வெள்ளை நஞ்சுகள் வேண்டாம் - 14-Nov-2015 09:11:48 PM

ண்ணும் உணவில் வெள்ளைப் பொருட்களான உப்பு, சீனி, மைதா போன்றவைகள் உடலுக்கு தீங்கே விளைவிக்கின்றன. உப்பு இரத்தக் கொதிப்பையும் சர்க்கரை மாரடைப்பையும் உண்டாக்கவல்லது என்று நிரூபிக்கப் பட்டுவிட்டது. நூடுல்ஸ், புரோட்டா, நாண், ருமாலிரொட்டி, வெள்ளைநிற பன், சமோசா, பீட்சா, குல்ச்சா, பர்கர் என நாம் கையேந்தி பவனலிருந்து ஐந்து நட்சத்திர ஓட்டல் வரை உண்பது அனைத்தும் மைதாவில் செய்யப்பட்டதே. இது  கோதுமை தான் என்றாலும் தவிடு நீக்கப்பட்டு சில வேதிப்பொருட்களைச் சேர்த்து, எட்டு மணி நேரம் குளோரின் கலந்த நீரில் ஊறவைத்து வெண்மையாக்கப்படுகிறது. இப்படி உருவாக்கப்பட்ட நிலையில் இது வெறும் குப்பையாக முற்றிலும் நார்ச்சத்து இல்லாத நிலையாகிவிடுகிறது. இத்துடன் வைட்டமின், கால்சியம், பொட்டாசியம், சோடியம் போன்ற தாது உப்புக்களும் குறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக சுவையாக உள்ள மைதாவினால் சமைத்த உணவுகளை உண்டபின் முதலில் வயிறு உப்புசத்தில்  தொடங்கி மலச்சிக்கல், மூலநோய் தொடர்ந்து நாட்பட்ட நிலையில் உடல் பருமன், நீரிழிவு, இரத்தக் கொதிப்பு மாரடைப்பு ஆகிய நோய்களுக்கு ஆளாக வேண்டியுள்ளது.

மைதா இவ்வளவு தூரம் கொடுமையான விளைவுகளுக்கு மனிதனை ஆளாக்க வேண்டியதற்குக் காரணம், அதனை வெண்மையாக்கப் பயன்படுத்தும் பென்சோயில் பெராக்சைடு. இது புற்றை உண்டாக்கக்கூடியது. அடுத்து மாவை மிருதுவாக்கச் செய்யும் அலெக்சான் இதுவே கணையத்தில் உள்ள பீட்டா செல்களை பாதித்து நீரிழிவுக்கு வித்திடுகிறது. மேலும் நூடுல்ஸ் போன்ற பொருட்களில் அசினமோட்டாவும் (சோடியம் குளுடமேட்) கரீயமும் (லிமீணீபீ) அதிகம் உள்ளது. இதுவும் உடலுக்குப் பல தீங்குகளை விளைவிப்பவை.

மைதா உணவுகளை உண்ணும் பொழுது பல உணவகங்களில் நமக்குத் தெரியாமலே நம்மை “இலவசம்” என்கிற போர்வையில், கோலாவை குடித்துவிடச் செய்து பிறகு அதற்கு அடிமையாக்கி விடுகின்றனர். அடிமையாவதற்கான காரணம் அதிலுள்ள காஃபின் என்ற இரசாயனப் பொருளாகும். இது தவிர இந்த மென்பானங்களில் பாஸ்பரிக் அமிலம், சிட்ரிக் அமிலம் போன்றவைகள் இனிப்பை நிலைப்படுத்தப் பயன்படுகிறது என்றாலும் பாஸ்பாரிக் அமிலம் பல்லின் மேலுள்ள எனாமலை அரித்து பற்சிதைவுக்குக் காரணமாகிறது. கோலாவிற்கு இளங்கருப்பு நிறத்தைக் கொடுக்கும் கேரமல் புற்றை உண்டாக்கக் கூடியது. காஃபின் இரத்த அழுத்தத்தைக் கூட்டி, நரம்புத் தளர்ச்சியையும் இதய நோயும் ஏற்படக் காரணமாக அமைகிறது.

மைதாப் பண்டங்களை விரும்பி உண்ணும் குழந்தைகள் இளம் வயதிலேயே உடல் பருமனாகி பூப்பெய்தி விடுகின்றனர். இதனால் இவர்களுக்கு எலும்பு வளர்ச்சி மிக விரைவில் நின்றுவிடுகிறது. இதன் காரணமாக இவர்கள் உயரமாக வளர்வதில்லை. உயரம் இன்றி குட்டையாக இருப்பதினால் மனரீதியாக சமூகரீதியான சிக்கல்களை ஏற்படுத்துகிறது. மேலும் மைதாவைக் கொண்டு தயாரிக்கப்படும் பொருட்களை (எ.கா.) நூடுல்ஸ், புரோட்டாவை அடிக்கடி உண்ணும் குழந்தைகள் தொந்தியுடன் ஊளைச்சதையோடு உடல் பெருத்து மந்தமாகி மலச்சிக்கலுக்கு ஆளாகின்றனர். இத்துடன் நாட்கள் ஆக ஆக இரத்தக் கொதிப்பு, நீரிழிவு மற்றும் உயிரணுக்களில் பாதிப்பு ஏற்பட்டு மலட்டுத் தன்மைக்கு இட்டுச் சென்று குழந்தை இன்றி வாழ வேண்டியவராகின்றனர்.

ஒரு நாளில் காலை தொடங்கி இரவு வரை ஏதாவது ஒரு வகையில், நாம் உண்ணும் உணவு வழியாகச் சீனி எனும் வெள்ளைச் சர்க்கரையை நாம் சுவைக்கிறோம். இதன் விளைவாக குடல் சார்ந்த நோய்கள், பல்வலி, பல்சொத்தை. வயிற்றுப்புண், சளித்தொல்லை, உடல் பருமன், நீரிழிவு, இதயநோய், இரத்தக் கொதிப்பு போன்ற நோய்கள் நமக்கு  நம்மை அறியாமலேயே வந்துவிடுகின்றது. ஏனெனில், சீனி தயாரிக்க ஆரம்பத்தில் கரும்புச்சாறில் உள்ள பாக்டீரியாவைக் கட்டுப்படுத்த பிளீச்சிங் பவுடர் பயன்படுத்தப்படும். கொதிக்க வைக்கப்பட்டு அழுக்கு நீக்க பாஸ்போரிக் அமிலம் பயன்படுத்தப்பட்டு அதன் பிறகு சுண்ணாம்பு 0.2 விழுக்காடு சேர்க்கப்பட்ட பின் சல்பர்-டை-ஆக்சைடு வாயு அதனுள் செலுத்தப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக மிகையாக சூடுபடுத்தப்படுவதால் இச்சாறில் உள்ள வைட்டமின்களை இழந்து, எதிர்வினையாகச் செயற்கை சுண்ணாம்புச்சத்து கூடிவிடுகிறது. பிறகு இது வடிகட்டப்பட்டு மீண்டும் காஸ்டிக் சோடா, வாசிங் சோடா சேர்க்கப்பட்டு ஒரு குழம்பாக மாறிவிடுகிறது. இந்நிலையில் சல்பர்-டை-ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்கப்பட்டு படிக நிலையாக அதாவது கற்கண்டாக மாறுகிறது. இதிலுள்ள ஒவ்வொரு சர்க்கரை துகள்களிலும் மெல்லக் கொல்லும் சல்பர்&டை&ஆக்சைடு கலந்து விடுகிறது. பிறகு தான் சீனி. இது கார்பன் என்ற கரியே ஆகும்.

இது தயாரித்த நாளில் இருந்து ஆறு மாதத்திற்குள் பயன்படுத்த வேண்டியதாக உள்ளது. இல்லையேல் ஆறுமாதத்தைக் கடந்த நிலையில் வெள்ளை சீனி மஞ்சளாக மாறி வீரியமுள்ள நஞ்சாக மாறிவிடும் அபாயம் ஏற்படுகிறது. 

எனவே சீனி பயன்பாட்டைக் குறைத்து நம் பாட்டன் உட்கொண்ட வெல்லம், பனங்கற்கண்டு, நாட்டுச்சர்க்கரை, கருப்பட்டி போன்றவைகளைப் பயன்படுத்தி மெல்லக் கொல்லும் நச்சுவிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்வோம்.

- டாக்டர் சு.நரேந்திரன்
(நன்றி : அறிக அறிவியல், மாதஇதழ்)Go Back