இழப்பதற்கு இனி எதுவும் இல்லை - தமிழ் இலெமுரியா

20 August 2013 9:11 am

நெஞ்சு பொறுக்கவில்லை. கண் முன்னால் நடக்கும் சாவுகளின் தொடர்ச்சி, நம்மையும் சாவு பற்றி யோசிக்கத் தூண்டுகிறது. சாவு என்பது மனித உயிர் சாவு மட்டுமல்ல. மொழிச் சாவு, பண்பாட்டுச் சாவு, கல்வி நிலைச் சாவு, சமூக நாகரிகச் சாவு, இனத்திற்கான குணநலன் சாவு ஆகியனவாகும். செத்துத் தொலைந்து போனாலும் பரவாயில்லை; புதியதை முற்றிலும் மாறுபட்டதை, ஏற்க முடியாததை உயர்ந்ததாக எண்ணிக் கொண்டு அந்நியத்தைப் புகவிட்டு, அழிந்து போகிறோமே, ஒவ்வொன்றாக இழந்து கொண்டிருக்கிறோமே! அப்படிப்பட்ட சாவுகளைக் கண்டுதான், தமிழ் நெஞ்சம்" குமுறிக் கொப்பளிக்கிறது. ஏதாகிலும் வழிகண்டாக வேண்டும் என்கிற படபடப்பு, ஆதங்கம் தீவிரவாதியாக சிந்திக்கத் தூண்டுகிறது. உலக மொழிகளுக்கெல்லாம் "தாய் மொழி" நம் தமிழ் மொழி. உலகறியச் செய்திருக்கிறோமா? தமிழ் தோன்றிய காலம் முதல் ஆங்கிலேய வருகை வரை, அரசு மொழியாக, மக்களின் அன்றாடப் பேச்சு மொழியாக, கலப்படமற்ற தூய மொழியாக ஒளிர்ந்து, வாழ்ந்த மொழி தமிழ் மொழி. எத்தனையோ படையெடுப்புகளைக் கடந்து, குறிப்பாக வடமொழி சமற்கிருதத் தாக்கத்திலிருந்து தப்பித்து, வேதகால ஆராதனைகளிலிருந்தெல்லாம் தப்பித்து, இடையிடையே சற்றுத் தள்ளாடினாலும், உயர் தனிச் செம்மொழியாக, சீரிளமை திறனுடன் நடந்து வந்த மொழி "தமிழ் மொழி". கலப்படம் செய்து, தூய்மையைக் கெடுத்துவிட்டது மட்டுமன்றி, தமிழின் சிறப்பே சிதைந்து மாறுபட்டுப் போக இடம் கொடுத்து விட்டோமே! தமிழ் மொழியில் எத்தனை எழுத்துகள் என்பது கூடத் தெரியாத பட்டதாரிகளை உருவாக்கி விட்டோம். தமிழ் மொழியே சிறந்த இயற்கை மொழி. ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக தனி மொழியாக ஆட்சி செய்த மொழி என்கிற பெருமை அடைய வேண்டிய மனப்பக்குவத்தைத் தமிழர்களிடம் ஏற்படுத்தத் தவறி விட்டோம். ஒலி வடிவத்திற்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர் வரி வடிவத்திற்கு வரையறை கூறாததற்கான கரணியம் கூட நம் இளைஞர்களுக்கு கற்றுத் தரப்படவில்லை. தமிழ்நாட்டிலே வாழ்ந்து கொண்டு, தமிழ்ச் சோறு உண்டு கொண்டு, தமிழ்த் தண்ணீர் பருகிக் கொண்டு, தமிழை "நீச மொழி" எனக் கொச்சைப்படுத்தியது, தமிழன் வீரமற்றவன் வெகுண்டு எழாதவன் என்கிற நம்பிக்கையில்தானே! பயம் இருந்திருந்தால் வாய் திறந்திருப்பானா? ஆக நாம் வீரம் அற்றவர்கள்! தாயைக் கொச்சைப் படுத்தினால் கூட கண்டு கொள்ளாதவர்கள் என்று ஆகிறது. அப்படித்தானே! நம் முன்னோர்கள் வீரர்களாக விளங்கி, விழுப்புண் அடைந்து வீரச்சாவு எய்தியவர்களை "நடு கற்களாகக்" கொண்டு, ஆண்டுதோறும் நினைவு நாள் விழா எடுத்துக் கொண்டாடி தமிழில் வழிபாடு வந்த பெருமையெல்லாம், வரலாறெல்லாம், மறந்து தொலைத்து விட்டோம். நடுகற்கள் எந்தக் குடும்பத்தைச் சார்ந்தது என நினைவு படுத்த முடியாத அப்பாவி ஏமாளிகளாக ஆகிவிட்டோம். ஆக நம் மரபு வழி வீர வரலாற்றையும் மறந்தோம். இதெல்லாம் கூட பழங்கதை என்று கூறிவிடலாம். நம் கண்முன்னாலேயே நம் மரபு அழிக்கப்பட்டு வருவது நமக்குப் புலப்படவில்லையே! ஆழிப்பேரலை வந்து ஆயிரக்கணக்கான உயிர்களை அழித்துப் போட்டது. இப்பேரலையால் பாதிக்கப்பட்ட நாடுகளில் சப்பான் நாடும் ஒன்று. அவன் அவன் மொழியில் "சுனாமி" எனச் சொன்னதை அப்படியே நாமும் சொல்கிறோமே; நாம் நம் மொழியில் அல்லவா "பேரலை" எனக் கூறியிருக்க வேண்டும். பேரலையை "சுனாமி" விழுங்கிட இடம் கொடுத்து விட்டோம்.  நம் திருமண நிகழ்வுகளில் மணமகள் சேலை அணிவதும், மணமகன் வேட்டி, சட்டை அணிவதும் நம் மரபு. தமிழன் என்று காட்டிக் கொள்ளும் ஆடை அடையாளம் இது. இதனைக் கூட இப்போது, முந்தானையை வலது புறத் தோளிலிருந்து முன்புறம் இழுத்து விட்டு, மார்வாடி, குசராத்திகள் போல உடுத்திக் கொண்டு மணமேடை ஏறுகிறார்களே. திருமணம் என்றால் தமிழச்சியாக ஒளிர்வதை விட்டுவிட்டு, வட நாட்டுக்காரியாக மாறிடும் செயலை எப்படி நாகரிகம் என்று எடுத்துக் கொள்வது? அந்நியம் எதுவானாலும் அது உயர்ந்ததாகி விடுமா?  ஏற்கனவே தமிழ்த் திருமண முறை ஒழிந்து, பார்ப்பன முறைப்படி திருமணம் முடித்து வைப்பதே மகாமகா கேவலம். இதில் ஆடையும் வேறு அந்தியமாகி விட்டால்? அவனவன் அவனவனாக இருக்கும் போது நீ மட்டும் ஏன் தமிழனாக இருப்பதை தாழ்வாக நினைக்கிறாய்? ஆக தமிழர்கள் ஆடையையும் இழந்து விட்டோம் என்றாகிறது. நம் நாட்டுக் "கிட்டிப்புள் விளையாட்டு கிரிக்கெட்டாக" உருமாறி விட்டதைக் கூட உரிமை கொண்டாட மறந்து விட்டோம். நம் கண் முன்னாலேயே, நாம் விளையாடிய "சடுகுடு" விளையாட்டு கபடியாக, கபட வேடம் போட்டுக் களம் இறங்கியுள்ளதைக் கூட மறந்து விட்டோம். கேவலமாகப் பட வில்லையா? நம் விளையாட்டு நாம் வைத்த "சடுகுடு" பெயரிலேயே இருந்திருக்க வேண்டும்; இல்லையா? சரியான ஏமாளி என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது? மாறுவேடம் போட்டாலும் அவன் அவனாகத்தானே இருக்க வேண்டும்! இன்றைக்கு இது நம் விளையாட்டு என்பதை மறந்துவிட்டோமே. எதிர் காலத்தில் (கிட்டிப்புள்ளை மறந்து விட்டது போல்) சடுகுடுதான் கபடியாக விளையாடப் படுகிறது என்பதை யார் அறியக் கூடும்? விளையாட்டைக் கூட இழந்து விட்டோம். வேளாண்மைதான் தமிழர்களின் வாழ்வியல் தொழில். சித்திரை தொடங்கி, நல்வேர் பூட்டி, கோடை உழவு முடித்து, தென் மேற்குப் பருவச் சோனையில் விதைவிதைத்து, வேளாண் தொழிலைத் தொடங்கியது வேளாண் பருவம். மார்கழி மாதத்துடன் உணவு உற்பத்தி முடித்துக் கொள்வது நம் வழி வழி மரபு. இதன் துணைத் தொழில்கள் கால்நடை வளர்ப்பு. உணவு உற்பத்திக்கான துணைத் தொழில்கள். தை மாதம் தொடங்கி, கால் நடைகளைத் தயாரித்தல், பழக்குதல் போன்ற கால்நடைப் பருவம். அதனால்தான் மஞ்சு விரட்டு, மாடுபிடி, மாடு தழுவுதல், எல்கைப் பந்தயம் எல்லாம் பங்குனிக்குள்ளாக அனைத்துத் திருவிழாக்களும் முடிந்து விடும். பாவிகள் மாடுகளைக் கூட வன விலங்குப் பட்டியலில் சேர்த்து விட்டு, மாடு பிடி விளையாட்டைத் தடை செய்வதைப் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்! கேவல மல்லவா! ஒரு இனத்தின் அடிப்படையான வீரவிளையாட்டுக்குத் தடையா? சே! ஆக இந்த இரண்டு தொழிகளுக்கும் ஆண்டில் இரு பருவங்களை வகைப்படுத்தி தை முதல் தொடங்கும் கால்நடை வளர்ப்புப் பருவத்தை, ஆண்டில் தொடக்கமாகக் கொண்டும் சித்திரை முதல் தொடங்கும் வேளாண் பருவத்தை வேளாண் பருவமாகப் பாகுபடுத்தியும், கால்நடைகள் வளர்ப்பையும் வேளாண் தொழிலையும், ஒழுங்குமுறை மாறாத் தொழிலாகக் கொண்டிருந்தவர்கள் நாம். தமிழ்நாட்டில் தட்ப வெப்ப நிலைக்குத் தகுந்தபடி, பிரித்து வைத்துக் கொண்டு தொழில் செய்த, தமிழர்களின் அடிப்படை ஆலை வேளை அசைத்தெடுக்க விட்டு விட்டோமே! நம்மை காலம் மன்னிக்குமா? வேளாண்மைக்கு அடிப்படை ஆதாரம் கால்நடைகளின் இருப்புதான். கால்நடைகளின் செழிப்புதான் உணவு உற்பத்தி பெருக்கமும் உயிர்களின் வளமும் எனக் கருதித்தான் கால்நடைப் பருவமான தை முதல் நாளை ஆண்டின் தொடக்கமாகக் கொண்டாடினார்கள்  நம் முன்னோர்கள். இத்தனையும் கூட அது இது எனப் பேசி கண்ணன் பிறப்போடு முடிச்சுப் போட்டு, பொய்மை அரங்கேற விட்டு விட்டோமே! எத்தனை பெரிய ஏமாளிகள் நாம்! ஆக தமிழ் ஆண்டும் போய்விட்டது. இன்று செவ்வாய் கிரகத்தை, கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்து, நவீன தொழில் நுட்ப யுக்தியெல்லாம் புகுத்தி "சிவப்பு" நிறமானது என்று சொல்லும் அறிவியல் நுட்பத்தை அன்றைக்கே "செவ்வாய் – சிவந்த பாறை" எனப் பெயர் வைத்திருக்கிறோமே! வெள்ளை வெளேர் என்று வெளுத்திருக்கும் கிரகம் "வெள்ளி" எனப் பெயர் வைத்துள்ள மதி நுட்பத்தை எத்தனை பாராட்டினாலும் தகும்தானே! எப்படி முடிந்தது? விந்தையிலும் விந்தை! அன்றைய விண்வெளி அறிவும் போய்விட்டது. மரம் வளர்ப்பு மட்டுமே உயிர் பாதுகாப்பு என்கிற நுட்பத்தைப் புரிந்து (ஆக்சிஜன், ஓசோன், கரிய மில வாயு, ஒளிச்சேர்க்கை) இன்ப நிகழ்ச்சி, துன்ப நிகழ்ச்சி எதுவானாலும் மரம் நட்டுவித்து (முகூர்த்தக்கால்) பல்லுயிர் ஓம்பும் வாழ்வியல் நுட்பத்தை அடிப்படை சமுதாயக் கடமையாக வரையறுத்துக் காத்து வந்திருக்கிறானே! எத்தனை பேரறிஞர்கள் நம் முன்னோர்கள்! இப்போது முகூர்த்தக்கால் கூட முளைக்க முடியாத மூங்கில் குச்சியாகி விட்டதே! உயிர்ம்ம தத்துவம் கரைந்து மறைந்து விட்டதே! சுற்றுச் சூழல் பாதுகாப்பையும் இழந்து விட்டோம்தானே! மணம் முடிந்து, மணமகன்  வீடு வரும் மணப்பெண்ணை அமர வைத்து பாட்டு இயற்றி, சந்தத்தோடு பாடி குதூகலித்த புலமை எங்கே? அதே போல மணமகள் வீடு செல்லும் மணமகனை உறவினர்கள் பாட்டு இசைத்து வரவேற்று எதுகை மோனை சந்தத்தோடு பாடி மகிழ்ந்த "நலுங்கு" இன்று எங்கே? பரவலாக இருந்த பாட்டு இயற்றும் திறமை போயிற்று! தோழிகளோடு விளையாடி மகிழ்ந்த "அம்மாணை" வினா – விடை – விளையாட்டு எங்கே? அது என்ன வென்றாகிலும் தெரிந்தவர் இன்று உண்டா? அந்நியமயமாவதிலே சுயத்தை இழப்பதிலே தணியாத ஆர்வம் தமிழர்களுக்கு. திருமணம் போன்ற பொது நிகழ்வில் வாசிக்கப்பட்ட நம் நாட்டுப் பம்பை, பறை, இசை மறைந்து போனது, ஒருபுறம் இருக்கட்டும். நாதசுரம் இசை கூட மங்கி இப்போது கேரளாவின் "செண்டை மேளத்தை" ஆடவிட்டு தலையாட்டி ரசித்துக் கொண்டிருக்கிறோமே! புதுமையை ரசிப்பதாகச் சொல்லிக் கொண்டு இருப்பதை இழக்கலாமா? அவர்கள் அவர்களுடையதை பரப்பி வரும் போது நீ உன்னுடையதை இழந்து வருகிறாய் என்பது புரியவில்லையா? எப்படிச் சொல்லிக் கொடுக்க? தமிழிசையும் போயிற்று. ஏற்கனவே திறுவையாறில் தியாகராயர் ஆராதனை என்கிற பெயரில் தெலுங்கு கீர்த்தனை தமிழைக் கொச்சைப் படுத்தி தூக்கி எறிந்து விட்டது. தமிழ்ப் பாட்டும், இசையும் கூட பரலோகத்திற்கு அனுப்பியாயிற்று என்று புரிய வில்லையா? நம் தமிழ்நாட்டு இனிப்பு வகை பண்டங்கள் கூட மாறிப்போய் விட்டது. தேன்குழல், அதிரசம் யாரும் சீண்டுவதில்லை. "பாம்பே ஸ்விட், ரசகுல்லா, சாங்கிரி" வகைகள் எல்லாம் கடலை மாவும், சர்க்கரை(ஜீனி)யும் தானே. புதுப்புது அந்நிய மொழிப் பெயர்களில் என்ன மோகம்! என்ன வேகம்! எத்தனை மகிழ்ச்சி!!! நம் உணவு அரிசி உணவு. உணவெனப்படுவது நிலத்தொடு நீரே; எந்தப் பகுதியில் எந்தவித மண் வாகுக்குத் தக்கபடி, எந்த வித நீர்நிலை அமைந்திருக்கிறதோ, அது அதனைச் சாப்பிட்டு, அந்ததந்தப் பகுதி உயிர்களாக வாழ்வதுதான் இயற்கை. நம் சோளக் கஞ்சி, கம்பங்கூழ், கேப்பை, சாமை, திணை, கருப்பட்டி வகைகள் போயே போய், கோதுமை உணவான பூரி, சப்பாத்தி என்று ஆக்கி நமிப்பு செய்ய வரவேற்பு கொடுத்து விட்டோமே! உணவு வகைகளையும் பறிகொடுத்து விட்டோம். நம் நாட்டின் எள் எண்ணெய் கூட நல்லெண்ணெயாகப் பயன்பட்டு வந்ததை மாற்றி, சூரிய காந்தி எண்ணெய், பனை எண்ணெய் என மாற்றிக் கொண்டு சிறுநீரகக் கோளாறினாலும், இதய அடைப்பு நோய்களாலும் பீடிக்கப்பட்டு அல்லாடிக் கொண்டிருக்கிறோம். நோயாளிகளாக திரிந்து கொண்டிருக்கிறோம். இது நாமாக இழுத்துக் கொண்ட நச்சு வலை. ஆக உணவு வகைகளையும் இழந்து விட்டோம்.  நம் தமிழ்நாட்டு மாடுகள் கொண்டை அமைப்போடு நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும் கொண்ட காங்கேயம், மனப்பாறை, ஒம்பிலாச்சேரி மாடுகள் எங்கே? அதிகப்பால் உற்பத்தி என்கிற கவர்ச்சியில் மயங்கி, கொண்டை இல்லாத மொட்டை மாடுகளாக, அம்மா என்று கத்தக் கூடத் தெரியாத கலப்பு இன மாடுகளாக நாடு முழுவதும் திரிய விட்டு விட்டோமே! நெஞ்சம் பொறுக்குதில்லையே! நம் கால்நடைகளின் கம்பீரத் தோற்றம் எங்கே? காளைகளின் தோற்றம் வீரத்தமிழர்களின் தோற்றம்! ஆனால் இப்போது?  நம் நாட்டு கன்னி ஆடு, கொடி ஆடு, பால்போரை, செம்போரை ஆடுகள் கூட தவறான கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டு, ஜமுனாபுரி என்கிற வட மாநில ஆடுகளும், தலைச்சேரி என்கிற கேரள ஆடுகளும் , போயர் என்னும் அந்நிய இன ஆடுகளை வளர்க்கத் தொடங்கி விட்டார்கள். அதனால் அத்தனை நோய்களும் தாக்கப்பட்டு, ஆடுகள் கூட அடிபட்டுப் போய் வருகிறது. ஆக தமிழ்நாட்டுப் பாரம்பரிய கால்நடைகளையும் முற்றாக தொலைத்து வருகிறோம். தமிழர்கள் "மா" நிறத்தவர்கள். நம்முடைய தமிழ்நாட்டு அமைப்பு 12 மணி நேர பகலும், 12 மணி நேர இரவும் சராசரியாக அமையப்பெற்ற நிலப் பகுதி. நம் நிறமும் உயரமும், சராசரியாகத்தான் இருக்கும். இதுதான் இயற்கை. நாம் சிவப்பாக பெண் தேடுவதும், சிவப்பாக மாப்பிள்ளை தேடுவதும் அந்நியமயமாக்கல் என ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை? நாம் நாமாகத்தான் இருக்க