உலகை மாற்றிய உரைவீச்சு – 2 - தமிழ் இலெமுரியா

19 April 2015 12:40 pm

ஜார்க் வாசிங்க்டன்  அமெரிக்காவில் 1732 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 22 ஆம் நாள் விர்ஜீனியா மாகாணத்தில் பிறந்தவர். விர்ஜீனிய மாகாண இராணுவத்தில் ஒரு சாமானிய வீரனாகச் சேர்ந்து 1755 ஆம் ஆண்டு தலைமைப் பொறுப்பேற்றவர். பின்னர் 1759 -75ஆண்டுகளில் திருமணம் செய்து கொண்டு இங்கிலாந்தின் காலனி ஆட்சியில் நிலப்பிரபுக்களின் குறைகளை இங்கிலாந்து அரசிடம் எடுத்துரைக்கும் முக்கிய நபராக வலம் வந்தார். இங்கிலாந்து ஆட்சிக்கெதிரான சுதந்திரப் போராட்டம் வெடித்த போது புரட்சியாளர்களின் படைக்குத் தலைமை தாங்கி இங்கிலாந்து படைகளைப் பல மாகாணங்களிலிருந்து விரட்டி இறுதியில் சரணடையச் செய்தவர். சுதந்திர அமெரிக்காவை உருவாக்கி அதன் பின்னர் அமெரிக்க அரசியல் சட்டத்தையும் உருவாக்கிய ஜார்ஜ் வாசிங்க்டன் 1789 ஆம் ஆண்டு அமெரிக்காவின் முதல் ஆட்சித்தலைவராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பெற்றார்.இரண்டு முறை அப்பதவியை வகித்த ஜார்ஜ் வாசிங்க்டன் 1799 ஆம் ஆண்டு திசம்பர் 14 ஆம் நாள் விர்ஜீனியாவில் மறைவுற்றார்.        அமெரிக்க நாட்டின் முதல் குடியரசுத் தலைவர், அமெரிக்க நாட்டின் விடுதலையை வென்றெடுத்த இராணுவத்தின் தலைமைத் தளபதி என்கிற வகையில் அமெரிக்க வரலாற்றின் ஒரு தனித்துவம் மிக்க இடத்தைப் பெற்றவர் ஜார்ஜ் வாசிங்க்டன் ஆவார். இரண்டு முறை அமெரிக்க நாட்டின் தலைமைப் பீடத்தில் இருந்தவர். மூன்றாவது முறையும் தேர்வு பெற, தற்போது உள்ளது போன்று எந்தத் தடையும் அந்த கால கட்டத்தில் இல்லாத நிலையிலும் தான் மீண்டும் போட்டியிட விரும்பாமல் 1796 செப்டம்பர் திங்கள் 17 ஆம் நாள் மிகக் கவனமாகவும், நேர்மையுடனும் அமெரிக்க மக்களிடத்தில் ஆற்றிய வழியனுப்பு உரை மிகவும் முக்கியமானதாகும். அந்த உரை அமெரிக்க நாட்டின் கொள்கை அறிக்கை மட்டுமல்லாது அந்நாட்டின் வரலாற்றில் ஒரு மைல் கல்லாகும். பல ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் மீண்டும் ஒலிபரப்பப் பட்ட ஒன்றாகும்.   அந்த உரையில் இரண்டு அம்சங்கள் மிகவும் அழுத்தமாகச் சொல்லப் பட்டவையாகும். புதியதாக உருவாகியிருக்கும் புரட்சித் தீயில் உருவான இளைய அமெரிக்க நாட்டு மக்களின் ஒற்றுமைப் போக்கு மற்றும் அனைத்து மக்களுக்கும் பொதுவான கலச்சார, மரபு வழி ஒற்றுமை, சமயங்கள் காட்டும் நீதி என்பவைகளாகும். நாட்டு மக்களிடையே நிலவும் எவ்விதமான முரண்பாடுகள், கருத்து வேறுபாடுகள், உள் நாட்டுக் குழப்பங்கள், ஒத்தக் கருத்தின்மை போன்ற அனைத்திற்கும் அப்பால் புனிதமானதும், மேலானதுமாக விளங்குவது ஐக்கிய (United) என்ற சொல்லாகும். அவரது உரையின் பெரும்பகுதி வெளிநாட்டு உறவுகள் பற்றியதும், அமெரிக்க மக்களின் நேர்மை, நியாயம் மனிதாபிமானம் போன்றவைகள் பற்றியதுமாய் அமைந்திருந்தது. அவர் உரை அந்த கால கட்டத்தில் அவருடைய கட்சியினருக்கும் எதிர்க்கட்சியாக விளங்கிய குடியரசுக் கட்சியின் தலைவர் தாமஸ் ஜெப்பர்சன் போன்றவர்களுக்கும் ஒரு பெரும் செய்தியாக அறிவுரையாக விளங்கிய ஒன்றாகும்.   18 ஆம் நூற்றாண்டில் சற்றொப்ப ஏழு ஆண்டுகள் அமெரிக்க மண்ணில் நடைபெற்ற குருதிக்களத்தை ‘‘அமெரிக்கப் புரட்சி என்றும், ‘‘பிரான்ஸ் – இந்தியப்போர்" என்றும் (இந்திய நாட்டுடன் தொடர்பில்லாத ஒன்று) ‘‘அமெரிக்க விடுதலைப் போர்" என்றும் கடந்த நூற்றாண்டுகளின் "முதலாம் உலகப்போர்" என்றும் பலவாறாக வரலாற்றில் அழைக்கப்படுகின்றது. அந்தப் போரின் மூலம் பெற்ற அனுபவம் அவரை மிகுந்த முதிர்ச்சியுள்ள ஒரு சிந்தனையாளனாக மாற்றியது. அந்த நிலையில் மீண்டும் அமெரிக்காவின் தலைமைப் பதவிக்கு போட்டியிட விரும்பாமல் அவர் ஆற்றிய வழியனுப்பு உரை அமெரிக்க மக்களுக்கு அடுத்த தேர்தல் குறித்த அறிவுரையாகவும் விளங்கியது. உலக வரலாற்றில் 18 ஆம் நூற்றாண்டில் இவ்வுரை மிகவும் முக்கியமான மாற்றத்தை விளைவித்த ஒன்றாகும். தற்போதைய அமெரிக்க கொள்கை கோட்பாடுகள் ஜார்ஜ் வாசிங்க்டன் உரையிலிருந்து வெகுதொலைவில் சென்று விட்டன என்பது வரலாற்றில் ஏற்பட்டுள்ள மாற்றமாகும். மாற்றம் ஒன்று தான் மாறாதது.       நண்பர்களே! என் அன்பான குடிமக்களே, அமெரிக்காவின் அரசு நிருவாகத்தை நடத்த உங்களில் ஒரு குடிமகனை தேர்வு செய்யவேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை. நம்முடைய மக்களின் குரலாகவும், நம்பிக்கைக்குப் பாத்திரமாகவும் விளங்கும் ஒரு நபரை நியமிக்க வேண்டுமே என்று நினைக்கின்ற வேளையிலேயே அந்த நாள் வந்து விட்டது. இந்த வேளையில் நான் தற்போது ஒரு தீர்மானம் குறித்து உங்களுக்குச் சொல்ல வேண்டும் என விரும்புகின்றேன். அதாவது நீங்கள் உள்ளத்தில் உருவகப்படுத்தியிருக்கும் பல நபர்களில் ஒரு நபராக நான் இருக்க விரும்பவில்லை என்பது தான் அது.  அரசியல் தளத்திலிருந்து வெளியேற நான் ஒரு புறம் நினைத்தாலும் கூட, நம் நாட்டுப் பற்றும், தேச உணர்வும் என்னை வெளியேற விடாமல் தடுக்கின்றன. உங்கள் மீதான அக்கறை என்பது என் மறைவுக்குப் பின் தான் என்னை விட்டு அகலும். இயற்கையான அந்த அக்கறை உணர்வு என்னுள் ஒரு பெருமிதத்தையும் ஒரு பயம் கலந்த உணர்வையும் அடிக்கடி என்னை சுய பரிசோதனை செய்து கொள்ள தூண்டுகிறது. எனவே தொடர்ந்து பாராட்டைப் பெற்றுக் கொண்டிருக்கிற இவ்வேளையில் என் மனதிற்கும் மிகவும் முக்கியம் என்று தோன்றுகிற சில விடயங்களை மக்களாகிய உங்கள் முன் வைக்க விரும்புகின்றேன்.   உங்கள் இதயத்தின் ஒவ்வொரு நாளங்களிலும் சுதந்திரத்தின் மீது காதலுடன் பின்னிப் பிணைந்துள்ளது. இந்த உணர்வை உறுதி படுத்த என் பரிந்துரை தேவையில்லை என்று கருதுகின்றேன். அரசாங்கத்தின் ஒற்றுமை அதனடிப்படையில் நீங்கள் அனைவரும் ஒரே குடிமக்கள் என்பது தான் தங்களின் உயரிய செல்வமாகும். அதுவே, உங்கள் உண்மையான சுதந்திர மாளிகையின் ஒரு முக்கியத் தூணாகும். அந்தத் தூண் தான் உங்கள் வீட்டின் அமைதி, வெளிநாட்டில் இருக்கும் போது சமாதானம், உங்கள் வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் உயர்வாக மதிக்கப் படுகின்ற விடுதலை ஆகிய அனைத்தையும் உறுதுணையுடன் தாங்கிப் பிடிக்கும் தன்மை வாய்ந்ததாகும்.  பொதுவான ஒரு நாட்டில் பிறந்ததாலோ அல்லது அந்த நாட்டை விரும்புவதின் மூலமோ குடிமக்களாக ஆன பின்பு அம்மக்களின் விருப்பங்களில் கவனம் செலுத்துவது அந்நாட்டின் கடமையாகும். அமெரிக்கன் என்ற பெயர் உங்களுக்குச் சொந்தமானது; பெருமிதமானது. பொதுவான தேசக்குடிமகன் என்ற  உணர்வில் உள் வேறுபாடுகளை மறந்து பெருமிதம் கொள்ள வேண்டும். மிக மிகச் சிறிய வேறுபாடுகளைத் தவிர, நீங்கள் அனைவரும் ஒரே பண்பாடு,   ஒரே கலாச்சாரம்,   ஒரே மதம், ஒரே பழக்க வழக்கம். ஒரே அரசியல் கொள்கை என்பவற்றால் பிணைக்கப்பட்டுள்ளீர்கள். தோளோடு தோள் கொடுத்து ஒற்றுமை உணர்வு, கூட்டு ஆலோசனை, கூட்டு முயற்சி ஆகியவைகளினால் நம்மைச் சூழ்ந்த கேடுகள், இடர்பாடுகள் என அனைத்தையும் தகர்த்து நமது குறிகோள்களுக்காகப் போராடி வெற்றி பெற்றுள்ளோம்.   ஆனால் இவைகள் எல்லாம் எவ்வளவு வலிமை மிக்க உணர்வாக இருந்தாலும் தற்போது தங்கள் நலனை முன்னெடுத்துச் செல்லும் விடயங்களே முக்கியமாகத் தென்படும். ஆனால் தங்களின் ஒற்றுமையில், நாட்டின் ஐக்கியத்தைக் காத்து நிலை நாட்டும் தன்மை ஆகியவைதான் தங்கள் விடுதலையின் சொத்தாக கருதப்படுகிறது.   அனைத்து நாடுகளையும் நன்னம்பிக்கையுடனும், சம நீதியுடனும் காணுங்கள்; செயல்படுங்கள்; அமைதியை விதைத்து நல்லிணக்கத்தை விரும்புங்கள். சமயங்களும் அறநூல்களும் இவைகளையே வழங்கியுள்ளன. அவைகள் செயலாக்கம் பெற வேண்டாமா? மனிதாபிமானமும் மேன்மை மிகு நீதியுமே ஒரு பெரிய நாட்டின் அறிவார்ந்த செயலாகவும், எடுத்துக்காட்டாகவும் எதிர்காலத் தலைமுறைக்கு வழிகாட்டியாகவும் அமைய முடியும். இவைகள் வருங்காலத்தில் மிகப்பெரிய அற்புதமான நலன்களை நாட்டுக்குச் சேர்க்கும் வலிமை படைத்தவை.  நம்முடைய தற்காலிக பலன்களை விட நீண்ட கால பலன்களே நன்மை விளைவிப்பன.   காலம் நமக்குத் தரும் பாடம் மிக நெருக்கமான உறவுகளில் மனித இயல்பானது தீமையான பலவற்றைச் சமரசம் செய்து கொள்கிறது என்பது தான். எனவே ஒரு நாட்டின் மீது கொள்கிற அதீத பாசம் என்பது இன்னொரு நாட்டின் பகைமையை வளர்க்கும் தன்மை கொண்டது. தீவிரமான நேச உணர்வு என்பது ஒரு கற்பனையான பொது நலன்களையும், மாயைகளையும் உருவாக்கவல்லது. வேறு ஒரு நாட்டின் எதிர்ப்பை பொறாமை உணர்வைத் தூண்டவல்லதும் ஆகும். போதிய புரிதல் இல்லாமல் சச்சரவுகளையும், போர்களையும் கூட தூண்டவல்லது. எனவே அளவுக்கு அதிகமான பாச உணர்வு என்பது நன்மைகளை விட தீமைகளயும், ஊழல்களையும் நேர விரயத்தையும், இலட்சியங்களின் சிதைப்பையும் தூண்டும் சக்தி வாய்ந்த ஒன்றாகும். எனவே நம்முடைய கொள்கை என்பது எந்த ஒரு நாட்டுடனும் மிக நெருக்கமான உறவைப் பேணுவது தவிர்க்கப்பட்டு, பொதுமை நடுவு நிலைமை உணர்வுடன் அமைய வேண்டும். வணிக நோக்கத்திற்காக உறவுகள் தேவை என்றாலும் அதில் அரசியல் உறவு என்பது மிகக் குறைந்த அளவு கொண்டாதாகவே இருக்க வேண்டும். நாம் ஏற்கனவே கொண்டிருக்கும் தொடர்புகளில் கூட அவர்களின் நம்பிக்கையை உறுதிப் படுத்துவதுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.   அய்ரோப்பாவுக்குச் சில முதன்மை நலன்கள் உள்ளன; ஆனால் நமக்கு அப்படி ஒன்றும் கிடையாது. இதன் காரணமாக அந்நாடு அடிக்கடி பல சிக்கல்களில் அகப்பட்டுக் கொள்கிறது. அதற்கான காரணங்கள் நமக்குத் தேவையில்லாதவையாகும். எனவே இது போன்ற வேளையில் ஒரு செயற்கை உறவை ஏற்படுத்துவதோ, அரசியலில் தலையிடுவதோ ஒரு அறிவார்ந்த செயலாக இருக்க முடியாது. எனவே துண்டிக்கப்பட்ட நிலை அல்லது பாதுகாப்பான இடைவெளி என்ற அளவில் நமது பாதை சற்று வேறுபாடானதாகும். நம்முடைய நிலை சிலருக்குப் பிடிக்காமல் போகலாம்; அதன் விளைவாக அவர்களுக்குப் பயன்கள் கிட்டாமல் இருக்கலாம். எனவே நம்மைச் சீண்டிப் பார்க்க எண்ணலாம்; நம்முடைய நடுவு நிலைமையை மதிக்கத் தெரியாத அவர்கள் நமக்கு ஊறு விளைவிக்கலாம். அது போன்ற நேரங்களில் நம்முடைய நலன்களைப் பாதுகாத்திட அமைதியா? போரா? என்று தீர்மானம் செய்ய நமக்கு நேர்மையும், நீதியும் வழிகாட்டும்.   நாம் ஏன் நமக்குச் சாதகமான வழிமுறையைத் தேர்ந்தெடுத்து செயல்படக் கூடாது? இன்னொரு நாட்டின் வெளியுறவுக் கொள்கைக்காக நம்முடைய நிலைப்பாட்டிலிருந்து ஏன் விலக வேண்டும்? ஐரோப்பாவின் ஆசை, நலன்கள், போட்டி, இச்சைகளுக்காக நம்முடைய அமைதி, வளத்தை சிக்கலுக்குள் உட்படுத்திக் கொள்வதா?   உலகின் எந்தப் பகுதியிலும் எந்த நாட்டுடனும் நிரந்தர உறவு வைப்பதை தவிர்ப்பது தான் நமது உண்மையான கொள்கை முடிவாக இருக்க வேண்டும். தற்போது விடுதலைப் பெற்ற நிலையில் அவ்வாறு செயல்பட நமக்குச் சுதந்திரம் உள்ளது. தனிமனித வாழ்வில் கடைபிடிக்கும் நேர்மையை பொது வாழ்விலும் கொள்ள வேண்டும். அது தான் சிறந்த கொள்கையாகும். சரியான வழியில், நம்மை நாமே பாதுகாத்துக் கொள்கின்ற வகையில் நிர்மானித்துக் கொள்வதே சிறப்பாகும். நம்முடைய அவசர காலத் தேவைகளுக்காக, பாதுகாப்பிற்காகச் சிலருடன் தற்காலிகமான கூட்டணி அமைத்துக் கொள்வது அவசியமாகலாம். அவர்களை நம்பிக்கையுடன் கையாள வேண்டும்.   நான் என்னுடைய ஆட்சிக்கால செய்கைகளை மறு ஆய்வு செய்கையில் நினைவு தெரிந்த நிலையில் வேண்டுமென்றே தவறு செய்ததாகத் தெரியவில்லை. ஆனால் தவறுகள் ஏற்பட்டிருக்கலாம்; நிகழ்ந்திருக்கலாம். தவறுகளைப் பற்றித் திரும்ப  எண்ணுவதே தவறு என்ற நிலையில் தவிர்த்திருக்கலாம். எதுவாக இருப்பினும், இயற்கையை வேண்டுகின்றேன் .   என் செயல்கள் எங்காவது தீமைகள் ஏற்படுத்தியிருக்குமானால் அத்தீமைகளை தணித்து, இனி வருங்காலத்தில் தவிர்த்திடுமாறு வேண்டுகின்றேன். என்னுடைய நாட்டு மக்கள் அவற்றை நுகர மாட்டார்கள் என்று நம்புகின்றேன்.   இந்த மண்ணுக்காக, நாட்டு மக்களுக்காக பெரும் வைராக்கியத்துடனும் பெருமிதத்துடனும் கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகள் ஆற்றிய சேவையை எண்ணி நான் என்னுடைய இயலாமையால் செய்த தவறுகள் இருப்பின் மறப்பார்கள் என்று நம்புகின்றேன். விரைவில் நான் என்னுடைய இறுதி ஓய்வுக்காகக் காத்திருக்கிறேன்.   கருணையின் நம்பிக்கையில், தன் சொந்த மண்ணை தலைமுறை தலைமுறையாக நேசிக்கும் மனிதனின் இயற்கையான உணர்வும் காதலும் மகத்தானது. எந்த விதமான கலப்புகளும், கபடமும் இன்றி என் மக்களில் ஒருவனாக நேர்மையாக பணியாற்றிய அந்த இனிய உணர்வும் உற்சாகமும் இன்று போல் என்றும் என்னிடம் உள்ளது போல விடுதலைப் பெற்ற என் நாட்டு மக்களிடமும் இவைகள் சிறந்த சட்ட அமைப்பாகவும், அரசு நிருவாகமாகவும் ஒற்றுமையாகவும் வெளிப்பட வேண்டும் என்பதே என் பணிகளுக்கும், எனக்கும் கிடைக்கும் வெகுமதிகளாகும்; என் இதயத்தின் ஏக்கமும் இலட்சியமும் அதுவே ஆகும்.           "

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி