ஈரோடு தமிழன்பன் - 81 - 14-Nov-2015 10:11:16 PM

புதுச்சேரி இணையதள படைப்பாளர்கள் பேரவை, விழிகள் பதிப்பகம் மற்றும் கவிமுகில் அறக்கட்டளை சார்பில் கொண்டாடப் பட்ட கவிப்பேரரருவி ஈரோடு தமிழன்பன் 81 வது பிறந்த நாள் விழா சென்னையில் கவிக்கோ அரங்கில் தி.மு.க பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் மார்க்சீயப் பொதுவுடமைக் கட்சித் தலைவர் சி. மகேந்திரன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மேனாள் நீதியரசர் கே. சந்துரு, தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார், எழுச்சிக்கவிஞர் இன்குலாப், இதயநோய் மருத்துவர் வி.சொக்கலிங்கம், தமிழறிஞர் மறைமலை இலக்குவனார், கவிஞர்கள் பழநிபாரதி, யுக பாரதி, சொற்கோ, முனைவர் ய.மணிகண்டன்  உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர். ஈரோடு தமிழன்பனின் கவிதைத் தொகுப்பாகிய ‘திசை கடக்கும் சிறகுகள்‘ என்ற கவிதைத் தொகுப்பை பேராசிரியர் அன்பழகன் வெளியிட தி.க. தலைவர் கி. வீரமணி, நீதிபதி சந்துரு ஆகியோர் பெற்றுக் கொண்டனர். 

இவ்விழாவின் சிறப்பு நிகழ்வாக உலகின் பல்வேறு பகுதியில் தமிழ்த் தொண்டாற்றி வரும் தமிழறிஞர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகளும், தமிழ்த் தொண்டர் விருதுகளும் வழங்கப் பட்டது. மும்பை ‘இலெமுரியா அறக்கட்டளை’ நிறுவனரும் ‘தமிழ் இலெமுரியா’ மாத இதழின் ஆசிரியருமான சு.குமணராசனின் இலக்கியம், கலை, சுற்றுச் சூழல், கல்வித்துறை மற்றும் இதழியல் துறைப் பணிகளைப் பாராட்டி தமிழ்த் தொண்டர் விருதும் பாராட்டுச் சான்றிதழும்  வழங்கப் பட்டது. இந்த விருதை மேனாள் நீதிபதி கே.சந்துரு மற்றும் தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் ஆகிய இருவரும் இணைந்து வழங்கினர். விழாவில் கனடா, சிங்கப்பூர், இலங்கை நாடுகளிலிருந்து தமிழறிஞர்களும் ஏராளமான எழுத்தாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

விழாவிற்கான ஏற்பாடுகளை புதுச்சேரி இணையதள படைப்பாளர்கள், கவிமுகில் அறக்கட்டளை, விழிகள் பதிப்பகம் ஆகியவை இணைந்து மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர். இறுதியாக தி.அமிர்த கணேசன் நன்றி கூறினார்.


Go Back