பண்டைத் தமிழர் - ஊராட்சி முறை - 15-Jul-2014 03:07:03 AM

ஞ்சாயத்து அல்லது ஊராட்சி என்பது தமிழகத்திற்குப் புதியது அல்ல.  ஒவ்வோர் ஊர் மக்களும், தங்களுடைய பொதுநல வாழ்க்கையைப் பரிபாலிப்பதற்காகத் தேர்ந்தெடுத்து அமைக்கும் ஊராட்சியே பஞ்சாயத்து.

கிராம சபை அல்லது ஊர்ச் சபை என்று தமிழ் நாட்டில் வழங்கப்பட்ட இப்பஞ்சாயத்து, மத்திய இந்தியாவில் ‘‘பஞ்சமண்டலிகள்’’ என்ற பெயராலும், பீகாரில் ‘‘கிராம ஜன பாதங்கள்’’ என்ற பெயராலும், இராஜஸ்தானில் ‘‘பஞ்ச குலங்கள்’’ என்ற பெயராலும் வழக்கத்தில் இருந்து வந்தது.

தமிழ்நாட்டில் சேர & சோழ & பாண்டியருடைய முடியாட்சி நடைபெற்றாலும், ஒவ்வொரு கிராமத்திலும் ஊர்ச்சபை என்ற பெயரில் குடியாட்சி நடைபெற்றது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே மக்களாட்சி முறை இவ்வகையில் நிலவியது உண்மையில் நாம் பெருமைப்படத்தக்கதாகும். காலவேறுபாடு, அரசியல் நிலவரம், அக்காலச்சூழ்நிலை ஆகிய பல்வேறு காரணங்களால் அந்த ஆட்சியின் பெயரிலும், பொறுப்புக்களிலும் வேறுபாடு காணப்பட்டாலும் அதன் அடிப்படைத் தத்துவம் ஒன்றுதான்.

ஊராட்சி முறை நம் நாட்டில் எவ்வளவு பழைமையானது என்பதை அறுதியிட்டுக் குறிப்பிட ஒரு சில சான்றுகள் உள்ளன. பழைய வரலாற்றுச் சாசனங்களின் துணைகொண்டு பார்த்தால் கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்தே ஊராட்சிமுறை செயல்பட்டு வந்திருப்பது தெரிகிறது. அதற்கு முன்னதாகவும் இது வழக்கில் இருந்து வந்ததென்பதற்கு பழந்தமிழ் இலக்கியங்களான சங்க நூல்கள் சான்று கூறுகின்றன.

சிலப்பதிகாரம், மணிமேகலை, மதுரைக்காஞ்சி ஆகிய நூல்களில் அரசனுக்கு உறுதுணையாக ஐம்பெருங்குழு, எண்பேராயம் என்ற இரண்டு பேரவைகள் இருந்துவந்தன என்று கூறப்பட்டுள்ளன. மேலும் சங்க நூற்களில் ‘‘மன்றம்’’, ‘‘பொதியில்’’ ஆகியவை பற்றிய குறிப்புக்களும் காணப்படுகின்றன. இந்த ‘‘மன்றம்’’, ‘‘பொதியில்’’ ஆகியவற்றிற்கு, ‘ஊருக்கு நடுவே எல்லோருக்கும் இருக்கும் ‘மரத்தடி’  என்று விளக்கமும் தந்துள்ளார்கள். இத்தகைய மன்றங்களே பிற்காலத்தில் வழக்கில் இருந்த கிராம சபைகளின், அதாவது இன்றைய பஞ்சாயத்துக்களின் முன்னோடிகளாகும். 

மூவேந்தர்களின் நாடுகள் நிருவாக  வசதிக்காகப் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. அந்தப் பிரிவுகள் இயற்கை அமைப்பை ஒட்டி இருந்தன.
சோழப் பெருநாடு பல வளநாடுகளாவும், ஒவ்வொரு வளநாடும் பல நாடுகளாகவும், ஒவ்வொரு நாடும் பல ஊர்களாவும் பிரிக்கப்பட்டிருந்தது. சிற்றூராயின், பலவூர் சேர்ந்தும், பேரூராயின் தனித்தும் ஊர் என்னும் அடிப்படை ஆள்நில உறுப்பாக வகுப்பட்டிருந்தது. 
பாண்டியப் பெருநாடு பல நாடுகளாகவும், ஒவ்வொரு நாடும் பல கூற்றங்களாவும், ஒவ்வொரு கூற்றமும் பல கூறுகளாகவும் அல்லது ஊர்களாகவும் வகுக்கப்பட்டிருந்தது. ஊர் என்பதற்குப் பதிலாகப் பிற்காலத்தில ‘கிராமம்’ என்ற வடசொல் வழங்கப்பட்டது. 

