இந்தியாவில் தாய்த் தமிழ்நாட்டிற்கு வெளியில் மகாராட்டிரா மாநிலத்திலிருந்து தமிழ்மொழி, தமிழ் இனம் சார்ந்து அறிவார்ந்த செய்திகளைத் தாங்கி வரும் ஒரு சிறப்பான மாத இதழாகும். கடந்த எட்டு ஆண்டுகளாக தமிழினம், தமிழ் மொழி என்கிற இரு கரைகளுக்கிடையே பயணிக்கும் இவ்விதழில் தமிழ் மக்களிடையே மாந்த நேய உணர்வு, மொழி மற்றும் பண்பாட்டு வளர்ச்சி, வரலாற்று துய்ப்புகள் போன்றவற்றை நல்ல தமிழில் எடுத்தியம்பும் இதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது. தற்காலத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் பெரும்பாலான தமிழ் இதழ்களிலிருந்து சற்று வேறுபட்ட கண்ணோட்டத்தில் தமிழ், தமிழர் குமுகாய வளர்ச்சி இலக்கை அடைவதற்குரிய அரிய ஆய்வுகள், வரலாற்று நிகழ்வுகள், இயற்கையை போற்றுதலுக்குரிய நம் கடமைகள் போன்றவை இதன் உள்ளீடுகளாக அமைந்துள்ளன.
கடந்த நாற்பது ஆண்டுகாலமாக தமிழ், தமிழர் மேன்மைக்காக மும்பை மாநகரில் தொய்வின்றி சமூகப் பணி ஆற்றி வரும் திரு சு.குமணராசன் முதன்மை ஆசிரியராகப் பொறுப்பேற்று வழி நடத்துகின்றார்.
இந்திய நாட்டில் குறிப்பாக தமிழ்நாடு, மகாராட்டிரம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும், தமிழர்கள் பெருமளவில் வாழும் மத்திய தரைக் கடல் நாடுகளிலும், கிழக்காசிய நாடுகளிலும் எண்ணற்ற வாசகர்களை தன்வயப்படுத்தி சற்றொப்ப மூன்று இலக்கம் தமிழ் ஆர்வலர்களை வாசகர்களாகக் கொண்டுள்ள இதழாகும்.
பல்கலைக் கழக நூலகங்கள், கல்விக் கூட நூலகங்கள், அரசு பொது நூலகங்கள் என அனைத்து இடங்களில் தொடர்ந்து வாங்கப்பட்டு வருகின்ற ஓர் சீரிதழ் என்பது இதன் பெருமையின் அடையாளம் ஆகும்.
இணக்கமான இந்த சீரிய கூட்டுணர்வு முயற்சியில் தாங்களும் பங்கேற்று மனித நேய மாண்புகள் பெருகிடவும், தமிழினம் வளர்ச்சிப் பாதையில் பயணிப்பதற்கும் துணை நிற்க வேண்டுகின்றோம்.