ஊமத்தை - 18-Aug-2015 11:08:12 AM

மத்தஞ் செடி. இது 2 முதல் 3 அடி வரைக்கும் உயரும். பூ வெளுப்பு. வெளிப்பக்கம் சிறிது செந்நீல நிறம். காய் பந்து போலும், முட்கள் அடர்ந்தும் இருக்கும். இது எங்கும் விளையும். இதன் பூவையும் மொக்கையும் தென் நாட்டில் எல்லா மருந்துக் கடைகளிலும் விற்பார்கள். இதற்கு நஞ்சின் குணங்கள் உண்டு. ஆதலால் வெகு கவனமாய் இதை பயன்படுத்த வேண்டும். இதன் இலையைச் சுவாச காசத்தில்(ஈளையில்) சுருட்டாக பயன்படுத்தலாம். வீக்கங்களுக்கும் வைத்துக் கட்டலாம். இதன் வேர்ப் பட்டைச் சூரணம் (பொடி) தலைவலியைப் போக்கும். இலைகளை வதக்கிக் கட்ட நாள்பட்ட வீக்கம், கீல் வாயு முதலியன போகும். மாதவிடாய் காலத்தில், இதன் இலை அல்லது விதையை அரைத்துப் பற்றுப் போட வலி குணமாகும். இது பல வகையாக இருந்தாலும் குணத்தில் அதிகமாக வேறுபாடு இராது. இதன் பாவனத் திரவம்(நீர்மம்) அபினி(கசமத்தப் பிசின்)யைப் போல் மயக்கத்தைக் கொடுக்கும்.

இதன் இலையைக் கசாயமிட்டு நாய்க்கடிக்கும் கொடுப்பதுண்டு. இதைச் சிலர் அக்கிக்கும் பூசுவதுண்டு. இதன் பூவைக் கடைகளில் சில சமயம் மராட்டி மொக்கு என்றும் விற்பார்கள். இப்பூண்டின் ஒவ்வொரு பகுதியும் நச்சுத் தன்மை உடையதால், இதை மருத்துவர்கள் வெகு எச்சரிக்கையாகக் கையாள வேண்டும். இதில் வெள்ளை, கருப்பு என இருவகை உண்டு. வெள்ளையை விடக், கருப்பே சிறந்தது. இதன் இலையை வாத(ஊதை) வீக்கத்திற்கும், மேக(வேட்டை) வீக்கத்திற்கும், வைத்துக் கட்டக் குணம் தரும். ஒற்றடம் கொடுக்க உதவும், முகத்தில் உண்டான நரம்பைப் பற்றிய வீக்கங்களுக்கு இதன் காய்ந்த சருகை எரித்துக் கொழுப்புடன் கலந்து பூசக் குணமுண்டாகும்.

அன்றியும் இது, சீமையினம், நாட்டினம் என இருவகைத் தாயினும் குணத்தில் அதிக வேறுபாடு கிடையாது. இது ஆங்கில மூலிகையான பெல்லடோனாவுக்குச் சமமானது.

அமெரிக்காவில் இந்தியர்கள் சிவந்த ஊமத்தம் பழத்தை ஒருவாறுப் பக்குவப்படுத்திப் குடிப்பு வகையாகக் குடிப்பதுண்டு. இதன் இலையைச் சாராயத்தில் நனைத்து வலியுள்ள இடங்களில் வைத்துக் கட்ட வலி நீங்கும்.

இதன் இலையின் சாற்றை எண்ணெயில் காய்ச்சி தோல் நோய்க்குப் பூசுவதுண்டு. ஊமத்தைப் புல்லுருவியினால் வசியம் உண்டாம்.

கொச்சின் சீனத்தில் இதனின்று கசாயம் இறக்கி நாய்க் கடிக்குக் கொடுப்பார்கள். இது வயிற்றுப் பூச்சிகளைக் கொல்வதன்றி, அக்கி நோய்களுக்கு பூச்சு மருந்தாகவும் பயன்படுத்தக் குணத்தை உண்டாக்கும். இவ்வினத்தில் கரூமத்தை அகப்படுவது மிக்க அரிது. இதன் குணங்கள்சிறப்பாகத் தமிழ் மருத்துவத்தில் சொல்லப்படும். இதில் இரசங் (இதழ்) கட்டும். வாதத்திற்குதவும், இவ்வினத்தில் தெரிந்தவகைகள் அடியிற் கூறப்பட்டுள்ளன.

ஊமத்தையின் வகைகள்
1. மருள் ஊமத்தை, 2. ஊமத்தை அல்லது வெள்ளூமத்தை, 3. ஊதா ஊமத்தை,
4. சீமை ஊமத்தை, 5. கொடி ஊமத்தை, 6. பேய் ஊமத்தை, 7. பொன் ஊமத்தை,
8. அடுக்கு ஊமத்தை, 9. நீல ஊமத்தை, 10. கரு ஊமத்தை, 11. மது ஊமத்தை

- அறிஞர் த.வி.சாம்பசிவம் பிள்ளை


Go Back