சேரப் பெருநாடும் பாண்டியப் பெருநாடு போன்றே வகுக்கப்பட்டிருந்தது. இந்த ஊர் அல்லது கிராமத்தின் நிருவாகத்தைக் கவனிக்க அரசனின் ஆணைப்படி அந்த ஊரில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சபை இருந்தது. அதை ஊர் என்ற பெயராலேயே வழங்கி வந்தனர். அச்சபையார்க்கு ‘‘ஆளுங்கணம்’’ என்றும் ‘‘கணப்பெருமக்கள்’’ என்றும் ‘‘வாரியப் பெருமக்கள்’’ என்றும் ‘‘கணவாரியப் பெருமக்கள்’’ என்றும் பெயர். 

ஊர்ச்சபையானது, ஊராட்சி பற்றிய பல்வேறு காரியங்களைக் கவனிப்பதற்குப் பல்வேறு வாரியங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. வாரியம் என்பதற்கு ‘மேற்பார்வை’ அல்லது ‘மேலாண்மை’ என்பது பொருள். பெரும்பாலான கிராமங்களில் குறைந்த அளவு ஏழெட்டுக் குழுக்களாவது இருந்து நிருவாகத்தை நடத்தி வந்தன. அவை

1. ஆட்டை வாரியம்
2. தோட்ட வாரியம்
3. ஏரி வாரியம்
4. கழனி வாரியம்
5. பஞ்சவார வாரியம்
6. கணக்கு வாரியம்
7. கலிங்கு வாரியம்
8 தடிவழி வாரியம்
9. பொன் வாரியம்
என்பனவாகும்.

‘சம்வத்சர வாரியம்’ என்று வடமொழியில் கூறப்பட்ட ஆட்டைவாரியம், ஊரைப் பற்றிய பொதுக்காரியங்களைம், அறமுறை, குற்றத்தீர்ப்பு முதலியவற்றையும் கவனித்தது. இது மற்றெல்லாக் குழுக்களைக் காட்டிலும் உயர்ந்ததும், முக்கியமானதுமாகும்.  இதில் பன்னிரண்டு பேர் உறுப்பினராக இருந்தார்கள். இவர்களது பதவிக் காலம் முந்நூற்றறுபது நாட்கள் என்று கல்வெட்டுக்கள் திட்டவட்டமாகக் குறிப்பிடுகின்றன. இதில் உறுப்பினராக இருக்கச் சில தகுதிகள் உண்டு. தோட்ட வாரியத்திலும், ஏரி வாரியத்திலும் அங்கத்தினராக இருந்து அனுபவம் பெற்றவராகவும், அறிவிலும், வயதிலும் முதிர்ந்தவராகவும் இருக்க வேண்டும். ‘‘வித்யா விருத்திரையும் வயோ விருத்தர்களையும்’’ என்று கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.

தோட்டம், தோப்பு, புன்செய் முதலியவற்றைக் கவனிப்பது தோட்ட வாரியமாகும். மேற்கூறியவற்றை ஒழுங்காகப் பராமரித்து வருவதும், இவற்றில் இருந்து கிடைக்கும் மகசூல்களை விற்று முதலாக்குவதும் அதைச் சரியான வழியில் பயன்படுத்துவதும், கிராமப் பூங்காக்களைப் பராமரித்துச் சுத்தமாக வைத்திருப்பதும் இவ்வாரியத்தின் பொறுப்புக்களாக இருந்தன. இதில் பன்னிரண்டு உறுப்பினர்கள் இருந்தார்கள்.

ஏரி, குளம், ஆறு, முதலிய நீர்நிலைகளைக் கவனிப்பது ஏரி வாரியம். தேவையான சமயங்களில தண்ணீர்ப் பந்தல் அமைத்து, குடிநீர் வழங்கச் செய்வதும் இதன் பொறுப்பாக இருந்தது. இதில் ஆறுபேர் உறுப்பினராக இருந்தார்கள். 

நன்செய் நிலங்களைக் கவனிப்பது கழனிவாரியம் ஆகும். இதிலும் ஆறு உறுப்பினர்களே இருந்தார்கள். 

