14 December 2013 9:22 am
குற்றவாளிகளிடம் கோடி – கோடி பணமிருந்தால் குற்றங்களைக் குருடாக்கி எத்தனிப்பது எளிமையாகி விட்டது. சட்டமா? நியாயமா? என்று கேட்டால் சட்டம்தான்; எனக்கூறும் நீதித்துறைக்கு நியாயங்கள் மறைக்கப்படுகின்றன. சாட்சிகளின் சுட்டிக்காட்டல் இல்லையென்றால், குற்றம் செய்தவன் குற்றமற்றவனாகிறான். தவறு எனத் தெரிந்தும், உயிர் தப்புவதற்காக மனதிற்குள் மறைக்கப்படும் உண்மைகள் பொய்யாக்கப்பட்டு, மனசாட்சியற்ற தன்மையில் குற்றங்கள் பெருகிக் கொண்டே போகின்றன. சாட்சிகள் இல்லை; அதனால் அவன் குற்றம் செய்யவில்லை என்பது தான் சட்டத்தின் மூலம் கொடுக்கப்படும் தீர்ப்பு. சாட்சிகளை மிரட்டி, அவர்களுக்குப் போதிய அளவு பணம் கொடுத்து சாட்சி சொல்ல விடாதபடி செய்து குற்றத்திலிருந்து தப்பிப்போர் தாம் செய்யும் தவறுகளுக்கும் மேலான தவறையும் செய்து தப்பித்து வருவது, சட்டப்பாதுகாப்பின் விடுதலையாக மாறிவிட்டது. சட்டப்படி சாட்சிகளின் சுட்டிக்காட்டல் நெறிப்படியே தீர்ப்பு வழங்குவதில், சாட்சிகளின் உள்மனதில் உண்மைகள் வெளிக்காட்டப் பட்டனவா என்பதை ஆராய்ந்து, அதன்படி சாட்சிகளின் சாட்சியங்களைப் பதிவு செய்ய வேண்டிய பொறுப்பும் கடமையும் நீதித்துறைக்கு இருக்கிறது. சட்டப்படி தீர்ப்பு என்பதற்கும், நியாயங்களை மனசாட்சியோடு நீதித்துறை ஆராய்ந்து பார்க்க வேண்டும். எப்போதோ இயற்றப்பட்ட சட்டம் இன்றைக்கும் சாட்சிகளின் சுட்டிக்காட்டலின் உறுதிப்படுதலை மட்டுமே உண்மையெனக் கொண்டு சொல்லப்படும் தீர்ப்பில், நியாயங்கள் மறைக்கப்படுகின்றன. தெய்வத்தைச் சாட்சியாக வைத்தே சாட்சிகளிடம் சாட்சியம் வாங்கப்படுகிறது. தெய்வத்தையும் ஏமாற்றி, மனசாட்சியையும் ஏமாற்றி எப்படியாவது தப்பிப்பதே குற்றவாளிகளின் எத்துவாளித் தனமாக்கப்படுகிறது. இங்கே சட்டமும் செத்து தெய்வத்தின் மேல் கூறும் சத்தியம் என்கிற நம்பிக்கையும் செத்துவிடுகிறது. நானே கடவுள்" என்னை வணங்கினாலே போதும் என்று சொல்லியும், மடாதிபதிகள் கூட இதையே கையாண்டு, தத்தம் குற்றங்களை மறைத்து விடுகின்றனர். இவர்களைப் பொறுத்தவரை தெய்வத்தையும் மதிக்கவில்லை, மனசாட்சியையும் மதிக்கவில்லை என்பதுதான் உண்மையாகும். வளர்ந்து வரும் அறிவியலைப் பயன்படுத்தும் நீதித்துறை குற்றவாளிகளிடமிருந்து உண்மைகளை வரவழைப்பதற்கும் அறிவியலைப் பயன்படுத்துவது தவறாகாது! உளவியல் மருத்துவம் விஞ்ஞானத் தொடர்புடன் வளர்ந்தோங்கி வரும் இன்றைய நிலையில், உளவியல் மருத்துவர்களிடம் இதுபோன்ற குற்றங்களைக் கொண்டு சென்று, அவர்களின் உள்மன ஆழத்தில் புதைந்து கிடக்கும் உண்மைகளை உளவியல் மருத்துவப் புலனாய்வு மூலம் குற்றவாளியை அரைத் தூக்கத்தில் தளர வைத்து, நடந்த உண்மைகளின் தன்மைகளைக் கேட்டறிந்து, தகுந்த பதிவுக் கருவிகளின் நுட்பத்துடன் பதிவு செய்தால், நீதித்துறையின் நேர்மையான தீர்ப்பளிப்புக்கு தீர்வு கிடைக்கும் என்பது அறிவியல் பூர்வமான நடைமுறையாகும். செர்மன் உளவியல் துறைப் பேராசிரியர் ஸிக்மென்ட் பிராய்ட் என்பவரின் கருத்தும் இதுதான். கொலைக் குற்றம், திருட்டுக்குற்றம் கற்பழிப்புக் குற்றம், மோசடிக் குற்றம் போன்ற எந்த வகையான குற்றவாளிகளானாலும், அவர்களின் உள்மனக் கிடக்கைகளின் உணர்வுகளின் உண்மைகளை ஒழிக்காமல் மறைக்காமல் வெளியே கொண்டு வந்து விடலாம் (Secret Counseling to Crime). ஏன் இதைச் செய்ய மறுக்கிறார்கள்? நாளொறு பொழுதும் குற்றங்கள் குறையாத, மனம் கழன்ற மனப்போக்கைப் பெற்ற மக்கள் பெருகிப்போன இந்தச் சூழலில், இப்படியொரு நடவடிக்கையை எடுப்பதற்கு ஏன் முன் வரக் கூடாது? அறிவியல் வளர்ச்சிப் பெருகப் பெருக அதை அனுபவிக்க வேண்டி, தன் மனம் போன போக்கில் குற்றச் செயல் புரிந்தாவது தனது மனக்களிப்பை நிறைவேற்றுவதில், குற்றம் செய்வதை துணிந்து செய்கிறான். சட்டத்தில் இதில் இடமில்லை என்று கூறுவோர், நியாயத்தில் இடம் நிரப்ப இதை ஏன் சட்ட வளையத்திற்குள் கொண்டு வரக் கூடாது? நோயாளி இருந்தால்தான் நோயைப் போக்கும் மருத்துவருக்குத் தொழில் நடக்கும் என்பதைப் போல, குற்றவாளிகள் பெருக்கமே நீதித்துறையின் பிழைப்பாக இருக்க, எப்போதுமே கதவு திறக்கக் கூடாது. அதிகாரத்தையும், பணபலத்தையும் வலுவாக்கிக் கொண்டவர்கள் தாம் செய்யும் தவறுகளுக்கு பணப்போர்வை போர்த்தி குற்றத்திலிருந்து தப்பித்து வரும் வழமைகள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகிறது. போகிற போக்கில் வீட்டிற்கு ஒரு காவல்துறை தேவைப்படும் என்கிற அவலமான வாழ்க்கை முறைத் தொடர்கள் நீடித்தால்… மனிதன் தெருக்களில் நடமாடவே முடியாத சூழ்நிலை ஏற்பட்டே தீரும்.- சிற்பி பாமா."