வேண்டும். நம்முடையது மட்டுமே நம்முடையதாக இருக்க வேண்டும். நம் தமிழ்நாட்டு கோவில் அமைப்புகள், கோபுர அமைப்புகள் ஆகியவை நம் தலை, கழுத்து, மார்பு, இடுப்பு, கால், பாதம் போன்ற இயற்கையோடு இணைந்து அத்தனை சிறப்பாக வடிவமைக்கப்பட்டது நம் கட்டிடக் கலை. என்ன நடந்தாலும், மனிதன் நிற்பது போல நம் கோபுரங்கள் அசைந்து கொடுக்காமல் நின்று கொண்டிருக்கும். தஞ்சை பெரியக் கோவில் வெறும் ஐந்து அடி ஆழம் மட்டுமே அடித்தளமாகக் கொண்டு கட்டப்பட்ட கோபுரம். கோவில்கள் சூழ்ந்த கும்பகோணம் ஆடுதுறை பக்கத்தில், வடநாட்டு முறையில் மார்வாடிகளால் கண்ணன் கோவில் கட்டி முடிக்க ஏமாந்து விட்டிருக்கிறோமே! நெஞ்சம் துடிக்க வில்லையா? நம் நாட்டில் அந்நியமா? நம் மரபு வழி கோவில் எங்கே? நம் கட்டிக் கலைக்கு என்ன பஞ்சம் வந்தது? வடநாட்டு முறையை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டாமா? இது அந்நியத்திற்கு அடிபணிந்து போகும் அடிமைப்புத்தியைக் காட்டவில்லையா? ஆக கட்டிடக் கலை நுட்பத்தையும் இழந்து வருகிறோம். "அ – அறம் செய்ய விரும்பு" எனச் சொல்லிக் கொடுத்த அறவழி மக்களாக, வாழ அரும்பிலேயே கற்றுக் கொடுத்ததை மாற்றி A -ஆப்பிள் என்று கற்றுக் கொடுத்து, அம்மாவை அம்மா என்று கூட அழைப்பதை மாற்றிக் கற்றுக் கொடுத்து விட்டோம். ஆக கல்வி நிலையும் போயே போய் விட்டது. இனி என்ன மிச்சம் இருக்கிறது? நாம் யார்? தமிழரா? இல்லையே! இழப்பதற்கு இனி எதுவும் இருப்பதாக தேடித் தேடிப் பார்த்தாலும் இடமே இல்லையே! "நாம் தமிழர்கள்" என்று சொல்லிக் கொள்ள இன்றைய தலைமுறையினர்களுக்குத் தகுதி இருக்கிறதா?  மொழியின் பெயரை தன் பெயராகக் கொண்டிருந்தவர்கள் நம்மவர்கள்; தமிழ்ச் செல்வி, தமிழ் அழகன், தமிழ்ச் சுடர் இப்படியாகப் பெயர் வைத்து மகிழ்ச்சி அடைந்தவர்கள் நம்மவர்கள். இன்று தன் பிள்ளைக்கு, தான் பெயர் சூட்டுவதைக் கூட இழந்து, யாரோ எழுத்து எடுத்துக் கொடுக்க அந்தப் பெயரை வைத்து தமிழ்நாட்டின் அடையாளத்தை பெயரிலிருந்து விலகி விட இடம் கொடுத்து விட்டோமே! நம்மை நம்மாலேயே மன்னிக்க முடிகிறதா? இதற்கெல்லாம் விடிவு எப்போது? எப்படி எதிலிருந்து தொடங்குவது? நமக்கான பணி மிகப் பெரிய பணியாக நம் கண் முன்னால் தெரிகிறது. எப்படியேனும் இத்தமிழகத்தை முப்படி உயர்த்திடல் வேண்டும் – அதற்கு நம் மூச்சு உதவிடல் வேண்டும். – பாரதிதாசன்.- இயற்கை மருத்துவர் காசிப்பிச்சை"

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி