அணையா ஈகச் சுடர் பகத்சிங் - தமிழ் இலெமுரியா

15 March 2016 9:20 pm

1931 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் நாள் அதிகாலை 7:35 மணிக்கு அந்த மாபெரும் புரட்சியாளன் பகத்சிங்கின் சுவாசிக்கும் உரிமையை பறித்துக் கொண்டது பிரிட்டிசு அரசு. தன் வாழ்வின் இறுதி நிமிடம் வரை தன் தாய்நாட்டின் விடுதலைக்காகவும் உழைக்கும் மக்களின் உயர்வுக்காகவுமே சிந்தித்துச் சிறை சென்ற சிறந்த சிந்தனையாளர் பகத்சிங். விடுதலை மீது நான் கொண்டிருந்த வேட்கையால்தான் – இந்த பூமி சுழன்று கொண்டிருக்கிறது!"என்று உணர்வுப்பூர்வமான கவி புனைந்த கவிஞர் அவர். ஆக, பகத்சிங் எனும் தேசபக்தன் ஒரு சிறந்த கவிஞரும் கூட. தனது விடுதலை வேட்கையை அதற்கான கனவுகளை எத்தனை அபரிமிதமாக அவரது கவிதை வரிகளில் வடித்திருக்கிறார் பாருங்கள். இந்தியா விடுதலைக்கான புரட்சிப் பாதையில் பயணித்த காலமது. "சத்தார்சிங்’’ அரோபா என்னும் பஞ்சாப் இளைஞன் தூக்கிலிடப்பட்ட செய்தி பகத்சிங்கின் இதயத்தை வெகுவாக பாதித்தது. தூக்கு மேடையின் விளிம்பில் நின்று கொண்டு நான் எத்தனை முறை பிறந்தாலும் நாட்டு விடுதலைக்காகப் போராடிக் கொண்டே இருப்பேன் என்றுரைத்த அந்த இளைஞனின் உரத்த குரல் பகத்சிங்கின் எண்ண ஓட்டத்தில் கலந்து பின் இரத்தத்திலும் கலந்திருக்க வேண்டும். ஒருவேளை அதுவும் கூட அந்த தேசபக்தனின் நெஞ்சுரத்தை வலிமையாக்கி இருக்க கூடுமல்லவா! இவரின் இறப்புத் தண்டனைக்கான நாடகம் பிரிட்டிசுகாரர்களால் அரங்கேற்றப்பட்டது. பகத்சிங், இராஜகுரு, சுகதேவ் மூவருக்கும் அரசுக்கு எதிராக போராடிய குற்றத்திற்காக தூக்குத் தண்டனையை விதிக்கிறோம் என 1930, அக்டோபர் மாதம் பிரிட்டிசு அரசு லாகூர் நடுவர் நீதிமன்றத்தில் தீர்ப்பளித்தது. தீர்ப்பை கேட்டதும் அந்த மாவீரர்கள் கலங்கவில்லை. மாறாக அப்போதிருந்த பஞ்சாப் மாகாண ஆளுநருக்கு ஒரு கடிதம் எழுதினார்.  "இந்தப் போர் எங்களோடு தொடங்கவு மில்லை; எங்களோடு முடியப் போவதுமில்லை. இந்தியாவின் உழைக்கும் மக்களும் அவர்தம் இயற்கைச் செல்வங்களும் சுரண்டப்பட்டு கொண்டிருக்கும் வரை இந்தப் போர் நிச்சயமாகத் தொடரும் என்பது உண்மை. இந்திய நாட்டின் விடுதலைக்காக எண்ணற்ற புரட்சியாளர்கள் தங்கள் மரணத்தால் அணிசெய்யப்பட்ட தியாகச் சங்கிலியின் ஓர் இணைப்புக் கண்ணியே எங்களது இந்த தாழ்மையான தியாகங்கள். எங்களை கொலை செய்வதென்று தீர்மானித்து விட்டீர்கள். அதனை நீங்கள் நிச்சயம் நிறைவேற்றியும் விடுவீர்கள். உங்கள் கைகளில் அதிகாரம் இருக்கிறது. ‘வல்லான் வகுத்ததே வாய்க்கால்’ எனும் முதுமொழிக்கேற்ப உங்கள் நடவடிக்கை இருக்கிறதென்பது உண்மை. இதனை நானும் என் தோழர்களும் நன்கு அறிவோம். எங்கள் மீதான தவறான விசாரணையே அதற்கான தக்கச்சான்று. நீதிமன்றத்தின்படி நாங்கள் அரசுக்கெதிராக போர் தொடுத்தவர்கள். ஆகையால் உங்கள் கருத்தின்படி நாங்கள் போர்க் கைதிகள். எனவே நாங்கள் போர் கைதிகளைப் போலவே நடத்தப்பட வேண்டும். தூக்கிலிடப்படுவதற்கு பதிலாக சுட்டுக் கொல்லப்பட வேண்டும். எங்களது இறப்புத் தண்டனையை நிறைவேற்றுவதற்காகக் கைதிகளை சுடும் படை பிரிவொன்றை அனுப்பி வைக்குமாறு உத்தரவிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்".இப்படிக்கு,  பகத்சிங், இராஜகுரு, சுகதேவ். இதுதான் அவர்களால் எழுதப்பட்ட அந்த கடிதத்தின் சாரம். பகத்சிங் எனும் அந்த புரட்சியாளனை நினைத்தாலே போதும் இப்போதும் கூட பிரிட்டசுகாரர்களுக்கு தவிர்க்க இயலாத ஓர் அச்ச உணர்வு ஏற்படும் என்று கூறினால் அது ஒரு பொய்யுரை அல்ல.  ஏன் தெரியுமா? அவரது புரட்சிகரக் கொள்கைகள் அப்படி ஒரு தீர்க்கமும் உறுதியும் நிறைந்தது எனலாம். பிரிட்டிசு அரசு அவரைத் தூக்கிலிட்டே ஆக வேண்டுமென்பதில் பிடிவாதமாக இருந்ததற்கு அதுவும் ஓர் காரணம். சுதந்திர இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பு இந்தியாவின் பெரு முதலாளிகளின் கைக்குப் போகக் கூடாது. மாறாக, உழைக்கும் பாட்டாளி வர்க்கத்தின் கைகளிலும் விவசாயப் பெருங்குடி மக்களின் கைகளுக்கும் போய் சேர வேண்டுமென்பதே அவரது கொள்கை. "இந்திய விடுதலை எனது உயிர் மூச்சுதான். ஆனாலும் மனிதனை மனிதன் சுரண்டுகின்ற சிந்தனைக்கும் செயலுக்கும் முடிவுகட்டாமல் நாட்டு விடுதலையில் பயனில்லை" என்று தெளிவாகக் கூறியவர், பகத்சிங்."புரட்சி நீடுழி வாழ்க" என்கிற அந்த குரலுக்கு சொந்தக்காரரான பகத்சிங், தான் சாவின் வாயிலில் நிற்கும் போது கண்ணீரில் கரைந்த தனது சக தோழரான ஜெய்தேவ் என்பவரை நோக்கி உரத்து சிரித்த வண்ணம், தான் புரட்சியின் பாதையில் அடியெடுத்து வைக்கும் போதே இன்குலாப் ஜிந்தாபாத்" (புரட்சி ஓங்குக) என்கிற முழக்கத்தை நாடு முழுதும் பரவச் செய்தால் அது தனது வாழ்வின் நற்பயனில் ஒன்றென்றும் தான் சிறைக் கம்பிகளுக்கு பின் இருந்த போதும் கோடிக்கணக்கான மக்கள் இன்குலாப் ஜிந்தாபாத் என முழங்குவதை கேட்க முடியுமென்றும் இந்தச் சொல் போராட்டத்தை ஊக்குவிக்கும் மாபெரும் சக்தியாகவும் அடக்குமுறையாளர்களை இறுதிவரை தாக்கிக் கொண்டே இருக்குமென்றும்" கூறி புன்னகைத்தாராம். எப்படிப்பட்ட நெஞ்சுரம் அந்த இளைஞனுக்கு. தூக்குமேடை ஏறுவதற்கு சில கணங்களுக்கு முன்பு அங்கே நின்றிருந்த ஒரு வெள்ளை நீதிபதியைப் பார்த்து புன்சிரிப்புடன் "நீதிபதி அவர்களே நீங்கள் மிகவும் அதிர்ஷ்டகாரர். ஓர் இந்திய புரட்சியாளன் தன் மகத்தான இலட்சியத்திற்காக புன்சிரிப்புடன் தன்னுயிரை அர்ப்பணிக்கும் காட்சியை காணும் வாய்ப்பு உங்களுக்கல்லவா கிடைத்திருக்கிறது" என்றாராம். அது மட்டுமா? "தன்னைத் தூக்கிலிடுவதற்கு தயாராக நின்றிருந்த பரங்கியர் கூட்டத்தைப் பார்த்து எனது கண்களை கறுப்புத் துணியால் கட்டாதீர்கள். நான் பிறந்த இந்த மண்ணை பார்த்துக் கொண்டே எனது இறுதி மூச்சினை இழக்க வேண்டும். இன்னொரு