வளமையான காலங்களில் பணமாகவோ, தானியமாகவோ செலுத்தப்பட்ட நிலத்தீர்வையைச் சேமித்து, பஞ்சகாலத்தில பயன்படும் படித்தொகுத்து வைப்பது பஞ்சவார வாரியமாகும்.

பெரும்பாலான கிராமங்களில் நிர்வாகத்தை நடத்த ஐந்து குழுக்கள் இருந்தனவென்று அறிகிறோம். மேற்பார்வையிட ஒரு தனிக்குழு இருந்தது. அதுவே பஞ்சவார வாரியம் என்று அழைக்கப்பட்டதென்று ஆராய்ச்சியாளர் சிலர் கூறுவர்.

கணக்கு வாரியம், ஊர்ச்சபைக் கணக்குகளைக் கவனித்து வந்தது. ஏரி, குளங்களில் உள்ள கலிங்கு, மதகுகளைக் கவனிப்பது கலிங்கு வாரியமாகும்.

ஊரிலும், அக்கம் பக்கத்திலுமுள்ள பெருவழிகளைக் கவனிப்பது தடிவழி வாரியமாகும். ஊர்க்காவல் வேலைகளையும் இக்குழுவினர் செய்து வந்தார்கள். 
ஊரில் வழங்கும் நாணயங்களைக் கவனித்து நற்காசுகளைச் செலாவணி ஆக்குவது பொன் வாரியத்தின் பொறுப்பாக இருந்தது. குடும்ப வாரியம் நிலங்களை உழுது பயிரிடுவோருடைய நலன்களைப் பாதுகாத்து வந்த குழுவாகும்.

மேலே கூறப்பட்ட குழுக்களைத் தவிர, கிராமத்தில் உள்ள கோவில்களை நிருவாகம் செய்ய கோவில் வாரியமும் இருந்தது. 

ஒவ்வொரு வாரியமும் தனிச்சபை அல்லது சிறுகுறி என்றும், எல்லா வாரியமும் சேர்ந்து மகாசபை அல்லது பெருங்குறி என்றும் கூறப்படும். இந்தக் குழுக்களின் கூட்டங்கள் கோவில் மண்டபத்தில் நடைபெற்றன. தாரை, காளம் முதலிய கருவிகளை முழக்கி உறுப்பினர்களைக் கூட்டங்களுக்கு வரவழைப்பது வழக்கமாகும். 

ஊர்ச்சபைக் கணக்கெழுதுபவன் ‘கரணத்தான்’ என்றும், ஊர்க்காவல் செய்பவன் ‘‘பாடிகாவல்’’ என்றும் அழைக்கப்பட்டனர். கொடிக்கால்கள் தோட்டந்தோப்புக்கள் ஆகியவற்றின் வேலைகளைக் கவனிப்பதற்கு ‘‘வேலிநாயகம்’’ என்ற அலுவலாளனும், ஊர்ச்சபை வேலைக்காக ‘‘வெட்டி’’ என்ற வெட்டியானும் இருந்தனர்.

பழைய ஊராட்சிக் குழுக்களின் தேர்வு முறை பற்றியும் ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

செங்கற்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த உத்திரமேரூர் சதுர்வேதிமங்கலத்தில் உள்ள வைகுண்டப் பெருமாள் கோயிலில் காணக்கிடக்கும் கல்வெட்டுக்கள் இத்தேர்தல் முறைபற்றி விவரமாகத் தெரிவிக்கின்றன.

ஒவ்வோர் ஊரிலும் ஆண்டுதோறும் சபைத் தேர்தல் நடைபெற்றது. சபையின் பதவிக்காலம் முடிவடையும் சமயத்தில் அதனைக் கண்காணிக்கும் நாட்டதிகாரிக்கோ, ஊரதிகாரிக்கோ ஊர்ச்சபைத் தேர்தலை நடத்திவைக்கும்படி அரசினிடமிருந்து ஆணை வரும். ஆணைபெற்ற அதிகாரி உடனே அதை ஊர்ச் சபைக்குக் காட்டுவார். சபையினர் அதைத் தலைமேற்கொண்டு கண்ணிலொற்றி அதன்படிச் செய்யத் தொடங்குவர்.

ஒவ்வோர் ஊரும் தேர்தல் காரணமாகப் பல தொகுதிகளாப் பிரிக்கப்பட்டிருக்கும். உத்திரமேரூர் முப்பது தொகுதிகளையும், தஞ்சைமாவட்டத்தில் இன்று ‘செந்தலை’ என்று வழங்கப்படும் சந்திரலேகை சதுர்வேதி மங்கலம் அறுபது தொகுதிகளையும் கொண்டிருந்தன. 

இப்போது நடப்பதுபோல் அதிகமான வாக்குகள் பெற்றவரையே தேர்ந்தெடுக்கும் முறை அந்த நாளில் இல்லை. தவிர, வேட்பு மனு தாக்கல் செய்தல், தேர்தல் பிரச்சாரம், கட்சி, பிரதி கட்சி ஆகியவை இல்லாமலேயே தேர்தல் நடந்தது. ஆனால் ஊர் மக்கள் முக்கியமாகக் கவனிக்க வேண்டியிருந்தவை வாரியத்திற்கு உறுப்பினர் ஆகத் தகுந்தவர் யார், தகுதி அற்றவர் யார் என்பதேயாகும். தகுதிபெற்றவர் அனைவர் பெயரையும் எழுதித் திருவுளச் சீட்டுப் போட்டு அவர்களினின்று நியமனம் செய்யும் முறையே வழக்கில் இருந்தது.

  • சிறந்த கல்வியுடையவர்,
  • காரியங்களைச் செய்து முடிக்கும்  ஆற்றல் உடையவர், 
  • சொந்த மனையில் கட்டிய வீட்டில் குடியிருப்பவர், நியாயமான வழியில் பணம் சம்பாதித்தவர், ஒழுங்காகத் தீர்வை செலுத்தப்படுகிற கால்வேலி நிலம் உடையவர். முப்பந்தைந்து வயதுக்கு மேல் எழுபத்தைந்து வயதுக்குள் உள்ளவர்கள். 
  • முந்திய மூன்று ஆண்டுகளில் எந்த வாரியத்திலும் இல்லாதவர் 

ஆகியோரே தேர்ந்தெடுக்கப்படுவதற்குத் தகுதி உடையவராவார்.  தேர்ந்தெடுக்கத் தகாதவர் யார் என்பதற்கும் விளக்கம் உண்டு. 

  • பஞ்சமாபாதகம் செய்தோர்,
  • ஊர்க் குற்றப் புத்தகத்தில பதிவு செய்யப்பட்டோர்.
  • குற்றம் காரணமாகக் கழுதை மீது ஏற்றப்பட்டோர் 
  • கையூட்டு வாங்கியவர். முறை கெட்ட மணம் செய்து கொண்டவர்கள். 
  • மேற்கண்டவர்களின் உறவினர்கள்
இவர்களெல்லாம் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு உரியவர்களல்லர்.

தேர்தல் நாளில் ஒவ்வொரு தொகுதியிலுமுள்ளவர்கள் அத்தொகுதியில் மையமான இடத்தில் கூடுவார்கள். அந்த இடத்தில் வாய்ப்பாகம் குறுகிய ஒரு மட்குடம் வைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு ‘‘குடும்பிலும்’’ தகுதியுள்ளவர்களின் பெயர்களை ஓலைகளில் எழுதி ஒரு கட்டாகக் கட்டி, குடத்தில் இடுவர்.  ( குடம் & தற்கால வார்டு)

அன்று பெரியோர் சிறியோர் உள்பட கிராம மக்கள் அனைவரும் கோயில் மண்டபத்திலோ அல்லது வேறு பொது இடத்திலோ கூடுவார்கள்.

இக்கூட்டத்திற்குக் கிராமக் கோயில்களில் பூசை செய்யும் நம்பிமார்கள் அனைவரும் வந்திருப்பார்கள். குடவோலைக் குடங்கள் கூட்டத்தின் நடுவில் வைக்கப்படும். நம்பிமார்களில் முதியவர் எழுந்து ஒவ்வொரு குடத்தையும் எடுத்து, உயரே தூக்கி, அனைவருக்கும் தெரியும்படி காட்டிவிட்டுக் கீழே வைப்பார். இந்தக் குடங்களுக்குப் பக்கத்தில காலியான ஒரு மட்குடமும் வைக்கப்பட்டிருக்கும். பின்னர் அம்முதியவர் நன்மை தீமை தெரியாத ஒரு சிறுவனைக் கொண்டு குடவோலை உள்ள குடங்களில் ஒன்றைக் குலுக்கி, அதிலுள்ள நறுக்குகளில் ஒரு நறுக்கை எடுக்கச் செய்வார். இந்த நறுக்கை வாங்கும்போது தன் வலக்கை ஐந்து விரல்களையும் விரித்து வாங்கி, அதில் வரையப்பட்டுள்ள பெயரை உரக்கப் படிப்பார்.

பிறகு அதைக் கூடியுள்ள நம்பிமார் ஒவ்வொரு வரும் வாங்கிப் படிப்பார்கள். அதன் பிறகு அந்தப் பெயர், கரணத்தானால் ஓர் ஓலையில் குறிக்கப்படும். இதேபோல் ஓர் ஊரில் முப்பது தொகுதிகள் இருந்தால் முப்பது தொகுதிக்கும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அவர்களில் வயதிலும் அறிவிலும் முதிர்ந்தவர்களும், ஏற்கெனவே ஏரி வாரியம், தோட்ட வாரியம் ஆகிய குழுக்களில் இருந்தவர்களுமாகப் பன்னிரண்டு பேர் முதலாவது ஆட்டை வாரியத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மீதியிருப்பவர்கள் மற்ற வாரியத்தினராகத் தகுதிப்படி அமர்த்தப்படுவார்கள். 

ஓராண்டுப் பதவிக்காலம் உள்ள இந்த உறுப்பினர்களுக்கு எவ்வித ஊதியமும் இல்லை. கடமை தவறியவரும் குற்றம் செய்தவரும் உடனே குழுவிலிருந்து நீக்கப்பட்டு, குற்றப் புத்தகத்தில் பதிவு செய்யப்படுவர். கிராம பரிபாலனத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊர்ச்சபையினர் நீதி வழங்கிய முறையும் பெருமைக்குரிய செய்தியாகும்.

பரம்பரை வழக்கம், எழுத்து மூலமான ஆதாரம், சாட்சி ஆகிய மூன்றின் துணைகொண்டு வழக்கு விசாரணைகள் நடைபெற்றன.

பெரிய புராணத்தில் அந்தணனாக வந்த இறைவனுக்கும், நம்பி ஆரூரனாகிய சுந்தரமூர்த்தி நாயனாருக்கும் ஏற்பட்ட வழக்கை, திருவெண்ணெய் நல்லூர்ச் சபையினர் விசாரித்து நாம் அறிந்ததே.

பல சமயங்களில் ஊர்ச்சபையினரே கல்விச் சாலைகள் நடத்தி வந்தனர். புதுச்சேரிக்குப் பக்கத்தில் உள்ள வாகூரிலும், அதற்குப் பக்கத்தில் உள்ள திரிபுவனி, எண்ணுயிரம் என்ற இடங்களிலும் கல்விச் சாலைகளை ஊர்ச்சபையினரே நடத்தி வந்தனர் என்று அறிகிறோம். 

செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள திருமுக்கூடலில் திருமால் ஆலயத்தையொட்டி ஒரு ஆதுலர் சாலை & அதாவது மருத்துவ நிலையம் இருந்தது. அங்கே மாணவர்களுக்கு மருத்துவமும் கற்பிக்கப்பட்டு வந்தது. இந்த மருத்துவ நிலையத்தைக் கோயில் வாரியத்தினரே நடத்தி வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கிரேக்க நாட்டு நகரக் குடியரசு (Greek City States) களைப் போன்று நமது பழங்காலப் பஞ்சாயத்துக்கள், கிராமக் குடியரசாகத் திகழ்ந்து வந்தன. நாட்டில் அரச பரம்பரைகள் ஒன்றன் பின்னர் ஒன்றாக மறைந்தாலும், அடுத்தடுத்துப் பல அரசியல் மாறுதல்கள் ஏற்பட்டாலும், இக்கிராமப் பஞ்சாயத்துக்கள் நாட்டில் நிருவாக ஒழுங்கைச் சிறப்பாகக் காப்பாற்றி வந்தன என்பது தமிழகத்தின் தனிப்பெரும் சிறப்பாகும். ஊராட்சி முறையில், மக்களுக்கு நலம் தரும் பணிகளில், பழைய பெருமைகளை நிகர்க்கும் புதிய சாதனைகளை நாம் அடைய வேண்டும். இன்று மக்கள் தொகை பெருகியுள்ளது. வாழ்க்கைத் தேவைகள் பெருகியுள்ளன. மக்களின் மேலான வாழ்வுக்கு உதவக்கூடிய புதுப்புதுச் சாதனங்கள் வந்துவிட்டன. இவற்றையெல்லாம் பயன்படுத்தி, ஒளிமயமான வருங்காலத்தை உருவாக்க இன்றைய ஆட்சியாளர்கள் முனைய வேண்டும். 

- வை.நடராசன்

(1968  & இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டு மலரிலிருந்து)


Go Back