எனக்கு ஒரு கனவு இருக்கிறது - தமிழ் இலெமுரியா

15 October 2015 1:50 pm

1955 ஆம் ஆண்டு ஒரு நாள், அமெரிக்காவில் அல்பேனியா மாநிலத்தில் மொண்டொகொமேரி என்ற நகரில் ஆப்பிரிக்க இனத்தைச் சேர்ந்த அமெரிக்க பெண்மணி பேருந்தில் வெள்ளையர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்தார். பேருந்து ஓட்டுநர் ரோசாபார்க்ஸ் என்ற அந்த தையல் தொழில் செய்யும் பெண்மணியை சற்று பின்னால் சென்று வேறு இருக்கையில் அமருமாறு அமெரிக்க நாட்டின் பாகுபாடு சட்டத்தைச் சுட்டிக் காட்டி வேண்டினார். அதற்கு அப்பெண்மணி மறுப்பு தெரிவித்தார். அதற்குப் பின்னர் காவல்துறையினரால் கைது செய்யப்படுகிறார். இந்த நிகழ்வு அமெரிக்காவில் வாழும் ஆப்பிரிக்க இன மக்கள் அனைவரும் பேருந்துப் பயணத்தைப் புறக்கணித்துப் போராட்டத்திற்கு அடிகோலியது. அதன் பின்னர் அமெரிக்க நாட்டு உச்சநீதி மன்ற தீர்ப்பின் படி அமெரிக்காவில் அதுவரையில் நடைமுறையில் இருந்த இனப்பாகுபாடு சட்டம் ரத்து செய்யப்பட்டு அனைத்துப் பயணிகளும் பேருந்தின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் இருக்கைகளில் அமரலாம் என்கிற நிலை உருவாகியது. அந்தப் போராட்டத்தை முன்னெடுத்தவர் தான் இறையியலில் முனைவர் பட்டம் பெற்ற ஆப்பிரிக்க இனத்தைச் சேர்ந்த அமெரிக்கக் குடிமகன் மார்ட்டின் லூதர் கிங் இளையவர் ஆவார்.  எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர், தெற்கு கிறித்துவ தலைமையாளர் மாநாட்டின் தலைவராக அமெரிக்க நாட்டின் சமுக உரிமை இயக்கத்தின் ஒரு மையப் புள்ளியாக விளங்கி தன் ஆதரவாளர்கள் சற்றொப்ப 2,50,000 மக்கள் முன்பு ஆபிரகாம் லிங்கன் நினைவு மண்டப படிக்கட்டுகளில் நின்று கொண்டு உரையாற்றினார். வேலைக்காகவும் விடுதலைக்காகவும் வாசிங்க்டன் தெருக்களில் பேரணி" யாக வாருங்கள் என்கிற முழக்கம் முன் வைக்கப் பெற்றது. அந்த முழக்கமே பள்ளிகளிலும் வேலைபார்க்கும் இடங்களிலும் இன ரீதியான பாகு பாடுகளை நீக்கவும், ஆப்பிரிக்க – அமெரிக்க இன மக்களின் உரிமைகள் மேம்படவும் காரணமாக இருந்த ஒன்றாகும். அதுவே பின் நாள்களில் 1964 ஆம் ஆண்டு சமுக உரிமைச் சட்டம், 1965 ஆம் ஆண்டின் தேசிய வாக்களிக்கும் உரிமைச் சட்டம் போன்றவைகளுக்கு வழி வகுத்தது. மன உறுதியுடனும் தொலை நோக்குப் பார்வையுடனும் செயல் பட்ட மார்ட்டின் லூதர் கிங்கின் அறிவுத்திறன் வரலாற்றில் இடம் பிடித்துவிட்ட ஒன்றாகும். அக்கால கட்டத்தில் நவீன அமெரிக்காவை உருவாக்கும் வகையில் பல பேசப்பட்டாலும், 1963 ஆம் ஆண்டு "எனக்கு ஒரு கனவு இருக்கிறது" என்கிற தலைப்பில் மார்ட்டின் லூதர் கிங்க் பேசிய பேச்சு வரலாற்றையே மாற்றியுள்ளது எனலாம்.  அன்று அவர் தொடங்கியதிலிருந்து கையாண்ட சொற்கள் பைபிள் போன்ற நூல்களிலிருந்து எதுகை மோனையில் கவிதை நடையில் ஒரு நறுமணமும் அடுக்கமும் நிறைந்த வாறு பேசிய விதம் ஆகிய அனைத்தும் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னால் கெட்டிஸ்பர்க் நகரில் ஆபிரகாம் லிங்கன் ஆற்றிய உரை போன்று அமைந்தது. அந்த உரை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முகமூடிகளை அகற்றுவதற்கான வழிமுறைகளை உலகிற்கு அறிவித்தது. புதிய எருசேலம் அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு வீடு என்று போற்றிடும் கிறித்துவ மதத் தத்துவங்களைக் கொண்டதாகச் சொல்லும் அமெரிக்காவில் இன அடிப்படையில், நிற அடிப்படையில், அரசமைப்புச் சட்ட அடிப்படையில் சமுக ஏற்றத்தாழ்வுகளும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் வறுமையும் மனித நேயத்திற்கு எதிரான செயல்கள் எவ்வாறு இருக்க முடியும்? என அறைகூவல் விடுத்தார். அவருடைய இலக்கும் உச்சமும்  இனச் சமன்பாடு வகையில் அமைந்தது. ‘பைபிளின் பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டிருப்பது போல ஒரு புத்துலகின் தேவை என்பது கரடுமுரடான பள்ளத்தாக்குகள் ஒரு நாள் வலிமை மிக்க மலைகளாகவும் மகத்தான குன்றுகளாவும் மாறும்; அதிலே என் மக்கள் உயர்த்தப் படுவார்கள்; அனைத்தும் சரி செய்யப் படும்’ என்ற வரிகளை உச்சரித்தார்.     - ஆசிரியர் நூறாண்டுகளுக்கு முன்பு, மேன்மை மிக்க ஒரு அமெரிக்கராக நமக்கு ஒரு விடுதலைப் பிரகடனத்தைத் தந்த அவருடைய நிழலில் நின்று கொண்டிருக்கிறோம். அடிமைப் படுத்தப்பட்டிருந்த நீக்ரோ இன மக்களுக்கு ஒரு கலங்கரை விளக்காகவும் அநீதி என்ற இருட்டில் ஒரு அகல் விளக்காகவும் அமைந்தது. இருட்டறையில் பூட்டப்பட்டிருந்த மக்களுக்கு ஒரு காலைக் கதிரவனில் வெளிச்சம் தென்பட்டது போல அமைந்தது.  ஆனால் இன்று நூறு ஆண்டுகள் கடந்த நிலையிலும் அந்த நீக்ரோக்கள் இன்றும் ஒரு முழு விடுதலையை அடையவில்லை. இன்று வரை அநீதியும் இனப்பாகுபாடும் தொடர்ந்து வருவதைக் காண்கிறோம். பரந்து விரிந்து இயற்கை வளமிக்க நாடாக விளங்கும் இந்நாட்டில் இன்றளவும் வறுமையிலும் தனிமையிலும் வாழும் ஓர் இனமாக கருப்பினம் தென்படுகிறது. அமெரிக்காவில் ஆங்காங்கே மூலை முடுக்குகளில் தான் ஒரு வேற்று நாட்டான் போல நடத்தப் படுகின்ற அளவுக்கு ஒதுங்கி வாழ்கிறார்கள். அந்த வெட்கக்கேடான நிலையை உலகுக்கு உணர்த்தவே இங்கு வந்துள்ளோம்.  ஒரு வகையில் நாம் இன்று நமது தேசத்தின் தலைநகருக்கு ஒரு காசோலையைப் பணமாக்குவதற்காக வந்திருக்கிறோம். நம்முடைய இந்தக் குடியரசை நிர்மாணித்தவர்கள் விடுதலை அறிவிப்பையும் அரசமைப்பு சட்டத்தையும் ஓர் உறுதிமொழிப் பத்திரத்தையும் ஒவ்வொரு அமெரிக்கனுக்காகவும் வெளியிட்டார்கள். அந்த உறுதிமொழி என்பது அமெரிக்காவில் வாழும் அனைத்து இன மக்களும், ஆம் வெள்ளையர்களும் கருப்பர்களும், வாழ உரிமை பெற்ற மக்களாக தங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சிக்காக அனைத்து அதிகாரங்களையும் அங்கீகாரங்களையும் பெற்ற மக்களாக உயர்வோம் என்பதாகும். ஆனால் அந்த உறுதிமொழி இன்று புறக்கணிக்கப் பட்டிருக்கிறது. இது நிறத்தின் அடிப்படையில் இனத்தின் அடிப்படையில் நடைபெறுகிறது. ஒரு புனிதமான அந்த உறுதி மொழி காப்பாற்றப் படுவதற்குப் பதிலாக இன்று அமெரிக்காவில் காற்றில் பறக்கவிடப் பட்டிருக்கிறது. நீக்ரோ மக்களுக்கு வழங்கப்பெற்ற அந்தக் காசோலை "வங்கியிலே காசில்லாமல் திரும்ப அனுப்பப் பட்டிருக்கிறது" என்கிற வாசகத்துடன் நிராகரிக்கப் பட்டுள்ளது.  ஆனால் அந்த நீதிவங்கி திவாலாகிவிட்டது என்பதை எங்களால் நம்ப முடியவில்லை. பொருள் வளமிக்க அந்த வங்கிப் பெட்டகத்தில் போதிய நிதி இல்லை என்பதை நாங்கள் நம்பத் தயாராக இல்லை. எங்களுக்கு வழங்கப் பட்ட காசோலையை மாற்ற வந்திருக்கிறோம். ஆம் எங்களுக்கு நீதி கிடைக்கும்; வாழ வழி கிடைக்கும், விடுதலையின் பயன் கிடைக்கும் என்றெல்லாம் சொல்லப் பட்ட உறுதி மொழியுடன் கூடிய காசோலையை மாற்ற வந்திருக்கிறோம். மேலும் இந்த வெற்றிடப் புள்ளியில் வெள்ளை அமெரிக்கர்களுக்கு எங்களின் உடனடித் தேவையை உணர்த்துவதற்காக வந்திருக்கிறோம்.  இப்போது நமக்குப் போதிய நேரமில்லை. பொறுமை இழந்து விட்டோம். படிப்படியாக நோயை குறைக்கும் மருந்து முறைக்குச் செல்ல இயலாது. காத்திருப்பு நேரம் இல்லை. நாம் இந்த மக்களாட்சி (சனநாயக) உறுதி மொழியை நிறைவேற்றும் காலம் வந்து விட்டது. நாம் எழுச்சி பெற வேண்டிய தருணம் இது. கரடு முரடான பள்ளத்தாக்கை சரி செய்ய வேண்டிய வேளை இது. இன ரீதியான நீதியைப் பெற வேண்டிய தருணம் இது. சமுக அநீதி என்கிற மணற்கோட்டையைத் தகர்த்தெரிந்து வலிமையான சகோதரதத்துவ உணர்வை ஏற்படுத்தும் ஒரு வலிமையான பாறையிலான கோட்டைக் கட்டப் பட வேண்டும். கடவுளின் குழந்தைகள் அனைவருக்கும் உண்மையான நீதி கிடைக்கச் செய்யவேண்டிய நேரம் இது.  இந்த அவசரத் தன்மையை ஒரு தேசம் புரிந்து கொள்ளவில்லையெனில் நடக்கும் விபரீதம் பெரிதாகும். இந்தக் கொடுமைகளிலிருந்து கருப்பின மக்கள் விடுவிக்கப் படவில்லையெனில் அவர்களின் கோபம் நியாயமானது. அவர்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய சமுக நீதியையும் விடுதலையையும் சுவாசிக்க வேண்டிய காலம் நெருங்கி விட்டது. 1963 என்பது முடிவல்ல; அது  ஒரு தொடக்கம். கருப்பின மக்களின் கோபம் இதுவரை வெளிப்படவில்லை என்று யாராவது கருதி இந்தநாடு அவர்களைப் பற்றிக் கவலை கொள்ளாமல் தவறுதலாக தன் பணிகளைத் தொடருமானால் சந்திக்க வேண்டிய விளைவுகள் மிக விபரீதமாகும். கொதித்தெழுவர் எம் மக்கள்.   கருப்பின மக்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய குடியுரிமையும் சமநீதியும் மறுக்கப் படுமானால் இந்த அமெரிக்க நாட்டில் அமைதியோ சமாதானமோ நிலை பெறாது. இங்கு வீசும் எழுச்சிப் புயல் இந்த நாட்டின் அடித்தளத்தையே குலுங்க வைத்துவிடும். நீதியின் & விடுதலையின் ஒளிக் கீற்றுகள் எம்மீது விழும் வரை இந்த எழுச்சி தொடர்ந்து கொண்டேயிருக்கும்.. நீதி அரண்மனையின் வெளியில் பொறுமையின் எல்லைகளைக் கடந்து நின்று கொண்டிருக்கும் எம்மின மக்களுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகின்றேன்.  நாம் நம்முடைய இலக்கை நோக்கிப் பயணிக்கின்ற இந்த செயல்முறைகளில் எந்தவித தீய எண்ணங்களுக்கும் ஆட்பட்டு விடக் கூடாது. நம்முடைய சுதந்திர தாகத்தை தீர்ப்பதற்காக கையில் கிடைக்கும் எந்த நீரையும் குடிப்பதைப் போன்று கசப்பையும் வெறுப்புணர்வையும் வளர்த்துவிடக் கூடாது. நாம் நம்முடைய போராட்டத்தை எப்போதும் கடமை உணர்வுடனும் கண்ணியத்துடனும்தான் கையாள வேண்டும். மிகுந்த நுண்ணறிவோடு கவனமாக நடத்தும் இப்போராட்ட முறையில் சிறிதளவும் வன்முறை தலைதூக்க அனுமதிக்கக் கூடாது. திரும்பத் திரும்ப நாம் நினைவில் கொள்ள வேண்டிய சித்தாந்தம் நம்மை உடல் ரீதியாக தாக்கினாலும் நம்முடைய விவேகமும் உள்ளுணர்வும் உயர்ந்த நிலையிலேயே இருக்க வேண்டும்.  நாம் எதிர்பார்க்காத அளவு நமக்கு வலிமையை கூட்டுணர்வைத் தந்திருக்கிற இந்த நிலை அனைத்து வெள்ளையர்களையும் நம்பத்தகாதவர்கள் என்ற நிலைக்குத் தள்ளி விடக் கூடாது. எண்ணற்ற வெள்ளைக்காரர்கள் நம்முடைய சகோதரர்களைப் போல் இங்கு வந்துள்ளனர். அவர்களின் நல்வரவும் மகிழ்ச்சியும் கருப்பின மக்களின் வாழ்க்கையோடு எப்போதும் இணைந்த ஒன்று என உணர்ந்து இங்கே நம்மோடு பங்கேற்கிறார்கள். அதை இங்கே நீங்கள் கண்கூடாகக் காணலாம். அவர்களில் பலர் மிக நன்றாக உணர்ந்திருக்கின்றனர். அவர்களின் விடுதலை நம்முடைய விடுதலையினின்றி பிரிக்கமுடியாத ஒன்று. நாம் தனியாக நடை போட முடியாது.  நாம் நடை போடுகையில், நாம் எப்போதும் முன்னணியிலேயே செல்கிறோம் என்கிற  உணர்வோடு நடைபோட வேண்டும். நாம் திரும்பிப் பார்க்கத் தேவையில்லை. மனித உரிமைகளை விரும்பும் மக்களில் பலர் "நீங்கள் எப்போது மன நிறைவு பெறுவீர்கள்?’’ என்று கேட்கிறார்கள். காவல் துறையினரால் சொல்ல இயலாத அளவுக்குத் துன்புறுத்தப் படும் இந்த கருப்பின மக்களுக்கு மனநிறைவு எங்கிருந்து கிட்டும்?  போராட்டமே வாழ்க்கைப் பயணமாக உடல் முழுவதும் சோர்வு நிறைந்திருக்கும் இந்தச் சூழலில் எங்கிருந்து கிட்டும் மன நிறைவு?  நம்மால் நகரங்களில் உள்ள விடுதிகளிலோ சாலைகளில் உள்ள ஓய்விடங்களிலோ தங்க இயலவில்லை. வாக்களிக்க உரிமையில்லாத ஒரு மிசிசிப்பியின் வாக்காளனோ அல்லது நியூயார்க் நகரில் எதற்கு வாக்களிப்பது என்று தடுமாறும் நீக்ரோ இன மக்களால் எக்காலத்தில் மன நிறைவு எய்த முடியும்?  இல்லை; இல்லை. நம்மால் மன நிறைவு கொள்ள முடியாது; மகிழ்ச்சியில் திளைத்திட இயலாது. கூடி வந்த மலைச் சாரலில் ஓடி வரும் நீராக நமக்கு நீதி கிட்டும் வரை நம்மால் மன நிறைவு கொள்ளஇயலாது.  இங்கே வந்திருப்பவர்களில் பலர் பல்வேறு வழக்குகள், விசாரணைகள், துன்புறுத்தல்கள் ஆகியவற்றைச் சந்தித்து வந்துள்ளீர்கள் என்பதை நான் அறியாதவன் இல்லை. உங்களில் பலர் சிறைச்சாலைகளிருந்து நேராகவே புத்தம் புதியவராக இங்கு வந்துள்ளீர்கள். இன்னும் சிலர் அவரவர் பகுதிகளில் நடைபெற்ற கொடுமைகளுக்கும் வெஞ்சினத்திற்கும் உட்பட்டு காவல் துறையின் காட்டுமிராண்டித்தனத்தினால் பெரிதும் பாதிக்கப் பட்டு வந்திருக்கிறீர்கள். துன்பங்களின் உச்சத்தை எட்டிய பெரியோர் பலர் இங்கு வந்துள்ளீர்கள். நம்பிக்கையுடன் செயல் படுங்கள். நாம் விரும்பாத இன்னல்கள் திருப்பிச் செலுத்தத் தக்கவையாகும். நம்பிக்கையுடன் உங்கள் நகரங்களுக்குத் திரும்பிச் செல்லுங்கள், நம்பிக்கையுடன் உங்கள் அழுக்கடைந்த குடிசைகளுக்குத் திரும்புங்கள்; அல்பேனியாவுக்குத் திரும்பிச் செல்லுங்கள்; மிசிசிப்பிக்குத் திரும்பிச் செல்லுங்கள்; லூசியானாவுக்குத் திரும்பிச் செல்லுங்கள்; தெற்குக் கரோனியாவிற்குத் திரும்பிச் செல்லுங்கள். நம்முடைய துன்பங்களும் துயரங்களும் எந்த வகையிலாவது முடிவுக்கு வந்து விடும் என்கிற நம்பிக்கையுடன் திரும்பிச் செல்லுங்கள். மனதில் வெறுமையும் சோர்வும் தங்க விடாதீர்கள் நண்பர்களே! எனக்கு ஒரு கனவு இருக்கிறது. அந்தக் கனவு ஒரு அமெரிக்கன் கனவுடன் ஆழமாக வேர் பிடித்திருக்கிறது.  எனக்கு ஒரு கனவு இருக்கிறது. அதன் படி இந்த தேசம் ஒரு நாள் சமுதாயம் என்பது என்ன என்பதை உணரும். இந்த உண்மையை நாம் தன்னம்பிக்கையுடன் பிடித்துக்கொள்வோம். அனைத்து மக்களும் சமமாகப் பாவிக்கப் படுவார்கள் என்ற நம்பிக்கை நம்முள் வரட்டும்.  எனக்கு ஒரு கனவு இருக்கிறது; இந்த ஜியொர்ஜியாவின் செங்குன்றுகளில் அடிமைகளாக இருந்த நம் மக்களின் புதல்வர்கள்; முதலாளிகளுக்கு அடிமைகளாக இருந்த முன்னோர்களின் புதல்வர்கள் ஒரு நாள் அமெரிக்க சகோதரர்களோடு ஒன்றாக மேசையில் அமர்ந்து சாப்பிட முடியும் என்று எண்ணுகின்றேன்.  எனக்கு ஒரு கனவு இருக்கிறது. அடக்குமுறைகளின் சின்னமாகவும், அநீதிகளின் பிறப்பிடமாகவும் இருக்கின்ற இந்த மிசிசிப்பி மாநிலம் விடுதலையின் சோலையாக, நீதியின் சோலையாக குளிர்தரும் பூங்காவாக மாறும் என்ற கனவு எனக்கு இருக்கிறது.  எனக்கு ஒரு கனவு இருக்கிறது; நம் இளையக் குழந்தைகளின் சீர்மையும் திறமையும் நிறத்தால் தீர்மானிக்கப் படாமல் அவர்களுக்குரிய அறிவுத் திறத்தாலும், கூர்மையாலும் தீர்மானிக்கப் படும் எனபது தான் இன்றையக் கனவாகும்.  எனக்கு ஒரு கனவு இருக்கிறது. அல்பாமா மாநிலத்தில் இனப் பாகுபாடு தோற்றுப் போகும்; ஆளுனர்களின் உதடுகள் தோல்வியை ஒப்புக் கொள்ளும். சின்னஞ்சிறு கருப்புக் குழந்தைகளும் சின்னஞ்சிறு வெள்ளைக் குழந்தைகளும் கைகோர்த்து சகோதர சகோதரிகளாக விளையாடும் என்ற கனவு இருக்கிறது. எனக்கு ஒரு கனவு இருக்கிறது; ஒரு நாள் பள்ளங்கள் அனைத்தும் மேடாகும்; உயர்ந்த மலைகளும் குன்றுகளும் சமமாகும்; கரடு முரடான வழிகள் சரியாகும்; வளைவுகளும் நெளிவுகளும் நேர்மைப் பெறும்; இறைவனின் மேன்மை வெளிப்படும்; உடல்கள் அனைத்தும் ஒன்று படும்; உணர்வுகள் இனிக்கும். இதுதான் நமது நம்பிக்கை. இந்த உண்மையோடு தெற்கே திரும்பிச் செல்கிறோம். அந்த நம்பிக்கையே மலையளவு துன்பத்தை ஒருசிறு கல் அளவு குறைத்து விடும். பிரதேசங்கள் சமப்படுத்தப் படும். இந்த நம்பிக்கை நம் அவநம்பிக்கைகளை அகற்றி வெறுப்பையும் கோபத்தையும் வளர்ந்த இந்ததேசத்தில் ஒரு இதமான இசையைப் போல சகோதரத் தன்மையினை வளர்க்கும். இந்த நம்பிக்கையுடன்நாம் ஒன்றாக பணியாற்ற முடியும்; ஒன்றாகப் பிரார்த்திக்க முடியும்; ஒன்றாகத் துன்பங்களை எதிர் கொள்ள முடியும், ஒன்றாக சிறைச் சாலைகளில் இருக்க முடியும்; விடுதலைக்காக எழுந்து நிற்போம், ஒரு நாள் விடிவு பிறக்கும்;  ஆம் அந்த நாள், கடவுளின் குழந்தைகள் அனைவரும் ஒன்றாக புதிய பொருளில் பாடல்களை இசைப்பர்; எங்கள் இனிய விடுதலைப் பூமியே! உன் ஏற்றத்தைப் பாடுகின்றேன்; இனிமையைப் பாடுகின்றேன்; எங்கள் தந்தையை இழந்த இம்மண்ணில், பெருமைப் பயணம் சென்ற இம்மண்ணில், ஒவ்வொரு மலைமுகட்டின் உச்சியிலும் விடுதலை ஒலி முழங்கட்டும். அமெரிக்கா ஒரு பெரிய நாடாக உருவெடுக்க வேண்டுமெனில் இந்த ஒலி உண்மையாகட்டும்; விடுதலை ஒலி கேட்கட்டும்! நியூயார்க், பென்சில்வேனியா; ஹேம்சஸ்ப்யர், கலிபோரினியா, ஜியொர்ஜியா, மிசிசிப்பி என அனைத்து இடங்களிலும் இந்த ஒலி முழங்கட்டும். அனைத்து மலை முகடுகளிலும் குகைகளிலும் விடுதலை மணியோசைக் கேட்கட்டும்.  இவைகளெல்லாம் உண்மையாகும் போது அமெரிக்க நாட்டின் ஒவ்வொரு நகரங்களிலும் ஒவ்வொரு தெருக்களிலும் ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு குடிசையிலும் விடுதலை மணியோசை ஒலிக்கும். கடவுளின் குழந்தைகளாக வெள்ளையர்களும் கருப்பர்களும் யூதர்களும் கத்தோலிக்கர்களும் கை கோர்த்து பாடுவர்; ஆடுவர் மகிழ்ச்சியில் துள்ளுவர்; இறுதியாக நீக்ரோ மக்களின் பழம்பெரும் பாடல் ஒன்றைப் பாடுவர்;  இறுதியில் விடுதலை; இறுதியில் விடுதலை; எங்கள் இறைவனுக்கு நன்றி; இறுதியில் விடுதலை விடுதலை!!!என ஒலிப்பர்.   மார்ட்டின் லூதர் கிங் -  1929 ஆம் ஆண்டு சனவரி 15-ஆம் நாள் அமெரிக்காவின் அட்லாண்டா (Atlanta) நகரில் பிறந்தவர் மார்ட்டின் லூதர் கிங்க். மைக்கேல் கிங்க் என்பது அவர் இயற்பெயராகும். எனினும் மறுமலர்ச்சித் தந்தையெனப் போற்றப்படும் மார்ட்டின் லூதர் நினைவைப் போற்றும் வகையில் அவர் பெயர் மார்ட்டின் லூதர் கிங்க் இளையவர் என பெயர் மாற்றம் பெற்றது.  பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் அவர் சமயக்கல்வி கற்றார். பின்னர் அவர் ஒரு (Dexter Avenue Baptist Church)  பாப்டிஸ்ட் பாதிரியானார். கருப்பினத்தவர்களுக்கு சம உரிமை மறுக்கப்பட்ட அமெரிக்க சூழ்நிலை அவரது மனதை எப்போதுமே அரித்துக் கொண்டிருந்தது. இருபதாம் நூற்றாண்டில் அறிவியல் முன்னேற்றத்தில் உலகுக்கே முன்மாதிரியாக விளங்கிய அமெரிக்காவில் அதன் குடிமக்களுக்கு சரிசமமாக வாழும் சூழ்நிலை இல்லை. கருப்பினத்தவர்களை தீண்டத்தகாதவர்களாக பார்த்தனர் வெள்ளையர்கள். உணவகங்கள், பேருந்துகள், பொழுதுபோக்கு இடங்கள் என எந்த பொது இடத்திலும் கருப்பர்களுக்கு என்று தனி இடம் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த இடங்களை மட்டும்தான் கருப்பர்கள் பயன்படுத்த வேண்டும்.  ஒதுக்கப்பட்ட இடங்களை விட்டு வெள்ளையர்களின் இடங்களுக்கு அவர்கள் வந்தால் என்ன நடக்கும் தெரியுமா? அந்த அநாகரிகமான விதிமுறைகளை மீறுபவர்களுக்கு சிறை தண்டனை நிச்சயம். எவ்வளவு காலம்தான் பொறுத்துக் கொள்வது. அதற்கு ஒரு விடிவெள்ளியாக அமைந்தவரே மார்ட்டின் லூதர் கிங்க் ஆவார்.  1963 ஆம் ஆண்டு வாசிங்க்டன் நகரில் ஒரு மாபெரும் பேரணியை நடத்தியவர். 1964 ஆம் ஆண்டு அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1968 ஆம் ஆண்டு ஏழை மக்களுக்காக ஒரு இயக்கம் தொடங்கினார். 1968 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 4 ஆம் நாள் வெள்ளையன் ஒருவனால் சுடப்பட்டு மறைவெய்தினார். அவர் பிறந்த சனவரி 15 ஆம் நாள் மார்ட்டின் லூதர் கிங்க் நாள் என அறிவிக்கப்பட்டு, அமெரிக்க அரசின் விடுமுறை தினமாக அனுசரிக்கப்பட்டுள்ளது.  அறவழியில் போராடுவது பற்றி அறிந்து கொள்ள 1959-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தார் லூதர் கிங்க். அங்கு ஒருமாத காலம் தங்கியிருந்து காந்தியடிகளோடு பழகிய தலைவர்களிடம் அகிம்சை போராட்டத்தைப் பற்றி கேட்டறிந்தார். மிகச்சிறப்பாகவும் உருக்கமாகவும் பேசக்கூடியவர் லூதர் கிங்க் அவரது பேச்சுகள் எழுச்சியூட்டியதே தவிர வன்முறையைக் கிளறியது இல்லை. 1963-ஆம் ஆண்டு வாசிங்க்டனில் மிகப்பெரிய அமைதிப் பேரணிக்கு ஏற்பாடு செய்தார் லூதர் கிங்க். சுமார் இரண்டரை இலக்கம் பேர் அங்கு திரண்டனர். அந்த அமைதிப் பேரணியில்தான் வரலாற்று சிறப்புமிக்க சொற்பொழிவாற்றினார் மார்ட்டின் லூதர் கிங்க். 39 ஆண்டுகளே வாழ்ந்து அகிம்சை உரையின் வழி உலகை மாற்றிய ஒரு மாபெரும் மனிதராக வரலாற்றில் வாழ்ந்து வருகிறார்.- சு.குமணராசன்"

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி