15 September 2015 5:11 pm
தலைவர்களே! தோழர்களே! தோழர் ஜவஹர்லால் கூட சுயராஜ்யத்துக்கு (தன்னாட்சிக்கு) ஒரு குறிப்பிட்ட அர்த்தம் சொல்லவே இல்லை. ஆனால், அவர் சுயராஜ்யம் என்றால் ஒரு சமயத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பார்; மற்றொரு சமயம் பிரிட்டிஷ் ஆட்சியை ஒழிப்பது என்பார்; மற்றொரு சமயம் தொழிலாளர் ஆட்சி என்பார்; மற்றொரு சமயம் குடியானவர் ஆட்சி என்பார்; மற்றொரு சமயம் சமதர்மம் என்பார்; மற்றொரு சமயம் பூரண சுயேச்சை என்பார்; மற்றொரு சமயம் பட்டினியும் வேலையில்லாத் திண்டாட்டமும் ஒழிவதே என்பார்; மற்றொரு சமயம் உலகப் பொதுவுடைமை என்பார். இப்படி இன்னமும் எவ்வளவோ விதமாக வாயில் வந்தபடி, சமயத்துக்குத் தக்கபடிப் பேசுவார். தோழர் காந்தியாரோ சுயராஜ்யத்துக்கு அர்த்தம் ஒரு சமயத்தில் ராமராஜ்யம் என்பார்; மற்றொரு சமயம் வருணாசிரம முறையைச் சரிவர அமைப்பதே என்பார்; மற்றொரு சமயம் சுயராஜ்யத்தில் இராஜாக்களுக்கும் ஜமீன்தாரர்களுக்கும் இடம் உண்டு என்பார்; மற்றொரு சமயம் அவரவர் ‘சுதர்மத் தொழிலை’ச் செய்யச் செய்வதே என்பார்; மற்றொரு சமயம் இராட்டினமே (இராட்டை) சுயராஜ்யம் என்பார்; மற்றொரு சமயம் எல்லோரும் கதர் கட்டுவதே சுயராஜ்யம் என்பார். கடைசியாகச் சென்ற மாதத்தில் ‘பிரிட்டனுக்கும் இந்தியாவுக்கும் கடுகளவு மனக் கசப்பு ஏற்பட்டாலும் என் உயிரைக் கொடுத்தாவது அம் மனக் கசப்பை ஒழிப்பேன்’ என்றார்.இன்னமும் என்ன என்னமோ இந்த 20 வருட காலமாகப் பேசிவந்திருக்கிறார். மற்றபடியான – நமதருமை ‘பாரத மாதாவின் புதல்வர்கள்’ – தேச பக்தர்களும், தேசிய வீரர்களும் ‘சுயராஜ்யத்துக்கு ஆக உடல், பொருள், ஆவியைத் தத்தம் செய்தவர்’களுமான குட்டித் தலைவர்களும் தொண்டர்களும் போன மாதத்தில்தான் இந்தியச் சக்கரவர்த்தியான பிரிட்டிஷ் அரசர்க்கும் அவரது சந்ததிக்கும், அவரது ஆக்கினைக்கும் (ஆணைக்கும்) ஆட்சிக்கும் சட்டதிட்டங்களுக்கும் பக்தியாயும் விசுவாசமாயும் இருந்து, கீழப்படிந்து நடப்பதாகச் சத்தியம் செய்து கொடுத்து, சர்க்கஸ் வளையத்துக்குள் ஆட்டம் போடும் சிங்கங்களைப் போல் இருந்து கொண்டு, அந்நிய ஆட்சி ஏஜென்டுக்கு அடங்கி நடந்து வருகிறார்கள். இரஷ்யா பொதுஉடைமை தேசம். அங்கு இன்றும் பொதுமொழி இல்லை. நம் நாடு என்பது, அதாவது இந்தியாவானது அந்நிய ஆட்சிக்கு முன் – இராமர் ஆட்சி என்று சொன்ன காலத்திலும் 56 தேசத்துக்கும் ஒரே சக்கரவர்த்தியாகச் சொல்லப்பட்ட காலத்திலும் பொதுமொழி என்று ஒன்று இருந்ததாக ஆதாரமோ சரித்திரமோ ஒன்றும் காணவில்லை. அதற்கடுத்தாற்போல், இந்தியா நம் தாய்நாடு என்று சொல்வதற்குத்தான் ஆதாரம் என்ன இருக்கிறது? இந்தியா என்கின்ற பெயர் இந்த நாட்டுக்கு எப்போது ஏற்பட்டது? இதற்கு எல்லை என்ன? பர்மா சென்ற வருடம் பிரிந்துவிட்டது. அதற்குமுன் இலங்கை பிரிந்துவிட்டது. அதற்குமுன் மலேயா பிரிந்துவிட்டது. அதற்குமுன் நேபாளம், பூடான் பிரிந்து விட்டன. அதற்குமுன் காந்தாரம், காபூல் (ஆப்கானிஸ்தான்) பிரிந்துவிட்டன. இப்படியே எவ்வளவோ பிரிந்து, எவ்வளவோ சேர்ந்து இருக்கிறது. இந்த நிலையில் தாய்நாடு எது? தகப்பன் நாடு எது? புராண காலத்தில் 56 நாடுகள் இருந்தனவே, அப்போது ஒரு நாட்டுக்காரன் இன்னொரு நாட்டைத் தாய்நாடு என்று கருதினானா? அய்ரோப்பாவில் நார்வே, ஸ்வீடன், டென்மார்க், ஹாலண்டு, பெல்ஜியம், போர்ச்சுக்கல், கிரீஸ் ஆகிய நாடுகள் நமது நான்கு ஜில்லா (மாவட்டம்), மூன்று ஜில்லா, இரண்டு ஜில்லா போன்ற பரப்பளவு கொண்டவை. இவர்கள் எல்லோரும் தத்தம் நாட்டைத் தாய்நாடு என்பார்களே ஒழிய அய்ரோப்பாவைத் தாய்நாடென்பார்களா? இனி, பொதுவாகச் சில வார்த்தைகள் சொல்ல ஆசைப்படுகிறேன். இந்தியா பல மதம், பல வகுப்பு, பல தனிப்பட்ட இலட்சியம் கொண்ட கோரிக்கைகள் உள்ள நாடு. இது உலகில் உள்ள மற்ற நாடுகளைப்போல் மதம், அரசியல், சமூக வாழ்க்கை முதலியவைகளில் ஒரே மாதிரி இலட்சியமுடையதல்ல. கண்டிப்பாய் இந்து- முசுலிம் இலட்சியமும் பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் இலட்சியமும் வேறு வேறாகவே இருந்து வருகின்றன. செல்வாக்கில்லாத இலட்சியமுடையவர்களை, செல்வாக்குள்ள இலட்சிய முடையவர்கள் இழித்தும் பழித்தும் கூறிக் கேவலப்படுத்துவதாலோ, கட்டுப்பாடாக உண்மையை மறைத்துப் பிரச்சாரம் செய்வதாலோ, கூலிகளை ஏவிவிட்டுக் காலித்தனம் நடக்கச் செய்வதாலோ எல்லோருடைய இலட்சியமும் ஒன்று என்று சொல்லிவிட முடியாது. ‘ஒரு நாட்டு மக்களை ஆளவேண்டுமானால், அவர்களுக்குக் கல்வி வாசனையும் அறிவுச் சுதந்திரமும் இல்லாமல் மடையர்களாக வைத்திரு.’ ‘ஒரு நாட்டு மக்களை என்றும் அடக்கி ஆளவேண்டுமானால், அவர்களுக்குப் பொருளாதார உரிமை இல்லாமல் சாமி, பூதம், பிசாசு என்கின்றதான மூட நம்பிக்கையைப் புகுத்திப் பயமுறுத்தி அவர்களது பொருள்களைக் கொள்ளையடி.’ ‘ஒரு நாட்டு மக்களை அடக்கி மிருகங்களிலும் கேவலமாய் என்றென்றும் அடிமைப் படுத்தி ஆதிக்கம் செலுத்த வேண்டுமானால், அந் நாட்டு மக்களை ஆயிரம் சமூகமாக ஆக்கி, ஒன்றுக்கொன்று உயர்வு தாழ்வு கற்பித்துச் சின்னா பின்னப்படுத்தி வை’. என்பதல்லாமல் வேறு என்ன இருக்கிறது? உதாரணமாக, அரசியலில் பார்ப்பனரல்லாதார் இயக்கம் ஏற்படும் முன்பு சில படிப்புகளுக்கு – டாக்டர் முதலிய பரீட்சைக்குச் (தேர்வுக்கு) சமற்கிருதம் படித்திருக்க வேண்டுமென்று பார்ப்பனர்களால் சூழ்ச்சி செய்யப்பட்டு இருந்தது. அதனாலேயே பார்ப்பனரும் மலையாளிகளுமே பெரும்பான்மையாய் டாக்டர்களானார்கள். ஜஸ்டிஸ் கட்சி வந்தபிறகு – பனகல் அரசர் காலத்தில் சமற்கிருதம் படித்திருக்க வேண்டும் என்கின்ற நிபந்தனை எடுக்கப்பட்டு விட்டது. அதற்கப்புறமே பார்ப்பனரல்லாத தமிழ்மக்கள் பலர் டாக்டர்களாக முடிந்தது. அதுபோல்தான், இந்திக்கு உத்தியோக யோக்கியதையும் வைத்துவிட்டால் – பழையபடி, நாம் கல்வியில் இன்னும் அதிகமான பிற்பட்ட வகுப்புக்காரர்களாக ஆகிவிடுவோம். ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களுக்கு இதைப்பற்றி அதிகக் கவலையில்லை. அவர்களில் பலர் இராமாயணத்தைப் பூஜீப்பவர்கள், அதைப்பற்றி நாம் இப்போது கவலைப்பட வேண்டாம். நம் தமிழ் மக்கள் இதை நன்றாய் உணர வேண்டும். அதாவது, இது ஒரு நெருக்கடியான சமயம்; இதில் ஏமாந்து விட்டோமேயானால் தமிழன் தாசி மகனாகத்தானே ஆகிவிடுவான்? இப்பொழுதாவது அதற்கு என்று ஒரு சாதியும், ஒரு நாடும் மாத்திரமிருக்கிறது. இந்தி புகுந்துவிட்டால் தமிழர்கள் பூராவும் – பெண்கள் தாசிகளாகவும், ஆண்கள் தாசிமக்களாகவும், தாசர்களாகவும் ஆகிவிட வேண்டியதுதான். அந்த நிலை ஏற்பட்டபிறகு நாம் இருப்பதைவிட இறப்பதே மேல். கட்சி உணர்ச்சியை இதில் விட்டுவிடுங்கள்.- வே.ஆனைமுத்து(ஈரோடு, கொல்லம்பாளையத்தில் 19-09-1937 இல் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு.)- ‘பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள்’ தொகுதி 3,பதிப்பாளர் வே.ஆனைமுத்து