காட்டுமிராண்டி விளையாட்டில் ஒரு கண்ணியவான் - தமிழ் இலெமுரியா

16 June 2016 5:47 pm

அகில உலக குத்து சண்டைப் போட்டிகளில் மூன்று முறை  உலக  சாம்பியனாகத் திகழ்ந்த  மிகப் பெரிய மாவீரன் முகம்மது அலி  இன்று   நம்மிடையே இல்லை. பார்க்கின்சன் நோயுடன் 32 ஆண்டுகளாகப் போராடிய அலி தனது 74வது அகவையில் இறப்பைத் தழுவியுள்ளார். பிறப்பு  என்ற நிகழ்வுக்கு   இறப்பு  என்ற முடிவு உண்டு.  இது தவிர்க்க முடியாத  இயற்கை நியதி. எத்தனை காலம்  ஒருவன் வாழ்ந்தான் என்று கணக்கிடுவதை விட, அவன் எப்படி வாழ்ந்தான்  என்று  ஒருவர் இருவர் அல்ல… ஊர் சொல்ல வேண்டும்.. இந்த உலகம் சொல்ல வேண்டும்.  முகம்மது அலிக்கு   உலகம் அஞ்சலி செலுத்தியிருக்கிறது. அவரது பெருமையை, புகழை எடுத்தியம்பியிருக்கிறது. அமெரிக்காவில்,  கருப்பின மக்கள்  இனவாத கொடுமைகளுக்கு  ஆளாகி,  சமூகத்தில் இரண்டாம் மூன்றாம் தர மக்களாக வாழ்க்கையின் விளிம்பில் நிறுத்தப் பட்டிருந்த கால கட்டத்தில்தான் கேசியஸ் மார்செலஸ்   கிளே பிறந்தார். தந்தை விளம்பர போர்டுகள் எழுதுபவர். அம்மா, அக்கம் பக்கத்தில் வசிக்கும் வெள்ளைக்காரர்களின் வீட்டை துப்புரவு செய்யும்  பணியாளர். பேருந்துகளில் கருப்பு இன மக்களுக்காக  ஒதுக்கப்பட்டிருக்கும் சில பின் வரிசை இருக்கைகளில் மட்டுமே அமரலாம். கருப்பு இளைஞர்கள் வெள்ளையர்களின் கத்திக்கும்  துப்பாக்கிகளுக்கும்  தங்கள் உயிர்களை  எந்தக்  காரணமும் இன்றி பலி கொடுக்க வேண்டியிருந்தது. கிளே  சிறுவனாக இருந்த போது, தாகத்திற்கு தண்ணீர் கேட்டு அழ,  வெள்ளையர் வீடுகளில்,  உணவு விடுதிகளில் குடிநீர் மறுக்கப் பட … சிறுவன் தாகத்துடன்  வீடு வந்து சேர்ந்தான். ஒருமுறை கிளே தந்தையிடம் ‘நாம் பணக்காரனாக முடியாதா?’ என்று கேட்க… தந்தை  கிளேயின்  கையை இழுத்து  கருப்பு தோலைக் காட்டி ‘இதைப் பார்… இதன் காரணமாக  நாம்   பணக்காரனாக முடியாது’ என்று சொன்ன நிகழ்வு  கிளேயின் மனதில் ஆறாத் தழும்பை உருவாக்கியது.  இனவெறி, நிற வெறி  அமெரிக்காவில் தாண்டவமாடினாலும்  அதனை எதிர்த்து  எழுப்பப்பட்ட குரல்கள்,  கறுப்பின மக்கள் உட்பட  யாருடைய  காதுகளிலும் விழவில்லை  என்பதுதான் உண்மை. எல்லாம் விதி என்று  அமெரிக்காவிலும்  நினைத்திருக்கிறார்கள். கிளே இளைஞனானதும்  அவன் கண்ணோட்டம் மாறுகிறது. பள்ளியில்  மிகச் சாதாரண  மாணவனாகத்  தேர்ச்சி பெறுகிறான்.  இலவயமாகக்  கிடைக்கும்  பாப்கார்ன்  வாங்க வந்த இடத்தில்,  அவனது புதிய  மிதிவண்டியை  யாரோ திருட… ஆத்திரத்தில் அங்கும் இங்கும் ஓடித் தேடுகிறான். ‘சைக்கிள் திருடன் கையில் கிடைத்தால்  அவனைத் துவைத்து எடுப்பேன்’ என்று திட்டித் தீர்க்க… ‘குத்து சண்டை கற்றுக்கொள்; திருடனை  துவம்சம் செய்ய உதவியாக இருக்கும்’ என்று  குத்துச் சண்டை  பயிற்சியாளர்  நெறிப்படுத்துகிறார். கிளே குத்து சண்டை பயிற்சி  பெற்று ஆரம்ப நிலை  வீரர்களை வெற்றி கொள்கிறார். பிறகு ஒலிம்பிக்  போட்டியில்  கலந்து கொண்டு  தங்கப் பதக்கத்துடன்  ஊர் திரும்பினார். வெள்ளையர்கள்  கிளேயின் வெற்றியைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஒலிம்பிக்  தங்கப் பதக்கம் மார்பில் மின்னும்படி  அணிந்து  நண்பனுடன்  உணவு விடுதிக்குப் சென்ற அவரை ‘கறுப்பர்களுக்கு   இங்கே  உணவு  தரப்படுவதில்லை’ என்று வெளியேற்றி விடுகின்றனர். அவமானத்துடன்  வெளியே  வந்த  கிளே, ‘தாய் நாட்டிற்கு ஒலிம்பிக் தங்கப் பதக்கம் பெற்றுக் கொடுத்தும் நாயை விடக் கேவலமாக  நடத்தப் படுகிறோமே..’ என்ற  விரக்தியில், தங்கப் பதக்கத்தை  ஓகியோ  நதியில்  வீசி எறிகிறான். மெல்ல மெல்ல இசுலாம் மதத்தின் பால்  கிளே ஈர்க்கப்படுகிறான். குத்துச் சண்டையை  முழு நேர தொழிலாக கிளே ஏற்கிறான். 1964இல்  சோன்னி லிசுடனுடன்   கிளே  மோதுவதற்கு  முன்னாள், அரசல் புரசலாக  கிளேயின் மத வழி மாறல் பேசப்படுகிறது. ‘என்னவானாலும் குத்துச் சண்டைக்குப் பிறகு  வைத்துக் கொள். இப்போது மதமாற்றம் குறித்த செய்தி உறுதிப்படுத்தப் பட்டால், அது போட்டியின் வசூலைப் பாதிக்கும். ஏன், போட்டியே நிறுத்தப்படலாம். நீ இப்போதைக்கு வாயைத் திறக்காதே’ என்று கிளே அறிவுறுத்தப்படுகிறார். லிசுடனைத் தோற்கடித்த   சில நாட்களில் கிளே இசுலாம் மதத்துடன் தன்னை இணைத்துக் கொள்கிறார். தொடர்ந்து, கேசியஸ் மார்செலஸ் கிளே’யைத் தவிர்த்து ‘முகம்மது அலி’ ஆகிறார். இச்செய்தி வந்ததும் அமெரிக்கா அல்லோகலப்பட்டது. அதிர்ச்சியில் உறைந்தது. பத்திரிகைகள்    அலியை கடுமையாக விமர்சித்தன. தொடர்ந்து  பல ஆண்டுகள்  சில முன்னணி பத்திரிகைகள்  அலியை  ‘கிளே’ என்றே குறிப்பிட்டு வந்தன.  சில  குத்துச்  சண்டை வீரர்களும் அலியை     ‘கிளே’ என்றுதான்  அழைத்து வந்தார்கள்.   அரசியல் தலைவர்கள்  ஆவேசம் கொண்டு  அலியை தாக்கிப் பேசினர்.  பெரும்பாலான அமெரிக்க   வெள்ளை  மக்கள் அலிக்கு எதிராக வெகுண்டு எழுந்தனர்.  கறுப்பின கிறித்துவ  மக்களும் அலிக்கு எதிரானார்கள். அலி   ‘கிளே’யாக இருந்த போது  காணாத  வெறுப்பினை  கருப்பு இசுலாமியனானதும்  சந்தித்தார். 1964இல் அலி அமெரிக்க ராணுவ வீரனாகும் தகுதிக்கான  மதிப்பெண்ணைப்  பெற முடியவில்லை.  அதற்குள் வியட்நாம் மீது  அமெரிக்க  உச்சகட்டப்   போரில்  உன்மத்தம் காட்டத்   தொடங்கியது. கிளே கருப்பு இசுலாமியன்  ஆன கோபம்,  அலியின் அடுத்தடுத்த வெற்றிகள்  அமெரிக்கத்  தலைமையை அலியின் முன்னேற்றத்தை  நிறுத்த  திட்டமிடச் செய்தது. ராணுவத்தில் சேர  தகுதி மதிப்பெண்ணைக்   குறைத்து, அலியை  தகுதி உள்ளவராக அறிவித்து , ‘வா… தாய் நாட்டிற்காக  வியட்நாம் சென்று போரிடு..’ என்று ஆணையிட்டது. அலி ‘கருப்பின மக்கள் இங்கே நாயை விடக் கேவலமாக  நடத்தப்படும் போது, நான் ஏன் ராணுவச்  சீருடை அணிந்து பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும்   வியட்நாம் அப்பாவிகளைக் கொல்ல வேண்டும். இங்கே என் மக்கள் நானூறு ஆண்டுகளாக சிறைப்பட்டிருக்கிறார்கள். நான்  ராணுவத்தில் சேர மாட்டேன். வியட்நாம்  போரில் கலந்து கொள்ள மாட்டேன்’ என்று  ஆணித்தரமாக   அலி  அறிவிக்க…. ‘அலி தேச  துரோகி, போர் என்றால் பயப்படும் பயந்தாங்கொள்ளி, குத்துச் சண்டையில் பணம் பண்ணும் பிசாசு’   என்று கண்டனங்கள்   எழுந்தன. அலியின்  ‘உலக சாம்பியன் பட்டம்’ பறிக்கப்பட்டது.  குத்துச் சண்டை போடும் உரிமம் (லைசன்ஸ்) ரத்து செய்யப்பட்டது. அமெரிக்கா விட்டு  வெளியே அலி  போகத் தடை… அத்துடன், அபராதம்  விதிக்கப் பட்டது. பண மோசடி  வழக்கும்  போடப்பட்டது.  ஆனால்  அலி  எதற்கும் அஞ்சவில்லை. கோடிக்கணக்கில் வருமானம்  கைவிட்டுப் போனது. எல்லா கோணங்களிலிருந்தும்  கண்டனங்கள்  அலியை நோக்கி  ஏவப்பட்டன. அதே சமயம்,  ஏகாதிபத்திய அமெரிக்க  அரசை எதிர்த்து  நின்றமைக்காக,  தேவையற்ற  போரில் கலந்து கொள்ளாமல்  நின்ற தீரத்திற்காக,  அலி  உலக அளவில்  பிரபலமானார்.   ஒரு சாதாரண  கருப்பின மனிதனால்  இத்தனை எதிர்ப்புகளை எப்படி சமாளிக்க முடிந்தது?  நூற்றாண்டுகளாக  அடிமையாக இருந்த  கருப்பின மக்களில்  ஆரோக்கியமும், திடகாத்திரமும் உள்ள  அடிமைகளை  மோதச் செய்து   அதைப் பார்த்து ரசிப்பது  அமெரிக்கர்களின்  பொழுது போக்கு. அந்த ரசனை  அவர்கள் குருதியில் ஊறிக்கிடந்தது.  அதனால்,  குத்துச் சண்டை அமெரிக்க மக்களை கவர்ந்திருந்தது.   அலியிடம் குத்துச் சண்டை  திறமை  அபாரமாக இருந்ததால், அவர் கருப்பு இசுலாமியனாக இருந்தாலும்,   அவரை வைத்துப்  பணம் பண்ணிய  வெள்ளைக்கார தனவந்தர்கள்,  அலி குத்துச் சண்டையைத் தொடர வேண்டும்  என்பதில்  முனைப்பாக இருந்தார்கள். அதனால், அலிக்கு அவர்களின் ஆதரவு இருந்தது.  அலியை வைத்து  வெளிநாடுகளில்  போட்டிகள் நடத்தி  பணம் சம்பாதிக்க முயற்சித்தாலும்  அது பலிக்கவில்லை. அலிக்கு  குத்துச் சண்டை திறமை இல்லாதிருந்தால்  அவர் மதம் மாறினாலும், மாறாவிட்டாலும்  செல்லாக் காசாக மாறியிருப்பார்.  குத்துச்  சண்டை  திறமை  இல்லாமல் போயிருந்தால்,   அலி  அல்லது  கிளே  புரட்சியாளராக மாறியிருக்க மாட்டார்.  வாயை மூடிக்கொண்டு இருந்திருப்பார்.   அலிக்கு  ‘குத்துச் சண்டை’ தளத்தின் கதவு மூடப்பட்டாலும் இன்னொரு கதவு திறக்கப்பட்டது.  படிப்பதில்  சராசரி மாணவனை விட  மோசமாக இருந்த அலி அமெரிக்க அரசின் எதிர் நடவடிக்கைகளால் பிரபலமானதினால், அலியின்  சொற்பொழிவினைக்  கேட்கக்  கல்லூரிகள்,  பல்கலை வளாகங்கள்  தங்கள் கதவுகளைத்  திறந்தன. மாணவச் சமுதாயத்திடம் அலி செல்வாக்கு பெற்றார். தேவையில்லாத வியட்நாம் போர் குறித்து முணுமுணுப்புகள்  கூட  எழாத  அமெரிக்காவில்  அலியின் எதிர்ப்பால் விமர்சனங்கள் எழத் தொடங்கின .  பொது மக்கள்  வியட்நாம்  போர்  பற்றி அலச ஆரம்பித்தார்கள்.  அமெரிக்க மக்களிடையே ஒரு விழிப்புணர்வு  ஏற்பட்டது.  எல்லாம்  அலி  என்ற தனி நபர் காரணமாக.  அலி தவிர்க்க முடியாத  சக்தியாக  வளர்ந்தார். மூன்று  ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்க  உச்ச நீதிமன்றம்  அலியை எல்லா குற்றச்சாட்டுகளிடமிருந்தும்  விடுவிக்க… அலி மீண்டும் குத்துச் சண்டை  வீரர் ஆனார். மூன்று முறை  உலக  சாம்பியன் ஆனார்.  தொழில்  ரீதியாக  அலி  புகழ் பெற்றதும் அவர் எப்படி பயிற்சி செய்கிறார்  என்று பார்க்க வரும் ஆர்வலர்களிடம் கட்டணம் வசூலித்து  தனது பயிற்சியைப் பார்க்கச் செய்தார். கிடைத்த  தொகையை  அப்படியே ஏழை எளியவர்களுக்கு அன்பளிப்பு செய்து வந்தார். குத்துச் சண்டையிலிருந்து  விலகிய பிறகு,  மருத்துவ மனையில்  சிகிச்சை பெறும் நோயாளிகளை  சந்தித்து  ஆறுதல்  கூறி வந்தார். ஈராக்  போரின் போது சதாம் உசைன்  பிடித்து வைத்திருந்த  அமெரிக்க  போர் வீரர்களை, நேரில் சென்று சதாமுடன் பேசி,   விடுதலை பெற்றார். அமெரிக்க அதிபர் தேர்தலில்  ஜிம்மி கார்ட்டர், ரொனால்ட் ரீகன்  போட்டியிட்ட போது  அவர்கள் வெற்றி பெற   அலி  களப் பணி ஆற்றினார். அலி தென்னாப்பிரிக்கா செல்ல தயக்கம் காட்டி வந்தார். அங்கே இன, நிற வெறி இருப்பதுதான் காரணம். ஆனால், நெல்சன் மண்டேலாவைச் சந்திக்க வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காக தன் கொள்கையைத் தள்ளி வைத்து விட்டு தென்னாப்பிரிக்கா சென்று மண்டேலாவைச் சந்தித்தார். அலி பிறரை சிரிக்கச் செய்து பேசுவதில் வல்லவர்; மோனையுடன் கவிதைகள் வாசிப்பார்; பாடுவார்; நடிப்பார்; மாய வித்தை (மாஜிக்) செய்வது அவருக்கு அத்துப்படி. அலி மற்ற பிரபலங்களைப் போல  தனது செல்வாக்கைப் பயன்படுத்தி  அமெரிக்க அரசில் செனட்  உறுப்பினராகவில்லை. தேர்தலில் போட்டியிட்டு  கவர்னர் ஆகவில்லை. சம்பாதித்த பணத்தை மூலதனமாகப் போட்டு  மட்டைப் பந்தாட்ட (கிரிகெட்) அணியை, கால்பந்தாட்ட அணியைத்  தொடக்கி  உரிமையாளர் ஆகவில்லை.  ஆனால் உலக நாடுகள் பல சுற்றி வந்தார். உலக தலைவர்கள் பலரை நேரில் சந்தித்தார். குத்துச் சண்டையை  உலக அளவில்  பிரபலமாக்கினார்.  அலி  களத்தில் இருந்த போது  குத்துச் சண்டைக்குத் தனிக் கலை இருந்தது. அதனால்தான்,  அவர்  இறுதி மூச்சு விடும் வரையில்  உலக மக்களின் பார்வையில்  உலக சாம்பியனாகவே இருந்தார்…  இருப்பார்!- பிஸ்மி பரிணாமன், கொச்சின்

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி