17 March 2015 5:20 pm
ஆங்கிலேயர்களின் வரலாற்றில் பொற்காலம் எனப் புகழப்படுவது இங்கிலாந்து மகாராணி முதலாம் எலிசபெத்தின் ஆட்சிக் காலமாகும். இவர் காலத்தில்தான் இங்கிலாந்து நாட்டின் பண்பாடு, நாகரிக வளர்ச்சியையும் கடல் வணிகத்தில் ஆங்கிலேயர்களின் ஏற்றமும் நிறைந்த ஒன்றாகக் காட்சியளிக்கின்றது. அப்படிப்பட்ட சூழலில் 1588ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களுக்கும் ஸ்பானிச அரசுக்குமான மோதலின் உச்சக்கட்ட நிலையில் ஆகசுடு எட்டாம் நாளன்று தேம்ஸ் நதிக்கரையில் தில்பரி என்ற இடத்தில் இங்கிலாந்து படை வீரர்களுக்கு எழுச்சியூட்டும் வகையில் படை வீரர்கள் மத்தியில் பேசிய உரைவீச்சு உலக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். என் அன்பான மக்களே! நம்மை பாதுகாப்பாக இருக்கும்படி சிலர் வலியுறுத்தி வருகின்றனர். ஆயுதப் போருக்கு முன்னால் எப்படித் தாக்குப்பிடிக்கப் போகின்றோம், நம்பிக்கைத் துரோகத்தை எவ்வாறு கையாளப் போகின்றோம்? என்றெல்லாம் பேசப்படுகிறது. ஆனால் நான் உங்களுக்கு ஓர் உறுதியைத் தர விரும்புகின்றேன்; நான் என்னை விரும்புகின்ற மக்களுக்கு, என் மீது நம்பிக்கை வைத்திருக்கும் மக்களுக்கு ஓர் அவநம்பிக்கையைத் தந்து வாழ விரும்பவில்லை. நான் என் மக்களை முழுமையாக நம்புகின்றேன். கொடுங்கோலர்கள் வேண்டுமானால் பயம் கொள்ளட்டும். ஆனால் எனது பலம் என்பது இறைவனடியில், மக்களின் நல்லெண்ணம், நாட்டு மதிப்பு, இறையாண்மை போன்றவையே என் வலிமையின் அடையாளமாகவும், நல் இதயங்களின் விருப்பமாகவும் திகழ்கிறது. அதனால்தான் இன்று நான் உங்கள் மத்தியில் நின்று கொண்டிருக்கின்றேன். நான் இங்கு வந்து உங்களுடன் கலந்திருப்பது பொழுது போக்கிற்காக அல்ல; ஆனால் ஒரு தெளிந்த மன உறுதியுடன் தற்போதைய நெருக்கடியான போர்ச் சூழலில் உங்களில் ஒருவராக வாழ்வதற்கும், உங்களோடு ஒருவராக சாவதற்கும் வந்துள்ளேன். நமது இறைவனுக்காக, நமது நாட்டிற்காக, நமது மக்களுக்காக, நமது நாட்டின் இறையாண்மைக்காக, நமது நாட்டின் மதிப்பிற்காக, என்னுடையப் போர் வீரர்களுடன் என் குருதியையும் இந்தப் புழுதியில் கலப்பதற்காக வந்துள்ளேன். எனக்குத் தெரியும் நான் ஒரு மெலிந்த பலவீனமான உடலை, உள்ளத்தைக் கொண்ட ஒரு பெண். ஆனால் என்னிடம் ஒரு மாபெரும் அரசனின் இதயமும் வயிறும் இருக்கின்றன. இங்கிலாந்து மன்னனின் பலம் இருக்கிறது. என்னுடைய நாட்டைக் காவுகொள்ள யாராவது நினைத்தால், என் நாட்டின் மீது எந்த அய்ரோப்பிய நாடாவது ஆதிக்கம் செலுத்த எண்ணினால், எம் மீது எந்த மன்னரும் படையெடுத்தால், எனக்கு என்ன அவமானம் ஏற்பட்டாலும் தயங்காது நானே ஆயுதம் ஏந்திப் போராடுவேன். நானே உங்களின் படைத் தலைவனாக ஆவேன். உங்களுடைய ஒவ்வொரு உணர்வுகளுக்கும் நீதி வழங்கும் நீதியரசராவேன். எனக்குத் தெரியும் நமது படையின் முன்னேற்றத்தில் உங்களின் உழைப்பும் உணர்வும் எத்தகையது என்பதை அறிவேன். அவைகள் பாராட்டப் பட வேண்டியவை; வெகுமதி பெற வேண்டியவை. பரிசுகளும் பட்டங்களும் வழங்கப்பட வேண்டும். நம் அரசின் சார்பில் உத்திரவாதம் அளிக்கின்றேன். அவைகள் உரிய நேரத்தில் தகுந்தவாறு வெளிப்படுத்தப்படும். அதே நேரத்தில் எனக்குப் பதிலாக நம் தளபதிகள் உங்களைச் செம்மையாக வழிநடத்துவர். அவர்கள் மிகவும் உண்மையானவர்கள். நம்பிக்கைக்கு உகந்தவர்கள். சற்றும் அய்யப்படாமல் பணியாற்றுங்கள். தங்களின் ஒற்றுமை உணர்வும், தளபதிகளின் சொற்களுக்குக் கீழ்ப்படிதலுமே இந்தப் போர்க் களத்தில் விரைவாக நமக்கு வெற்றி என்கிற மகிழ்ச்சியான செய்தியைத் தரும். இதன் அடைப்படையிலேயே நமது கடவுளின் எதிரிகளை, நமது அரசின் எதிரிகளை, நமது மக்களின் எதிரிகளை வெற்றி கொள்வோம். இராணி எலிசபெத் – I இங்கிலாந்து நாட்டில் கிரீன்விச் என்ற இடத்தில் எட்டாம் ஹென்றிக்கும் அவரது இரண்டாவது மனைவி அன்னிபோலினுக்கும் 1533ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 7 ஆம் நாள் பிறந்தவர் இராணி எலிசபெத் ஆவார். ஆறாம் எட்வர்டுக்குப் பின்னர் 1558ஆம் ஆண்டு இங்கிலாந்து ராணியாக முடிசூட்டப்பட்டவர். இவரது ஆட்சிப் பீடத்தில்தான் கத்தோலிக்கத் திருச்சபை அந்த நாட்டில் வேரோடிப் பரவியது. கத்தோலிக்கர்கள் மீது பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நாடகத் துறையில் கவிஞர் சேக்சுபியர் போன்றோரின் நாடகங்கள் வளர்ச்சிப் பெற்றன. கடல் வாணிகம் செழித்தது. அமெரிக்காக் காலனியாக விர்ஜின் உருவாக்கம் பெற்றது. அப்போதைய அமெரிக்காவை எலிசபெத் தன் ஆட்சியின் கீழ்க்கொணர்ந்தார். ஸ்பானிசு படைகளை விரட்டி அடித்து தன் படை வீரர்கள் மத்தியில் நேரடியாக இவர் ஆற்றிய உரை வரலாற்றுச் சிறப்புடையதாகும். இவர் கடைசிக்காலம் வரை திருமணம் செய்யாமாலும், குழந்தை பெற்றுக் கொள்ளாமலும் இருந்தவராவார். துடோர் மன்னராட்சியின் இறுதி ராணியான இவர் 1603ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் நாள் மறைந்தார்.- சு.குமணராசன்.