பிறவியென்று ஒன்று இருக்கக் கூடுமானால் இந்திய மண்ணில் இந்தியத் தாயிற்கு இந்திய மகனாகப் பிறக்க வேண்டும். இன்குலாப் சிந்தாபாத்" என்று கூறியவாறு தூக்கு மேடையில் ஏறினார். அப்பழுக்கற்ற அந்த புரட்சியாளனின் உயிரற்ற உடல்கூட வெள்ளைக்கார வெறியர்களின் இதயத்தில் அச்சத்தை மூட்டியது போலும். அதனால்தானோ என்னவோ அவரது உடலை கூட அவருடைய பெற்றோரிடம் ஒப்படைக்க மறுத்தது பிரிட்டிசு அரசு. அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து அரைகுறையாய் வெந்த துண்டுகளை சட்லெஜ் நதியில் எறிந்து தனது பய உணர்வினையும் வெறியையும் தணித்துக் கொண்டார்கள். ஒரு தூக்கு தண்டனைக் கைதியாய் இருந்து கொண்டு 64 நாட்கள் சிறைக்குள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியும் நீதிமன்றங்களுக்குச் செல்லும் போதெல்லாம் போராட்டங்களைச் சந்தித்தும் தனது இன்னுயிர் தோழர்களான மகாவீர்சிங், ஜகீன்தாஸ் இருவரையும் உண்ணாவிரத போராட்டத்தில் பலி கொடுத்தும் இந்த துயரங்களை எல்லாம் உளவியல் ரீதியாக எதிர்கொண்டு, ஏறத்தாழ 151 புத்தகங்களைப் படித்து குறிப்பெடுத்து 6 சிறு நூல்களை எழுதி முடித்த வலிமையான அந்த இளைஞனை அவர்களால் என்ன செய்ய முடிந்தது. பகத்சிங் எனும் தியாக தீபத்தை அணைத்து விட்டோம் என்று மகிழ்ச்சிக் கொக்கரிப்பில் இருந்த பிரிட்டிசுகாரர்களுக்கு ஒன்று மட்டும் புரியாமல் போனது. இறந்த பின்பும் வாழுகின்ற இளைஞன் பகத்சிங் என்பதும் சுரண்டலுக்கு எதிரான உந்து சக்தியாக அவரது ஆயுளின் பலம் நீண்டு கொண்டிருக்கும் விந்தையை. உலகப் புரட்சியாளன் சேகுவேரா கூறினார், நான் சாகடிக்கப்படலாம்; ஆனால் ஒரு போதும் தோற்கடிக்கப்பட மாட்டேன் என்று. ஒவ்வொரு புரட்சியாளனின் வாழ்வும் அப்படித்தானே அமைந்து போய்விடுகிறது. துணிச்சலோடும் புன்னகையோடும் நான் தூக்கு மேடை ஏறினால் அது இந்திய தாய்மார்களின் உணர்வுகளை தூண்டும். தாங்கள் பெற்ற பிள்ளைகளும் பகத்சிங்கை போல் தாய்நாட்டிற்காக தங்களை அர்ப்பணிப்பார்கள். எந்த ஆயுத பலத்தாலும் அச்சுறுத்தலாலும் இந்தியாவை அடிமைப்படுத்த முடியாது என்று ஒவ்வோர் இந்தியத் தாயும் தன் மைந்தர்களை உருவாக்குவார்கள் என்று கூறி தனது 24ஆவது வயதின் தொடக்கத்திலேயே ‘‘கவலைப்பாடாதீர்கள், நான் அணையப் போகும் விடிகாலை பொழுதின் தீபம். போய் வருகிறேன். வணக்கம்’’ என விடைபெற்ற பகத்சிங்கின் வாழ்விற்கு முடிவு எங்கே இருக்கிறது. தனது விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்த அன்பு மகனை பாரதத் தாய், தன் அரவணைப்பில் அல்லவா துயில் கொள்ள வைத்திருக்கிறாள் பூரிப்புடன். அந்த பாரதத் தாயின் பண்பு நிறைந்த வீரம் நிறைந்த, சிந்தனையில் சிறந்த அருமை செல்வனுக்கு இதயமும் விழிகளும் ஈரம் கசிய வீர வணக்கம் கூறிக் கொள்வதில் நமக்கும் பெருமைதானே!. – ஜோதிமதி, கரிசல்குளம்"

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி