16 October 2014 12:55 am
கறிவேப்பிலைப் பண்பாடு பரவி வருகிறது. அதென்ன கறிவேப்பிலைப் பண்பாடு? இது கூடத் தெரியவில்லையா? கறிவேப்பிலையை என்ன செய்கிறோம்? குழம்பில் போடுகிறோம் சாப்பிடும் போது தூக்கியெறிந்து விடுகிறோம்."செய்தித்தாளில் ஒரு விளம்பரம் வந்தது. என்னுடைய தூவல் (எழுது கோல்) தொலைந்து விட்டது. நிழல் போல நீண்ட நாள் என்னிடம் இருந்தது. எனக்கு முனைவர் பட்டம் வாங்கித் தந்தது. யாரேனும் கண்டெடுத்தால் என்னிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன் அது இருந்தது எனக் கூறி நம் கதாநாயகர் கதை சொல்லியாக மாறிக் கொண்டார்.மாறியவர், ஒரேயொரு தூவலை வாழ்க்கை முழுவதும் வைத்திருந்து செத்துப் போனதெல்லாம் அந்தக் காலம். தங்கமுள், தங்க முலாம் பூசிய தூவல் என்பதெல்லாம் மலையேறி விட்டது. இப்பொழுதெல்லாம் எழுதினோமா, மை தீர்ந்ததா கறிவேப்பிலைப் போலத் தூக்கியெறி என்பதுதான் இன்றைய நடைமுறை.சீனர்கள்தாம் இதன் முன்னணி வீரர்கள். அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் அனைத்துமே இவ்வாறானவையே. எதற்கு அப்படிச் செய்கிறார்கள் என்று எண்ணிப் பாருங்கள். அப்படிச் செய்தால்தான் மக்கள் அடிக்கடி வாங்க வருவார்கள்; வணிகமும் பெருகும். விலையைக் கூட்டி வைத்து, பழுதானால் இலவசமாகப் பழுதுபார்த்துத் தருகிறோம் என்கிறார்கள். அவ்வாறு பழுது பார்த்துத் தரும் காலத்தை இரண்டு, மூன்று ஆண்டுகள் என்கிறார்கள். மக்கள் இதில் மயங்கி வாங்கிக் குவிக்கிறார்கள்.உற்பத்தி செய்த நாளிலிருந்து ஒன்பது மாதங்களுக்குள் பயன்படுத்தினால் சிறப்பு என்று விற்கப்படும் எல்லாவற்றிலும் வெவ்வேறு அளவுகளில் விளம்பரம் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். உணவுப் பண்டங்கள் போன்றவற்றில்தான் இத்தகைய அறிவிப்பு இருக்கும். பிற பொருள்களில் இருக்காது. சீனர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் உணவுப் பண்டம் தவிர்த்த பிற பொருள்களில் பழுதாகும் உதிரிப் பாகங்களை மற்றவர்கள் எளிதில் மாற்றிப் பயன்படுத்த முடியாத வகையில் வடிவமைத்து விடுகிறார்கள். அதன் விலையையும் அந்தப் பொருளின் விலையில் பாதிக்கு மேல் என்று கூறி விடுகிறார்கள். பழுதான பாகத்தை மாற்ற வேண்டுமென்றால் அவர்களிடம்தான் போக வேண்டும். மேலும் உதிரிப் பொருள் எவ்வளவு காலம் பயன்படும் என்பது அவர்களுக்குத் தெரியும். அவ்வாறு தெரிந்திருந்தும் அது நீண்ட காலம் பயன்படும் என்று விளம்பரப்படுத்தி அவர்கள் வலையில் நம்மைச் சிக்க வைக்கிறார்கள். நான்கு ஆண்டே பயன்படக் கூடிய பொருளுக்கு மூவாயிரம், நாலாயிரம் என்று விலை வைத்து இரண்டாண்டுக் காலம் இலவசப் பழுதுபார்ப்பு என்று கூறி உதிரிப் பாகங்களின் விலையை ஆயிரம், இரண்டாயிரம் என்று சொல்லி விற்கிறார்கள். இதைத் தடுக்க என்ன செய்யலாம்? என்று எண்ணிப் பாருங்கள். உணவுப் பண்டங்கள் தவிர்த்த அனைத்து நுகர் பொருள்களுக்கும் ஆயுள்காலம் நிர்ணயம் செய்தாலன்றி இறக்குமதி செய்யக் கூடாது என்று அறிவிக்கச் செய்து விட்டால் சீனப் பொருள்களை வாங்குவதில் மக்களுக்குள்ள மயக்கம் தீரும். இத்தனை ஆண்டு தானா! இதற்கேன் இவ்வளவு விலை கொடுக்க வேண்டும் என்று மக்கள் விழிப்புணர்வு கொள்ள வாய்ப்பு ஏற்படும்.இந்தியனாக இரு. இந்தியப் பொருள்களையே வாங்கு என்று சரக்குந்துகளில் எழுதப்படும் சொற்களுக்கு ஒரு சொரணை வரும் என்று நம் கதாநாயகர் சொல்லி முடிக்க, என் மனம் அவர் சொன்னதையே நினைத்துச் சுற்றிச் சுற்றி வர, ஒரு முடிவுக்கு வந்தேன். இனி சீனா இருக்கிற பக்கம் தலை வைத்துப் படுக்கக் கூடாதென்று! -முனைவர் தமிழப்பனார்"