இறைவன் தங்கும் ஆலயம்! - தமிழ் இலெமுரியா

14 October 2013 7:43 am

வாழ்வது வேறு; பிழைப்பது வேறு! நம்மில் பலர் பிழைக்கிறோம். ஆனால் வாழ்கிறோமா? அறம்போற்றி, பொருள் சேர்த்து, இன்பத்தோடு வாழ்கிற வாழ்க்கைக்குத்தான் வாழ்தல்" என்று பொருள். இப்படித்தான் வாழ வேண்டும் என்கிற நெறிமுறை தவறி, எப்படியாவது பிழைத்தால் போதும் என்று நினைத்தால் என்னவாகும்? நேர்மையாக வாழ விரும்புபவர்களை, பிழைக்கத் தெரியாத மனிதர் என்று சொல்லவும், சக மனிதர்களை ஏமாற்றியும், சுரண்டியும் வசதியாகப் பிழைக்கிறவர்களை "வாழக் கற்ற புத்திசாலி" என்று சமூகம் போற்றவும் நேர்ந்தது எதனால்? நம்முடைய மதிப்பீடுகள் இப்படித் தலைகீழாக மாறிப்போனதற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டிய அவசரத்தில் இருக்கிறோம் அன்பர்களே! இல்லாவிட்டால், குறுக்குவழி அறிவுக்கு முன்னால், இதயம் தன் மதிப்பை இழந்துவிடும். இதயம் விரிந்து, அறிவும் வளர்ந்தால்தான் உலகம் தழைக்கும். இதயம் சுருங்கி, அறிவு மட்டுமே பெருகினால் உலகம் தவிக்கும்! தம் குழந்தைகள் வழக்கறிஞராக வேண்டும், பொறியாளராக வேண்டும், மருத்துவராக வேண்டும் என்கிற ஆசைதான் பெற்றோர்களுக்கு இருக்கிறதே தவிர, அவர்கள் நல்ல மனிதர்களாக வளர வேண்டும் என்கிற அக்கறை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறதே, இது ஏன்? குழந்தைகள் பொய் சொல்லக் கூடாது என்பது பெரியவர்கள் விருப்பம். ஆனால், மாமா கேட்டா, அப்பா இல்லேன்னு சொல்லிடு எனப் பொய் பேசக் கற்பிப்பதும் அவர்களேதான். "திருட்டு காணொளி குறுந்தகடு (வி.சி.டி)" வாங்கித் திரைப்படம் பார்க்கிறோம். "திருட்டுச் சீட்டு (பிளாக் டிக்கெட்)" வாங்கித் திரையரங்கில் நுழைகிறோம். வேலைக்காரர்களை இழிவான சொற்கள் பேசி இழிவாகவே நடத்துகிறோம். குழந்தைகள் கண் முன்னே அநாகரிகமாக நடந்து கொள்கிறோம். ஆனால் எல்லா நாகரிகங்களையும் குழந்தைகளிடம் மட்டும் எதிர்பார்த்தால் எப்படி? அம்மாவும், அப்பாவுமே அன்பில்லாமல் பேசக் கற்றிருக்கும் போது, அவர்களிடம் வளர்கிற பிள்ளைகள் எப்படி அன்பைக் கற்றுக் கொள்ள முடியும்? தனக்குக் கிடைத்த இனிப்பைத் தன் சகோதரனுக்குப் பகிர்ந்து தர வேண்டும் என்கிற உணர்வை சிறுவயதில் ஊட்டாவிட்டால், பிறகொரு காலத்தில் பாகப்பிரிவினை தவிர்க்க முடியாததுதானே! இரட்டை வேடம் தரிப்பதே நமக்கு நடைமுறையாகிவிட்டது. நம் வீட்டுச் சுவரில் எச்சில்  துப்புவது தவறு என்று உரைக்கிற அறிவு, அடுத்தவர் வீட்டுச் சுவரில் எச்சில் துப்பும் போது மரத்து போவது ஏனோ? போக்குவரத்து விதிமுறைகளை மீறி ஒருவர் உங்கள் மீது மோதிக் கொண்டால் கொதிக்கிற உள்ளம், வசைபாடுகிற வாய், நீங்கள் விதிகளை மீறுகிற போது மட்டும் ஏன் அமைதியாகி விடுகிறது? வீட்டுப்பாடம் எழுதவில்லை என்று மாணவனை பிரம்பால் அடிக்கிற ஆசிரியர்களில் எத்தனை பேர், தாங்கள் வீட்டில் படித்துவிட்டு வந்து பாடம் கற்பிக்கிறார்கள்? திருடர்களை வலை வீசிப் பிடிக்கிற காவல் துறையில் எத்தனை பேர் அப்பாவிகளை ஏமாற்றாமல், கையூட்டு (இலஞ்சம்) வாங்காமல் வாழ்கிறார்கள்? இப்படி ஆன்மிகம் வரை எல்லாத் துறைகளிலும் நம்முடைய மதிப்பீடுகள் மாறிக் கொண்டே இருக்கின்றன. நாமே இப்படி இருந்தால், நாம் வளர்க்க வேண்டிய வருங்காலத் தலைமுறை எப்படி இருக்கும்? கண்ணுக்கு எதிரே தவறுகள் நடக்கிற போது, அதைத் தடுக்க வேண்டும் என்கிற உணர்வே இல்லாமல், தனக்குத் துன்பம் வந்தால் மட்டும் உலகம் கெட்டு விட்டதாகப் புலம்புகிறோம். "பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயங்கொள்ளல் ஆகாது பாப்பா, மோதி மிதித்துவிடு பாப்பா, அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!" என்றானே பாரதி. உங்களில் எவரேனும் ஒரு தீமையைக் கண்டால், தமது கைகளால் தடுக்கட்டும்; இயலாவிடில், நாவால் தடுக்கட்டும்; அதுவும் முடியாவிட்டால், தமது உள்ளத்தால் தடுக்கட்டும் என்று போதிக்கிறது இசுலாம். தன்னைப் போல் பிறரையும் நேசி என்கிறது கிறித்தவம். அன்பே சிவம் என்கிறது இந்து தருமம். ஆனால் எல்லாம் ஏட்டில் தத்துவங்களாகவே இருக்கின்றன. எவரும், எதையும் நடைமுறையில் பின்பற்றக் காணோம்! நீங்கள் பழகாத மிதிவண்டியில் உங்கள் பிள்ளைகளை எப்படி ஏற்ற முடியும்? குருகுலக் கல்வி முறையில் இருந்த நேர்மையும், ஒழுக்கமும் நவீனக் கல்வி முறையில் இல்லை. பிரபல பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க, பெற்றோர்கள் தேர்வு எழுத வேண்டியிருக்கிறது. இந்த நிபந்தனை முப்பது ஆண்டுகளுக்கு முன் இருந்திருந்தால், இந்தியாவின் இன்றைய குடியரசுத் தலைவருக்கு நல்ல பள்ளியில் படிக்க வாய்ப்பில்லாமல் போயிருக்கும். இலட்சங்களை முதலீடு செய்து பெறுகிற கல்வி, கோடிகளை அறுவடை செய்வதற்கான ஆயுதமாக மாறத்தான் செய்யும். ஆனால், இதுவா கல்வி? அடுத்த தலைமுறைக்கான முன்மாதிரிகளாக காந்தியும், பெரியாரும், காமராசரும்தான் இருக்க வேண்டும் என்பது தவறான எண்ணம். தங்கள் குழந்தைகளுக்கு பெற்றோர்களும், ஆசிரியர்களுமே நல்ல முன்மாதிரிகளாக இருக்க முடியும்; இருக்க வேண்டும். மாணவர்களை நன்றாகப் படிக்கப் பழக்கப்படுத்தாமல், விநாயகருக்கு தேங்காய் உடைத்து வழிபாடு செய்ய மட்டும் சொல்லித் தந்துவிட்டு, தேர்வில் அவன் தோல்வி அடையும் போதும் கடவுள் கை விட்டுவிட்டதாக இறைவன் மீது பழிபோட்டால், அதற்கு இறைவனா பொறுப்பு? தொலைக்காட்சி பெட்டியை நாக்கூசாமல் "இடியட் பாக்ஸ்" (மூடர் பெட்டி) என்று அழைக்கிறோம். புத்திசாலித்தனமாக அந்த அறிவியல் கண்டுபிடிப்பைத் தகுந்தபடி பயன்படுத்திக் கொள்ளாமல், ராசிக்கல் பலன் பார்ப்பது நாம் தானே தவிர, அந்த கண்டுபிடிப்பு அல்லவே! இப்படி நாம் செய்யும் தவறுகளுக்கெல்லாம் மற்றவர்களின் மீது பழிபோட்டும், நம் பொறுப்பைத் தட்டிக் கழிப்பதே நம் வழக்கமாக இருக்கிறது. ஆன்மிகத்தைப் புரிந்து கொள்ளாமல் சடங்குகளின் பின்னால் சென்று, சடங்குகளையே ஆன்மிகமாக்கி விட்டோம். "யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என்று உலக சமத்துவம் பேசிய நம் முன்னோர்களின் உயரிய மதிப்பீடு, நம் காலத்தில் நம் சக மனிதனை தாழ்த்தி, அவனை தெய்வத்தின் முன்னால் கூடச் சமமாக வழிபட அனுமதிக்காத அளவுக்குத் தரம் தாழ்ந்து போயிருக்கிறது அன்பர்களே! "ஒரு மனிதன் துன்பப்படும் போது, அவனுக்காகக் இறைவனிடம் வழிபாடு செய்கிற உதடுகளை விட, அவனுக்கு உதவி செய்கிற கரங்களே மேலானவை" என்பதை இனியாகிலும் புரிந்து கொள்வோம்! தனி மனிதன் சுத்தமானால், வீடு சுத்தமாகும். வீடு சுத்தமானால், வீதி சுத்தமாகும். வீதியின் தூய்மை, ஊரின் தூய்மை. ஊரின் தூய்மை, நாட்தின் தூய்மை. தவறு செய்கிற பெற்றோர், போதிக்கிற தகுதியை இழக்கிறார்கள். எனவே வீட்டின் ஒழுக்கம்தான், நாட்டின் ஒழுக்கம். சக மனிதனை நேசிக்காத படிப்போ, பணமோ, புகழோ அவமானத்துக்கு உரியது. மாற்றத்தை ஒவ்வொருவரும் அவரவரிடத்திலிருந்து தொடங்குவோம். அறுவடை தருகிற பயிர்களைப் போல நம் குழந்தைகளை வளர்க்க வேண்டாம். அவர்களை அறம் போற்றுகிற உயிர்களாக வளர்ப்போம். முன்னோர்கள் நட்ட மரங்களின் நிழலில்தான் இன்னமும் களைப்பாறுகிறோம். எவரோ, எப்போதோ வெட்டிய குளத்தில்தான் இப்போதும் தாகம் தீர்க்கிறோம். என்றோ எவராலோ போடப்பட்ட சாலைகளில்தான் நம் பயணம் தொடர்கிறது. இதுதான் வாழ்வு. ஊர் கூடித் தேர் இழுப்பது போல், உள்ளங்கள் கூடி வாழ்வை நிறைப்போம். ஏனெனில் அன்பு நிறைந்த இதயம்தான் உயிர்த்துடிப்பு உள்ள இதயம். அத்தகைய இதயங்கள்தான் இறைவன் தங்கும் ஆலயம்!- குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்"

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி