பதாகவும், உதாரணமாக நார்வே போன்ற நாடுகள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நிலைமை மிகவும் சிக்கலாகி வருவதாகவும், ஆனால், பேச்சுவார்த்தை மற்றும் ராஜீய ரீதியிலான நடவடிக்கைகளை சரியான வழி என்றும் போப் சுட்டிக்காட்டினார்.

கடந்த 2003-ஆம் ஆண்டு வடகொரியாவின் அணுத் திட்டம் தொடர்பாக, வடக்கு மற்றும் தென் கொரியா, அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ரஷ்யா ஆகிய 6 நாடுகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், 2009-ல் வடகொரியா அந்தப்பேச்சுவார்த்தையில் இருந்து விலகிக்கொண்டது.

ஏவுகணை எந்த வகை?

இரு கொரியாக்களும் ராணுவப்பயிற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் அந்தப் பிராந்தியத்தில் சமீப காலமாக பதட்டம் அதிகரித்து வருகிறது.

வடகொரிய கடலில் அமெரிக்காவின் புதிய விமானந்தாங்கிக் கப்பல்

வடகொரியா சிறிய ரக அணு ஆயுதங்களைக் கொண்ட, அமெரிக்காவைத் தாக்கக் கூடிய ஏவுகணைகளைத் தயாரிக்கும் முயற்சியில் வடகொரியா தொடர்ந்து ஈடுபட்டிருப்பதாக நம்பப்படுகிறது.

சனிக்கிழமையன்று வடகொரியா ஏவியது எந்த வகை ஏவுகணை என்பது இன்னும் தெளிவாகவில்லை. அநேகமாக, கேஎன்-17 என்று அழைக்கப்படும் நடுத்தர ரக ஏவுகணையாக இருக்கலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே இரண்டு முறை பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது.

இதனிடையே, அமெரிக்காவின் விமானந்தாங்கி போர்க்கப்பல் யுஎஸ்எஸ் கார்ல் வில்சன் மற்றும் துணை போர்க் கப்பல்கள் வடகொரிய தீபகற்பப் பகுதியை வந்தடைந்துவிட்டன.

தேவைப்பட்டால், வடகொரியாவுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.

ஏவுகணை தோல்விகள் சகஜம்தானா?

இந்த மாதத்தில் மட்டும் வடகொரியாவின் இரண்டு ஏவுகணை முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன. ஆனால் அது எப்போதுமே தோல்வியாகத்தான் இருக்கும் என்று கருத முடியாது என்கிறார் நிபுணர் ஒருவர்.

தேவைப்பட்டால் வடகொரியா மீது ராணுவ நடவடிக்கை: அமெரிக்கா அறிவிப்பு

"சோதனையின்போது, பல அம்சங்களில் தோல்வி ஏற்பட வாய்ப்புண்டு. ஒவ்வொரு புதிய ஏவுகணையின்போதும் பல சிக்கல்கள் ஏற்படும்" என்று மான்டெரியின் மிடில்பரி சர்வதேச ஆய்வுகள் மையத்தின் ஆய்வு நிபுணர் ஜெஃப்ரி லூயிஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.

விண்வெளிக்குச் சென்ற முதல் அமெரிக்கரான ஆலன் ஷெபார்டை அனுப்ப பயன்படுத்தப்பட்ட ராக்கெட், பத்தில் ஒன்பது முறை சோதனையில் தோல்வியைடந்தது என அவர் சுட்டிக்காட்டினார்.

வடகொரியாவின் பழைய ஏவுகணைகள் சிறப்பாக செயல்படுவதாக தங்கள் மையம் திரட்டிய தகவல்களில் தெரியவருவதாகவும் அவர் கூறியுள்ளார்.Go Back