16 October 2014 1:11 am
கல்வெட்டு என்பது கல்லில் வெட்டப்பெறும் எழுத்துகள் என்று பொருள். வாகை சூடிய வென்றிப் பெருமிதம், வள்ளன்மை சுட்டும் கொடைத்திறம், தறுகண்மை முதலிய சீர்த்திகளைக் (மிகு புகழ்களைக்) கல்லாய்ந்து பொறிப்பது தமிழ் வழக்கமாகும்.தொல்காப்பியத்தில் பீடும் பெயரும் எழுதி அதர்தொறும் பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல் என்ற அகநானூற்றுச் செய்யுளும் அந்நாளில் கல்காப்பியம் அமையும் வழக்கைச் சுட்டிக் காட்டிற்று. சங்க காலம் தொடங்கிய இம்மரபு பட்டோர் பெயரும் ஆற்றலும் எழுதி நட்ட கல்லும் மூதூர் நத்தமும் என்ற திருவாரூர் மும்மணிக் கோவையின் தொடராலும் காலந்தோறும் தொடர்ந்து வந்திருப்பதைக் காணலாம்.காதில் கேட்டு அதில் இருந்து வரும் ஒலியினைக் கட்புலனாக்கும் முயற்சியின் விளைவால் எழுத்து வடிவங்கள் தோன்றியது. எழுதத் தொடங்கிய காலத்தில் எழுத்துக் களமாகவும் எழுது பொருளாகவும் எவை பயன்பட்டதென்று தெரியவில்லை. தாழை மடலில் பித்திகை அரும்பு கொண்டு எழுதியதாக இளங்கோவடிகள் புனைந்து மகிழ்ந்தார். வாய்ச் சொல்லை விட வரிவடிவம் பெறும் எழுத்து நிலையானதாகும்.தமிழ்நாட்டில் பழந்தமிழ் எழுத்துப் பொறித்த கல்வெட்டுகள் மலைக் குகைகளில் மட்டும் அல்லாமல் பானை ஓடுகள், காசுகள் முதலியவற்றிலும் கிடைத்தன. இவை தவிர மனிதன் நேரத்தைக் காட்ட, தூரத்தை அளக்க, எல்லைகள் பற்றிய தகவலை அறிய கல்லில் எழுதும் பழக்கத்தை மேற்கொண்டான். மேலும் ஆங்காங்கே குறுநில மன்னர்கள் தாங்கள் ஆண்டப்பகுதியை எல்லைக் கல்லாக வைத்தும் அடையாளப்படுத்திக் கொண்டனர். இதில் தற்போது பல கற்கள் அழிந்தும் சில கற்கள் வழிபாடு செய்யும் நிலையிலும் உள்ளது.பண்டைய காலத்தில் மனித இனம் பேசும் ஆற்றல் பெற்றதாக தொடக்கத்தில் இருக்கவில்லை. முதன்முதலில் மனிதன் கால்நடைகளைப் போல ஆ, ஊ, ஓ என்ற ஒலிகள் எழுப்பித் தங்களது விருப்பதை பிறரிடம் தெரியப்படுத்தியுள்ளான். அதன் பின்னர் வாயினால் ஒலிகள் எழுப்பியும், கைகளால் சைகை காட்டியும் தங்களது கருத்துகளை பிறருக்கு தெரியப்படுத்தினான். அதன் பின்னர் தாங்கள் வாழ்ந்த மலைகளில், குகைகளில் படங்கள் வரைந்து தங்களது எண்ணத்தையும் கலைத்திறனையும் வெளிப்படுத்தினான். காலை வேளை என்றால் சூரியனின் படமும் மழை என்றால் கோடுகளாகவும் வரைந்தான்.இந்தியாவில் மொகஞ்சதாரோ, ஹரப்பா என்னும் இடங்களில் கிடைத்துள்ள களிமண் தகடுகளில் சில உருவங்கள் காணப்படுகின்றன. அவ்வுரு எழுத்துகள் மேலும் மேலும் சீரடைந்து தற்கால எழுத்துகளைத் தோற்றுவிக்க காரணமாக அமைந்தன.இந்திய எழுத்துஇந்தியாவில் இன்று வழங்கப்பெறும் எல்லாவகை எழுத்துகளும் தொன்மைத் தமிழ் எழுத்திலிருந்துதான் வளர்ச்சியடைந்தன. அந்த ஹரப்பா களிமண் தகடுகளில் காணப்படும் உருவ எழுத்துகளிலிருந்து வளர்ச்சி அடைந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.தொன்மையான தமிழ் எழுத்து இந்தியாவில் வழங்கிய காலத்தில் பதினெட்டு வகையான எழுத்துகள் இருந்திருக்கின்றன என கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்த சமவயங்க சுத்த என்னும் சமண நூலில் அறியப்படுகிறது. இப்பதினெட்டு வகை எழுத்துகளும் ஒரே எழுத்தின் பல்வேறு மாறுபட்ட வடிவங்களாகவே அவ்வப் பகுதிக்கேற்ப இருந்திருக்கலாம்.இப்பதினெட்டு எழுத்து வகையில் ஒன்றாக தமிழி என்னுமொரு எழுத்து குறிக்கப்படுகிறது. அவ்வெழுத்துதான் தமிழ்நாட்டில் வழங்கி வந்த மிகப்பழமையான எழுத்து என்று கருதப்பெற்றது. அவ்வெழுத்தை தொன்மைத் தமிழ் எழுத்து என்று பிற்காலத் தமிழ் எழுத்துகளினின்று வேறுபடுத்தி அழைக்கலாம்.தமிழ்நாட்டு எழுத்துகள்:தமிழ்நாட்டில் தொன்மைத் தமிழ் எழுத்து கி.மு. 5ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி 2 ஆம் நூற்றாண்டு வரை ஏறக்குறைய 700 ஆண்டுகாலம் வழங்கி வந்திருக்கிறது. தமிழ்நாட்டில் அகழாய்வு செய்யப்பட்ட இடங்களான செங்கம், கரூர், பூம்புகார், மதுரையைச் சுற்றியுள்ள ஆதிநல்லூர், அழகன்குளம், கொற்கை ஆகிய இடங்களில் பானை ஓடுகள் மீதும் இவ்வெழுத்துகள் பொறிக்கப்பட்டதைக் காணப்பெறுகின்றன.குறிப்பாக மதுரையைச் சுற்றியுள்ள இடங்களில் இவ்வெழுத்திலுள்ள கல்வெட்டுகளை அதிக அளவில் காண முடிகிறது. இவ்வெழுத்துகள் நாளடைவில் இரண்டு வகையில் வளர்ச்சி அடைந்தது. ஒன்று வட்டெழுத்து மற்றொன்று தமிழ் எழுத்து. இந்த வளர்ச்சி ஏறக்குறைய 1900 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கூறப்படுகிறது. வட்டெழுத்து, தமிழ் எழுத்து ஆகியவை பழக்கத்திலிருக்கையிலேயே வேறொரு எழுத்தும் தமிழ்நாட்டில் நிழவியிருக்கிறது. அவ்வெழுத்து கிரந்த எழுத்து என்று அழைக்கப்பட்டது.இன்றைக்கு வழக்கத்தில் உள்ள தமிழ் எழுத்தின் தொன்மை வடிவத்தைத்தான் தொன்மைத் தமிழ் எழுத்து என்கிறோம். தொன்மைத் தமிழ் எழுத்தை தென் இந்திய பிராமி என்றும் தமிழ் பிராமி என்றும் அழைத்தனர்.எல்லைக்கல்:தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள குள்ளப்புரத்தில் பழங்கால எல்லைக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு பாண்டிய மன்னர்கள், சோழ மன்னர்கள், நாயக்க மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயில்கள் பல உள்ளது. அப்பொழுது கோயில்களின் நிலங்களுக்காக எல்லைக்கல் நடப்பட்டது. குலப்பிரமாணம் என்ற அளவை முறை மட்டும் அப்பொழுதிருந்ததால் நான்கெல்லைகளாக நஞ்சை, புஞ்சை, திட்டு, திடல், தோப்பு, ஆறு ஆகியவைகளால் குறிப்பிடப்படுள்ளன. மேலும் குழிக்கல், குத்துக்கல், எல்லைக்கல், சக்கரக்கல் ஆகியவைகளும் ஆலமரம், புளியமரம், பழைய கோட்டை, மக்களது பயன்பாட்டிலிருந்த பெரு வழிகள் ஆகியவைகளும் இந்த எல்லைகளாக இடம் பெற்றுள்ளன.ஐப்பசி, புரட்டாசி மாதப் பெருமழை, வெள்ளம், ஆடி மாதப் பெருங்காற்று போன்ற காரணங்களினால் நிலங்களில் நடப்பட்டிருந்த கற்கள் இடம் மாற வாய்ப்புள்ளது. இதனால் தகராறு ஏற்பட்டது. இதனை தவிர்ப்பதற்காக மன்னர்கள் சில ஊர்களில் எல்லை விருத்தி என்ற அலுவலரை நியமனம் செய்திருந்தனர். இவரது பணி சம்பந்தப்பட்ட குடிமக்களுடன் தகராறுக்குட்பட்ட பொலி அல்லது புரவிக்குச் சென்று சரியான எல்லைகளைக் காண்பித்து கொடுப்பது ஆகும். இவரது முடிவை இரு தரப்பினரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயம். இதன் சம்பந்தமாக குறித்த நாளன்று எல்லை விருத்தி நீராடி புத்தாடை அணிந்து கிராம தெய்வத்திற்கு ஆட்டுகிடாய் ஒன்றினை பலியிட்டு அதன் ரத்தம் பெருகும் தலையை கொண்ட சட்டியைக் கையில் ஏந்தியவாறு எல்லைத் தகராறு இடத்திற்கு செல்வார். குடிமக்களின் வாய்மொழியினை கேட்டு சரியான எல்லையை அவர் காண்பிப்பார். கிராம தெய்வமே வந்து வாக்கு சொன்னதாக இரு தரப்பினரும் அவரது தீர்ப்பை ஏற்றுக் கொள்வர். இவ்வாறு எல்லைக்கல் ஊன்றப்பட்டுள்ளது. அனைத்து கற்களும் அழிக்கப்பட்ட நிலையில் ஒரு சில கற்கள் மட்டுமே நமக்கு சாட்சியாக கிடைக்கிறது.சமரசக்கல்:திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைத்தொடரில் அமைந்துள்ளது பெரியூர். இப்பகுதியில் பாண்டிய மன்னனுக்கும் சேர மன்னனுக்கும் போர் நடந்துள்ளது. போர் நடைபெற்றதற்கான தடயங்கள் பல உள்ளது. அதன் பின்னர் இருவரும் சமரசம் ஏற்பட்டு சேர மன்னனின் சின்னமான வில் அம்பும், பாண்டிய மன்னனின் சின்னமான மீனும் பொறிக்கப்பட்ட கல் ஒன்று நடப்பட்டுள்ளது. அக்கல்லில் மீன் மற்றும் வில் அம்பும் பொறித்த கல்வெட்டு இன்றும் உள்ளது.எல்லைகளை குறிக்கும் அளவீடுகள்:தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கில் காமயகவுண்டன்பட்டியில் சுருளி மலை அருகில் சங்கிலிக்கரடு என்ற குன்றில் படையல் பாறையில் உள்ள ஓர் ஓவியத்தில், ஒரு படகில் ஒரு மனிதன் நிற்கும் தோற்றம் உள்ளது. ஓவியம் வெள்ளை நிறமியால் ஆனது. அதன் அருகே ஒரு காளையின் தலை அழுத்தமான ஓவியமாக உள்ளது. இதன் காலம் கி.பி 1,100 ஆக இருக்கலாம் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். அதன் அருகாமையில் உள்ள பாறைகளில் கீறல்கள், எல்லைகளை குறிக்கும் எல்லைக்கற்கள் பாறைகளில் பூ போன்ற வடிவில் ஆங்காங்கே உள்ளன. மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலப்பகுதியில் நெய்தல் ஓவியம் வரையப்பட்டிருப்பது விந்தையே.குறுநில மன்னர்களின் எல்லைக்கல்:தேனி மாவட்டம் அ.வாடிப்பட்டி மற்றும் முதலக்கம்பட்டியை ஆண்ட குறுநில மன்னர்கள் தங்கள் பெயர் பொறித்த கல்லை அவர்களுடைய எல்லையில் நட்டு வைத்துள்ளனர். ரோமன், அரபி மொழி மற்றும் தமிழ் மைல்கல்:புதுக்கோட்டை மாவட்டம் சித்தனவாசல் அருகே உள்ள கந்தர்வக்கோட்டையில் தமிழ் மற்றும் ரோமன் எண் கொண்ட மைல் கல்லும், தஞ்சாவூர் மாவட்டம் செங்கிநாயக்கன்பட்டியில் தமிழ் மற்றும் அரபி எண் கொண்ட மைல் கல்லும் கண்டுபிடித்துள்ளனர் வரலாற்று ஆய்வாளர்கள். இந்த மைல்கற்கள் 18 ஆம் நூற்றாண்டில் சாலை அளவீட்டு முறை நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளதை குறிக்கிறது. தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டைப் பகுதியில் தமிழ், ரோமன் மற்றும் அரபி ஆகிய மொழிகள் பயன்பாட்டில் இருந்தது தெரிய வருகிறது.மாமல்லபுரம் மைல்கல்:காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள மாமல்லபுரத்தில் ஒவ்வொரு இடங்களும் எவ்வளவு தூரம் என்பதைக் குறிக்கக் காட்டும் மைல்கல் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.பண்டைய காலத்தில் தமிழ்நாட்டில் ரோமன், அரபி, தமிழ் மற்றும் பிற மொழிகள் அலுவலகப் பயன்பாட்டில் இருந்ததையும் அதன் மூலம் சாலைகள் பற்றி தெரிந்து கொள்ள இக்கல்வெட்டுகள் காலக் கண்ணாடியாக காட்சியளிக்கிறது.-வைகை அனிசு, தேனி