16 October 2014 1:00 am
பாசனம் பெறாத வறட்சிப் பகுதிகள்: தமிழ்நாட்டிலுள்ள காவேரி வடிநிலப்பரப்பு 44000 ச.கி.மீ. எனில் கருநாடகத்தின் வடிநிலப்பரப்பு 34000 ச.கி.மீ. ஆகும். தமிழ்நாட்டில் உள்ள காவேரி வடிநிலப்பரப்பில் உண்மைப் பயிரிடும் நிலப்பரப்பு என்பது சுமார் 51 இலட்சம் ஏக்கர் ஆகும். கருநாடகத்தில் உள்ள காவேரி வடிநிலப்பரப்பில் அதன் உண்மைப் பயிரிடும் நிலப்பரப்பு என்பது சுமார் 42 இலட்சம் ஏக்கர் ஆகும். நடுவர் மன்றத் தீர்ப்புப் படி தமிழ்நாட்டில் சுமார் 22 இலட்சம் ஏக்கரும் கருநாடகத்தில் 19 இலட்சம் ஏக்கரும் பயன்பெறுகிறது. காவேரி வடிநிலப் பரப்பில் தமிழ்நாட்டில் மீதியுள்ள சுமார் 29 இலட்சம் ஏக்கரும், கருநாடகத்தில் மீதியுள்ள சுமார் 23 இலட்சம் ஏக்கரும் மழையை நம்பியுள்ள, பாசனம் பெறாத மிகவும் வறண்ட பகுதியாகவே உள்ளது. ஆனால் தமிழ்நாட்டின் காவேரி வடிநிலப்பரப்பின் அனைத்துப் பகுதிகளும் பாசனம் பெற்று விட்டது போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பாசனம் பெறாத பயிரிடும் நிலப்பரப்பான 29 இலட்சம் ஏக்கர் பரப்பில் பெரும்பகுதி மிக மிக வறட்சியான தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ளன. இந்த 29 இலட்சம் ஏக்கரில், சுமார் 10 இலட்சம் ஏக்கர் பரப்பு மிக மிக வறட்சிப் பகுதியாக உள்ளது. அந்த 10 இலட்சம் ஏக்கர் பரப்புக்காவது வருடம் ஒரு புன்செய்பயிர் பாசனம் செய்யத்தக்க வகையில் பாசனத் திட்டங்களை செயல்படுத்தி ஆகவேண்டும். கருநாடகம் தனது காவேரி வடிநிலப்பரப்பில் உள்ள பாசனம் பெறாத பகுதிகளின் நீர்த்தேவையை தன்னிடம் உள்ள இதர நீர் வளங்களிலிருந்து பூர்த்தி செய்து கொள்ள முடியும். ஆனால் தமிழ்நாட்டால் அப்படி பூர்த்தி செய்து கொள்ள இயலாது. எனவே இவைகள் அனைத்தையும் கணக்கில் கொண்டே காவேரிச் சிக்கல் தீர்க்கப்பட வேண்டும். வாழ்வாதாரம்-ஆண்டுக்கு ஒரு பயிர்:நடுவர் மன்றம் தனது தீர்ப்பில் ஆண்டுக்கு ஒருமுறை ஒரு விவசாயி ஒரு புன்செய் பயிராவது பயிரிட வாய்ப்புத் தரவேண்டும் என்பதை பல முறை சொல்லி உள்ளது. இதைக் காரணம் காட்டித்தான் தமிழ்நாட்டின் இருபோக நெல் சாகுபடியை அது அனுமதிக்கவில்லை. ஆண்டுக்கு ஒரு புன்செய் பயிர் என்பதை காவேரி வடிநிலப் பகுதியில் உள்ள அனைத்து வறட்சிப் பகுதிகளின் விவசாயிகளுக்கும் வழங்குவதை நடுவர் மன்றம் கருத்தில் கொண்டிருக்க வேண்டும். அனைவருக்கும் வழங்க இயலாது எனும் பொழுது மாநில வாரியாக பாசனம் பெறாத பரப்பின் அடிப்படையில், விகிதாரச்சார முறையில் நீரைப் பிரித்து வழங்கியிருக்க வேண்டும். ஆனால் கருநாடகம் விதிகளை மீறிக் கட்டிய பாசனத் திட்டங்களை தகுதி அடிப்படையில் (அதாவது ஆண்டுக்கு ஒருமுறை ஒரு விவசாயி ஒருபுன்செய் பயிர் பயிரிட வாய்ப்புத் தரவேண்டும் என்ற அடிப்படையில்) ஏற்பதாகக் குறிப்பிட்டு 7 இலட்சம் ஏக்கருக்கு மேல் நடுவர் மன்றம் அங்கீகரித்துள்ளது. மேலும் 2.72 இலட்சம் ஏக்கரை டியூட்டியை மேம்படுத்தி நீரை மிச்சப்படுத்தி பாசனம் செய்ததாக அங்கீகரித்துள்ளது. இவைகளை ஏற்றுக் கொள்ள இயலாது.எனவே அனைவருக்கும் சம பங்கு வழங்கும் விதத்தில், 1924க்கு முந்தைய பரப்பு, 1924 ஒப்பந்தப்படியான பரப்பு ஆகிய இரண்டைத் தவிர பிறவற்றை மாநில வாரியாக மீதியுள்ள பாசனம் பெறாத பரப்பின் அடிப்படையில் விகிதாச்சார முறையில் பிரித்து, ஆண்டுக்கு ஒருமுறை ஒரு புன்செய்ப் பயிர் செய்வதற்கான பரப்பையும் அதற்குரிய பாசன நீரையும் வழங்க வேண்டும். அதன்படி கணக்கிட்டால் தமிழ்நாட்டிற்கு சுமார் 5 இலட்சம் ஏக்கர் புன்செய் பரப்பும், 43 டி.எம்.சி நீரும் அதிகம் கிடைக்கும். கருநாடகாவிற்கு 34 டி.எம்.சியும் கேரளாவிற்கு 15 டி.எம்.சியும் குறையும். இவை பற்றிய முழு விபரம் இணைப்பு&-2 இல் வழங்கப்பட்டுள்ளது.1924க்கு முந்தைய கோடைகால நெற்பயிர்:1924க்கு முந்தைய பாசனத்தில் இரு அம்சங்கள் விவாதிக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டின் கோடைகால நெற்பயிர் பயிரிடும் பரப்பு 56000 ஏக்கர் ஆகும். இவை அனைத்தையும் நடுவர்மன்றம் புன்செய் பயிராக மாற்றியுள்ளது. ஆனால் கருநாடகத்தில் 40,000 ஏக்கர் பரப்புக்கு ஆண்டு முழுவதும் கரும்பு பயிரிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆகவே பல நூற்றாண்டுகளாக இருபோக நெற்பயிர் செய்து வந்த அவர்களது பாரம்பரிய உரிமை பாதுகாக்கப் படவேண்டும். அவர்களது பயிர்க்காலத்தை சூன்&-1 முதல் சூன்-&31 வரை என மாற்றியமைத்து அவர்கள் இருபோகம் நெற்பயிர் செய்ய அனுமதிக்க வேண்டும். அதற்கு 4.862 டி.எம்.சி. நீர் தேவைப்படும்.சேத்தியாத்தோப்பு:1924க்கு முன்பிருந்தே மிக நீண்டகாலமாக சேத்தியாத் தோப்பு அணைகட்டுப் பாசனத்துக்கு, 37,900 ஏக்கருக்கு உதவியாக (supplementation) 2அடி நீர் உயரம் வழங்கப்பட்டு வந்துள்ளது. இப்பகுதி காவேரி வடிநிலப் பரப்புக்கு வெளியே உள்ளது என்பதற்காக அதன் பாரம்பரிய உரிமையை நீக்க முடியாது. பல நாடுகளில் பல இடங்களில் வடிநிலப் பரப்புக்கு வெளியே உள்ள பாரம்பரிய உரிமை பாதுகாக்கப்படுகிறது. மேலும் தமிழகம் நீர்பற்றாக்குறை மாநிலம் என்பதால் அந்த 37900 ஏக்கருக்கும் உரிய நீர் திரும்பத் தரப்பட வேண்டும். அதற்கு 3.29 டி.எம்.சி நீர் தேவை.தமிழ்நாட்டின் மொத்தத் தேவை:காவேரி நடுவர் மன்றம் முன்பே ஒப்புதல் வழங்கிய 24.71 இலட்சம் ஏக்கர் பயிர்ப்பரப்புக்கு 419 டி.எம்.சி. நீர் தேவை. சமபங்கு உரிமை அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் சுமார் 5 இலட்சம் ஏக்கர் புன்செய்ப் பயிர் பரப்புக்கு 43 டி.எம்.சி. நீர் தேவை. கோடைகால நெற்பயிருக்கு 4.86 டி.எம்.சி. நீரும், சேத்தியாத் தோப்புக்கு 3.29 டி.எம்.சி. நீரும் தேவை. எனவே மொத்தமாக 419+43+4.86+3.29 = 470.15 (அ) 470 டி.எம்.சி. நீர் தேவை. சேத்தியாத் தோப்பு, கோடைக்கால நெற்பயிர் ஆகியவைகளுக்கு நீர் வழங்க முடியாது எனில் தமிழகம் நீர் உயரத்தை குறைத்துச் சேமித்த 80 டி.எம்.சி யில், 29 டி.எம்.சி. போக மீதியுள்ள 51 டி.எம்.சி யில் இருந்து அந்த 4.86+3.29 = 8.15 டி.எம்.சி. நீரை நடுவர் மன்றம் வழங்க வேண்டும். இப்புதிய கணக்கீடுகளின்படி தமிழ்நாட்டிற்குப் புதிதாக 51(470–&419) டி.எம்.சி. நீர் வழங்கப்பட்டாக வேண்டும். கருநாடகாவின் 34 டி.எம்.சி. நீரும், கேரளாவின் 15 டி.எம்.சி. நீரும் வழங்கப்பட்டால் 49 டி.எம்.சி. நீர் கிடைக்கும். பொதுப் பங்கில் இருந்து 2 டி.எம்.சி. நீர் எடுத்துக்கொண்டால் தமிழ்நாட்டிற்குத் தரப்பட வேண்டிய 51 டி.எம்.சி. நீர் பெறப்பட்டுவிடும். பொதுப் பங்கில் இருந்து எடுக்கும் பொழுது தமிழ்நாடு, கருநாடகம் ஆகியவற்றுக்கு தலா 1 டி.எம்.சி. நீர் குறையும். அப்பொழுது ஒட்டுமொத்தத்தில் தமிழ்நாட்டிற்கு 50 டி.எம்.சி. நீர் அதிகமாகவும், கருநாடகத்திற்கு 35 டி.எம்.சி. நீர் குறைவாகவும் கிடைக்கும். அப்பொழுது நமது கணக்குப்படி தமிழ்நாட்டிற்கு 469 டி.எம்.சி. நீரும், கருநாடகத்துக்கு (270-&35) 235 டி.எம்.சி. நீரும், கேரளாவுக்கு 15 டி.எம்.சி. நீரும், பாண்டிச்சேரிக்கு 7 டி.எம்.சி. நீரும் கிடைக்கும். இதுவே குறைந்தபட்ச அளவில் நடுவர்மன்றம் வழங்க வேண்டிய நியாயமான முறையான பகிர்வு ஆகும்.தமிழ்நாட்டிற்கு டியூட்டியை மேம்படுத்தி, நீர் உயரத்தை(டெல்டா) மிச்சப் படுத்தி சேமித்த சுமார் 80டி.எம்.சி. நீரில், 29 டி.எம்.சி. நீர் மட்டுமே நமக்கு வழங்கப்படுகிறது. மீதி 51 டி.எம்.சி. நீர் நமக்கு வழங்கப் படவில்லை எனலாம். அதனால்தான் இந்தப் பகிர்வை குறைந்தபட்ச நியாயமான பகிர்வு என நான் குறிப்பிடுகிறேன். அதுபோன்றே வேளாண்மையைத் தவிரப் பிற பண்டையத் தமிழ்நாட்டுப் பயன்பாடுகளையும், கருநாடகத்துக்கு இருக்கிற பிற நீர் வளங்களையும் இப்பகிர்வு கணக்கில் கொள்ளவில்லை எனலாம். மத்திய அரசின் நிலைபாடு:மத்திய அரசு ஆரம்பம் முதல் காவேரிச் சிக்கலை நியாயமான முறையில் தீர்த்து வைக்கும் நோக்கத்தோடு செயல்படவில்லை என்றே கருத வேண்டியுள்ளது. தமிழ்நாடு 1970 ஆம் ஆண்டு முதல் பலமுறை காவேரி நடுவர் மன்றத்தை அமைக்கச் சொல்லி மத்திய அரசைக் கேட்டுக் கொண்டது. ஆனால் நடுவர்மன்றத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. 1990ல் நடுவர் மன்றத்தை அமைக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரே மத்திய அரசு நடுவர் மன்றத்தை அமைத்தது.நடுவர்மன்றம் 1990ல் இடைக்கால உத்தரவு ஒன்றை வழங்கியது. அதனை எதிர்த்து கருநாடக அரசு தனது சட்டமன்றத்தில் சட்டம் ஒன்றை இயற்றியது. இந்திய இறையாண்மையை மீறும் இச்செயலை கூட மத்திய அரசு கண்டிக்கவோ, அதற்குரிய எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ இல்லை. பின் 2007ல் நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது. ஆனால் அதனை முறைப்படி உடனடியாக மத்திய அரசிதழில் வெளியிட வேண்டிய மத்திய அரசு, தமிழக அரசு பலமுறை கேட்டும் வெளியிட வில்லை.2013 இல் உச்சநீதி மன்றம் உத்தரவிட்ட பின்னரே மத்திய அரசு நடுவர்மன்றத் தீர்ப்பை வெளியிட்டது. மத்திய அரசு செய்யவேண்டிய சிறிய விசயத்திற்குக் கூட வழக்கு மூலமே உத்தரவு வாங்க வேண்டியதுள்ளது. எனவே ஆரம்பம் முதல் மத்திய அரசு கருநாடக மக்களுக்கு ஆதரவாகவும், தமிழ்நாட்டு நலனுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறது எனலாம். – (வளரும் ) – கணியன் பாலன், ஈரோடு